புட்டிப் பாலூட்டுதல்

Formula feeding [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

குழந்தையின் மாற்றுப் பால் பற்றிக் கற்றுக்கொள்ளுங்கள்.

குழந்தைகளின் அனுகூலமான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கு, தாய்ப்பால் தான் இயற்கையின் மிகச் சிறந்த ஊற்றுமூலமாக உலகம் முழுவதாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் தாய்க்கும் நன்மையளிக்கின்றது. ஏனென்றால் அது அவளுக்கு, மார்பு மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் எலும்புத்துளை நோய் என்பன உண்டாகும் ஆபத்தைக் குறைக்கின்றன. உங்கள் குழந்தையின் வாழ்க்கையின் முதலாவது மாதத்தில், உங்களில் தாய்ப்பால் சுரத்தலின் அளவு நிர்மாணிக்கப்பட்டுவிடும்.

நீங்கள், உங்கள் குழந்தைக்குத் தேவையான அளவு தாய்ப்பால் சுரக்கப்படவில்லை என உணரலாம். இந்த நிலைமை ஏற்பட்டால் தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி விடாதீர்கள்.

இதற்குப் பதிலாக, ஒரு பாலூட்டுதலுக்கான ஆலோசகர் அல்லது வேறு தாய்ப்பாலூட்டுதலுக்கான நிபுணர், அல்லது உங்கள் மருத்துவரிடம் கலந்து பேசவும். உங்கள் தாய்ப்பால் சுரத்தலினளவு நன்கு நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னர் உங்கள் குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுக்கத் தொடங்கினால், உங்கள் தாய்ப்பால் சுரத்தலின் அளவு இனிமேலும் தாய்ப்பால் கொடுக்க முடியாத அளவுக்குக் குறைக்கப்படலாம்.

தாய்ப்பாலூட்டுதலை நீங்கள் நிறுத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட காரணம் இருந்தால், அல்லது உங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நீங்கள் தாய்ப்பாலூட்டவேண்டாம் எனத் தீர்மானம் எடுத்திருந்தால், புட்டிப்பாலூட்டும் உங்கள் தீர்மானத்தில் நீங்கள் சௌகரியமாக உணரவேண்டும்.

பசுப்பாலை அடிப்படையாகக் கொண்டு இரும்புச் சத்தால் வலுப்படுத்தப்பட்ட குழந்தைப் பால்மாவை உபயோகிப்பது சிறந்தது. உங்கள் தாய்ப்பால் சுரத்தலின் அளவு நன்கு நிர்மாணிக்கப்பட்ட பின்பும்கூட , உங்கள் குழந்தைக்கு வெளியே பிளிந்தெடுக்கப்பட்ட தாய்ப்பாலலைக் கொடுக்க முடியாவிட்டால், நீங்கள் மேலதிகமாக ஒரு குழந்தைகளில் பால்மாவை உபயோகிக்கலாம். உங்கள் குழந்தைக்கு 12 மாதங்கள் பூர்த்தியாவதற்கு முன் வழக்கமாகப் பசுப்பால் கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இது இரும்புச் சத்துக் குறைபாடுள்ள இரத்தச் சோகை மற்றும் ஒவ்வாமைகளை உண்டாக்கும்.

குழந்தையின் புட்டிப்பால் மாவு எதனால் தயாரிக்கப்பட்டது?

பெரும்பாலான குழந்தைகளின் புட்டிப்பால் மாவு பசுப்பாலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் அவை உங்கள் குழந்தை வளரவும் மேம்படவும் உதவி செய்யக்கூடிய விற்றமின்கள், கனிப்பொருட்கள், மற்றும் வேறு ஊட்டச் சத்துக்கள் என்பனவற்றின் பொருத்தமான சமநிலையைக் கொண்டிருக்கும். மிகவும் அரிதாக, பசுப்பாலின் புரத ஒவ்வாமை அல்லது பாலிலுள்ள லக்டோசை சகிக்கமுடியாமை போன்றவை ஏற்படும். இவை ஏற்படச் சாத்தியம் இருக்கிறது என நீங்கள் கவலைப்பட்டால், உங்கள் குழந்தைக்கு எந்தப் பால்மாவு சிறந்தது என்பதைக் கண்டறிவதற்காக உங்கள் மருத்துவரிடம் கலந்து பேசுங்கள்.

குழந்தைகளின் பால்மாவு முடிந்தளவுக்குத் தாய்ப்பாலுக்குச் சமமாக இருப்பதற்கான ஊட்டச் சத்து மூலக்கூறுகளால் வடிவாமைக்கப்பட்டிருந்தாலும், மனிதப்பாலில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உட்பொருட்களின் மிகக் குறைந்த அளவே எல்லாப் பால்மாவிலும் சேர்க்கப்பட்டுள்ளது. சிக்கலான மனிதப் பாலினுள் செயற்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட மூலக்கூறுகளில் ஏறக்குறைய 30 மாத்திரமே செயற்கையான குழந்தைகளின் பால்மாவில் செயற்படவைக்க முடியும். கண் மற்றும் மூளை மேம்பாட்டிற்கு முக்கியமானது என்று கருதப்படும் தாய்ப்பாலிலுள்ள மூலக்கூறுகளான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பமிலங்களை, புதிய பால்மாக்களில் சேர்த்துக்கொள்ள விஞ்ஞானிகள் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

குழந்தைகளின் அநேக பால்மாவுகள், தாய்ப்பால் கொண்டிருப்பதைப்போல், ஒரேயொரு காபோவைதரேற்றான லக்டோசைக் கொண்டிருக்கின்றன. லக்டோஸ், சமிபாடு, சாதாரணமாக மலங்கழித்தல், மற்றும் ஆரோக்கியமான திசுக்கள் உருவாதல் என்பனவற்றிற்கு உதவி செய்கிறது. பால்மாவுகள், உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான குறிப்பிட்ட சில புரதங்கள், மற்றும் தோலைப் பாதுகாப்பதற்கு மற்றும் குறிப்பிட்ட சில விட்டமின்களை உறிஞ்ச உதவி செய்வதற்கான இலகுவாக சமிபாடடையக்கூடிய கொழுப்புகள் என்பனவற்றையும் கொண்டிருக்கும்.

பால்மாவுகள் பின்வரும் அத்தியாவசிய விட்டமின்களைக் கொண்டிருக்கும்:

  • விட்டமின் A உடற்கலங்களைக் கட்டியெழுப்ப மற்றும் நல்ல கண்பார்வைக்கு
  • B விட்டமின்கள் நரம்புத் தொகுதி, தோல், மற்றும் திசுக்களைப் பேணிக்காக்க,
  • விட்டமின் C முரசு மற்றும் பற்களுக்கு
  • விட்டமின் Dவலிமையான எலும்புகள் மற்றும் பற்களுக்கு
  • விட்டமின்E ஆரோக்கியமான சிவப்பணுக்களுக்கு

ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்காக கல்சியம் மற்றும் பொசுபரசு, மற்றும் இரத்த சோகையைத் தடுப்பதற்காக இரும்புச் சத்து போன்ற முக்கியமான கனிப்பொருட்களையும் குழந்தைகளின் பால்மாவு கொண்டிருக்கிறது. பால்மாவு கொடுக்கப்படும் எல்லாக் குழந்தைகளுக்கும் இரும்புச் சத்தால் வலுவூட்டப்பட்ட பால்மாவு கொடுக்கப்படவேண்டும். பால்மாவிலிள்ள இரும்புச்சத்தின் அளவு வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கலை உண்டுபண்ணப் போதுமானவையல்ல.

குழந்தைக்கான புட்டிப்பாலைத் தயாரித்தல்

குழந்தைக்கான மாற்றுப்பால் மூன்று வடிவங்களில் கிடைக்கின்றன: மாவு, செறிவான திரவம், மற்றும் பரிமாறத் தயாராயிருக்கும் திரவம். உபயோகிக்கத் தயாராயிருக்கும் பாலை, உங்கள் குழந்தையின் புட்டியில் நேரடியாகவே ஊற்றி அப்படியே பருக்கிவிடலாம். நீங்கள் பிரயாணம் செய்யும்போது இது விசேஷமாக சௌகரியமாயிருக்கும். உங்கள் குழந்தையின் வாழ்க்கையின் முதல் நான்கு மாதங்களில், செறிவான திரவங்கள் அல்லது பால்மாவுகள் கொதிக்கவைத்த நீரில் அல்லது வியாபார ரீதியாக கிருமிகள் அழிக்கப்பட்ட தண்ணீரில் உற்பத்தியாளர் குறிப்பிட்ட அளவின்படியே கலக்கப்பட வேண்டும்.கவனமாக அளவீடு செய்யுங்கள். நன்றாகக் கலந்து உங்கள் குழந்தை சரியான செறிவு நிலையின் பாற்கலவையைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்துகொள்ளுங்கள். மேலதிக பால்மாவைக் கலக்கவேண்டாம், மற்றும் ஒருபோதும் மேலதிக தண்ணீர் விட்டு கலவையை ஐதாக்க வேண்டாம்.

பாற்கலவை தயாரிப்பதற்கு முன்பு தண்ணீரை இரண்டு முதல் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

உங்கள் குழந்தையின் புட்டியை சூடாக்கினால், அதை உங்கள் குழந்தைக்குக் கொடுப்பதற்கு முன்பாகப் பாலின் வெப்பநிலையைச் சோதித்துப் பார்க்கவும். புட்டியை மைக்ரோவேவ் அடுப்பில் வைத்துச் சூடாக்குவதைத் தவிர்க்கவும். அது சிவப்புப் புள்ளிகளை உருவாக்கி பால்மாவிலுள்ள ஊட்டச் சத்துக்கள் மற்றும் தொற்றுநோயை எதிர்க்கும் பொருட்களைப் பாதிக்கலாம். இந்த சிவப்புப் புள்ளிகள் உங்கள் குழந்தையின் வாயையும் சுட்டுவிடலாம். அதற்குப் பதிலாக, புட்டியை வெந்நீர்க்குழாயின் கீழ் பிடிக்கவும் அல்லது அதை புட்டி வெப்பமாக்கியினுள் வைக்கவும். புட்டி சூடானவுடன் திரும்பவும் பாலைக் கலக்கிக் கொள்ளவேண்டும் என்பதில் நிச்சயமாயிருங்கள்.

பாற்கலவை தயாரிக்கப்பட்டவுடனே அதை உபயோகிக்கவும் அல்லது குளிர்ச்சாதனப் பெட்டியில் வைத்துவிடவும். புதிதாகத் தயாரிக்கப்பட்ட பாற்கலவை குளிர்ச்சாதனப் பெட்டியில் 24 மணிநேரங்களுக்கு பாதுகாத்து வைக்கப்படலாம். ஒரு மணி நேரத்துக்குமேல் அறை வெப்பநிலையில் வைக்கப்பட்ட பாற்கலவையை வெளியே ஊற்றிவிடவும். பாலூட்டியபின்னர் மீதியாக இருக்கும் பாலை வெளியே ஊற்றிவிடவும்.

கால அட்டவணை மற்றும் அளவுகள்

புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஒவ்வொரு முறை பாலூட்டப்படும்போதும் பெரும்பாலும் 30 மிலி (ஒரு அவுன்ஸ்) பாலை உட்கொள்ளும். முதல் வார இறுதியில் இது 60 மிலி முதல் 90 மிலி (இரண்டு முதல் மூன்று அவுன்ஸ்கள்) யாக அதிகரிக்கும். உங்கள் குழந்தையின் வாழ்க்கையின் முதல் மூன்று வாரங்களுக்கு, பெரும்பாலும் ஒரு நாளில் எட்டு முறைகள் உணவூட்டப்படவேண்டும். அதற்குப் பின்னர், ஒரு நாளில் உணவூட்டப்படவேண்டிய வேளைகள் குறையும். ஆனால், ஒவ்வொரு முறை உணவூட்டப்படும்போதும் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரிக்கும். உங்கள் குழந்தைக்கு எவ்வளவு மாற்றுப்பால் தேவை என்பதை அவளையே தீர்மானிக்கவிடுங்கள்: புட்டியிலுள்ள பால் முழுவதையும் குடித்துமுடிக்கும்படி வற்புறுத்தாதீர்கள். சில உணவூட்டும் சமயங்களில் உங்கள் குழந்தைக்கு பசி இல்லை என்றால், உணவூட்டும் இடைவேளைகளை அதிகரிப்பதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

உங்கள் குழந்தைக்குப் பாலூட்டுவதற்கு முன்பு, புட்டியின் சூப்பானிலிருந்து எவ்வளவு விரைவாக சொட்டு விழுகிறது என்பதைச் சோதித்துப் பாருங்கள். புட்டியை தலைகீழாகப் பிடிக்கும்போது , ஒரு சுத்தமான சூப்பானிலிருந்து ஒரு செக்கனுக்கு ஒரு துளி வீதம் சொட்டு விழ வேண்டும். ஒரு அடைபட்ட சூப்பான் பாலூட்டும் நேரத்தை அதிகரிக்கக்கூடும்.

உங்கள் குழந்தைக்குப் பாலூட்டுதல்

பாலூட்டும் நேரம் ஒரு ஓய்வான நேரமாக இருக்கவேண்டும் ; வெறுமனே உங்கள் குழந்தைக்கு உணவூட்டும் நேரமாக மாத்திரமல்ல , ஆனால் அவளுடன் நல்ல பந்தத்தை ஏற்படுத்தும் சமயமாகவும் இருக்கவேண்டும். மூச்சுத் திணறுவதைக் குறைப்பதற்காக, அவளுடைய தலையை உங்கள் கை வளைவில் வைத்து சாய்த்துப் பிடித்துக்கொள்ளுங்கள். இந்த நிலை, பால் ஒழுகி உங்கள் பிள்ளையின் நடுக்காதைச் சென்றடையும் ஆபத்தையும் குறைக்கும். உங்கள் குழந்தை அதிகளவு காற்றை உள்ளெடுப்பதைத் தடுப்பதற்கு, புட்டியும் புட்டியின் கழுத்தும் பாலால் நிறைந்திருக்கும்படி புட்டியைச் சாய்த்துப் பிடியுங்கள்.

ஏவறை விடுவது ஒரு அவசியமான காரியமல்ல. வயிற்றுக்குள் இருக்கும் காற்று வலியை உண்டாக்காது. ஆயினும், ஏவறை விடுவது எச்சிலுமிழ்தலைக் குறைக்கலாம். ஒவ்வொரு முறை பாலூட்டியபின்பும் உங்கள் குழந்தையை ஏவறைவிடச் செய்ய முயற்சிக்க வேண்டும். ஆனால் அவள் ஏவறை விடவில்லையென்றால் கவலைப்பட வேண்டாம். அவளின் வயிற்றிலிருந்து காற்று வெளியேற வேண்டுமென்றால் ஏவறை விட முயற்சிக்கும்போது அது வெளியே வந்துவிடும்; ஆனால் இது ஒவ்வொரு முறையும் சம்பவிக்காமலிருக்கலாம். உங்கள் குழந்தை ஏவறைவிடவேண்டும் என நீங்கள் தெரிவு செய்தால் அவள் பால் குடிப்பதை நிறுத்தும்வரை காத்திருக்கவும்.

குழந்தக்குப் பால் புட்டியினால் ஏற்படும் பற்சிதைவைத் தடுத்தல்

உங்கள் குழந்தை நித்திரை செய்யும்போது திரவங்கள் வாய்க்குள் சேகரிக்கப்பட்ட நிலையில் இருக்கும். ஆகவே, உங்கள் குழந்தையை ஒரு புட்டிப் பால் அல்லது வேறு ஏதாவது இனிப்பான திரவத்துடன் படுக்கவைத்தால், அது பற்சிதைவை ஏற்படுத்தும். உங்கள் குழந்தை நித்திரை செய்யும்போது ஒரு புட்டியைக் கொடுக்காமலிருப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கலாம். இந்த சமயத்தில் அவளுக்கு ஒரு புட்டியை நீங்கள் கொடுக்க வேண்டுமானால், பாலுக்குப் பதிலாக அதைத் தண்ணீரால் நிரப்பிக் கொடுக்கவேண்டும்.

Last updated: அக்டோபர் 18 2009