மனநலிவு நோய் (டவுன் சின்றம்)

Down syndrome [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead.

இந்தப் பாரம்பரிய நிலைமைக்கான அறிகுறிகள், சிக்கல்கள், மற்றும் இந்தப் பாரம்பரிய நிலைமையுள்ள பிள்ளைகளுக்கான எதிர்கால வாய்ப்பு பற்றி இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு கண்ணோட்டம்.

மனநலிவு நோய் என்றால் என்ன?

மனநலிவு நோய் ஒரு பரம்பரை நிலைமை. ஒரு பிள்ளை வழக்கமான 46 நிறமிகளுக்குப் பதிலாக 47 நிறமிகளுடன் பிறக்கும்போது இது சம்பவிக்கிறது. மேலதிகமான நிறமி, நிறமி 21 ஆகும். மேலதிகமான நிறமி, மூளை வளர்ச்சியில் தாமதத்தையும் உடலில் அநேக இயற்கைக்கு மாறான நிலைகளையும் ஏற்படுத்தும். இனம், பாலினம், மற்றும் சமூதாய-பொருளியல் நிலை எதுவாயிருந்தாலும் மனநலிவு நோய் உள்ள பிள்ளைகள் பிறக்கலாம்.

மனநலிவு நோய் டிரைசோமி 21 எனவும் அறியப்படுகிறது.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

ஒவ்வொரு பிள்ளையின் மனநலிவிற்கான அறிகுறிகளும் வேறுபட்டதாகவும் மேலோட்டமானதிலிருந்து மிகக்கடுமையானது வரை விஸ்தரிக்கப்பட்டதாகவும் இருக்கும். மனநலிவுற்ற பிள்ளைகள் பொதுவான உடல் சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தாலும்கூட குடும்ப அங்கத்தவவர்களைப் போன்றுதான் தோற்றமளிப்பார்கள். இந்த சிறப்பம்சங்கள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • கண்மடலின் உள் முனையில் தெளிவான தோல் மடிப்புகளுடன் மேல்நோக்கிச் சாய்ந்த கண்கள்
  • சிறிய, கீழ்ப் பதிந்த காதுகள்
  • சிறிய வாய்
  • சிறிய, கன்னங்கள் நிறைந்த வட்டமான முகம்
  • வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பெரிய நாக்கு
  • உள்ளங்கையில் ஒரு மடிப்பு
  • தட்டையான மூக்கு
  • தலையின் தட்டையான பின்பகுதி
  • பிறப்பில் குறைக்கப்பட்ட தசை முறுக்கு
  • தள்ளாடும் அவயவங்கள்
  • பிடரியில் மேலதிக தோல்
  • குள்ளமான தோற்றம்
  • அசாதாரணமான மனரீதியான மற்றும் உடல்ரீதியான வளர்ச்சி
மன நலிவு காரியொட்டைப் வகை
மன நலிவு உள்ளவர்களுக்கு நிறமி 21 இன் ஒரு மேலதிக பிரதி காணப்படும்.

மனநலிவு நோய்க்கான காரணங்கள்

பெரும்பாலான பிள்ளைகள் பிறப்பில் 23 சோடி குரோமோசோம்களை அதாவது நிறமிகளைக் கொண்டிருக்கிறார்கள். மிகப் பொதுவாகக் காணப்படும் மனநலிவு நோயில் ஒருவர், 21வது குரோமோசோமின் வழக்கமான 2 பிரதிகளுக்குப் பதிலாக 3 பிரதிகளைக் கொண்டிருப்பார். கருப்பையில் கரு வளர்ச்சியடையும் மிக ஆரம்ப கட்டத்திலேயே இந்தத் தவறு ஏற்பட்டுவிடுகிறது.

மனநலிவு நோய்க்கும் தாயின் முட்டைகளின் வயதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம். மனநலிவுள்ள எல்லாக் குழந்தைகளிலும் மூன்றில் ஒரு பங்கினர் 37 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கே பிறக்கின்றனர்.

ஆபத்துக்கான காரணிகள்

ஒரு குழந்தைக்கு மனநலிவு நோய் ஆபத்து தாயின் வயதினால் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது, குழந்தையின் நிறமிகளைச் சோதிப்பதற்காக பனிக்குடத் துளைப்பு போன்ற, விசேஷ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

சிக்கல்கள்

மனநலிவு நோயுடன் பிறக்கும் அநேக பிள்ளைகள் குழந்தைகளாக, பிள்ளைகளாக, மற்றும் வளர்ந்தவர்களாக இருக்கும்போது உடல்நலச் சிக்கல்களை எதிர்ப்படுகிறார்கள். மனநலிவு நோயுடன் பிறந்த பிள்ளைகள் பின்வரும் மருத்துவ நிலைமைகளுள் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்டவற்றைக் கொண்டிருப்பார்கள்:

  • இதயக் கோளாறு
  • குடலில் அசாதாரண நிலைமை
  • கண் பிரச்சினைகள்
  • காது கேட்டலில் பிரச்சினைகள்
  • திரும்பத் திரும்ப நிகழும் காதுத் தொற்றுநோய்கள்
  • இடுப்பு இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி
  • நித்திரையின் மூச்சுத் திணறுதல்(சிலீப் அப்னியா)
  • தைரோயிட் சுரப்பிகளின் அசாதரணமான மிகக் குறைந்தளவுசெயற்பாடு (குறைந்தளவு தைரோயிட் சுரத்தல்)
  • கழுத்து மூட்டுக்களின் ஸ்திரமின்மை
  • தொற்றுநோய்கள் இலகுவாகத் தொற்றிக்கொள்ளக்கூடிய ஆபத்து

மனநலிவுள்ள பிள்ளைகளுக்கு கடுமையான இரத்தப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தாலும் இது இன்னும் அரிதாகவே இருக்கின்றது. மனநலிவுள்ள பிள்ளைகள் அநேகமாக பருமனாகவும் இருப்பார்கள். மனநலிவுள்ள பெரியவர்களுக்கு அல்சைமர்ஸ் எனப்படும் முதுமையில் நினைவாற்றலை இழக்கும் நோய் மற்றும் குறைந்த வயதிலேயே இரத்த நாடிகள் கடினமடைவது போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் அதிகம் இருக்கின்றது.

உதவுவதற்காக உங்கள் மருத்துவர் செய்யக்கூடியவை

இன்னும் பிறவாத ஒரு சிசு மனநலிவுள்ள பிள்ளையாகப் பிறக்குமா என்பதைக் கண்டறியப் பரிசோதனைகள் உதவமுடியும். பல வித்தியாசமான வகைகளில் பரிசோதனைகள் இருக்கின்றன.

கர்ப்ப காலத்தின் 10 தொடங்கி 14வது வாரங்களில் அல்ட்ராசவுன்ட் பரிசோதனை செய்யலாம். மனநலிவு சம்பந்தமான உடல்சார்ந்த கோளாறுகள் இருக்கின்றனவா என்று பார்ப்பதன் மூலம் சிசுவிற்கு மனநலிவு இருக்கின்ற அபாயத்தை மதிப்பிட அப்பரிசோதனை உதவலாம்.

கர்ப்ப காலத்தின் 11வது மற்றும் 16வது வாரங்களுக்கிடையே இரத்தப் பரிசோதனை செய்யப்படலாம்.

இந்தப் பரிசோதனைகள் மனநலிவுக்கான அதிக அபாயமிருப்பதாகக் காண்பித்தால், வேறு சோதனைகள் செய்யப்படலாம். இவை க்கொரியோனிக் வில்லஸ் சாம்பிளிங் மற்றும் அம்னீயோசென்டீசஸ் ஆகிய மிகத் துல்லியமான சோதனைகளை உட்படுத்தும். எந்த பரிசோதனை முடிவுகளையும் பற்றி உங்கள் மருத்துவர் மற்றும் குடும்பத்துடன் கலந்து பேசுவது மிகவும் முக்கியம்.

பிறக்கும்போது, எல்லாக் குழந்தைகளுமே மனநலிவிற்கு அடையாளமான சிறப்பம்சங்களுக்காக சோதிக்கப்படுகின்றனர். மனநலிவு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், ஒரு இரத்தப்பரிசோதனை செய்யப்படும்.

ஒரு குழந்தை மனநலிவைக் கொண்டிருந்தால், இருதயம், குடல்கள் அல்லது உடலின் வேறுபகுதிகளில் பிரச்சினைகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய வேறு பரிசோதனைகள் செய்யப்படும்.

மனநலிவு நோயுள்ள உங்கள் பிள்ளைக்கு எப்படி உதவி செய்யலாம்

ஆதரவைப் பெறவும்

மனநலிவினால் ஏற்படும் மனரீதியான மற்றும் உடல்ரீதியான பாதிப்புகள் குழந்தையின் பெற்றோருக்கும், வளர்ந்துவரும் குழந்தைக்குமேகூட பல சவால்களை உருவாக்கலாம். ஒரு “பூரணமான” ஒரு குழந்தையைப் பெறுவதையே பெற்றோர்கள் பொதுவாகக் கற்பனைசெய்வார்கள். தங்கள் குழந்தைக்கு பிறப்பிலேயே கோளாறு இருக்கின்றது என்பதை உணரும்போது பெற்றோர்கள் ஏமாற்றமடையலாம். அதிர்ச்சி, மறுத்தல், கவலை மற்றும் கோபம் போன்ற பல உணர்ச்சிகளை அவர்கள் உணரலாம்.

உங்கள் மருத்துவரிடமிருந்தும் , சமூகத்திடமிருந்தும் உதவிபெற முனையுங்கள். பெற்றோர்கள் தனித்துவிடப்பட்டவர்கள் அல்ல. மனநலிவுள்ள பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் உதவ பல ஆதரவுக் குழுக்கல் இருக்கின்றன. ஆரோக்கியமான மகிழ்ச்சியான பெற்றோர்தான் பிள்ளைக்கு அதிகம் உதவியளிப்பவராக இருப்பார்கள்.

மூலவளங்களைக் கண்டுபிடிக்கவும்

பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் வளர்ச்சி மற்றும் விருத்தியைப்பற்றி கேள்விகளை அல்லது கவலைகளைக் கொண்டிருப்பார்கள். உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது சிகிச்சையாளர் உங்கள் பிள்ளையின் முழு ஆற்றலையும் எவ்வாறு அடையலாம் என்பதுபற்றிய தகவலை வழங்கக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆதரவுக் குழுக்களும்கூட ஆசிரியர்களோடு இணைந்து செயல்ப்படுதல், உங்கள் பிள்ளையை சகாக்களிடம் அறிமுகம் செய்தல் மற்றும் வளர்ச்சியும் விருத்தியும் சம்பந்தமான வேறு அம்சங்களிலும் வழிகாட்ட முடியும்.

சிகிச்சை

மனநலிவுள்ள பிள்ளைகளுக்கு குறிப்பான எந்த மருத்துவ சிகிச்சையும் இல்லை. பெரும்பாலும் எல்லா மனநலிவுள்ள குழந்தைகளும் பாடசாலைக்குச் செல்வார்கள் மற்றும் வழக்கமான வகுப்பறைகளில்கூட கலந்துகொள்ளக்கூடும். அதிகப்படியான உதவி அடிக்கடி தேவைப்பட்டாலும், பல பாடசாலைகள் வகுப்புகளில் உதவி வழங்குகின்றன. மனநலிவுள்ள பிள்ளைகள் கற்றுக்கொள்வதில், வாசிப்பதில் மற்றும் எழுதுவதில் சற்று வேகம் குறைந்தவர்களாக இருப்பதன் காரணமாக விசேஷ உதவிகள் தேவைப்படலாம். உதாரணமாக, பேச்சுச் சிகிச்சை மொழித் திறமைகளைப் பலப்படுத்தலாம்.

உடல் சார்ந்த அல்லது தொழில் வழி சிகிச்சை அசைவுத் திறமையை முன்னேற்றக்கூடும். பிள்ளையின் நிலையைப் பொறுத்து, குடல்ப் பிரச்சினைகள் அல்லது இதயக் கோளாறுகளுக்கு அறுவைச்சிகிச்சை அவசியமாகலாம்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

மனநலிவுள்ள பிள்ளைகள் மருத்துவரைப் பார்த்து ஒழுங்காக தைரொயிட் பரிசோதனைகளை செய்துவரவேண்டும். ஒரு மருத்துவர் அல்லது வேறு உடல்நல பராமரிப்பளிப்பவர், விசேஷ கல்வி அல்லது பிள்ளைக்கு பயனளிக்கக்கூடிய வேறு உதவிகளைப் பரிந்துரைக்கக் கூடியவராக இருக்கக்கூடும்.

எதிர்கால வாய்ப்பு

பல மனநலிவுள்ள பிள்ளைகள் முழுமையானதும் மகிழ்ச்சியானதுமான வாழ்க்கை வாழக்கூடிய வகையில் வளர்ந்து வருவார்கள். அவர்கள் பெரும்பாலும் கலகலப்பாகவும் நன்கு பழகுபவர்களாகவும் இருப்பார்கள். சிலர் மேல்நிலைப் பள்ளிப்படிப்பை பூர்த்திசெய்வார்கள். சிலர் பகுதி-நேர அல்லது முழு-நேர வேலைகளை செய்யக்கூடியவர்கள். சிலர் காதல் உறவுகளைக்கொண்டு திருமணமும் செய்திருக்கிறார்கள். மனநலிவுள்ள பலர் 50 மற்றும் 60 வயது வரைகூட வாழ்கிறார்கள். ஆயினும் 20% ஆன மனநலிவுள்ள பிள்ளைகள் 5 வயதிற்குள் இறந்துவிடுவார்கள்.

முக்கிய குறிப்புகள்

  • மனநலிவுள்ள பிள்ளைகள் தனித்தன்மையான உடல் சிறப்பம்சங்களைக் கொண்டிருப்பதோடு மூளை வளர்ச்சியின் வேகம் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.
  • இருதயக் கோளாறுகள், கண் மற்றும் காதுப் பிரச்சனைகள் போன்றவை சிக்கல்களின் பட்டியலில் உட்படலாம்.
  • மனநலிவுள்ள பிள்ளைகள் ஒழுங்காக மருத்துவரைப் பார்த்துவருவது அவசியம்.
  • பல மனநலிவுள்ள பிள்ளைகள் முழுமையானதும் மகிழ்ச்சியானதுமான வாழ்க்கை வாழக்கூடிய வகையில் வளர்ந்து வருவார்கள்.
Last updated: மே 07 2010