இருமல்

Cough [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பிள்ளை இருமல் என்பது சுவாசப்பையை சுத்தம் செய்ய உதவும் வகையிலான ஒரு பலம்வாய்ந்த வெளியேற்றம், மேலும் பொதுவாக இவைகள் நோய்க்கான அறிகுறி. காரணங்கள் மற்றும் பிள்ளை இருமல் சிகிச்சை ஆகியவற்றைப் பற்றி படித்தறியுங்கள்.

இருமல் என்பது என்ன?

இருமல் என்பது நுரையீரல், பெரிய காற்றுக்குழாய்கள் மற்றும் தொண்டை ஆகியவற்றிலிருந்து சளியை அல்லது உறுத்தும் துணிக்கைகளை அகற்றுவதற்காக உடலினால் ஏற்படுத்தப்படும் சத்தமும் அசைவுமாகும். உங்கள் பிள்ளைக்கு ஏதாவது ஒரு சிறிய நோய் வந்தாலும், இருமல் ஏற்படுவது சாதாரணம். உங்கள் பிள்ளைக்கு இருமல் மாத்திரம் இருக்கிறது. வேறு எந்த நோய்க்கான அறிகுறிகளும் இல்லை எனில் அது கடுமையான நோய்க்கான அறிகுறியல்ல.

இருமலோடு சேர்ந்திருக்கும் வேறு அறிகுறிகள் உங்கள் பிள்ளை மருத்துவரைச் சந்திக்கவேண்டுமா என்பதைத் தீர்மானிக்க உதவும். காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், நாசியில் சளித்தேக்கம் மற்றும் ஏற்பட்டிருக்கக்கூடிய நோய் தொற்றுக்கள், உட்புகுந்திருக்கக்கூடிய உறுத்தும் துணிக்கைகள் போன்ற ஏனைய அறிகுறிகளை அவதானிக்கவும்.

ஒரு இருமலின் சத்தம் ஈரலிப்பானதுபோன்று, உலர்ந்தது போன்று, அல்லது குரைப்பது போன்று தொனிக்கலாம். 2 வாரங்களுக்கு குறைவான காலத்துக்கு நீடிக்கும் ஒரு இருமல் கடுமையான (அக்யூட்) இருமல் என அழைக்கப்படும். மற்றும் 4 வாரங்களுக்கு மேலாக நீடிக்கும் ஒரு இருமல் நீடித்த (க்ரோனிக்) இருமல் எனவும் அழைக்கப்படும். இருமல் எவ்வளவு காலம் நீடிக்குமென்பதை இருமலுக்கான காரணம் தீர்மானிக்கும். உங்கள் பிள்ளைக்கு இருமல் மாத்திரம் அல்லது இருமலும் மூக்கொழுகுதலும் இருந்தால். அவன் பெரும்பாலும் 1 முதல் 2 வாரங்களுக்குள் தேறிவிடுவான்.

இருமலுக்கான காரணங்கள்

இருமல் என்பது சளியையும் நுரையீரல் மற்றும் காற்றுக் குழாய்களை உறுத்தும் துணிக்கைகளையும் அகற்றும் உடலின் இயற்கையான வழியாகும்.இது காற்றைத் தவிர வேறு எந்தப் பொருளும் நுரையீரலுக்குள் செல்லாதவாறு தடை செய்கிறது. இது ஒரு இயற்கையான செயற்பாடு.

சாதாரண தடிமல் போன்ற ஒரு வைரஸால் ஏற்படும் சுவாசத்திற்குரிய தொற்று நோயே இருமலுக்கான மிகப் பொதுவான காரணமாகும். இது மூக்கிலும் தொண்டையிலும் சளித்தேக்கத்தை உண்டுபண்ணலாம். உங்கள் பிள்ளைக்கு மூக்கில் சளித்தேக்கம் இருக்கும்போது சளி மூக்கிலிருந்து தொண்டைக்குள் விழலாம். இது தன்னிச்சையான இருமலை ஏற்படுத்தலாம். சளி நுரையீரலுக்குள் செல்வதை இருமல் தடை செய்கிறது.

காதுத் தொற்று நோய்கள் (சுவிம்மர்ஸ் இயர் போன்றவை), எலும்பு உட்புழை (சைனஸ்) மற்றும் நுரையீரல் ( நிமோனியா போன்றவை) போன்றவைகள்கூட உங்கள் பிள்ளைக்கு இருமல் ஏற்படக் காரணமாகலாம் . காற்றுக் குழாய்களை உறுத்தும் பொருட்களுடன் தொடர்பு கொள்வதாலும் இருமல் ஏற்படலாம். உதாரணமாக, புகை பிடிக்கும் குடும்ப அங்கத்தினருடன் தொடர்பு கொள்ளும் பிள்ளைகளில் இருமல் சாதாரணமானது.

உங்கள் உடலுக்கு இருமல் தேவைப்படும்போது அதைச் செயற்படுத்துவதற்கு அதை ஏற்றுக்கொள்ளும் ரெசெப்டர்ஸ் அல்லது சமிக்ஞைகள் உங்கள் நரம்புத் தொகுதியில் இருக்கின்றன. ஒரு வைரல் தொற்றுநோய், இந்த ஏற்றுக்கொள்ளும் ரெசெப்டர்ஸ்ஐ மிகவும் உணர்ச்சியுள்ளதாக்கும். ஒரு வைரல் தொற்றுநோய் ஏற்பட்ட பின்னர், இந்த ஏற்றுக்கொள்ளும் ரெசெப்டர்ஸ் தொடர்ந்திருக்கும் மற்றும் உணர்ச்சியுடையதாயிருக்கு,. இது ஒரு நீடித்த இருமலை ஏற்படுத்தும்.

ஒரு உறுத்தும் அல்லது விடாப்பிடியாக இருக்கும் ஒரு சுவாசிக்கும் நிலைமையுடன் தொடர்பு கொண்டிருக்கும்போதும் ஒரு நீடித்த இருமல் ஏற்படலாம்.

இருமலின் வகைகள்

ஆஸ்துமா, மூக்கழற்சி அதாவது கிரப், அல்லது கக்குவான் அதாவது பெர்டூசிஸ்

ஆஸ்துமா நோய் ஏற்படும் பிள்ளைகளுக்குப் பெரும்பாலும் மூச்சிரைப்பு மற்றும் வேகமாக சுவாசித்தல் ஆகியவற்றை உட்படுத்தும் ஒரு இருமல் இருக்கும்.

மூக்கழற்சி அதாவது கிரப் உள்ள பிள்ளைகளுக்கு குரைப்பது போன்ற தொனியையுடைய ஒரு இருமல் இருக்கும். அவர்கள் மூச்சை உள்வாங்கும்போது அது இரைச்சல் போன்ற ஒரு சத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் பிள்ளை இருமாதபோது சுவாசித்தல் வழக்கம்போல இருக்கும்.

பெர்டூசிஸ் அதாவது கக்குவான் இருமல் (வூப்பிங் இருமல்) உள்ள பிள்ளைகளுக்கு, பெரும்பாலும் வலிமை வாய்ந்த தசைச் சுருக்கமும் உண்டாகும். இந்த இருமலுக்கு “வூப்” என்ற சத்தம் இருக்கும். இருமல் உங்கள் பிள்ளைக்குச் சுவாசித்தலைக் கடினமாக்கும். உங்கள் பிள்ளைக்கு இருமல் இல்லாதபோது சுவாசித்தல் வழக்கம் போல இருக்கும்.

மூச்சுக் குழாயில் அந்நிய பொருட்கள்

ஒரு சிறு பொருளை விழுங்கிவிட்ட அல்லது ஒரு சிறு உணவுத் துணிக்கையால் காற்றுக்குழாய் அடைக்கப்பட்ட ஒரு இளம் பிள்ளைக்கு திடீரெனத் தோன்றும் கடுமையான இருமல் மற்றும் / அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இது ஒரு அவசர மருத்துவ நிலைமையாகும்.

சிலவேளைகளில் ஒரு பிள்ளைக்கு அந்நிய பொருளொன்று காற்றுக்குழாயை அடைத்து விடுவதால், பல வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு தொடர்ச்சியாக நீடிக்கும் இருமல் ஏற்படலாம். உங்கள் பிள்ளையின் மருத்துவரால் பிரச்சினையை அடையாளம் கண்டு கொண்டு அதற்கான சிகிச்சை அளிக்க முடியும்.

உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

உங்கள் பிள்ளையின் நித்திரைகொள்ளும் நிலையை மாற்றுங்கள்

மூக்கு மற்றும் தொண்டையின் பிற்பகுதியில் சளித் தேக்கத்தால் ஏற்படும் இருமலை கொண்டுள்ள குழந்தைகளுக்கு குப்புற அல்லது மல்லாக்கப் படுப்பது சிரமமாக இருக்கலாம். அவர்களுக்கு ஒருவருடைய கைகளில் நித்திரைகொள்வது அல்லது பாதி செங்குத்தான நிலையில் நித்திரை செய்வது அதிக செளகரியமுள்ளதாக இருக்கலாம். வளர்ந்த பிள்ளைகளுக்கு தங்கள் தலையை தலையணை ஒன்றில் உயர்த்திவைத்து நித்திரைசெய்வது அதிக செளகரியமானதாக இருக்கலாம்.

தேவைப்படும்போது ஓய்வெடுத்தல்

இருமலின்போது, உங்கள் பிள்ளைக்கு நித்திரை செய்வது கஷ்டமாக இருக்கலாம். இரவில், அவனுடைய சுவாசம் வேகம் குறைந்ததாயும் ஆழமற்றதாயும் இருக்கும். சுவாசப்பையிலிருந்து சளியை வெளியேற்றுவதற்காக அவன் அதிகமாக இருமக்கூடும். அதாவது, பகலில் அவனுக்கு அதிக ஓய்வு தேவைப்படலாம்.

சேலைன் அதாவது உப்புக் கரைசல்

சளித்தேக்கதைக் குறைப்பதற்கு உதவியாக நாசிக்குரிய சேலைன் கரைசல் ஒன்றை (சாலினெக்ஸ் அல்லது வேறு பிரான்டுகள்) உபயோகிக்கவும்.

அடிக்கடி சிறிய அளவில் நீராகரத்தைக் கொடுங்கள்

நீராகாரங்களைப் பருகும்படி உங்கள் பிள்ளையை உற்சாகப்படுத்தவும். இது அவனைத் தேறினவனாக உணர உதவி செய்யும் . இருமிய பின் பிள்ளை வாந்தியெடுத்தால், அடிக்கடி சிறிய அளவில் நீராகாரத்தை அருந்தும்படி அவனை உற்சாகப்படுத்தவும்.

இருமல் காரணமாக தாய்ப்பால் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்திவிடவே வேண்டாம்

உணவிலிருந்து பால் நீக்கப்படத் தேவையில்லை. அது சளியை உருவாக்குவதோ அதிகரிக்கச்செய்வதொ இல்லை. இருமல் இருக்கும்போது ஒரு பிள்ளை உண்ணக்கூடிய திட உணவு வகைகளுக்கோ அல்லது நீராகாரங்களுக்கோ எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

ஈரப்பதமேற்றப்பட்ட காற்று

வறண்ட காற்று இருமல்களை மோசம்மாக்கும் தன்மையுள்ளது. ஒரு ‘கூல் மிஸ்ட் வேப்பரைசர்’ அதாவது குளிர் நீராவியாக்கி அல்லது ஹியூமிடிஃபையர் அதாவது ஈரப்பதமூட்டி பிள்ளையின் அறையில் இருப்பது உதவக்கூடும். ஒரு நாளுக்கு குறைந்தது ஒரு தடவையாவது தண்ணீரை மாற்றி ஃபில்டர்களை சுத்தம் செய்யுங்கள்.

ஷவரிலிருந்து வரும் நீராவி போன்ற ஈரப்பதமுள்ள காற்றுடன் உங்கள் பிள்ளை தொடர்பு வைத்திருந்தால் குரைக்கும் இருமல் சற்று நிவாரணமடையலாம். வெளியே குளிர் காற்றிற்குள் போவதும் உங்கள் பிள்ளை சற்று நிவாரணம் அடைந்ததைப்போல உணர உதவி செய்யும்.

இருமல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதில்லை

2 வயதிற்குக் குறைந்த பிள்ளைகளுக்கு மருந்துக் குறிப்பு இல்லாமல் வாங்கப்படக்கூடிய (ஒவர் த கவுன்டர்) இருமல் மற்றும் தடிமல் மருந்துகள் வழங்கப்படக்கூடாது. 6 வயதிற்குக் குறைந்த பிள்ளைகளுக்கு இவை பரிந்துரைக்கப்படுவது இல்லை. இருமல் சிரப்புகளுக்கு (Cough syrups) பக்கவிளைவுகள் உண்டு. அவை ஆபத்தானவை. அவற்றில் அடங்கியுருக்கும் சில பொருட்கள் காரணமாக சில பிள்ளைகளில் மரணமும் ஏற்பட்டுள்ளது. சிறு பிள்ளைகளுக்கு இவை விஷமாகக்கூட ஆகியிருக்கின்றது. 6 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளில் இந்த மருந்துகள் இருமலின் காலத்தைக் குறைத்தாக நிரூபிக்கப்படவில்லை. வீட்டில் செய்யப்படும் மருத்துவப் பரிகாரமும் பரிந்துரைக்கப்படுவதில்லை.

1 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு 1 தொடங்கி 2 தேக்கரண்டிகள் (5 தொடங்கி 10 mL) கிருமிநீக்கப்பட்ட (பஸ்சுரைஸ்ட்) தேனைக தேவைக்கேற்றவாறு கொடுக்கவும். தேன் இதமாக இருப்பதுடன் இருமலையும் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. 1 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்கு தேன் கொடுக்க வேண்டாம்.

புகையுள்ள இடங்களைத் தவிர்த்திடுங்கள்

புகையுள்ள இடங்கள் மற்றும் உறுத்துங்காரணிகள் இருக்கும் சூழல்களிலிருந்து உங்கள் பிள்ளையைத் தனியே வைக்கவும் சிகரட் புகையுள்ள இடங்களில் இருப்பது இருமலை மோசமடையச் செய்யலாம்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

உங்கள் பிள்ளைக்கு பின்வரும் நிலைமைகளிருந்தால், உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரை அழையுங்கள்:

 • இருமல் மற்றும் சிறிய சத்தத்துடன் சுவாசித்தல் மற்றும் காய்ச்சல்
 • 2 வாரங்களுக்கும் அதிகமாக நீடித்திருக்கும் இருமல்

உங்கள் பிள்ளைக்கு பின்வரும் நிலைமைகளிருந்தால், உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லுங்கள் அல்லது 911 ஐ அழையுங்கள்:

 • இருமலின் காரணமாக உணவு உட்கொள்ள முடியவில்லை அல்லது இருமலினால் அடிக்கடி வாந்தியெடுக்கிறான்.
 • குரைக்கும் இருமல் மற்றும் சுவாசிக்கும்போது சத்தம் உண்டாகிறது.
 • குளிர் காற்று, ஈரப்பதமேற்றப்பட்ட காற்று, அல்லது நீராவி ஆகியவற்றுடன் தொடர்பு வைத்திருக்கும்போதும் சுவாசிப்பதில் சிரமம் குறையவில்லை.
 • உதடுகள் அல்லது தோல் நீலமாகுதல்
 • இருமலின் காரணமாக சுவாசிக்க சிரமப்படுதல்
 • விடாமல் இருமுதல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் மற்றும் உணவு அல்லது வேறொரு துணிக்கையால் மூச்சுக் குழாயடைப்பு

முக்கிய குறிப்புகள்

 • இருமல் பிள்ளைகளில் காணப்படும் ஒரு பொதுவான அறிகுறியாகும்.
 • அநேகமான இருமல்கள் பொதுவான தடிமலினால்த்தான் ஏற்ப்டுகின்றன, அவற்றிற்கு சிகிச்சை தேவையில்லை.
 • 6 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு மருந்துக்குறிப்பில்லாத இருமல் மற்றும் தடிமல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவது இல்லை.
 • இருமலோடு சேர்ந்து வரக்கூடிய சில அறிகுறிகள், காய்ச்சல், சுவாசிக்கும்போது சத்தம் ஏற்படுதல், உணவு உண்பதில் குறைவுபடுதல், அல்லது வேகமாக சுவாசித்தல் போன்ற அறிகுறிகள் உங்கள் பிள்ளையை எப்போது மருத்துவரிடம் கொண்டுசெல்லவேண்டும் என்பதை அறிந்துகொள்ள உதவி செய்யும்.
 • சத்தமாக சுவாசித்தல் (மூச்சு வாங்குதல்), அல்லது காய்ச்சலுடன் சேர்ந்த இருமலுக்கு மருத்துவரைச் சந்திக்கவேண்டும்.
Last updated: நவம்பர் 09 2011