இரத்த அழுத்தம்: வீட்டில் உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்தத்தை அளவிடுதல்

Blood pressure: Taking your child's blood pressure at home [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளைக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது.

இரத்த அழுத்தம் (பிளட் ப்ரெஸ்ஸர்) என்றால் என்ன?

இரத்த அழுத்தம் (BP) என்பது, இருதயம் இரத்தக் குழாய்களினூடாக இரத்தத்தை தள்ளுவதற்கு எவ்வளவு கடினப்படுகிறது என்பதை அளவிடுதல் ஆகும்.

இரத்த அழுத்த அளவீட்டில் 2 எண்கள் இருக்கின்றன. இரத்த அழுத்த அளவீட்டின் ஒரு உதாரணம் 120/80 ( 80 இன் மேல் 120 என்று சொல்லவும்).

  • மேலுள்ள எண் (இந்த உதாரணத்தில், 120) இதயச் சுருக்கியமுக்கம் ஆகும். இதயம் சுருங்கி இரத்தத்தை விசையுடன்வெளியே தள்ளும்போது இரத்தக்குழாகளினூடாக பாயும் இரத்தத்தின் அழுத்தத்தை இது குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • கீழுள்ள எண் ( இந்த உதாரணத்தில், 80) இதய விரிவமுக்கம் ஆகும். இது, இருதயம் ஒய்விலிருக்கும்போது இரத்தக் குழாய்களினூடக பாயும் இரத்தத்தின் அழுத்தத்தைக் குறிப்பிட்டுக்காட்டுகிறது.

உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்தம் உயர்வாக இருப்பதால், நீங்கள் அதை வீட்டில் அளவிட வேண்டும். உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்தத்தை எப்படி அளவிடுவது என்பதைக் கற்றுக்கொள்ள சிறிது காலம் எடுக்கலாம். ஆனாலும் அது கடினமானதல்ல.

பிள்ளையின் இரத்த அழுத்தத்தை வீட்டில் அளவிடுதல் கையால் இயக்கும் மற்றும் மின்னியல்ரீதியான குருதி அமுக்க cuffs மற்றும் இதயதுடிப்பு அறிகருவி
இரத்த அழுத்த சுற்றுப்பட்டி ஒன்றின் மூலம் இரத்த அழுத்தம் கணக்கிடப்படுகிறது (BP).   இந்த BP சுற்றுப் பட்டிகள், எலெக்டிரோனிக் மற்றும் மனுவல் வகையில் கிடைக்கும்.  மனுவல் BP சுற்றுப் பட்டியோடு மட்டுமே இதயத் துடிப்பு மானி பாவிக்கப்படும்.

உங்கள் பிள்ளையின் மருத்துர் அல்லது தாதியின் உதவியுடன் பின்வரும் அறிவுரைகளைப் பூர்த்தி செய்யவும்

ஒரு நாளில் ___________ தடவைகள் உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்தத்தை அளவிடவும்.

உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்த அளவீடு ____________மற்றும் _________ இடையில் இருக்கவேண்டும்.

_________ க்கு மேற்பட்ட அளவீடு மிகவும் அதிகமானது மற்றும் _________க்குக் கீழான அளவீடு மிகவும் குறைவானது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவதற்காக உங்கள் பிள்ளைக்கு மருந்து கொடுக்கப்பட்டிருந்தால், இரத்த அழுத்தம் சாதாரண நிலைமைக்கு வந்தாலும், மருந்து எழுதிக்கொடுத்தபடியே உட்கொள்ளப்பட வேண்டும்.

உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தால், மருந்து கொடுக்க வேண்டாம். உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவமனையை அழையுங்கள்.

உங்கள் பிள்ளையின் மருத்துவமனையின் தொலைபேசி இலக்கம்:

மருத்துவமனையில் தொடர்புகொள்ளக்கூடிய நபரின் பெயர்:

உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்தத்தை அளத்தல்

நினைவில் வைக்கவேண்டிய குறிப்புகள்

  • உங்கள் பிள்ளை இளைப்பாறி மற்றும் ஓய்விலிருக்கும்போது, அவனின் இரத்த அழுத்தத்தை அளவிடவும்.
  • இரத்த அழுத்தத்துக்கான மருந்து கொடுப்பதற்கு சற்றுமுன், உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்தத்தை அளவிடவும்.
  • அதிகமான செயல்பாடு, பரபரப்பு, அல்லது நரம்பு மண்டல விறைப்பு என்பன தற்காலிகமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கக் காரணமாயிருக்கலாம்.
  • உங்கள் பிள்ளைக்கு தலைவலி, குமட்டல், வாந்தி, மயக்க உணர்வு, மற்றும் கண்பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் இது உங்கள் பிள்ளைக்கு இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருக்கிறது அல்லது மிகவும் குறைவாக இருக்கிறது என்பதை அர்த்தப்படுத்துகிறது.
  • 6 மாதங்களுக்கு ஒருமுறை நீங்கள் மருத்துவ மனைக்கு வரும்போது, உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடும் கட்டும் பட்டி மற்றும் இதயத்துடிப்புமானியை, அதன் துல்லிய தன்மையை சரிபார்ப்பதற்காக, எடுத்துக்கொண்டு வரவேண்டும்.

உபகரணங்கள்

ஒரு இதயத்துடிப்புமானி மற்றும் ஒரு முகப்புத்தட்டுள்ள இரத்த அழுத்தத்தை அளவிடும் கட்டும் பட்டி அல்லது எலக்ரோனிக் இரத்த அழுத்தத்தை அளவிடும் கட்டும் பட்டியை வாங்கவேண்டும். நீங்கள் தீர்மானம் எடுப்பதற்கு உங்கள் தாதி உதவி செய்வார். உங்கள் பிள்ளை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குப் போவதற்குமுன் இவற்றை வாங்கவேண்டும். அதனால் உங்கள் சொந்த உபகரணத்தின் மூலம் இரத்த அழுத்தத்தை அளவிட நீங்கள் கற்றுக் கொள்ளலாம். உங்கள் பிள்ளயின் தாதி, சரியான அளவைத் தெரிவு செய்ய உதவி செய்வார். இந்த உபகரணங்களை நீங்கள் எங்கே வாங்க வேண்டும் என்றும் ஆலோசனை சொல்வார்.

உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்த அளவீட்டை எப்படி அளப்பது

உங்கள் பிள்ளையின் தாதி, உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்தத்தை எப்படி அளவிடுவது என்பதைக் காண்பிப்பதற்காக பின்வரும் படிகள் மூலமாக வழிகாட்டுவார்:

  1. உங்கள் பிள்ளை தன் இதயத்தின் உயர மட்டத்தில் தன் முன்னங்கையை ஒய்வாக வைக்கக்கூடியவாறு அவனை/அவளை ஒரு மேசைக்குப் பக்கத்தில் ஒரு நாற்காலியில் இருக்க வைக்கவும் அல்லது படுக்க வைக்கவும்.
  2. அதைத் திறப்பதற்காக, இரப்பர் குமிழுக்குப் பக்கத்திலிருக்கும் திருகாணியைத் திருகவும். கட்டும் பட்டியிலிருக்கும் காற்றை அமுக்கி வெளியேற்றவும்.
  3. கட்டும் பட்டியை, வெல்க்றோ ஓரங்கள் வெளியே இருக்குமாறு, உங்கள் பிள்ளையின் முழங்கைக்குமேலே, மேல் கையில் வைக்கவும். நீங்கள் இலகுவாகப் பார்க்ககூடியவாறு, முகப்புத்தட்டு மேலே இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். கட்டும் பட்டியை உங்கள் பிள்ளையின் கையில் இறுக்கிச் சுற்றுங்கள். வெல்க்றோ முனைகளையும் மெத்தை போன்ற பகுதிகளையும் இணைத்துக் கட்டுங்கள்.
  4. உங்கள் பிள்ளையின் முழங்கையின் உட்பகுதியில் உங்கள் முதலாம் மற்றும் இரண்டாம் விரல்களை வைத்து நாடித்துடிப்பை உணர்ந்து பாருங்கள். நீங்கள் நாடித்துடிப்பை உணர்ந்த இடத்தில் இதயத்துடிப்புமானியின் தட்டையான பகுதியை வைத்து, பின்னர் காதில் வைக்க வேண்டிய பகுதியை உங்கள் காதில் வையுங்கள்.
  5. அது இறுக்கமாக மூடப்படும்வரை இரப்பர் குமிழுக்குப் பக்கத்திலிருக்கும் திருகாணியை வலது பக்கமாகத் திருகவும்
  6. நாடித்துடிப்பை உங்கள் காதால் கேட்கமுடியாதிருக்கும்வரை, முகப்புத்தட்டை அவதானித்துக்கொண்டே ஒரு கையால் கட்டும் பட்டையிலுள்ள குமிழில் காற்றடிக்கவும்.
  7. முதல் நாடித்துடிப்புச் சத்தம் கேட்கும் வரை திருகாணியை மெதுவாகத் திறக்கவும். முதல் நாடித்துடிப்புச் சத்தம் கேட்கும்போது முகப்புத்தட்டிலுள்ள ஊசி காட்டும் எண்ணை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த எண் தான் இதயச் சுருக்கியமுக்க எண். இரத்த அழுத்த அளவீட்டில் மேலுள்ள எண் (உதாரணமாக, 120/ ).
  8. முகப்புத்தட்டை அவதானித்துக்கொண்டே, நாடித்துடிப்பு உரத்த சத்தத்திலிருந்து மிகவும் மென்மையாகி அல்லது மறையும்வரை திருகாணியை மெதுவாக விடுவிக்கவும். மிகவும் மென்மையான சத்தம் அல்லது சத்தம் மறையும்போது, முகப்புத்தட்டிலுள்ள எண்ணைக் குறித்துக் கொள்ளவும். அதுதான் இதய விரிவமுக்க எண், இரத்த அழுத்த அளவீட்டின், கீழுள்ள எண் ( உதாரணமாக, /80) ஆகும்.
  9. ஒரு நாட்குறிப்பில், முழுமையான இரத்த அழுத்த அளவீட்டைப் பதிவு செய்து வைக்கவும். (உதாரணமாக,120/80)

பதிவுகளை பாதுகாத்து வைத்திருத்தல்

எப்போதும் உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்த அளவீட்டை பதிவு செய்து வையுங்கள். உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் அல்லது மருத்துவமனையில் சந்திப்புத்திட்டம் இருக்கும்போது உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்த அளவீட்டுப் பதிவுகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வாருங்கள்.

உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தால் என்ன செய்யவேண்டும்

இரத்த அழுத்தத்துக்கான மருந்துகள், ஒழுங்காக உட்கொள்ளப்பட்டாலும், இரத்த அழுத்தத்தை வழக்கமான சீரில் வைத்திருக்க போதுமானதாயிராது. உங்கள் பிள்ளைக்கு இரத்த அழுத்த மருந்தின் ஒரு “prn” மருந்தும், அதாவது தேவையேற்படும்போது உட்கொள்ள வேண்டிய ஒரு மருந்து, எழுதிக்கொடுக்கப்படும்.

உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்த அளவீடு மிகவும் உயர்ந்ததாக இருக்கும்போது:

  1. ​ உங்கள் பிள்ளை அமைதியாகவும் ஓய்வாகவும் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்
  2. உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்ததை 20 முதல் 30 நிமிடங்களுக்குப் பின்னர் திரும்பவும் சோதித்துப் பாருங்கள். தொடர்ந்தும் அது மிகவும் உயர்வாக இருந்தால், அவனுக்கு “prn” மருந்து கொடுங்கள்.
  3. “prn” மருந்து கொடுத்து 45 நிமிடங்களுக்குள் இரத்த அழுத்தம் குறையாவிட்டால், தயவு செய்து உங்கள் பிள்ளையின் மருத்துவமனையை அழைக்கவும்.

உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தால் என்ன செய்யவேண்டும்

  1. உங்கள் பிள்ளையை படுக்கவைத்து ஒய்வு கொடுக்கவும்.
  2. உங்கள் பிள்ளைக்கு இரத்த அழுத்த நோய்க்குரிய மருந்து கொடுக்கும் சமயமாயிருந்தால், அதைக் கொடுக்க வேண்டாம்.
  3. 15 நிமிடங்களின் பின் உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்தத்தை திரும்பவும் அளவிடவும்.
  4. இரத்த அழுத்தம் மிகவும் குறைவானதாக இருந்தால், அல்லது உங்கள் பிள்ளை சுகவீனமுள்ளவன் போல தோற்றமளித்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவரை அல்லது மருத்துவமனையை ஆலோசனைக்காக அழைக்கவும்.

முக்கிய குறிப்புகள்

  • உங்கள் பிள்ளைக்கு உயர் இரத்த அழுத்தமிருப்பதால், வீட்டில், உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்தத்தை எப்படி அளவிடுவது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
  • உங்கள் பிள்ளையின் மருத்துவர், உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்தத்தை, ஒரு நாளில் எத்தனை தடவைகள் அளவிடவேண்டும் என்று சொல்லுவார்.
  • உங்கள் பிள்ளைக்கு தகுதியான இரத்த அழுத்த அளவீடு என்ன என்று, உங்கள் பிள்ளையின் மருத்துவர் உங்களுக்குச் சொல்லுவார்.
  • உங்கள் பிள்ளையின் இரத்த அழுத்தம் மிக அதிகம் அல்லது மிகக் குறைவாக இருந்தால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றுங்கள்.
Last updated: மார்ச் 26 2009