மூளைமின்அலைவரைவு (EEG)

Electroencephalogram (EEG) [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

மூளையில் பிரச்சினைகளுள்ள இடங்களைக் கண்டுபிடிப்பதற்காக மருத்துவர்கள் மூளைமின்அலை வரைவை உபயோகிப்பார்கள்.

மூளை மின் அலை வரைவு (EEG) என்றால் என்ன?

மூளை மின் அலை வரைவு மாதிரிகள் (EEG)மூளையின் செயற்பாட்டு வடிவங்கள்
மூளையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின் நடவடிக்கையின் மாதிரியை அளவிட பிள்ளையின் உச்சந்தலையில் மின் முனைகள் பொருத்தப்படும். இந்த மாதிரிகள் அலைபோன்ற கோடுகளால் காண்பிக்கப்படும். இது மூளையில் எந்தப்பகுதியில் அசாதாரண நடவடிக்கை உள்ளதென மருத்துவர் தீர்மானிக்க உதவ

மூளையிலுள்ள கலங்கள் ஒன்றோடொன்று செய்தித் தொடர்பு கொள்வதற்கு மிகக் குறைந்தளவிலுள்ள மின்சாரத்தை உபயோகிக்கின்றன. மூளைமின்அலை வரைவு இந்த மின்சாரத்தை அளக்கிறது. மூளையின் மின்சார நடவடிக்கை கணனித் திரையில் அலையுருவான கோடுகளாகக் காண்பிக்கப்படும். மூளை எவ்வளவு நன்றாக வேலை செய்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக மருத்துவர் இந்த அலையுருவான கோடுகளை ஆராய்வார்.

மூளைமின்அலை வரைவு அதாவது EEG பரிசோதனை செய்யவேண்டிய காரணங்கள்

மூளையில் பிரச்சினைகளுள்ள இடங்களைக் கண்டுபிடிப்பதற்காக மருத்துவர்கள் மூளைமின்அலை வரைவை உபயோகிப்பார்கள். உதாரணமாக, வலிப்பு அல்லது திடீர்த்தாக்கங்கள் எங்கே தொடங்குகிறது என்பதை மூளைமின்அலை வரவு படத்தால் காண்பிக்கமுடியும். பிரச்சினையுள்ள இடத்தில் மின்னலை வடிவத்தில் மாற்றம் ஏற்படும். மின்னலை வடிவத்திலுள்ள மாற்றமானது கணனித் திரையில் அலையுருவக் கோட்டின் மாற்றமாகக் காண்பிக்கப்படும். இது மூளையில் எங்கே பிரச்சினை இருக்கிறது என்பதைக் காண்பிக்கும். அதன்பின்பு மருத்துவர் சிறந்த சிகிச்சை எது என்பதைத் தீர்மானிக்கமுடியும்.

மூளைமின்அலை வரைவு EEG பரிசோதனைக்காக உங்கள் பிள்ளையை எப்படித் தயார் செய்வது

உங்கள் பிள்ளையை மருத்துவமனைக்குக் கொண்டுவருவதற்குமுன்பாக அவனது தலையைக் கழுவவும். உங்கள் பிள்ளையின் தலையைக் கழுவும்போது தலையில் பேன் இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கவும். பேன் இருப்பதற்கான அறிகுறி இருந்தால், தயவுசெய்து ஆய்வுகூடத்திலிருக்கும் தாதியிடம் தெரிவிக்கவும். தயவுசெய்து, உங்கள் பிள்ளையின் தலைமுடிக்கு கொண்டிஷனர் அல்லது ஜெல் உபயோகிக்கவேண்டாம்.

மயக்க மருந்து

பரிசோதனையின்போது உங்கள் பிள்ளையால் அசைவில்லாமல் படுத்திருக்கமுடியாவிட்டால், மிகவும் தீவிரமில்லாத மயக்கமருந்தை அவன் உட்கொள்ளவேண்டியிருக்கும். மயக்க மருந்து என்பது உங்கள் பிள்ளை அசைவில்லாமல் படுத்திருப்பதற்காக அவனை அமைதிப்படுத்தும் மருந்தாகும். மிகவும் பொதுவான மயக்கமருந்து , குளோரல் ஐதரேற்று மற்றும் பென்ரோபர்பிற்றல் சோடியம் என்பனவாகும்.

உங்கள் பிள்ளைக்கு மயக்கமருந்து தேவைப்பட்டால், அவன் பரிசோதனைக்கு 8 மணி நேரங்களுக்கு முன்பாகத் திட உணவுகளை நிறுத்தவேண்டும்; 6 மணி நேரங்களுக்கு முன்பாக பால், ஃபொர்மியூலா அல்லது நீராகாரங்களை நிறுத்தவும்; 4 மணி நேரங்களுக்கு முன்பாகத் தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தவும். உங்கள் பிள்ளைக்கு மயக்கமருந்து தேவைப்படுமா அல்லது உங்கள் பிள்ளைக்கு உணவு அல்லது பானங்கள் கொடுப்பது எப்போது நிறுத்தப்படவேண்டும் என்பதில் நிச்சயமற்றவர்களாயிருந்தால்,பரிசோதனைக்குக் குறிக்கப்பட்ட நாளுக்கு முந்திய நாளில் ஆய்வுகூடத்திலிருக்கும் தாதியிடம் கேட்கவும்.

மூளை மின் அலை வரைவு EEG இன் போது

மூளைமின்அலை வரைவு பரிசோதனை ஏறக்குறைய ஒரு மணி நேரம் எடுக்கும். அது வலிக்காது.

பெரும்பாலும், மூளைமின்அலை வரைவுப் பரிசோதனைகள் மருத்துவமனையில் செய்யப்படும். இவை மூளைமின்அலை வரைவில் விசேஷ பயிற்சிபெற்ற தொழில்நுட்ப வல்லுனரால் செய்யப்படும். வழக்கமாகப் பிள்ளைகள், மூளைமின்அலைவரைவுப்பரிசோதனையின்போது படுக்கையில் படுத்திருப்பார்கள். சிலவேளைகளில், பிள்ளைகள் மூளைமின்அலைவரைவுப்பரிசோதனையின்போது உட்கார்ந்திருப்பார்கள். பெரும்பாலும், பரிசோதனை செய்யப்படும்போது பெற்றோர்கள் பிள்ளையுடனிருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மின்வாய்கள் என்றழைக்கப்படும் சிறிய உலோகத்தாலான வட்டங்களை எங்கே வைக்கவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக மூளைமின்அலைவரைவு தொழில்நுட்ப வல்லுனர் உங்கள் பிள்ளையின் தலையை அளந்து ஒரு மெழுகுப் பென்சிலினால் அடையாளமிடுவார். உங்கள் பிள்ளையின் தலையில் அடையாளமிடப்பட்ட பகுதி, ஒரு அடர்த்தியான சோப்பு போன்ற ஜெல்லினால் சுத்தப்படுத்தப்படும். பின்பு கிறீம் மற்றும் சல்லடைத் துணியினால் மின்வாய்கள் உங்கள் பிள்ளையின் தலையில் வைக்கப்படும். மின்வாய்கள் கணனியுடன் பொருத்தப்படும்.

உங்கள் பிள்ளையின் மூளையிலுள்ள மின்சாரத்தின் வடிவத்தைத் கணனி பதிவு செய்யும். மூளைமின்அலை வரைவு இயந்திரம் உங்கள் பிள்ளையின் மூளையின் நடவடிக்கைகளின் தொடச்சியான ஒரு பதிவை ஏற்படுத்தும். இதைக் கணனித்திரையில் பார்க்கலாம்.

பரிசோதனையின்போது , தொழில்நுட்ப வல்லுனர் பின்வருவனவற்றைச் செய்யும்படி உங்கள் பிள்ளையைக் கேட்கலாம்:

  • மூன்று நிமிடங்களுக்கு ஆழமாக சுவாசித்தல்
  • அவனது கண்களைத் திறக்கவும் மூடவும் செய்தல்
  • ஒரு சில நிமிடங்களுக்கு பிரகாசிக்கும் ஒரு வெளிச்சத்தைப் பார்க்கும்படி

இந்த வகையான பயிற்சிகள், மூளையின் நடவடிக்கையின் சில வகைகளைத் தூண்டுவதற்காகச் செய்யப்படுகிறது. இந்த மூளையின் நடவடிக்கைகள் மாறும்போது மின்சார வடிவமும் மாறும். வித்தியாசமான நடவடிக்கைகளில் ஏற்படும் இந்த வடிவ மாற்றங்கள் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி மேலுமதிகத்தைத் தெரிந்து கொள்ள மருத்துவர்களுக்கு உதவிசெய்யும்.

நித்திரை செய்தல் மற்றும் விழித்திருத்தல்

உங்கள் பிள்ளை நித்திரை செய்யும்போதும் விழித்திருக்கும்போதும் பிள்ளைக்குப் பரிசோதனை செய்யப்படும். உங்கள் பிள்ளை விழித்திருக்கும்போதும் நித்திரை செய்யும்போதும் மூளையில் ஏற்படும் வித்தியாசத்தை இது காண்பிக்கலாம்.

மூளைமின்அலை வரைவு EEG பரிசோதனையால் ஏற்படும் பக்கவிளைவுகள்

உங்கள் பிள்ளைக்கு மயக்க மருந்து கொடுக்கப்படாவிட்டால் மூளைமின்அலை வரைவுப் பரிசோதனையால் அவனுக்கு எந்தப் பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் இல்லை.

உங்கள் பிள்ளைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்தால் நான்கு முதல் ஆறு மணி நேரங்களுக்கு அவன் நித்திரைமயக்கம், கடுகடுப்பு, அல்லது ஆட்டம் காண்பவனாக இருப்பான். பரிசோதனைக்குப் பின்னர் ஆறு மணி நேரங்களுக்கு தயவு செய்து, உங்கள் பிள்ளையைக் கவனமாகக் கண்காணிக்கவும். தண்ணீர் அல்லது அப்பிள் ஜூஸ் போன்ற தெளிவான பானங்களில் சிறிதளவை உறிஞ்சும்படி கொடுக்கவும். உங்கள் பிள்ளை உணவு உட்கொள்ளவேண்டும் என உணர்ந்தால், அவனுக்கு வழக்கமான உணவைக் கொடுக்கவும். உங்கள் பிள்ளை முழுமையாக விழித்தெழுந்ததும் அவனது வழக்கமான நடவடிக்கைகளில் அவன் ஈடுபடலாம்.

கிறீமினால் உங்கள் பிள்ளையின் தலைமுடி கொஞ்சம் ஒட்டும் தன்மையுடையதாயிருக்கலாம். ஷம்பூ உபயோகித்து நீங்கள் அதனை இலகுவாகக் கழுவிவிடலாம்.

முக்கிய குறிப்புகள்

  • மூளைமின்அலை வரைவு என்பது மூளையின் மின்சார வடிவத்தைப் பார்ப்பதற்காகச் செய்யப்படும் பரிசோதனையாகும்.
  • மருத்துவர்கள் மூளையில் பிரச்சினையிருக்கிறது என சந்தேகிக்கும் பிள்ளைகளுக்கு மூளைமின்அலை வரைவுப் பரிசோதனை செய்யப்படுகிறது.
  • மூளைமின்அலை வரைவுப் பரிசோதனை ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.
  • பரிசோதனையின்போது அமைதியாக இருக்கமுடியாத பிள்ளைகளுக்கு மயக்கமருந்து கொடுக்கப்படும்.
Last updated: நவம்பர் 06 2009