கண் களிம்பு: அதை எப்படிப் பூசுவது

Eye ointment: How to apply [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

​உங்கள் பிள்ளையின் கண்களுக்கு கண் களிம்பு மருந்தைப் பூசுவதற்குப் பின்வரும் படிகளைப் பின்பற்றுங்கள்

உங்கள் பிள்ளையின் மருத்துவர், அவனது கண்களுக்கு கண் களிம்பு பூசும்படி எழுதிக்கொடுத்திருக்கிறார். கண் களிம்பு என்பது ஒரு மருந்தாகும். உங்கள் பிள்ளையின் கண்களின் எப்படிக் கண் களிம்பைப் பூசுவது என்பதுபற்றி இந்தப் பக்கம் விபரிக்கும்.

மருத்துவரின் அலுவலகத்தில்

மருத்துவரின் அலுவலகத்தில், பின்வருவனவற்றைச் செய்யவும்:

  • உங்கள் பிள்ளைக்கு, மருந்துக்கு அல்லது வேறு எதற்காவது ஒவ்வாமை இருக்கிறதா என்பதை மருத்துவரிடம் சொல்லவும்.
  • உங்கள் பிள்ளை உட்கொள்ளும் எல்லா மருந்துகளைப்பற்றியும் மருத்துவரிடம் சொல்லவும். மருந்துக் குறிப்புள்ள அல்லது மருந்துக் குறிப்பில்லாத எல்லா மருந்துகளும் இதில் உட்படும்.
  • உங்கள் பிள்ளைக்கு ஏன் கண் களிம்பு தேவைப்படுகிறது என்று மருத்துவரிடம் கேட்கவும். அத்துடன் கண் களிம்பினால் உங்கள் பிள்ளைக்கு ஏதாவது பக்கவிளைவு அல்லது எதிர் விளைவு ஏற்படுமா என்றும் மருத்துவரிடம் கேட்கவும்.
  • எந்தக் கண்ணுக்கு கண் களிம்பு போடப்படவேண்டும் என்பதில் நிச்சயமாயிருங்கள். அந்தக் கண்ணைத் தொட்டுக்காண்பிக்கும்படி நீங்கள் மருந்துவரிடம் கேட்கலாம்.
  • உங்கள் பிள்ளை தொடு வில்லை உபயோகிப்பவனாக இருந்தால், அதைப்பற்றி மருத்துவருக்குச் சொல்லவும்.
  • நீங்கள் மருத்துவமனையை விட்டுச்செல்வதற்கு முன்னர் சரியான மருந்துக்குறிப்புச்சீட்டைப் பெற்றுக்கொண்டீர்களா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.

மருந்துக்கடையில்

மருந்துக்கடையில் பின்வருவனவற்றைச் செய்யவும்:

  • உங்கள் பிள்ளைக்கு மருந்துகள் அல்லது வேறு எதற்காவது ஒவ்வாமை இருந்தால் அதை மருந்தாளரிடம் சொல்லவும்.
  • கண் களிம்பினால் உங்கள் பிள்ளைக்கு ஏதாவது பக்கவிளைவு அல்லது எதிர் விளைவு ஏற்படுமா என்று மருந்தாளரிடம் கேட்கவும்.
  • சரியான கண் களிம்பைப் பெற்றுக்கொண்டீர்களா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
  • கண் களிம்பு டியூப்பில்,மருந்து காலவதியாகும் திகதியைச் சரி பார்க்கவும். காலவதியாகும் அல்லது காலவதியாகப்போகும் திகதி என்பது மருந்தை எறிந்துவிடவேண்டிய திகதியாகும். கண் களிம்பு டியூப்பை ஒரு முறை திறந்தபின்னர் எவ்வளவு காலத்துக்குக் களிம்பை உபயோகிக்கலாம் என்பது பற்றி மருந்தாளுனரிடம் கேட்கவும்.
  • எந்தக் கண்ணுக்கு கண் களிம்பு போடப்படவேண்டும் என்பதில் நீங்கள் நிச்சயமற்றிருந்தால்,மருந்தாளுனரிடம் கேட்கவும்.

உங்களிடம் இரண்டுமிருந்தால், கண்ணுக்கு களிம்பு போடுவதற்கு முன்னர் கண் சொட்டுமருத்தை ஊற்றவும்

ஒரே கண்ணுக்கு கண் சொட்டு மருத்தும் ஊற்றும்படி சொல்லப்பட்டிருந்தால், கண் சொட்டு மருந்தை முதலில் ஊற்றவும். ஒரே கண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வகையான கண் சொட்டுமருந்துகள் ஊற்றும்படி சொல்லப்பட்டிருந்தால், ஒவ்வொரு வகையான சொட்டு மருந்தும் ஊற்றிய பின்னர் 5 முதல் 10 செக்கன்டுகள் வரை காத்திருக்கவும். கண் சொட்டுமருந்து ஊற்றிய பின்பு 5 முதல் 10 செக்கன்டுகள் காத்திருந்தபின்பு, கண் களிம்பை உபயோகிக்கவும். எப்போதும் களிம்பை இறுதியில் பூசவும்.

மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து "கண் சொட்டு மருந்துகள்: அவற்றை எப்படி ஊற்றுவது" ஐப் பார்க்கவும்.

கண் களிம்பைப் பூசுவதற்கு முன்னர்

  • கண் களிம்பைப் பூசும்போது, எப்போதும் உங்கள் பிள்ளையைக் கூர்ந்து கவனிக்கவும்.
  • தொடங்குமுன்னர், உங்கள் கைகளை சோப் மற்றும் தண்ணீரினால் கழுவி நன்கு உலர வைக்கவும்
  • சரியான கண் களிம்பு மருந்தைக் கொண்டிருப்பதில் நிச்சயமாயிருங்கள். மருந்து விபர அட்டையிலுள்ள அறிவுரைகளை வாசிக்கவும்.
  • நீங்கள் களிம்பு மருந்து டியூப்பைத் திறந்தவுடன், நீங்கள் முதன் முதலில் அதைத் திறந்த திகதி மற்றும் மாதத்தை டியூப்பிலுள்ள விபர அட்டையில் எழுதிவைக்கவும். அதைத் திறந்த திகதியிலிருந்து ஒரு மாதத்திற்குப் பின்னர் அதை உபயோகிக்கவேண்டாம்.
  • கண் களிம்பு மருந்து சரியான கண்ணில் பூசப்படுவதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.

கண் களிம்பை எப்படிப் பூச வேண்டும்

  1. டியூப்பை மூடியுடன் உங்கள் மூடப்பட்ட கைகளுக்குள் வைத்துச் சூடாக்கவும். இது களிம்பு விரைவாக வழிந்தோட உதவி செய்யும்.
  2. டியூப்பிலிலிருந்து மூடியை அகற்றவும். சுத்தமான டிஸ்யூப் பேப்பர் போன்ற சுத்தமான மேற்பரப்பில் மூடியை வைக்கவும். உங்கள் பிள்ளையின் கண்கள், உங்கள் விரல்கள், அல்லது வேறு எதாவது மேற்பரப்புகள் டியூப்பின் முனையைத் தொடாதிருக்கக் கவனமாயிருங்கள். கண்களுக்கு மாத்திரம் உபயோகிப்பதற்காப் பிரத்தியேகமாக, ஒரு டிஸ்யூப் பெட்டியை வைத்திருக்கவும்.
  3. உங்கள் பிள்ளையை இருக்க அல்லது படுக்க வையுங்கள். அவனது தலையைச் சிறிது பின்புறமாகச் சாய்த்து, மேலே முகட்டைப் பார்க்கும்படி கேளுங்கள். 3 வயதுக்குக் கீழான பிள்ளைகளுக்கு, அவர்கள் தங்கள் கைகளை அசைக்காதவாறு கம்பளி அல்லது துவாயினால் சுற்றி வைத்தவாறு கண் சொட்டு மருத்தை ஊற்றுவது இலகுவாயிருக்கும்.
  4. உங்கள் பிள்ளையின் நெற்றியை ஒரு கையால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அதே கையின் பெருவிரலால் பாதிக்கப்பட்ட மேற் கண்மடலை உயர்த்தவும். நீங்கள் வலது கையை உபயோகிப்பவராக இருந்தால், உங்கள் பிள்ளையின் வலது பக்கத்திலிருந்து கொண்டு உங்கள் இடது கையால் நெற்றியைக் கெட்டியாகப்பிடிப்பது மேலும் இலகுவாயிருக்கும். நீங்கள் இடது கையை உபயோகிப்பவராக இருந்தால், உங்கள் பிள்ளையின் இடது பக்கத்திலிருந்து கொண்டு உங்கள் வலது கையால் நெற்றியைக் கெட்டியாகப்பிடிப்பது மேலும் இலகுவாயிருக்கும்.
  5. களிம்பு டியூப்பைப் பிடிப்பதற்கு மற்றக் கையின் பெருவிரலையும் சுட்டுவிரலையும் உபயோகிக்கவும். களிம்பு ரியூப்பைப் அவனது கண்ணுக்கு மேலே பிடிக்கவும்.
  6. களிம்பு மருந்து டியூப்பைப் பிடித்திருக்கும் அதே கையின் சின்ன விரலை உபயோகித்து கீழ்க் கண்மடலை மெதுவாக இழுத்துச் சட்டைப்பை போன்ற திறப்பை ஏற்படுத்தவும்.
  7. கண்ணின் சட்டைப்பை போன்ற திறப்பினுள் ஒரு சிறிய அளவு களிம்பு மருந்தை (ஏறக்குறைய ½ அங்குலம் அல்லது ஒரு அரிசி மணியளவு ) பூசவும்.
  8. மெதுவாகக் கீழ் கண் மடலை விடுவிக்கவும். உங்கள் பிள்ளையின் நெற்றியை தொடர்ந்து பிடித்துக் கொள்ளவும்.
  9. மெதுவாக மேற் கண் மடலை விடுவிக்கவும். உங்கள் பிள்ளையின் நெற்றியை தொடர்ந்து பிடித்துக் கொள்ளவும்.
  10. உங்கள் பிள்ளையால் அறிவுரைகளைப் பின்பற்ற முடிந்தால், அவனது கண்களை மெதுவாக மூடிக்கொண்டு, மூடிய கண்களால் மேலே பார்க்கும்படி கேட்கவும். இது மருந்து நன்றாக வேலை செய்ய உதவும். கண்களை இறுக்கமாக மூடிக்கொள்வது அல்லது வழக்கத்துக்கு மாறாகக் கண் சிமிட்டுவது கண் களிம்புமருந்தை வெளியேற்றிவிட்டிடும்.
  11. ஏதாவது மேலதிக களிம்பு இருந்தால்,வேறொரு சுத்தமான ரிஸ்யூப் பேப்பரினால் துடைத்துவிடவும்.
  12. உங்கள் பிள்ளையின் நெற்றியிலுள்ள உங்கள் பிடியைத் தளர்த்திவிடவும்.

கண் களிம்பைப் பூசிய பின்னர்

  • கண் களிம்பைப் பூசிய பின்னர் களிம்பு டியூப்பின் முனையை ஒரு சுத்தமான டிஸ்யூ பேப்பரால் துடைக்கவும். களிம்பு ரியூப்பின் மூடியைத் திரும்பவும் மூடிவிடவும்.
  • திரும்பவும், உங்கள் கைகளை சோப் மற்றும் தண்ணீரினால் கழுவி நன்கு உலர வைக்கவும்.
  • கண் களிம்பு மருந்தைப் பிள்ளைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
  • சில கண் களிம்பு மருந்துகள் தெளிவற்ற கண் பார்வையை உண்டாக்கும். உங்கள் பிள்ளையின் கண் பார்வை தெளிவற்றதாயிருந்தால், அவனின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும்.

மருத்துவரை எப்போது அழைக்கவேண்டும்

கண் களிம்பு அல்லது கண் சொட்டுமருத்து உங்கள் பிள்ளையில் எதிர்விளைவை உண்டாக்கினால், அல்லது உங்கள் பிள்ளையின் கண்ணின் நிலைமை மோசமாகிக்கொண்டு வந்தால், மருந்துச் சீட்டை எழுதித் தந்த மருத்துவரிடம் சொல்லவும்.

எனது பிள்ளையின் மருத்துவரின் பெயர்:

தொலைபேசி எண்:

உங்கள் மருத்துவரை அணுக முடியவில்லை என்றால், மருத்துவமனையை அழைத்து, அழைப்பிலிருக்கும் கண் மருத்துவரிடம் பேசச் சொல்லவும்.

முக்கிய குறிப்புகள்

  • நீங்கள் சரியான கண் களிம்பு மருந்து வைத்திருக்கிறீர்கள் என்பதையும் அதைச் சரியான கண்ணில் ஊற்றுகிறீர்கள் என்பதையும் எப்போதும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
  • உங்கள் பிள்ளைக்கு இருக்கும் அல்லது கண் களிம்பு மருந்தினால் சாத்தியமாகக் கூடிய பக்கவிளைவுகள், எதிர்விளைவுகள், அல்லது ஒவ்வாமைகள் பற்றி உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும்.
  • கண் களிம்பு பூசுவதற்கு முன்பு கண் சொட்டு மருந்தை ஊற்றவும்.
  • சுத்தமாயிருப்பதுதான் முக்கியம். கண் களிம்பு மருந்தைப் பூசுவதற்கு முன்பும் பூசிய பின்பும் உங்கள் கைகளைக் கழுவவும். உங்கள் பிள்ளையின் கண்கள், உங்கள் விரல்கள், அல்லது வேறு எதாவது மேற்பரப்புகள் களிம்பு ரியூப்பின் நுனியைத் தொட விடவேண்டாம்.
Last updated: நவம்பர் 06 2009