அன்டிபையோடிக்- தொடர்பான வயிற்றோட்டம்

Antibiotic-associated diarrhea [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பல ஆண்டிபையோடிக்குகள் வயிற்றோட்டம் ஏற்பட காரணமாகிறது ஏனெனில் அவை குடலை எரிச்சல் படுத்துகின்றன. காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் அடங்கிய ஆண்டிபையோடிக்-தொடர்பான வயிற்றோட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

அன்டிபையோடிக் தொடர்பான வயிற்றோட்டம் என்பது என்ன?

அன்டிபையோடிக் உட்கொள்ளும் சுமார் 18% (ஏறக்குறைய 5 இல் 1) கைக்குழந்தைகளுக்கும் நடை குழந்தைகளுக்கும் வயிற்றோட்டம் உண்டாவது சகஜமானதே. எந்த வகையான அன்டிபையோடிக்னாலும் இது ஏற்படலாம். 2 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளில் அன்டிபையோடிக் தொடர்பான வயிற்றோட்டம் ஏற்படுவது குறைவானதாகவே இருக்கின்றது.

அதிகமான பிள்ளைகளில் இந்த வயிற்றோட்டம் கடுமையற்றதாகும். உங்கள் பிள்ளை போதிய அளவு நீராகாரத்தை (திரவங்கள்) உட்கொள்ளாவிட்டால் அல்லது மலம் கழிக்கும்போது ஏராளமான நீர்மத்தை இழந்தாலேயன்றி இந்த வயிற்றோட்டம் பொதுவாக ஆபத்தானதல்ல. உங்கள் பிள்ளை போதிய அளவு நீராகாரத்தை குடிப்பதை உறுதிசெய்யவும். சிறுநீரின் அளவு குறைதல், சினம் கொள்ளுதல், களைப்பு, வாய் உலர்தல் என்பன உடலில் நீர்வறட்சி ஏற்பட்டதற்கான அடையாளங்களாகும். ஒரு பிள்ளை சந்தோஷமாகவும் விளையாடிய வண்ணமும் இருப்பது உடலில் நல்ல நீர்த்தன்மை இருப்பதை குறிக்கின்றது.

உங்கள் பிள்ளை மலம் கழிக்கும்போது ஏராளமான நீர்மம் வெளியேறினால் அல்லது உடலில் நீர்வறட்சி உண்டென்பதற்கான அடையாளங்களைக் காட்டினால் மருத்துவ உதவியை நாடவும்.

மேலதிக தகவலுக்கு, தயவு செய்து "உடலில் நீர்வறட்சி" ஐ வாசிக்கவும்.

அன்டிபையோடிக்  தொடர்பான வயிற்றோட்டத்தின் அடையாளங்களும் அறிகுறிகளும்

அன்டிபையோடிக் சம்பந்தமான வயிற்றுப்போக்குள்ள ஒரு பிள்ளை, அன்டிபையோடிக் மருந்துகள் உட்கொள்ளும்போது இளகிய மலம் அல்லது தண்ணீர் போன்ற மலத்தைக் கொண்டிருப்பான். பெரும்பாலான சமயங்களில், வயிற்றுப்போக்கு 1 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும்.

வயிற்றுப்போக்கு பெரும்பாலும், அன்டிபையோடிக் மருந்து உட்கொள்ளத்தொடங்கிய இரண்டாம் நாள் மற்றும் எட்டாம் நாளுக்கிடையில் தொடங்கும். ஆயினும், அன்டிபையோடிக் உட்கொள்ளத் தொடங்கிய முதல் நாளில் வயிற்றுப் போக்கு தொடங்கலாம், அல்லது நிறுத்தப்பட்டு ஒரு சில வாரங்களுக்குப்பின் தொடங்கலாம்.

அன்டிபையோடிக் தொடர்பான வயிற்றோட்டத்திற்கான காரணங்கள்

எங்கள் குடலின் உட்பகுதியில், உணவுச் சமிபாட்டுக்கு உதவி செய்யக்கூடிய கோடிக்கணக்கான நுண்ணிய பக்டீரியாக்கள் இருக்கின்றன. அன்டிபையோடிக் மருந்துகள் தீங்கு செய்யும் பக்டீரியாக்களை அழிக்கும்போது இந்த ‘நல்ல’ பக்டீரியாக்களையும் சேர்த்து அழித்துவிடும். இந்த பக்டீரியாக்கள் இறப்பது மற்றும் குடலில் திரும்பவும் வளரும் செயற்பாடு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

சிக்கல்கள்: உடல்நீர் வறட்சி மற்றும் வீக்கம்

மேலே விபரிக்கப்பட்ட உடல்நீர் வறட்சி ஆபத்தானதாகலாம். ஒரு வருடத்துக்கும் குறைவான வயதுள்ள குழந்தைகள் உடல்நீர் வறட்சிக்கான மிக அதிக ஆபத்திலிருக்கிறார்கள். இழந்த நீரை ஈடு செய்வதற்காக, உங்கள் பிள்ளை போதியளவு நீராகாரங்கள் குடிப்பதற்கு நிச்சயமாயிருங்கள். உடல்நீர் வறட்சிக்கான அறிகுறிகளை நன்கு அவதானிக்கவும். உடல்நீர் வறட்சிக்கான அறிகுறிகள் குறைவாக சிறுநீர் கழித்தல், தேவையற்ற பரபரப்பைக் காண்பித்தல், சோர்வு, மற்றும் வாய் உலர்ந்துபோதல் என்பனவற்றை உட்படுத்தும்.

அன்டிபையோடிக் உட்கொள்ளும் குழந்தைகளில் மிக அபூர்வமாகவே பெருங்குடல் வீக்கம் ஏற்படுகின்றது. இது பின்வருவனவற்றை உண்டாக்கும்:

 • இரத்தத்தை அல்லது சீதத்தை கொண்டிருக்கக்கூடிய கடுமையான வயிற்றோட்டம்
 • காய்ச்சல்
 • வயிற்றுவலி
 • மிகுந்த பலவீனம்

உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

அன்டிபையோடிக் மருந்துகளைத் தொடர்ந்து கொடுக்கவும்:

வயிற்றுப்போக்கு வீரியம் குறைந்ததாக மற்றும் உங்கள் பிள்ளை நலமுடன் இருந்தால், அன்டிபையோடிக் மருந்துகளையும் உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரிப்பதையும் தொடர்ந்து செய்யவும்.

உங்கள் பிள்ளையின் உடலை நீர்தன்மையுள்ளதாக வைத்திருங்கள்

பழரசம் அல்லது மென் குளிர்பானங்கள் வயிற்றுப்போக்கை மேலும் மோசமானதாக்கும். எனவே அவற்றைக் கொடுக்கவேண்டாம்.

குறிப்பான சில உணவுகளைத் தவிர்க்கவும்

அவனுக்கு பீன்ஸ் அல்லது உறைப்புள்ள உணவுகளைக் கொடுக்கவேண்டாம்

டையப்பரால்  ஏற்படும் தோல் அரிப்பிற்கு சிகிச்சையளித்தல்

வயிற்றோட்டம் உங்கள் பிள்ளையின் குதப்பகுதியைச் சுற்றி அல்லது டையப்பர் கட்டும் பகுதியில் தோலரிப்பை உண்டாக்கினால்:

அப்பகுதியை நீரினால் மென்மையாக கழுவவும்

மெதுவாகத் தட்டி உலரவிடவும்.

அந்தப் பகுதியை பெற்றோலியம் ஜெலி (வசிலின் போன்ற), சிங்கை அடிப்படையையாகக் கொண்ட (சிங்கொஃபாக்ஸ் அல்லது பெனடென்) கிறீம், அல்லது வேறு டயபர் அரிப்புக்கான கிறீமின் ஒரு படலத்தைப் பூசவும்.

மருத்துவர் மேற்பார்வையுடன் புரோபையோடிக்ஸ் (உயிருள்ள பக்டீரியாகொண்ட மருந்துத்தயாரிப்புகள்)

புரோபையோடிக்குகள் “ஆரோக்கியமுள்ள” பக்டீரியாக்களின் குறை நிரப்பியாகும். அன்டிபையோடிக் மருந்து சம்பந்தப்பட்ட வயிற்றுப்போக்கை, புரோபையோடிக் தடுக்குமா அல்லது அதற்குச் சிகிச்சையளிக்குமா என்பதைப் பற்றி அறிய ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இதுவரை, புரோபையோடிக்குகள் உபயோகிப்பதினால் பலன் ஏற்பட்டதாக இந்த ஆய்வுகள் காண்பிக்கவில்லை. உங்கள் பிள்ளைக்கு புரோபையோடிக்குகள் கொடுப்பதற்கு முன்னர்​ உங்கள் மருத்துவரிடம் கேட்கவும். அதற்குப் பதிலாக, நீங்கள் யோகேட் போன்ற புரோபையோடிக்குகள் உள்ள உணவுகளை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கலாம்.

உங்கள் மருத்துவர் கூறினாலேயன்றி மருந்துகளை உபயோகிக்க வேண்டாம்.

உங்கள் வைத்தியர் கூறினாலேயன்றி, லொப்ரமைட் (இம்மோடியம்) போன்ற வயிற்றோட்டத்தை நிறுத்தும் மருந்துகளை உங்கள் பிள்ளைக்கு கொடுக்கவேண்டாம். குடல் வீக்கத்தை இம் மருந்துகள் மோசமாக்கலாம்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

உங்கள் பிள்ளையிடம் பின்வருவனவற்றை அவதானித்தால் உங்கள் வழக்கமான மருத்துவரை உடனடியாக அழைக்கவும்:

 • கடுமையான வயிற்றுப்போக்கு இருக்கிறது
 • ஒரு புதிய காய்ச்சல் இருக்கிறது
 • மலத்தில் இரத்தம் காணப்படுகிறது
 • மிகவும் களைப்பபாக இருக்கிறான் மற்றும் பானம் எதுவும் குடிப்பதில்லை
 • உடல்நீர் வறட்சிக்கான அறிகுறிகளான குறைவாக சிறுநீர் கழித்தல், தேவையற்ற பரபரப்பைக் காண்பித்தல், சோர்வு, மற்றும் வாய் உலர்ந்துபோதல் என்பனவற்றைக் காண்பிக்கிறான்.

வயிற்றோட்டம் கடுமையாக இருந்தால் அன்டிபையோடிக் மருந்துக்குறிப்பை மாற்றுவது அவசியமாகலாம்

உங்கள் பிள்ளையிடம் பின்வருவனவற்றை அவதானித்தால், பிள்ளையை மிக அருகாமையிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு எடுத்துச்செல்லவும் அல்லது அவசியம் ஏற்பட்டால் 911 ஐ அழைக்கவும்:

 • கடுமையான வலி இருக்கிறது
 • மலத்தில் அதிகளவு இரத்தம் காணப்படுகிறது
 • வயிற்றுப்போக்கு நிவாரணமடையவில்லை ஆனால் மோசமாகிக்கொண்டே போகிறது

முக்கிய குறிப்புகள்

 • அன்டிபையோடிக் உட்கொள்ளும் பிள்ளைகளில் வயிற்றோட்டம் பொதுவானதாகும். அநேகமான சந்தர்ப்பங்களில் இது கடுமையற்றது.
 • மிகவும் இலேசான வயிற்றுப்போக்குள்ள பிள்ளைகள் தங்கள் அன்டிபையோடிக் மருந்துகள் முழுவதையும் உபயோகிக்கவேண்டும்
 • உடலில் நீர்த்தன்மையைப் பேண உங்கள் பிள்ளை போதுமான நீராகாரங்களை அருந்துகிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Last updated: அக்டோபர் 16 2009