குடல் வாலெடுப்பு அறுவைச் சிகிச்சை

Appendectomy [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

சில நேரங்களில் பிள்ளைகள் குடல் வால் அழற்சி (அடைப்பின் காரணமாக குடல் வாலில் ஏற்படும் வீக்கம்) பிரச்சனையை சந்திக்கிறார்கள்.

குடல்வால் அழற்சி என்றால் என்ன?

குடல்வால் அழற்சி என்பது குடல்வாலில் ஏற்படும் வீக்கம் ஆகும். குடல்வால் என்பது பெருங்குடல் என்றழைக்கப்படும் பகுதியின் முற்பாகத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பு ஆகும். இது உங்கள் பிள்ளையின் அடிவயிற்றின் வலது கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு உடலில் அறியப்பட்ட உபயோகம் எதுவுமில்லை.

உடலில் பெருங்குடல் மற்றும் குடல் முளை அமைவிடம் மற்றும் அடைப்புள்ள, வீக்கமடைந்த குடல் முளையின் சித்தரிப்பு
குடல்வால் அடைக்கப்பட்டு வீங்கும்போது குடல்வால் அழற்சி உண்டாகிறது.

குடல்வால் அடைபடும்போது குடல்வால் அழற்சி ஏற்படுகிறது. அடைப்பானது குடல்வாலை வீங்கச் செய்கிறது. வீக்கமானது வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, மற்றும் காய்ச்சலை உண்டாக்கலாம்.

உங்கள் பிள்ளைக்கு, குடல்வால் அழற்சி இருப்பதாக மருத்துவர் சந்தேகித்தால், அவர் ஒரு உடற்பரிசோதனை செய்வார். செவியுணரா ஒலிப் பரிசோதனை அல்லது சீடி (CT) ஸ்கான் பரிசோதனை செய்யும்படியும் அவர் கேட்கலாம்.

குடல்வாலெடுப்பு என்றால் என்ன?

உங்கள் பிள்ளைக்கு குடல்வால் அழற்சி இருந்தால், பெரும்பாலும் குடல்வாலை எடுப்பதற்கு அவனு(ளு)க்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. இந்த அறுவைச் சிகிச்சை குடல்வாலெடுப்பு என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சாதாரணமான, எளிய செயற்பாடாகும். பெதுவாக இந்த அறுவைச் சிகிச்சை உங்கள் பிள்ளையின் வளர்ச்சியைப் பாதிக்காது. இன்னும் உங்கள் பிள்ளையால் உணவைச் சமிபாடடையச் செய்ய முடியும்.

உங்கள் பிள்ளையின் நிலைமையைப் பொறுத்து, குடல்வாலெடுப்பானது, ஒரு அவசர அறுவைச் சிகிச்சையாகவுமிருக்கலாம் அல்லது ஒரு திட்டமிட்ட அறுவைச் சிகிச்சையாகவுமிருக்கலாம். உங்கள் பிள்ளை மருத்துவ மனையில் தங்கியிருக்கவேண்டுமா அல்லது அறுவைச் சிகிச்சை நடைபெறும் நாளில் மருத்துவமனைக்கு வரவேண்டுமா என்பது பற்றி உங்கள் பிள்ளையின் மருத்துவர் தீர்மானிப்பார்.

குடல்வாலெடுக்கும்போது

பொது மயக்கமருந்து என்றழைக்கப்படும் ஒரு விசேஷ “நித்திரைக்கான மருந்து” உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கப்படும்.இது உங்கள் பிள்ளை அறுவைச் சிகிச்சை நடைபெறும் நேரம் முழுவதும் நித்திரையாயிருப்பான் மற்றும் எதனையுமே உணரமாட்டான் என்பதை உறுதிசெய்ய உதவும்.  

அறுவைமருத்துவர் உங்கள் பிள்ளையின் அடிவயிற்றில் கூரிய கத்தியால் கீறுவார். அறுவைமருத்துவர் லாப்பரஸ்கோப் எனப்படும் ஒரு புகைப்படக் கருவியையும் உபயோகித்து சிறிய கீறுகளை உண்டாக்குவார். அறுவைமருத்துவர் உங்கள் பிள்ளையின் குடல்வாலை வெட்டியெடுத்துவிட்டு அது இணைக்கப்பட்டிருந்த குடற்பகுதியை தைத்துவிடுவார். பின்பு, அறுவைமருத்துவர் ஸ்ரெறி-ஸ்ற்றிப்ஸ் என்றழைக்கப்படும் சிறிய துண்டுப் பட்டிகளால் வெட்டுக்காயங்களை மூடி விடுவார்.

குடல்வாலெடுப்பு அறுவைச் சிகிச்சை செய்து முடிக்க ஏறக்குறைய 1 மணி நேரம் எடுக்கும்.

குடல்வாலெடுப்பு அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர்

குடல்வாலெடுப்பு அறுவைச்சிகிச்சைக்குப் பின்னர் உங்கள் பிள்ளை PACU என்றும் அழைக்கப்படும், மயக்கமருந்து கொடுக்கப்பட்டபின் பராமரிக்கப்படும் தொகுதி அல்லது நிவாரணமடையும் அறைக்குக் கொண்டுசெல்லப்படுவான். அவன் 1 மணி நேரத்துக்கு அங்கிருப்பான். உங்கள் பிள்ளை விழித்து எழுந்தவுடன் நீங்கள் அவனைப் பார்வையிடலாம். அதன் பின்னர் உங்கள் பிள்ளை உள்நோயாளர் பிரிவுக்கு திருப்பி அனுப்பப்படுவான். அவன் அங்கு 12 முதல் 24 மணி நேரம் வரை தங்கியிருப்பான்.

பின்வரும் நிலைமைகள் இருக்கும்போது உங்கள் பிள்ளை வீட்டுக்குப் போகலாம்:

 • அவனது இதயத் துடிப்பு, சுவாசம், இரத்த அழுத்தம், ,மற்றும் உடல் வெப்பநிலை என்பன இயல்பு நிலையிலிருக்கிறது.
 • வாந்தி எடுக்காமல் அவனால் சாப்பிடமுடிகிறது.
 • வலிக்கான மருந்துகளை அவனால் சௌகரியமாக வாயினால் உட்கொள்ள முடிகிறது.வாயினால் உட்கொள்ளும் மருந்து ஓரல் மெடிசின் எனப்படும்.

உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

வெட்டுக்காயத்தைப் பராமரித்தல்

அறுவைச் சிகிச்சையின்போது வெட்டப்பட்ட காயங்கள் ஸ்றெறி-ஸ்றிப்ஸ் என்ற துண்டுப் பட்டைகளால் மூடப்பட்டிருக்கும். துண்டுப் பட்டைகளுக்கு நீங்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை. வெட்டுக்காயப் பகுதியைத் தொட முன்பு அல்லது சுத்தம் செய்வதற்கு முன்பு உங்கள் கைகளைக் கழுவவும்.

துண்டுப்பட்டைகளில் சிறிதளவு இரத்தம் காணப்படுவது சாதாரணமானது. இரத்தம் புதியதாக அல்லது இரத்தக் கசிவு அதிகரித்தால், 5 முதல் 6 நிமிடங்களுக்கு அந்தப் பகுதியை, ஒரு சுத்தமான துணியினால் அழுத்தவும். பின்பு உங்கள் பிள்ளையின் அறுவைமருத்துவரின் அலுவலகத்தை அழைக்கவும்.

இரத்தக் கசிவு நிறுத்தப்படவில்லையென்றால், உங்கள் பிள்ளையை ஒரு குடும்ப மருத்துவரிடம் அல்லது அவசர நிலைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்.

ஸ்றெறி-ஸ்றிப்ஸ் என்ற துண்டுப் பட்டைகள் தாமாகவே விழுந்துவிடும். உங்கள் பிள்ளைக்கு அறுவைச் சிகிச்சை செய்த பின்னர் 7 முதல் 10 நாட்களில் துண்டுப் பட்டைகள் தாமாகவே விழாவிட்டால், அவற்றை நீங்கள் எடுத்து விடலாம்.

நடவடிக்கைகள்

உங்கள் பிள்ளை தன்னால் முடியும் என்று உணரும்போது அவன் தனது வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

ஆகாரம்

அறுவைச் சிகிச்சைக்குப்பின்னர் உங்கள் பிள்ளை தனது வழக்கமான ஆகாரத்தை உண்ணும் நிலைமைக்குத் திரும்பவேண்டும். உங்கள் பிள்ளைக்கு உணவு உண்பதில் பிரச்சினை இருந்தால், உங்கள் அறுவைமருத்துவரின் அலுவலகத்தை அழையுங்கள்.

வலிக்கான மருந்துகள்

உங்கள் பிள்ளை வீடு திரும்பியதும், அறுவைச் சிகிச்சை முடிந்த முதல் 24 மணி நேரங்களுக்கு நீங்கள் அவனுக்கு அசெட்டமினோஃபென் மருந்து கொடுக்க விரும்பலாம். உங்கள் பிள்ளைக்கு எவ்வளவு மருந்து கொடுக்கவேண்டும் என்பது பற்றிய போத்தலிலுள்ள அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். முதல் 24 மணி நேரங்களுக்கு பின் தேவைக்கேற்றபடி வலி மருந்து கொடுக்கலாம்

குளிப்பாட்டுதல்

அறுவைச்சிகிச்சை நடைபெற்றபின் 48 மணி நேரங்களுக்குப்பின்பு உங்கள் பிள்ளையை நீங்கள் குளிப்பாட்டலாம்.

பாடசாலைக்கு

உங்கள் பிள்ளை தன்னால் முடியும் என உணரும்போது மற்றும் அவன் வழக்கமான செயற்பாடுகளுக்குத் திரும்புகிறான் என்று நீங்கள் உணரும்போது அவன் பகல் நேரப் பராமரிப்பு நிலையத்துக்கோ அல்லது பாடசாலைக்கோ திரும்பவும் போகலாம்.

அறுவைமருத்துவ குழுவை எப்போது அழைக்கவேண்டும்

குடல்வாலெடுப்பு அறுவைச் சிகிச்சைக்குப்பின்னர் சீழ்க்கட்டி (தொற்று நோய்) உண்டாதல் ஒரு முக்கியமான மற்றும் கவலையை உண்டாக்கும் விஷயமாகும். உங்கள் பிள்ளையில், கீழ்க் காணும்,தொற்றுநோய்க்குரிய அடையாளங்கள் அல்லது அறிகுறிகளில் ஏதாவதொன்றை அவதானித்தால் , உங்கள் பிள்ளையின் அறுவைமருத்துவக் குழு அலுவலகத்தை அழைக்கவும்.

 • ​38.5 °C (101°F) அல்லது அதற்கும் அதிகமான காய்ச்சல்
 • வெட்டுக்காயமுள்ள பகுதியில் கெட்ட நாற்றமுள்ள, தடித்த மஞ்சள் அல்லது பச்சை நிறத் திரவம் வெளியேறுதல்
 • வெட்டுக்காயமுள்ள பகுதியில் இரத்தம் கசிதல்
 • வெட்டுக்காயமுள்ள பகுதி சிவந்திருத்தல்
 • வெட்டுக்காயமுள்ள பகுதியில் வீக்கம்
 • வலி நிவாரண மருந்து உட்கொண்ட பின்பும் வலி மோசமாகிக்கொண்டே போதல்
 • பசியின்மை அல்லது வாந்தி
 • வயிறு வலி அல்லது வயிறு வீங்குதல் அல்லது பெரிதாதல்
 • உங்கள் பிள்ளை மந்தமாக அல்லது மிகவும் களைப்பாக அல்லது சோர்வாக உணருகிறான்.

உங்களுக்கு, அவசர நிலைமையற்ற கேள்வி அல்லது கவலை இருந்தால், உங்கள் பிள்ளையின் அறுவைமருத்துவரின் அலுவலகத்தை அலுவலக நேரத்தில் அழைக்கவும் அல்லது அலுவலக நேரத்துக்குப் பின்னர் ஒரு தகவலை, பதிவுசெய்யும் இயந்திரத்தில் விட்டுவிடவும். உங்களுக்கு அவசரநிலைமையிலுள்ள கவலை இருந்தால், உங்கள் பிள்ளையைக் குடும்ப மருத்துவரிடம், குழந்தை மருத்துவரிடம், அல்லது உங்களுக்கு மிக அருகாமையிலிருக்கும் அவசரச் சிகிச்சைப்பிரிவுக்கு அழைத்துச் செல்லவும்.

எனது பிள்ளையின் அறுவைமருத்துவரின் பெயர்:

தொலைபேசி எண்:

எனது பிள்ளையின் வழக்கமான மருத்துவரின் பெயர்:

தொலைபேசி எண்:

முக்கிய குறிப்புகள்

 • உங்கள் பிள்ளைக்குக் குடல்வால் அழற்சி இருந்தால், குடல்வாலை அகற்ற பெரும்பாலும் அவனுக்கு ஒரு அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.
 • உங்கள் பிள்ளையின் நிலைமையைப் பொறுத்து, அவனுக்கு குடல்வாலெடுப்பு, ஒரு அவசரநிலை அறுவைச் சிகிச்சையாக இருக்கலாம் அல்லது ஒரு திட்டமிட்ட அறுவைச் சிகிச்சையாக இருக்கலாம்.
 • அறுவைச் சிகிச்சைக்காக உங்கள் பிள்ளைக்கு ஒரு பொது மயக்கமருந்து தேவைப்படலாம்.
 • உங்கள் பிள்ளைக்கு அதிகளவு இரத்தக் கசிவு இருந்தால் அல்லது தொற்றுநோய்க்கான அறிகுறிகளை அவனில் அவதானித்தால் உங்கள் பிள்ளையின் அறுவைமருத்துவரை அழைக்கவும்.
Last updated: செப்டம்பர் 24 2009