மின் ஒலி இதய வரைவு (எக்கோ கார்டியோகிராம்) என்றால் என்ன?
ஒரு மின் ஒலி இதய வரைவு என்பது உங்கள் பிள்ளையின் இதயத்தைப் படம் பிடிக்க ஒலி அலைகளை உபயோகிக்கும் ஒரு பரிசோதனையாகும். மின் ஒலி இதய வரைவு எக்கோ எனவும் அழைக்கப்படும். இந்தப் பரிசோதனை தீங்கிழைக்காது மற்றும் முழுமையான பாதுகாப்பானது. பரிசோதனையின்போது நீங்கள் உங்கள் பிள்ளையுடனேயே இருக்கமுடியும்.
மின் ஒலி இதய வரைவு எடுப்பதற்குத் தயாராதல்
மின் ஒலி இதய வரைவு எடுப்பதற்குத் தயாராவதற்கு பெரும்பாலான பிள்ளைகள் விசேஷமாக எதையும் செய்யவேண்டியதில்லை. ஆயினும், உங்கள் பிள்ளை மூன்று வயதுக்குட்பட்டவனானால், அவனுக்கு மயக்க மருந்து தேவைப்படும். மயக்க மருந்து என்பது உங்கள் பிள்ளையை பரிசோதனைக்காக நித்திரையடையச் செய்யும் மருந்தாகும். பிள்ளை அசையாதிருக்கும்போது மின் ஒலி இதய வரைவு சிறந்த முறையில் வேலை செய்யும்.
மயக்கமருந்து கொடுக்கப்படாமல்:
உங்கள் பிள்ளைக்கு மயக்கமருந்து தேவைப்படாவிட்டால், பரிசோதனைக்கு முன்பும் பாரிசோதனைக்குப் பின்பும் அவன் சாதாரணமான உணவை உண்ணலாம் மற்றும் பானங்களைப் பருகலாம். உங்கள் பிள்ளை மிகவும் விரும்பும் விளையாட்டுப் பொருள், ஒரு பாதுகாப்பான கம்பளி, அல்லது மிகவும் விரும்பும் வீடியோ டேப் இருந்தால், தயவு செய்து அவற்றையும் கொண்டுவரவும்.
மிகவும் வயது குறைந்த குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுக்கமுடியாது. குறைப்பிரவசத்தில் பிறந்த பிள்ளைகள் அல்லது மிகவும் சிறிய பிள்ளைகளும் இதற்குள் உட்படுவார்கள். உங்கள் பிள்ளையும் இந்த நிலைமைக்குட்பட்டவனாக இருந்தால், அவனுக்கான தெரிவு என்ன என்பதை மருத்துவர் அல்லது தாதியிடம் கேட்கவும்.
உங்கள் பிள்ளைக்கு மின் ஒலி இதயவரைபடத்துக்காக மயக்க மருந்து தேவைப்பட்டால்
பரிசோதனை முடிவு துல்லியமானதாக இருப்பதற்கு உங்கள் பிள்ளை பரிசோதனை சமயத்தில் அமைதியாகப் படுத்திருக்கவேண்டும். உங்கள் பிள்ளைக்கு மயக்க மருந்து தேவைப்பட்டால், தாதி அவனுக்கு மயக்க மருந்தை விழுங்கக் கொடுப்பார். உங்கள் பிள்ளை பரிசோதனைக்காக நித்திரை செய்ய இந்த மருந்து உதவி செய்யும். பரிசோதனை முடியும் வரை தான் இந்த மருந்து வேலை செய்யும்.
மயக்க மருந்து பற்றி மேலுமாகத் தெரிந்து கொள்ள விரும்பினால், தயவுசெய்து உங்கள் மருத்துவரை அல்லது தாதியைக் கேட்கவும்.
மின் ஒலி இதய வரைவு எடுப்பதற்கு முன் உணவு உண்பது மற்றும் பானங்கள் குடிப்பது
உங்கள் பிள்ளைக்கு பரிசோதனைக்காக மயக்க மருந்து கொடுப்பதாக இருந்தால், பரிசோதனைக்கு பல மணி நேரங்களுக்கு முன்னர் அவன் உணவு உண்பதையும் பானங்கள் குடிப்பதையும் நிறுத்தவேண்டும். பரிசோதனை நடைபெறப்போகும் வாரத்தில், பாரிசோதனைக்கு முன்பு ஒரு தாதி உங்களை அழைத்து உங்கள் பிள்ளை என்ன மற்றும் எப்போது உணவு உண்ணவேண்டும் மற்றும் பானங்கள் பருகவேண்டும் என்பது பற்றி நீங்கள் விளங்கிக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்துகொள்ளுவார். உங்கள் பிள்ளை எப்போது உணவு உண்பது மற்றும் பானங்கள் பருகுவதை நிறுத்த வேண்டும் என்பதைக் கீழ்க்காணும் அட்டவணை விளக்கும்.
உங்கள் பிள்ளை மயக்க மருந்து உட்கொள்ளுவதற்குமுன்னர் எவற்றை உண்ணவேண்டும் மற்றும் பருகவேண்டும்
பரிசோதனைக்கு முன்னர் நேரம் | நீங்கள் தெரிந்திருக்கவேண்டியவை |
8 மணி நேரங்கள் | திடமான உணவு, பால், அல்லது ஒரேஞ் ஜூஸ் எதுவும் கொடுக்கப்படாது. இது கம் அல்லது கன்டியையும் உட்படுத்தும்.
இன்னும் உங்கள் பிள்ளை தெளிவான நீராகாரங்களைப் பருகலாம். தெளிவான நீராகாரங்கள் என்பது அப்பிள் ஜூஸ், ஜிஞ்ஜர் ஏல், அல்லது நீர் போன்ற, நீங்கள் ஊடாகப் பார்க்கக்கூடிய பானங்களாகும். உங்கள் பிள்ளை ஜெல்-ஒ அல்லது பொப்ஸிகிள்ஸ் என்பனவற்றையும் சாப்பிடலாம் . |
6 மணி நேரங்கள் | பால், அல்லது ஃபொர்முலா கொடுப்பதை நிறுத்துங்கள். |
4 மணி நேரங்கள் | உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட்டுவதை நிறுத்துங்கள் |
2 மணி நேரங்கள் | உங்கள் பிள்ளைக்குத் தெளிவான நீராகாரங்கள் கொடுப்பதை நிறுத்திவிடவும். அதாவது, அப்பிள் ஜூஸ், ஜிஞ்ஜர் ஏல், அல்லது நீர் என்பன கொடுப்பதை நிறுத்திவிடவும். உங்கள் பிள்ளை ஜெல்-ஒ அல்லது பொப்ஸிகிள்ஸ் என்பனவற்றையும் சாப்பிட முடியாது. |
மின் ஒலி இதய வரைவு படம் பிடிப்பதற்காக பொது மயக்கமருந்து கொடுத்தல்
உங்கள் பிள்ளை மூன்று வயதுக்கு மேற்பட்டவன், ஆனால் அவனால் அமைதியாகப் படுத்திருக்கமுடியாது என்றால் அவனுக்கு பொதுவான மயக்க மருந்து தேவைப்படும். இது மருத்துவரால் கொடுக்கப்படும் ஒரு வகை நித்திரைக்கான மருந்தாகும். மருத்துவமனையின் வேறொரு பகுதியில் உங்கள் பிள்ளைக்கு ஒரு விசேஷ மருத்துவ சந்திப்புத்திட்டம் கொடுக்கப்படும். எக்கோ இயந்திரம் உங்கள் பிள்ளைக்கருகில் கொண்டுவரப்படும். பரிசோதனை நடைபெறப்போகும் வாரத்தில், பாரிசோதனைக்கு முன்பு ஒரு தாதி உங்களை அழைத்து உங்கள் பிள்ளை பரிசோதனை மற்றும் நித்திரைக்கான மருந்துக்காக எப்படித் தயாராகவேண்டும் என்பது பற்றி நீங்கள் விளங்கிக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்துகொள்ளுவார்.
மின் ஒலி இதய வரைவு எடுக்கும்போது என்ன சம்பவிக்கும்
பரிசோதனை செய்பவர் மின் ஒலி இதய வரைவு எடுப்பதற்காக விசேஷ பயிற்சி பெற்றவராவார். இவர் ஒலிவரைபடப்பிடிப்பாளர் அதாவது சோனோகிராஃப்ர் என்று அழைக்கப்படுவார்.
ஒலிவரைபடப்பிடிப்பாளர் முதலில் உங்கள் பிள்ளையின் நிறை மற்றும் உயரத்தை அளப்பார். பின்பு அவர் உங்களையும் உங்கள் பிள்ளையையும் ஒரு விசேஷ எக்கோ அறைக்குக் கொண்டு செல்வார்.
மேலும் கீழுமாக அசையக்கூடிய ஒரு விசேஷ படுக்கையில் உங்கள் மகன் படுக்கவைக்கப்படுவான். அவன் தன்னுடைய அரைக்கு மேலுள்ள கம்பளிச் சட்டை, சேர்ட், மற்றும் வேறு உடைகளையும் அகற்ற வேண்டும்.
ஒலிவரைபடப்பிடிப்பாளர் உங்கள் பிள்ளையின் மார்பில் அல்லது கைகளைல் மூன்று ஒட்டும் தாள்களை ஒட்டுவார். இந்த ஒட்டும்தாள்கள் மின்வாய்கள் எனப்படும். அவை மின்கம்பியினால் எக்கோ இயந்திரத்துடன் இணைக்கப்படும். அவை பரிசோதனையின்போது உங்கள் பிள்ளையின் இதயத்துடிப்பைப் பதிவு செய்யும்.
அடுத்ததாக, ஒலிவரைபடப்பிடிப்பாளர் உங்கள் பிள்ளையின் தோலில் சோதனைக்கோல் இலகுவாக நகருவதற்காகக் கொஞ்சம் ஜெலியை அவனது மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியிற் பூசுவார். சோதனைக்கோல் என்பது உங்கள் பிள்ளையின் இதயததைப் படம்பிடிக்கும் புகைப்படக் கருவியைப் போன்றது. இது 15 சென்ரிமீற்றர்கள் (6 அங்குலங்கள்) நீளமுள்ளது மற்றும் ஜெலியில் சற்று அமரக்கூடியவாறு வட்டமான முனையைக்கொண்டிருக்கிறது.
ஒலிவரைபடப்பிடிப்பாளர் கணனித் திரையில் படங்களைப் பார்ப்பதற்காக அறையிலுள்ள பொரும்பாலான மின்விளக்குகள் அணைக்கப்பட்டுவிடும். உங்கள் பிள்ளையின் இதயத்தை வெவ்வேறு கோணங்களில் படம் பிடிப்பதற்காக ஒலிவரைபடப்பிடிப்பாளர் சோதனைக்கோலைச் சுற்றி அசைப்பார். வயிறுப்பகுதியிலிருந்து , மார்பின் மேலாக மற்றும் கழுத்திலிருந்து படங்கள் எடுக்கப்படும். நீங்கள் இவற்றை கணனித் திரையில் பார்க்கலாம். எல்லாப் பங்களும் கணனியில் பதித்து வைக்கப்படும்.
மின் ஒலி இதய வரைவு பிடிக்கப்படும்போது உங்கள் பிள்ளை எந்த வலியையும் உணரமாட்டான். அவன் சோதனைக் கோலினால் கொஞ்சம் அழுத்தத்தை உணரலாம். இதயத்தினூடாக இரத்தம் பாய்வதை எக்கோ இயந்திரம் பதிவு செய்யும் போது , சில சமயங்களில் உங்கள் பிள்ளை ஸ்வூஷ் என்ற மிகப் பெரிய சத்தத்தைக் கேட்கலாம்.
ஒலிவரைபடப்பிடிப்பாளர் படங்கள் எடுப்பது முடிவடைந்தவுடன், அவர் ஒரு அறிக்கையைத் தயாரித்துப் படங்களை இருதயநோய் மருத்துவரிடம், இருதய நோய் நிபுணரிடம் காண்பிப்பார். அந்த சமயத்தில் இருதயநோய் மருத்துவர் மேலும் படங்களை எடுக்க விரும்பலாம். இது பரிசோதனையின் வழக்கமான பாகமாகும். இந்த சமயத்தில் உங்கள் பிள்ளை எக்கோ இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருப்பான். உங்கள் பிள்ளை எப்போது திரும்பவும் உடை அணியவேண்டும் என ஒலிவரைபடப்பிடிப்பாளர் அல்லது தாதி உங்களுக்குத் தெரிவிப்பார்.
மின் ஒலி இதய வரைவு படங்கள் எடுக்க 30 முதல் 90 நிமிடங்கள் அல்லது அதற்கு மேலாகச் செல்லலாம். பெரும்பாலும் உங்கள் பிள்ளைக்கு முதல் மின் ஒலி இதய வரைவு படம் பிடிக்க அதிக நேரம் எடுக்கும். உங்கள் பிள்ளையின் மருத்துவர் எதற்காக அந்தப் பரிசோதனையைச் செய்யும்படி கேட்டார் என்பதிலிலும் பரிசோதனை நேரத்தின் அளவு தங்கியிருக்கிறது.
மின் ஒலி இதய வரைவு பரிசோதனைக்குத் தயாராவதற்கு உங்கள் பிள்ளைக்கு உதவி செய்தல்
எதை எதிர்பார்க்கவேண்டும் என்பதை உங்கள் பிள்ளைக்கு அறிவிப்பதில் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருங்கள். மின் ஒலி இதய வரைவுப் பரிசோதனையின்போது என்ன சம்பவிக்கும் என்பதை விளக்கிச் சொல்லுங்கள். உங்கள் பிள்ளையின் புரிந்து கொள்ளல் அளவுக்குப் பொருத்தமாயிருக்கும் என்று நீங்கள் நினைக்கும் அளவு மிக அதிகமான தகவல்களை அவனுக்குத் தெரிவியுங்கள். அவன் மருத்துவமனைக்கு வந்தபின்னர் ஆச்சரியமடையாதவாறு, மருந்துவ சந்திப்புத்திட்டத்தைப் பற்றி முன்கூட்டியே அவனுக்குத் தெரிவியுங்கள்.பரிசோதனை காயப்படுத்தாது என்றும் அதைப்பற்றிப் பயப்படுவதற்கு எந்தக் காரணமுமில்லை என்று அவனுக்குச் சொல்லுங்கள். பரிசோதனையின்போது நீங்கள் அவனுடன்கூட இருப்பீர்கள் என்று அவனுக்குத் தெரிவியுங்கள்.
உங்கள் பிள்ளையில் பரிசோதனையை நடித்துக் காட்டுதல்
நீங்கள் விரும்பினால், நீங்களும் உங்கள் பிள்ளையும் பரிசோதனையை வீட்டிலேயே பயிற்சி செய்து பார்க்கலாம். ஒரு இருட்டாக்கப்பட்ட அறையில், ஒரு படுக்கையில் உங்கள் பிள்ளையை முதுகுப் பக்கமாகப் படுக்க வைக்கவும். ஒலிவரைபடப்பிடிப்பாளர் ஆய்வில் மனதை ஒருமுகப்படுத்தவேண்டும் என்பதால் அறை வெப்பமாகவும் மிகவும் அமைதியாகவும் இருக்கும் என்று அவனுக்குச் சொல்லவும்.
உங்கள் பிள்ளையின் மார்பின் நடுப்பகுதி மற்றும் இடது பக்கத்தில் சூடான ஹான்ட் கிரீமை வைக்கவும். அழுத்தமான அடிப்பாகத்தைக்கொண்ட ஒரு குடிக்கும் கிளாஸினால் ஹான்ட் கிரீமை மார்பைச் சுற்றிப் பூசவும். ஒலிவரைபடப்பிடிப்பாளர் படங்களைப் பிடிப்பதற்கு உபயோகிக்கும் புகைப்படக் கருவி போன்றதுதான் குடிக்கும் கிளாஸ் என்று விளக்கவும்.
உங்கள் பிள்ளை மிகவும் விரும்பும் விளையாட்டுப் பொருள், பாதுகாப்பான கம்பளி, அல்லது மிகவும் விரும்பும் வீடியோ நாடா என்பனவற்றையும் கொண்டுவரவும்.
உங்கள் பிள்ளை தன்னுடைய சேர்ட் அல்லது கம்பளிச் சட்டை,யைக் கழற்றிவிட்டு, மின் ஒலி இதய வரைவு பரிசோதனைக்கூடத்தில் கொடுக்கப்படும் உடைகளை உடுத்தவேண்டும் என அவனுக்குச் சொல்லுங்கள்.
பரிசோதனையின்போது எக்கோ படுக்கையில் நீங்களும் அவனு(ளு)டன் சேர்ந்து படுத்திருப்பீர்கள் என்று உங்கள் பிள்ளைக்குச் சொல்லுங்கள். பரிசோதனை சற்று நேரமெடுக்கும் எனவும் நீங்கள் ஒருபோதும் அவனை தனியே விடமாட்டீர்கள் எனவும் பிள்ளைக்குச் சொல்லுங்கள்.
மின் ஒலி இதய வரைவு படங்களின் பரிசோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்ளல்
உங்கள் பிள்ளையின் மின் ஒலி இதய வரைவு பரிசோதனை முடிவுகளைத் தரக்கூடிய நபர்கள், உங்கள் பிள்ளையின் இருதய நோய் மருத்துவர், குழந்தை மருத்துவர் அல்லது வேறு மருத்துவ நிபுணர்கள் ஆவர். உங்கள் பிள்ளையின் இதய ஆரோக்கியத்தைப்பற்றி போதியளவு அறிந்தவர்கள் அவர்கள் மாத்திரமே.
பரிசோதனையைச் செய்யும் ஒலிவரைபடப்பிடிப்பாளர் மற்றும் படங்களை மறுபார்வை செய்யும் இதய நோய் மருத்துவர்களுக்கு பரிசோதனை முடிவுகளை உங்களுக்குத் தர அனுமதியில்லை.
முக்கிய குறிப்புகள்
- மின் ஒலி இதய வரைவு என்பது இதயத்தின் படங்களைப் பிடிக்கும் ஒரு பரிசோதனையாகும்.
- பரிசோதனை காயப்படுத்தாது. அது அரை மணி நேரத்துக்கும் ஒரு மணி நேரத்துக்கும் அல்லது ஒன்றரை மணி நேரத்துக்கும் இடைப்பட்ட நேரத்தை எடுத்துக்கொள்ளும்.
- பரிசோதனை சமயத்தில் ஒரு பிள்ளை அமைதியாயிருக்கவேண்டும். எனவே சில பிள்ளைகளுக்கு மயக்கமருந்து கொடுக்கவேண்டியிருக்கும் அல்லது நித்திரை செய்யவைக்க வேண்டியிருக்கும்.
- பரிசோதனைக்காக உங்கள் பிள்ளைக்கு மயக்கமருந்து கொடுக்கவேண்டியிருந்தால், பரிசோதனை செய்யப்படுவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்பாக அவன் உணவு உண்ணவோ அல்லது பானங்கள் பருகவோ கூடாது.