மூச்சில் உள்வாங்க பியூடசோனைட்

Budesonide for inhalation [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பியுடசோனைட் எனப்படும் மருந்தை உங்கள் பிள்ளை உட்கொள்ள வேண்டிய அவசியமுள்ளது.

பியூடசோனைட் (உச்சரிப்பு;பியூ-டஸ்– ஓ-னைட்) என்னும் மருந்தை உங்கள் பிள்ளை உட்கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளை இந்த மருந்தை உபயோகிக்கும்போது என்ன விதமான பக்க விளைவுகள் அல்லது சிக்கல்கள் தோன்றலாம், பியூடசோனைட் பற்றிய விளக்கம், அதை உபயோகிப்பது எப்படி போன்றவற்றை இந்தத் தகவல் பத்திரிகை வழங்குகின்றது.

இது என்ன மருந்து?

ஆஸ்துமாவின் அறிகுறிகளை தடுப்பதற்காக பியூடசோனைட் உபயோகிக்கப்படுகின்றது. உங்கள் பிள்ளை இதை தொடர்ந்து வழக்கமாக உபயோகிக்கும்போது, இது உங்கள் பிள்ளையின் சுவாசப்பை காற்றுக்குழாய்களை ஆரோக்கியமானதாக வைத்திருக்கின்றது.

பியூடசோனைட் ஒரு தடுப்பு மருந்தென அழைக்கப்படுவதை நீங்கள் கேள்விப்படக்கூடும். பியூடசோனைட் அதன் வர்த்தகப் பேராகிய பள்மிகோர்ட்® என்னும் பெயராலும் அழைக்கப்படுகின்றது.

பியூடசோனைட் இன்ஹேலரில் அதாவது மூச்சில் உள்வாங்கும் கருவியில் அல்லது நெபியூலைசர் மெஷின் எனப்படும் ஒரு தெளிகருவியில் உபயோகிக்கப்படும் ஒரு திரவமாக வருகின்றது.

இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கும் முன்பு…

உங்கள் பிள்ளைக்கு கீழ்க்காணும் நிலைமை இருந்தால் அதை உங்கள் பிள்ளையின் வைத்தியரிடம் கூறவும்;

 • பியூடசோனைடுக்கு அலர்ஜி அதாவது ஒவ்வாமை

கீழ்க்காணும் நிலைமைகளில் ஏதாவது உங்கள் பிள்ளைக்கு இருந்தால் அதை உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் அல்லது ∴பார்மசிஸ்டிடம் (அதாவது மருந்தாளுநரிடம்) கூறவும். உங்கள் பிள்ளைக்கு கீழ்க்காணும் நிலைமைகள் இருந்தால் இந்த மருந்தை பாவிப்பது தொடர்பாக முன்னெச்சரிக்கைகள் எடுக்க நேரிடலாம்;

 • கொப்புளிப்பான், தட்டம்மை, காசநோய் போன்ற தொற்று நோய்கள் இருத்தல்
 • கண் அழுத்த நோய் போன்ற கண் வருத்தங்கள் இருத்தல்

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை எப்படி வழங்கவேண்டும்?

 • உங்கள் பிள்ளை நலமானதாகவே தோன்றினால்கூட மருத்துவர் அல்லது மருந்தாளுநர் கூறியிருப்பதைப்போலவே பியூடசோனைடை வழங்குங்கள்.
 • உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளுநர் கூறினால் மட்டுமே பியூடசோனைட் வழங்குவதை நிறுத்துங்கள்.
 • தினமும் உங்கள் பிள்ளைக்கு தேர்ந்தெடுத்த அதே நேரத்தில் பியூடசோனைடை வழங்குங்கள். நீங்கள் வேளை மருந்தை (டோஸ்) தவறாமலிருப்பதற்காக உங்களுக்கு வசதியான நேரத்தைத் தேர்ந்தெடுங்கள்.
 • சல்பியூடமோல் போன்ற நிவாரணி மருந்தை உங்கள் பிள்ளை உபயோகித்தால், அது பியூடசோனைட் மருந்து எடுப்பதற்குமுன் வழங்கப்படுவதை உறுதிசெய்யுங்கள். நிவாரணி மருந்து வழங்கப்பட்டு 5 நிமிடங்களுக்குப் பிறகு பியூடசோனைட் மருந்தை நீங்கள் வழங்கவேண்டும்.
 • பியூடசோனைட் எடுக்க உங்கள் பிள்ளை நெப்யூலைசர் தெளிகருவியை உபயோகிக்குமானால், நிவாரணி மருந்தை பியூடசோனைட் திரவத்துடன் நீங்கள் கலக்கலாம்.
 • உங்கள் பிள்ளை பியூடசோனைட் மருந்தை வாய்மூலம் உள்ளிழுக்க வேண்டும். இந்த மருந்தை எவ்வாறு கொடுப்பதென்று உங்களுக்கு சரியாகத் தெரியவில்லையென்றால் உங்கள் மருந்தாளுநர் அல்லது தாதியிடம் கேளுங்கள்.
 • பியூடசோனைட் எடுத்த பின்பு பிள்ளையின் வாயை தண்ணீரால் கழுவச் சொல்லுங்கள். வாயைக் கழுவுவதற்கு உங்கள் பிள்ளை மிகவும் இளமையானதாக இருந்தால் ஒவ்வொரு பியூடசோனைட் பாவனையின் பிறகும் பருகுவதற்கு ஜூஸ் அல்லது தண்ணீரைக் கொடுங்கள்.

வேளை மருந்து (டோஸ்) ஒன்றை எடுக்க உங்கள் பிள்ளை தவறிவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

 • உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே அந்த வேளை மருந்தைக் கொடுங்கள்.
 • அடுத்த வேளை மருந்தை வழங்குவதற்கு நேரம் நெருங்கிவிட்டதென்றால் எடுக்கத் தவறிய மருந்தை விட்டுவிடுங்கள். அடுத்த வேளை மருந்தை வழக்கமான நேரத்திற்குக் கொடுங்கள்.
 • தவறிவிட்ட மருந்தை ஈடுசெய்வதற்காக இரண்டு மடங்காக மருந்தைக் கொடுக்காதீர்கள்.

இந்த மருந்து வேலைசெய்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?

பியூடசோனைட் எடுப்பதால் ஆஸ்துமா நலம் பெறுவதை நீங்கள் அவதானிக்க பல வாரங்கள் எடுக்கலாம்.

இந்த மருந்தை உபயோகிப்பதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் என்ன?

பியூடசோனைட் உபயோகிக்கும்போது கீழ்க்காணும் பக்க விளைவுகளில் சிலவற்றை உங்கள் பிள்ளை அனுபவிக்கக்கூடும். இந்தப் பக்க விளைவுகள் உங்கள் பிள்ளைக்குத் தொடர்கின்றதென்றால், விட்டு அகலவில்லையென்றால், அல்லது பிள்ளைக்கு சங்கடத்தைத் தருகின்றதென்றால் பிள்ளையின் மருத்துவரைத் தொடர்புகொள்ளுங்கள்:

 • வாய் அல்லது தொண்டை வறட்சி
 • தொண்டை வலி
 • வாயில் மோசமான ஒரு சுவை உணர்வு
 • இருமல்
 • தலைவலி
 • வயிற்றுக்கோளாறு

கீழ்க்காணும் பக்கவிளைவுகளில் ஏதாவது பிள்ளைக்கு இருந்தால் அலுவலக நேரத்தின்போது பிள்ளையின் மருத்துவரை அழையுங்கள்:

 • வாயில் வெள்ளைப் படலங்கள்
 • சாப்பிடும்போது அல்லது விழுங்கும்போது வலி
 • தெளிவற்ற பார்வை அல்லது பார்வையில் ஏதாவது மாற்றங்கள்

அநேகமான பக்கவிளைவுகள் சகஜமானவை அல்ல, ஆனால் அவை ஒரு மோசமான பிரச்சினைக்கு அடையாளமாக இருக்கக்கூடும். கீழ்க்காணும் பக்க விளைவுகளில் ஏதாவது பிள்ளைக்கு இருந்தால் உடனடியாக பிள்ளையின் மருத்துவரை அழையுங்கள் அல்லது பிள்ளையை அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லுங்கள்:

 • முகம், கண்கள் , உதடுகள் ஆகியவற்றில் வீக்கம்
 • நெஞ்சு இறுக்கமடைதல்
 • மூச்சிரைப்பு, போதிய மூச்சின்மை, அல்லது எந்த மருந்தாலும் நிவாரணம் கிடைக்காதபடி சுவாசிப்பதில் சிரமம்

இந்த மருந்தை உங்கள் பிள்ளை உபயோகிக்கும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்?

பியூடசோனைட் பாவனையின் 2 வாரங்களுக்குப் பின்னும் பிள்ளையின் ஆஸ்துமாவில் முன்னேற்றமில்லையென்றால் அல்லது நிலைமை மோசமடைவதாக நீங்கள் உணர்ந்தால் உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒவ்வொரு வேளை மருந்து உபயோகிப்பின் பின்னும், தண்ணீரால் வாயைக் கொப்பளிப்பதும் கழுவுவதும், கீச்சுக்குரல், தொண்டை அரிப்பு மற்றும் வாயில் ஈஸ்ட் நோய் ஆகியவற்றைத் தடுக்கும்.

எந்த விதமான சத்திர சிகிச்சைக்கு முன்பும், பல் சிகிச்சை அல்லது அவசர நிலை பராமரிப்பு உட்பட, பிள்ளை பியூடசோனைட் உபயோகிப்பதை மருத்துவருக்கு அல்லது பல் வைத்தியருக்குத் தெரியப்படுத்துங்கள்.

வேறு எந்த மருந்தையும் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு (மருந்துக் குறிப்பு, மருந்துக்குறிப்பு இல்லாதது, மூலிகை அல்லது இயற்கைப் பொருட்கள்) பிள்ளையின் மருத்துவரிடம் அல்லது மருந்தாளுநரிடம் பேசுங்கள்.

வேறு எந்த முக்கியமான தகவலை நீங்கள் அறிய வேண்டும்?

உங்கள் பிள்ளை உபயோகிக்கும் மருந்துகள் எல்லாவற்றினதும் ஒரு பட்டியலை வைத்திருந்து அதை மருத்துவருக்கும் மருந்தாளுநருக்கும் காட்டுங்கள்.

உங்கள் பிள்ளையின் மருந்தை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் அத்தோடு வேறொருவருடைய மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்க வேண்டாம்.

வார இறுதிகள், விடுமுறை நாட்கள், விடுமுறைப் பயணங்கள், ஆகியவற்றின்போது போதிய அளவு பியூடசோனைட் மருந்தை வைத்திருங்கள். மருந்து முடிவதற்கு குறைந்தது 2 நாட்களுக்கு முன்பாவது மருந்தாளுநரை அழைத்து மீண்டும் மருந்தை நிரப்ப  ஏற்பாடு செய்யுங்கள்.

பியூடசோனைட் மருந்தை அறை வெப்பநிலையில் குளிரான ஈரமில்லாத இடத்தில் சூரிய வெளிச்சம் படாதபடி வையுங்கள். மருந்தை குளியல் அறையிலோ சமயல் அறையிலோ வைக்கவேண்டாம்.

காலாவதியாகிவிட்ட மருந்துகளை வைத்திருக்க வேண்டாம். காலாவதியாகிவிட்ட அல்லது மீதமாக இருக்கின்ற மருந்துகளை வீசியெறிய எது சிறந்த வழியென்பதை மருந்தாளுநரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

பியூடசோனைட் மருந்தை உங்கள் பிள்ளையின் பார்வைக்கும் கைக்கும் எட்டாதபடி பாதுகாப்பான இடத்தில் பூட்டிவையுங்கள். உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான பியூடசோனைடை எடுத்தால் கீழ்க்காணும் இலக்கங்களில் “ஒன்டாரியோ பொய்சன் சென்டரை” அதாவது விஷமருந்தியவருக்கான நிலையத்தை அழையுங்கள். இதற்கு கட்டணம் கிடையாது.

 • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
 • நீங்கள் ஒன்டாரியோவில் வேறெங்காவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
 • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வசிப்பவரானால், உள்ளூரிலுள்ள விஷம் அருந்தியவர்களுக்கான தகவல் நிலையத்தை அழைக்கவும்.

பொறுப்புத் துறப்பு: பமிலி மெட்-எயிட் (Family Med-aid) இல் உள்ள தகவல் பதிப்பின்போது திருத்தமானதாகும். இது பியூடசோனைட் மருந்தைப்பற்றிய சுருக்கமான தகவலைத்தான் தருகின்றதே தவிர இந்த மருந்து தொடர்பான எல்லாத் தகவல்களையும் கொண்டதல்ல. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்படவில்லை. பியூடசோனைட் மருந்தைப்பற்றி உங்களுக்கு கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிகத் தகவல் வேண்டுமானால், உங்கள் உடல் நலப் பராமரிப்பாளருடன் பேசுங்கள்.

Last updated: ஏப்ரல் 15 2008