அக்கிமுறிப்பு மற்றும் கை-பாதம்-வாய் நோய்

Herpangina and hand, foot and mouth disease [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

அக்கிமுறிப்பு, தொண்டையின் பின்பகுதியில் ஏற்படும் ஒரு வைரஸ் தொற்றுநோயாகும். தொண்டையில் புண் மற்றும் வலி ஆகியவையே பிரதானமான அறிகுறிகளாகும். கை-பாதம்-வாய் நோயானது, கையிலும் பாதத்திலும் கொப்புளங்களையும், வாயில் வலியையும் உண்டாக்கும் ஒரு வைரஸ் வியாதியாகும்.

அக்கிமுறிப்பு (ஹர்பஞ்ஜீனா) என்பது என்ன?

அக்கிமுறிப்பு ஒரு வைரஸால் ஏற்படுத்தப்படுகின்ற தொற்றுநோயாகும். இந்த தொற்றுநோய் சிறிய சிகப்புப் புள்ளிகளை வாயின் பின்பக்கத்தில் ஏற்படுத்தும். இந்தப் புள்ளிகள் பின்பு விரைவில் உடையக்கூடிய நீர்மம் நிறைந்த சிறிய கொப்புளங்களாக மாறி சிறிய புண்களை விட்டுச் செல்லும். இந்தப் புண்கள் மிகவும் சிறியவை; ஏறக்குறைய 2 இலிருந்து 4 மில்லிமீட்டர்கள் (ஏறக்குறைய 1/8 அங்குலம்) அகலம் மாத்திரம் உள்ளன. அவை உங்கள் பிள்ளைக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தக்கூடும் மற்றும் உங்கள் பிள்ளையை உணவையோ நீரையோ மறுத்து விடச் செய்யும்.

கை-பாதம்-மற்றும்-வாய் நோய் என்பது என்ன?

கை-பாதம்-வாய் நோயும், அக்கிமுறிப்பு நோயைப்போலவே அதே புள்ளிகளையும் புண்களையும் வாயினுள் ஏற்படுத்துகின்றது. கைகளிலும் பாதத்திலும்கூட இது புள்ளிகளை ஏற்படுத்துகின்றது. டையப்பர் பகுதியிலும்கூட புள்ளிகள் தோன்றலாம்.

இரண்டும் கொக்ஸாக்கீ A வைரஸினால் ஏற்படுகிறது

அக்கிமுறிப்பும் கை-பாதம்-வாய் நோயும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வைரசினால் ஏற்படுகிறது. வைரசுக்கு எதிரான சிகிச்சை எதுவுமில்லை.

இரண்டு நோய்களிலும், புள்ளிகளும் புண்களும் 10 நாட்களுக்குள் தாமாகவே போய்விடும்.

தொடுவதனால் அல்லது சுவாசிப்பதனால் வைரஸ் பரவுகிறது

இந்த வைரஸ் கோடைகாலத்திலும் இலையுதிகாலத்தின் ஆரம்பத்திலும் சாதாரணமாகக் காணப்படுகிறது. இது உமிழ் நீரிலும் மலத்திலும் காணப்படும்.

அக்கிமுறிப்பும் கை-பாதம்-வாய் நோயும் உள்ள ஒரு பிள்ளை, நோய் தொற்றிய முதல் வாரத்தில் மிக அதிகமாக நோயைப் பரப்பும் தன்மையுடையவனாயிருப்பான். ஆயினும், ஒரு பிள்ளையால் பல வாரங்களுக்கு வைரஸைப் பரப்பமுடியும்.

வைரஸின் அடைகாக்குங் காலம் 3 இல் இருந்து 6 நாட்கள் வரையாகும்.

ஒரு பிள்ளை தொற்றுநோயுள்ள மலத்தைத் தொட்டபின்னர் தன் கையைத் தன் வாயில் வைக்கும்போது வைரஸ் பரவுகிறது. இருமும் போது மற்றும் தும்மும்போதும் நுரையீரலினூடாகவும் வைரஸ் பரவலாம்.

கவுண்டர்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் போன்ற மேற்பரப்புகள் மற்றும் பொருட்களிலும் இன்னொருவருக்குப் பரவும் காலம் வரை வைரஸ் உயிர் வாழும்.

பரவுவதையும் மீண்டும் தோன்றுவதையும் தவிர்த்தல்

தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கு, உங்கள் கைகளையும் உங்கள் பிள்ளையின் கைகளையும் அடிக்கடி கழுவவும். பின்வரும் சந்தர்ப்பங்களில் அவ்வாறு செய்ய நிச்சயமாயிருங்கள் :

  • பிள்ளையின் மூக்கைத் துடைத்தபின்
  • டையாப்பரை மாற்றியபின்
  • கழிவறையை உபயோகித்தபின்
  • சமைப்பதற்கு முன்

வைரசுக்கு எதிரான தடுப்புமருந்து எதுவுமில்லை

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

அக்கிமுறிப்பு மற்றும் கை-பாதம்-மற்றும்-வாய் நோய் ஆகிய இரண்டுமே, வாயில் புள்ளிகள் தோன்றுவதற்கு பல நாட்களுக்கு முன்பே, காய்ச்சல், தொண்டை வலி, பொதுவாகவே நலமாக உணராமல் இருத்தல் ஆகியவற்றோடு ஆரம்பிக்கும். பிள்ளைகள் சாப்பிட விரும்பமாட்டார்கள்; மிகவும் எரிச்சலடைபவர்களாகக் காணப்படுவார்கள். வளர்ந்த பிள்ளைகள், தலைவலி, தொண்டைவலி, பலம் இல்லாமல் இருத்தல் போன்றவைபற்றி முறையிடலாம்.

சிக்கல்கள் தீவிரமற்றவை

அக்கிமுறிப்பு மற்றும் கை-பாதம்-மற்றும்-வாய் நோயின் மிகவும் பொதுவான சிக்கல் உடல் நீர் வறட்சி ஆகும். உடல் நீர்வறட்சி என்பது உடலில் போதியளவு நீர் இல்லாதிருப்பதாகும். வாயில் வலி இருப்பதால், பிள்ளைகள் நீராகாரம் அருந்த மறுப்பார்கள். ஆயினும், வீட்டில் சரியான பராமரிப்புக் கிடைக்கும்போது, பெரும்பாலான பிள்ளைகள் உடலில் நீர்த்தன்மையைப் பெற்றுக்கொள்வதற்குப் போதியளவு நீராகாரத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.

வேறு சிக்கல்கள் மிகவும் அரிதானதே.

உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

அக்கிமுறிப்புக்கான சிகிச்சை அதற்கு ஆதரவளிப்பதே. அதாவது உங்கள் பிள்ளையை நீர்த்தன்மையுடன் மற்றும் முடிந்தளவு சௌகரியமாக வைத்திருப்பது என்பதாகும். இது உடலைத் தொற்றுநோய்க்கு எதிராகப் போராட உதவி செய்யும்.

வைரஸுகளுக்கு எதிராக அன்டிபையோடிக்குகள் வேலைசெய்யாது. அக்கிமுறிப்பு அல்லது கை-பாதம்-வாய் நோய்கள் நிவாரணமடைய அவை உதவி செய்யாது.

வலி நிவாரணம்

வலியைக் கட்டுப்படுத்துவதற்கு, உங்கள் பிள்ளைக்கு அசெட்டமினோஃபென் (டைலெனோல், டெம்ப்ரா அல்லது வேறு பிரான்டுகள்) அல்லது ஐபியூபுரோஃபென் (மோட்ரின் , அட்வில் அல்லது வேறு பிரான்டுகள்) கொடுங்கள். உங்கள் பிள்ளை வாய் வழியாக மருந்தை உட்கொள்ள முடியாதிருந்தால், அவனுக்கு வலி நிவாரண மலவாசல் உள்வைப்பு மருந்தைக் கொடுக்கலாம்.

அசெட்டமினோஃபென் மற்றும் ஐபியூபுரோஃபென் ஆகிய இரண்டையும் ஒரே சமயத்தில் கொடுக்கலாம். அல்லது ஒவ்வொரு 3 மணி நேரங்களுக்கு ஒரு முறை அவற்றை ஒன்றன் பின் மற்றொன்றாகக் கொடுக்கலாம். எப்போதும் லேபிளிலுள்ள அறிவுரைகளைப் பின்பற்றவும் அல்லது உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் பேசவும்.

அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக நீராகாரம் அருந்துங்கள்

உடலில் நீர்வறட்சியைத் தவிர்ப்பதற்கு, நீராகாரங்களை அடிக்கடிசிறிய அளவுகளில் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவும். ஐஸ் கிறீம் மற்றும் அப்பிள் சோர்ஸ் போன்ற குளிரான உணவுகள் மற்றும் மென்மையான உணவுகள் இதமாக இருப்பதோடு புண்களையும் உறுத்தமாட்டாது. அமில, மென்மைப் பானங்கள் மற்றும் உப்பு அல்லது உறைப்பான உணவுகள் அதிக உறுத்தலை ஏற்படுத்தலாம்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

பின்வரும் நிலைகளின்போது உங்கள் பிள்ளையின் வாடிக்கையான மருத்துவரை அழையுங்கள்:

  • அசெட்டமினோஃபென் அல்லது ஐபியூபுரோஃபென் மருந்துகளால் வலி நிவாரணமடையவில்லை
  • வாயிலிருக்கும் புண் 10 நாட்களுக்கு மேலாக நீடிக்கின்றது

பின்வரும் நிலைமைகளின் போது உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லுங்கள் அல்லது 911 ஐ அழையுங்கள்:

  • உங்கள் பிள்ளைக்கு மார்பு வலியிருக்கின்றது, சுவாசிக்க சிரமப்படுகின்றது, இருதயத் துடிப்பு விரைவானதாக உணர்கின்றது அல்லது மிக அதிக களைப்பாகக் காணப்படுகின்றது
  • yஉங்கள் பிள்ளைக்கு தலைவலி, வாந்தி, கழுத்து வலி அல்லது விறைப்பு அல்லது நடத்தையில் மாற்றமிருக்கின்றது

முக்கிய குறிப்புகள்

  • அக்கிமுறிப்பு, பிள்ளைகளின் வாயின் பின்புறத்தில் ஏற்படுகின்ற ஒரு பொதுவான, வலி நிறைந்த தொற்றுநோயாகும். இது 10 நாட்கள்வரை நீடிக்கலாம்.
  • அக்கிமுறிப்பும், கை-பாதம்-வாய் நோயும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்களால் ஏற்படுத்தப்படுகின்றன
  • வலியைக் கட்டுப்படுத்துவதும் பிள்ளை போதுமான அளவு நீராகாரங்களைக் குடித்து நீர்த்தனமையுடையதாக இருப்பதை உறுதி செய்வதும் மட்டுமே உள்ள ஒரே சிகிச்சையாகும்.
  • பரவுவதைத் தவிர்ப்பதற்காக உங்கள் கைகளையும் பிள்ளையின் கைகளையும் அடிக்கடி கழுவத் தவறாதீர்கள்.
  • நோய் பரவுவதைத் தடுப்பதற்காக உங்கள் கைகளையும் பிள்ளையின் கைகளையும் அடிக்கடி கழுவுவதற்கு நிச்சயமாயிருக்கவும்.
Last updated: அக்டோபர் 16 2009