அசெடில்சாலிசிலிக் அஸிட் (ASA)

ASA (acetylsalicylic acid) [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

அசெடில்சாலிசிலிக் அஸிட் (ASA) என்றழைக்கப்படும் மருந்தை உங்கள் பிள்ளை எடுக்கவேண்டும்.

ASA எனப்படும் (அசெடில்சாலிசிலிக் அஸிட்) மருந்தை உங்கள் பிள்ளை எடுக்கவேண்டும். ASA எவ்வாறு செயற்படுகிறது மற்றும் அதை உங்கள் பிள்ளைக்கு எவ்வாறு கொடுப்பது என்பது பற்றி இந்தத் தகவல் விளக்குகிறது. பிள்ளை இந்த மருந்தை உபயோகிக்கும்போது ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் அல்லது சிக்கல்கள் பற்றியும் இது விளக்குகிறது.

இது என்ன மருந்து?

இரத்தத்தில் உறைவுக்கட்டிகள் தோன்றுவதால் ஏற்படும் ஸ்றோக்கைத் தவிர்க்க ASA உபயோகிக்கப்படலாம். இரத்தத்தில் உள்ள சிறுதட்டுகள் ஒன்றோடொன்று ஒட்டாதவாறு செய்வதன்மூலம் இது செயற்படுகின்றது.

காய்ச்சல், வலி அல்லது வீக்கம் (சிவத்தல்) ஆகியவற்றைக் குறைக்கவும் ASA பயன்படலாம்.

அஸ்பிரின் எனப்படும் பிராண்ட் பெயராலும் ASA அழைக்கப்படுவதுண்டு.

இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்கு நீங்கள் எவ்வாறு கொடுக்கவேண்டும்?

உங்கள் பிள்ளைக்கு ASA கொடுக்கும்போது கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:

 • உங்கள் பிள்ளைக்கு ஒழுங்காக, உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளுனர் கூறியபடியே ASA கொடுங்கள். தினமும் ஒரே நேரத்தில் பிள்ளைக்கு ASA கொடுப்பதன் மூலம் டோசுகளைத் தவறவிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
 • எந்தக் காரணத்திற்காகவும் ASA கொடுப்பதை நிறுத்த முன்பு உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் பேசுங்கள்.
 • வார இறுதிகள், விடுமுறைகள் மற்றும் விடுமுறை நாட்களின்போது போதிய அளவு ASA இருப்பதை நிச்சயப்படுத்துங்கள்.
 • வயிற்றுக்கோளாறுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு பிள்ளையின் உணவோடு அல்லது பாலுடன் ASA கொடுங்கள்.
 • உங்கள் பிள்ளை வழக்கமான வில்லைகளை அல்லது பிள்ளைகளுக்கான அஸ்பிரினை உபயோகித்து வந்தால், அவை முழுமையாக விழுங்கப்படலாம் அல்லது இடித்துத் தூளாக்கி விழுங்கப்படலாம் அல்லது வாயில் மென்று உண்ணப்படலாம். ASA உட்கொண்ட பின்பு ஒரு கிளாஸ் நீர் அல்லது பாலை பிள்ளை பருகவேண்டும்.
 • உங்கள் பிள்ளை என்டரிக்-கோட்டட் ASA உபயோகித்தால் அந்த வில்லைகள் ஒரு கிளாஸ் நீருடன் முழுமையாக விழுங்கப்பட வேண்டும், அதை இடித்துத் தூளாக்கியோ அல்லது மென்றோ உண்ணக்கூடாது.

பிள்ளை ஒரு டோஸை எடுக்கத் தவறினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒரு டோஸ் ASA ஐ உங்கள் பிள்ளை எடுக்கத்தவறினால்:

 • எடுக்கத் தவறிய டோசை ஞாபகம் வந்ததும் பிள்ளைக்குக் கொடுக்கவும்.
 • அடுத்த டோசுக்கான வேளை மிகவும் அருகிலிருந்தால், தவறிய டோசை விட்டுவிடவும்.
 • பிள்ளையின் அடுத்த டோசை வழக்கமான நேரத்தில் கொடுக்கவும்.
 • உங்கள் பிள்ளைக்கு ஒரு நேரத்தில் 1 டோசை மட்டும் கொடுக்கவும்.

இந்த மருந்தினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் யாவை?

ASA உபயோகிக்கும்போது உங்கள் பிள்ளைக்கு சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். பொதுவாக இதற்காக நீங்கள் ஒரு மருத்துவரைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

ASA மருந்துக்கு பிள்ளையின் உடல் பழகிக்கொள்ளும்போது கடுமையற்ற இந்தப் பக்கவிளைவுகள் தானாகவே மறைந்துவிடக்கூடும். கீழ்க்காணும் அடையாளங்கள் அல்லது அறிகுறிகளில் ஏதாவது பிள்ளைக்கு இருந்தால் மற்றும் அது பிள்ளையைவிட்டு அகலவில்லையென்றால் அல்லது பிள்ளைக்கு அது ஒரு பிரச்சினையாக இருந்தால் பிள்ளையின் மருத்துவருடன் கலந்தாலோசித்து அவரின் அறிவுரையைப் பின்பற்றவும்:

 • சொறி அல்லது அரிக்கும் சருமம்
 • லேசான வயிற்று வலி (ஒரு டோஸ் எடுத்து சிறிது நேரத்தில் இது வழக்கமாக நிகழும்)
 • வயிற்றுக் குழப்பம் அல்லது வாந்தியெடுத்தல்

கீழ்க்காணும் பக்க விளைவுகளில் அநேகமானவை பொதுவாகக் காணப்படுவதில்லை, ஆனால் கடுமையான ஒரு பிரச்சினைக்கு அவை அடையாளமாக இருக்கக்கூடும். கீழ்க்காணும் பக்க விளைவுகளில் ஏதாவதொன்று பிள்ளைக்கு இருந்தால் பிள்ளையின் மருத்துவரை உடனடியாக அழைக்கவும் அல்லது பிள்ளையை அவசர மருத்துவப் பிரிவுக்கு அழைத்துச் செல்லவும்:

 • கடுமையான அல்லது நீடிக்கும் வயிற்று வலி
 • கருமை நிற, தார் போன்ற மலம்
 • சுவாசிப்பதில் சிரமம்
 • கடுமையாக வியர்த்தல்
 • பார்வையில் பிரச்சினை, கலங்கிய பார்வை
 • தலைச்சுற்று
 • காதுகளில் மணி ஒலி, கேட்பதில் சிரமம்

இந்த மருந்தைப் பற்றி வேறு என்ன முக்கிய தகவலை நீங்கள் தெரிந்திருக்கவேண்டும்?

ASA உபயோகிப்பதற்கு முன்பு, பிள்ளைக்கு எப்போதாவது ஆஸ்துமா இருந்ததா என்பதை மருத்துவரிடம் தெரிவிக்கவும். அத்தோடு உங்கள் பிள்ளையின் மருத்துவரிடமும் மருந்தாளுனரிடமும் ASA க்கு அல்லது வேறு மருந்துகளுக்கு அசாதாரணமான அல்லது ஒவ்வாமைப் பிரதிபலிப்பு ஏற்பட்டதா என்பதைத் தெரிவிக்கவும்.

பிள்ளைக்கு எப்போதாவது வயிற்றில் இரத்தக் கசிவு ஏற்பட்டதா அல்லது அடிக்கடி ஏற்படும் வயிற்றுவலி பற்றி பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

கொப்புளிப்பான் அல்லது இன்ஃப்ளுவென்ஸா போன்ற வைரஸ் சுகவீனத்தோடு காய்ச்சல் உள்ள பிள்ளைக்கு பொதுவாக ASA கொடுக்கப்படக்கூடாது. பிள்ளைக்கு வைரஸ் நோய் வருவது போன்று தோன்றினால் ASA கொடுப்பதற்கு முன்பு பிள்ளையின் மருத்துவருடன் கலந்தாலோசிக்கவும். பிள்ளைக்குக் கொடுக்கப்படும் ASA யின் அளவை மாற்றும்படி மருத்துவர் சொல்லக்கூடும்.

உங்கள் பிள்ளைக்கு வேறு மருந்துகள் கொடுப்பதற்கு முன்பு இருமல் மருந்துகள் போன்ற மருத்துவரின் குறிப்பில்லாமல் வாங்கப்படுகின்ற மருந்துகள் கொடுப்பதற்கு முன்புகூட பிள்ளையின் மருத்துவருடன் அல்லது மருந்தாளுனருடன் கலந்துபேசவும். ASA மருந்திற்கு உங்கள் பிள்ளை பிரதிபலிக்கும் விதத்தை கூட்டவோ அல்லது குறைக்கவோ கூடும் என்பதால், எந்த ஒரு மூலிகை மருந்தைக் கொடுப்பதற்கு முன்பும் உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளுனரிடம் கேட்கவும்.

பிள்ளைக்கு எந்த ஒரு அறுவைச் சிகிச்சை நடைபெறுவதற்கு முன்பும், பல்லில் நடைபெறும் சிகிச்சையுட்பட அல்லது அவசர நிலைச் சிகிச்சைக்கு முன்பும் பிள்ளை ASA மருந்தெடுப்பதைப் பற்றி மருத்துவரிடம் அல்லது பல் வைத்தியரிடம் தெரிவிக்கவும். ASA மருந்தை நிறுத்தும்படி அவர்கள் சொன்னால் திரும்பவும் அதை எடுப்பதற்கு சரியான நேரம் எது என்பதை உங்கள் மருத்துவர் அல்லது பல் வைத்தியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.

கிளினிக் அல்லது மருத்துவரின் அலுவலகம் மற்றும் இரத்தப் பரிசோதனை நியமனங்கள் எல்லாவற்றிற்கும் சென்றுவாருங்கள். இதன் மூலம் ASA மருந்திற்கு உங்கள் பிள்ளை எவ்வாறு பிரதிபலிக்கின்றதென்பதை மருத்துவரால் அவதானிக்க முடியும்.

இந்த மருந்தை அறை வெப்பநிலையில் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையிலுள்ள சின்க் போன்ற ஈரப்பதமான இடங்களில் இந்த மருந்தை வைக்கவேண்டாம்.

ASA யின் நிறம் மாறிவிட்டால் அல்லது வினாகிரிபோல் மணக்கத் தொடங்கிவிட்டால் அதைப் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம். பழுதாகிவிட்ட அல்லது காலாவதியாகிவிட்ட ASA மருந்தை வீசிவிடுவது எப்படியென்று மருந்தாளுனரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

காலாவதியான ASA ஐ வீசிவிடுங்கள்

எல்லா மருந்துகளையும் உங்கள் பிள்ளையின் பார்வைக்கும் கைக்கும் எட்டாத தூரத்தில் வையுங்கள்.

எந்த மருந்தானாலும் அதிகமான அளவில் உங்கள் பிள்ளை உட்கொண்டுவிட்டால் கீழ்வரும் இலக்கங்கள் ஒன்றில் ஒன்டாரியோ பொய்சன் சென்டரை அழக்கவும். இந்த அழைப்புக்கள் இலவசமானவை.

 • நீங்கள் டொரொன்டோவில் வசிப்பவரென்றால் 416-813-5900 ஐ அழையுங்கள்.
 • நீங்கள் ஒன்டாரியோவில் வேறு எங்காவது வசிப்பவறென்றால் 1-800-268-9017 ஐ அழையுங்கள்.
 • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வசிப்பவரென்றால், உங்கள் உள்ளூர் நஞ்சுத் தகவல் நிலையத்தை அழையுங்கள்.

பொறுப்புத் திறப்பு: குடும்ப மருத்துவ-உதவியில் உள்ள இந்தத் தகவல் பதிப்பின்போது துல்லியமானது. இது ASA பற்றிய தகவலின் சுருக்கத்தை வழங்குகிறதே தவிர இந்த மருந்து தொடர்பான எல்லாத் தகவலையும் உள்ளடக்கியதல்ல. எல்லாப் பக்க விளைவுகளும் பட்டியலிடப்படவில்லை. உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது ASA பற்றி மேலதிகத் தகவலுக்கு, உங்கள் உடல்நல பராமரிப்பாளருடன் பேசவும். ​

Last updated: மே 27 2008