கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமி (உயிர் வளி அற்று வளரும் ஒரு நுண்ணுயிர்)

Clostridium difficile (C difficile) [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

சி. டிஃபிஸில் நுண்கிருமி என்பது வயிற்றில் காணப்படும் வயிற்றுப்போக்குக்குக் காரணமான பக்டீரியாவாகும்.

கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமி என்றால் என்ன?

கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமி (டிஃபிசில்) என்பது பக்டீரியாவின் (கிருமி) ஒரு வகையாகும். இது ஒருவரின் குடலில் காணப்படுகிறது. கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமி வயிற்றுப்போக்கை உண்டாக்கக்கூடிய ஒரு நச்சுப் பொருளை உண்டாக்குகிறது. இது பெருங்குடல் அழற்சி போன்ற, மேலும் மோசமான நிலைமைகளையும் கூட உண்டாக்கும்.

மிகவும் அதிகமாக, அன்டிபையோடிக் மருந்து உட்கொள்பவர்களுக்குத்தான் கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமி தொற்றுநோய் ஏற்படுகிறது. ஆரோக்கியமானவர்களின் குடலில் அநேக வித்தியாசமான வகை பக்டீரியாக்கள் உள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை, மற்றத் தீங்கிழைக்கும் பக்டீரியாக்களை கட்டுப்படுத்த உதவும் “நல்ல” பக்டீரியாக்கள் ஆகும். அன்டிபையோடிக் மருந்துகள் சில நல்ல பக்டீரியாக்களை அழிக்கக்கூடும். இந்த நல்ல பக்டீரியாக்கள் குடலில் குறைவாக இருக்கும்போது கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமிகள் உருவாகலாம்.

கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமி தொற்றுநோய்க்கான அறிகுறிகள்

கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமி தொற்றுநோய் உள்ளவர்கள் பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருக்கக் கூடும்:

  • தண்ணீர் போன்ற வயிற்றுப்போக்கு, இரத்தமும் கலந்திருக்கலாம்.
  • காய்ச்சல்
  • பசி உணர்வின்மை
  • வாந்தி வருவது போன்ற உணர்வு(குமட்டல்)
  • வயிற்றில் வலி அல்லது மிருதுத் தன்மை

பெரும்பாலும் ஆரோக்கியமுள்ளவர்களுக்கு கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமித் தொற்றுநோய் பரவாது. பெரும்பாலும் கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமித் தொற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு பின்வருவனவற்றுள் ஒன்று உண்மையாயிருக்கலாம்:

  • அன்டிபையோடிக் மருந்துகளை நீண்ட காலங்களுக்கு உட்கொள்ளவேண்டிய வேறு நோய்கள் அல்லது நிலமைகள் இருக்கலாம்.
  • அவர்கள் வயது முதிர்ந்தவர்கள்.

உங்கள் பிள்ளைக்கு கிளொஸ்ட்ரீடியம் தொற்றுநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காக மலத்தின் மாதிரியைக் கொடுக்கவேண்டும்.

கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமிக்கான பரிசோதனைக்கு மலத்தின் மாதிரி தேவைப்படுகிறது. உங்கள் பிள்ளையின் தாதி அதை ஆய்வுகூடத்துக்கு அனுப்பி வைப்பார். வழக்கமாகப் பரிசோதனை முடிவுகள் வர சில நாட்கள் எடுக்கும்.

வழக்கமாக, கிளோஸ்ட்ரீடியம் நுண்கிருமி தொற்றுநோய் தானாகவே நிவாரணமடையும்

கடுமையற்ற அறிகுறிகளையுடையவர்களுக்கு கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமி தொற்றுநோய்க்கான சிகிச்சை தேவையில்லை. ஒருவர் அன்டிபையோடிக் மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தியவுடன் பெரும்பாலும் அறிகுறிகள் மறைந்துவிடும்.

ஒருவரின் நோய்க்கான அறிகுறிகள் மேலும் வினைமையானதாக இருந்தால், அவருக்கு மருந்து தேவைப்படலாம். சிலருக்கு உடல்நீர் வறட்சி ஏற்படும். அதாவது அவர்களது உடல், சரிவர இயங்கத் தேவையான தண்ணீரைக் கொண்டிருக்காது. அவர்களுக்கு நரம்பு வழியாக (IV) நீராகாரத்தை நேரடியாக அவர்களது இரத்தத்துக்குள் செலுத்தவேண்டியிருக்கலாம்.

எப்படி கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமி பரவுகிறது

கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமி பக்டீரியா மலத்தில் காணப்படுகிறது. ஒருவர் ஒரு சிறிய அளவு மலம் இருக்கும் பொருட்கள் அல்லது மேற்பரப்பைத் தொட்டபின், தன் வாயைத் தொடும்போது தொற்று நோய் உண்டாகலாம். ஒரு மேற்பரப்பு அழுக்காகத் தோற்றமளிக்காவிட்டாலும், அது பக்டீரியாக்களைக் கொண்டிருக்கும்.

உடல்நலப் பராமரிப்பு ஊழியர்கள், தங்கள் கைகளைக் கழுவாவிட்டால் அல்லது கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமித் தொற்றுநோயுள்ள ஒருவரைப் பராமரித்தபின் உபகரணங்களைக் கழுவாவிட்டால் அவர்கள் மற்ற நோயாளிகளுக்கு அல்லது மேற்பரப்புகளுக்கு பக்டீரியாக்களைப் பரப்பக்கூடும்.

கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமியை பரவாமற் தடுக்க கைகளைக் கழுவுவதே சிறந்த வழி

உங்கள் கைகளை அடிக்கடி கழுவுவதே கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமியிலிருந்து பாதுகாப்பைப் பெறுவதற்கான சிறந்த வழியாகும். உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைக்கோ கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமி நோய் இருப்பதாக நீங்கள் நினைத்தால் உங்கள் கைகளை சோப் மற்றும் தண்ணீர் உபயோகித்து கழுவவும். சோப் மற்றும் தண்ணீர் அங்கு இல்லாவிட்டால், அற்ககோல் கை தேய்ப்பான்களை உபயோகிக்கவும். பின்பு உங்களால் முடியும்போது சோப் மற்றும் தண்ணீரினால் கழுவவும்.

மருத்துவமனையில் உங்கள் பிள்ளைக்கு கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமி நோய் இருந்தால்

வேறு நோய்களுடன் மருத்துவமனையிலிருக்கும் நோயாளிகளுக்கு கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமி நோய் ஆபத்தானதாக இருக்கலாம். உங்கள் பிள்ளைக்கு கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமித் தொற்றுநோய் இருந்தால், நீங்கள் மற்றும் உங்கள் பிள்ளைக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைப் பணியாளர் ஆகிய இருவருமே கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமி நோய் பரவுவதைத் தடுப்பதற்கு உதவி செய்யலாம்.

  • உங்கள் பிள்ளை ஒரு தனி அறையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம். அவள் நிவாரணமடையும்வரை விளையாட்டறைக்குள் போக முடியாதிருக்கலாம். குழந்தை நலவாழ்வு நிபுணரிடம் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் தேவையானவற்றை உங்கள் அறைக்குள் கொண்டுவந்து தரும்படி கேட்கவும்.
  • மருத்துவமனையில் உங்கள் பிள்ளையை பராமரிக்கும் எல்லா மருத்துவமனை பணியாளர்களும் கையுறைகள் மற்றும் ஒரு மேலாடையை உடுத்திக் கொள்ள வேண்டும்.
  • உங்கள் பிள்ளையின் அறைக்குள் போவதற்கு முன்பும், உங்கள் பிள்ளையை தொடுவதற்கு முன்பு மற்றும் தொட்ட பின்னரும், மற்றும் உங்கள் பிள்ளையின் அறையை விட்டு வெளியேற முன்பும் உங்கள் கைகளை சோப்பும் நீரும் கொண்டு கழுவவும். மருத்துவமனை பணியாளர்களும் தங்கள் கைகளைக் கழுவவேண்டும்.
  • நீங்கள் மற்ற நோயாளிகளைத் தொடப்போவதில்லை; அதனால் நீங்கள் கையுறைகள் அல்லது ஒரு மேலாடையை அணிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.

மருத்துவமனைக்குச் சென்ற நீங்களோ அல்லது வேறு எவருமோ கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமி நோய்க்கான அறிகுறிகளுடன் நோய்வாய்ப்பட்டால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது தாதிக்குத் தெரிவிக்கவும். 

உங்களுக்கு ஏதாவது கேள்விகள் அல்லது அக்கறைகள் இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது தாதியிடம் கேட்கவும்.

முக்கிய குறிப்புகள்

  • கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமி என்பது குடல்களில் காணப்படும் ஒரு வகை பக்டீரியா ஆகும்
  • கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமி நோய்க்கான அறிகுறிகள் வயிற்றுப் போக்கு, காய்ச்சல், மற்றும் குமட்டல் என்பனவற்றைக் கொண்டிருக்கும்.
  • அன்டிபையோடிக் மருந்துகள் உட்கொள்பவர்களுக்கு கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமி நோய் ஆபத்து மிக அதிகமாகவுள்ளது.
  • கிளொஸ்ட்ரீடியம் நுண்கிருமித் தொற்றுநோய் கடுமையற்றதாக இருக்கும் அல்லது கடுமையானதாகவும் இருக்கும்.
  • கைகளை அடிக்கடி மற்றும் நன்றாகக் கழுவுவது, கிளொஸ்ட்ரீடியம் நோய்தொற்றுவதைத் தடுப்பதற்கு மிகச் சிறந்த வழியாகும்.
Last updated: நவம்பர் 06 2009