தோல் அரிப்பு (ஹைவ்ஸ்)

Hives (urticaria) [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

தோலில் ஏற்படும் மேடான, அரிப்புள்ள, சிவப்பு அல்லது வெள்ளை நிற வீக்கங்களுக்கான காரணங்கள், அறிகுறிகள், மற்றும் சிகிச்சைகள் பற்றி இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு கண்ணோட்டம்.

தோல் அரிப்பு என்றால் என்ன?

தோல் அரிப்பு என்பது, தோலில் மேடான, அரிப்புள்ள சிவப்பு நிற புடைப்புகள்(வீக்கங்கள்). அவை அளவுகளில் வித்தியாசப்படலாம் மற்றும் உங்கள் பிள்ளையின் உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றலாம்.

முண்டத்தில் தோல்வீக்கம்

தோல் அரிப்புக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

தோல் அரிப்பு கடுமையானதாக இருக்கலாம் அல்லது தீராததாய் இருக்கலாம். கடுமையான தோல் அரிப்பு திடீரெனத் தோன்றும் மற்றும் ஒரு சில மணி நேரங்கள் அல்லது நாட்கள் மாத்திரம் நீடிக்கும். தீராத தோல் அரிப்பு 6 வாரங்களுக்கு மேல் நீடிக்கலாம் மற்றும் மாதங்கள் அல்லது சில வேளைகளில் வருடங்களுக்குக்கூட நீடிக்கலாம்.

தோல் அரிப்பு பின்வரும் தோற்றத்தை உடையதாயிருக்கலாம்:

  • சிவப்பு அல்லது வெள்ளை நிற, பல்வேறு அளவுகளில் மேடான வீக்கங்கள் அல்லது கட்டிகள் ( அவை ஒரு சில மில்லி மீட்டரிலிருந்து ஒரு சில சென்டி மீற்றர் நீளம் வரையான அளவுகளில் இருக்கலாம்)
  • ஒரு தனிக் கட்டி அல்லது வீக்கம் தோலின் ஒரு மிகப் பெரிய பகுதி வரை பரந்திருக்கலாம்.
  • கட்டிகளின் ஒரு கூட்டம் மறைந்து பின்னர் திரும்பவும் தோன்றலாம்

தோல் அரிப்புள்ள ஒரு பிள்ளை பின்வருவனவற்றையும் கொண்டிருக்கலாம்:

  • கடுமையான அரிப்பு
  • வீக்கமுள்ள பகுதியில் எரிச்சல், கூர்மையான வலி, அல்லது முள்போல குத்துதல்

காரணங்கள்

தோல் அரிப்பு தோல் அழற்சியினால் ஏற்படுகிறது. பெரும்பாலான நிலைமைகளில், தோல் அரிப்பு, குறிப்பிட்ட சில உணவுகள் அல்லது மருந்துகளின் ஒவ்வாமை எதிர்விளைவுகளுடன் சம்பந்தப்படுகிறது. தோல் அரிப்புப்பைத் தூண்டும் மிகவும் சாதாரணமான ஒவ்வாமைகள் பின்வருமாறு:

  • மருந்துகள்
  • ஷெல்ஃபிஷ், மீன், கொட்டைகள், முட்டைகள், பால், மற்றும் உணவின் சேர்க்கைகள்
  • மிருக செதில்கள், பூச்சிக் கடிகள், அல்லது மகரந்தம் போன்ற வேறு ஒவ்வாமை ஊக்கிகள்

அரிதாக, தோல் அரிப்பு, கடும் ஒவ்வாமை அதிர்ச்சியின் (அனாஃபிலக்டிக் ஷொக்) பாகமாக இருக்கலாம். இது கடுமையானதாக, மற்றும் சில சமயங்களில் மரணத்தை ஏற்படுத்தும் ஒவ்வாமை எதிர்விளைவாக இருக்கலாம்.

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் அறிகுறிகள் இருந்தால், உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உங்கள் பிள்ளையைச் கொண்டு செல்லவும் அல்லது 9-1-1 ஐ அழைக்கவும்.

  • சுவாசிப்பதில் சிரமம்
  • உணவு ஒவ்வாமையின் காரணமாக வீக்கம், குறிப்பாக முகம், தொண்டை, உதடுகள், மற்றும் நாக்கில் வீக்கம்
  • இரத்த அழுத்தத்தில் அதிவேகமான வீழ்ச்சி
  • மயக்க உணர்வு
  • நினைவிழத்தல்
  • தோல் அரிப்பு
  • தொண்டையில் இறுக்கம்
  • கரகரப்பான குரல்
  • தலை கிறுகிறுப்பு
  • எப்பிநெப்பிரின் இயக்கு நீர் கொடுக்கப்பட்டுள்ளது, எப்பிநெப்பிரின் இயக்கு நீர் கொடுக்கப்பட்டுச் சில மணி நேரங்களுக்குப் பின்னர் திரும்பவும் அறிகுறிகள் தொடங்கலாம்.

மேலதிக தகவல்களுக்கு ஒவ்வாமைகள் ஐப் பார்க்கவும்.

தோல் அரிப்புள்ள உங்கள் பிள்ளைக்கு உதவி செய்ய நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்

உங்கள் பிள்ளைக்குத் தொடர்ந்து தோல் அரிப்பு ஏற்பட்டால், அந்த நிகழ்வுக்கு ஒரு குறிப்பிட்ட உணவு, மருந்து, அல்லது இடம் போன்ற ஒரு பொதுவான காரணி இருக்கிறதா என்பதைக் கண்டறிய முயற்சிக்கவும். தோல் அரிப்பை எது தூண்டக்கூடும் என உங்களுக்கு ஏதாவது ஒரு காரணம் தெரிந்தால், உங்கள் அடுத்த சந்திப்பின்போது உங்கள் பிள்ளையின் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளைக்கு தோல் அரிப்பின் தாக்குதல் இருந்தால், நீங்கள் அவனு(ளு)க்கு, வாய்மூலம் உட்கொள்ளும் ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்தைக் கொடுக்கலாம். அது அறிகுறிகளை நிவாரணமடையச் செய்யக்கூடும். உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளர் ஒரு மருந்தை சிபாரிசு செய்யலாம். அரிப்பு மறைந்த பின்னர் எவ்வளவு காலத்துக்கு வாய்மூலம் உட்கொள்ளும் ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்தைத் தொடர்ந்து கொடுக்கவேண்டும் என உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் கேட்கவும்.

தோல் அரிப்புள்ள உங்கள் பிள்ளைக்கு, உங்கள் பிள்ளையின் மருத்துவர் பின்வருவனவற்றைச் செய்யலாம்

தோல் அல்லது இரத்தப் பரிசோதனைகளை ஒரு தொடராகச் செய்வதன் மூலம், உங்கள் மருத்துவர் தோல் அரிப்புக்கான காரணத்தைத் தனிப்படுத்தி வைப்பதற்கு உங்களுக்கு உதவி செய்யக்கூடும். தோல் அரிப்பு மிகக் கடுமையாக இருந்தால், அழற்சியைக் குறைப்பதற்காக, உங்கள் மருத்துவர் வாய் மூலம் உட்கொள்ளும் ஒரு கோர்டிகொஸ்ரோயிட் மருந்தையும் மருந்துக் குறிப்பு எழுதித் தரக்கூடும்.

மருத்துவ உதவியை எப்போது நாட வேண்டும்

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் உடனே ஒரு மருத்துவரைச் சந்திக்கவும் அல்லது ஒரு அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்:

  • முகம் அல்லது உதட்டில் வீக்கம் இருக்கிறது
  • சுவாசிப்பதில் ஏதாவது கஷ்டம் இருக்கிறது
  • மயக்கமடைதல்

முக்கிய குறிப்புகள்

  • தோல் அரிப்பு என்பது, தோலில் ஏற்படும் வித்தியாசமான அளவுகளிலுள்ள மேடான, அரிப்புள்ள, சிவப்பு நிற வீக்கங்கள்.
  • தோல் அரிப்பு, கடும் ஒவ்வாமை அதிர்ச்சிக்கான (அனாஃபிலக்டிக் ஷொக்) ஒரு அறிகுறி என நீங்கள் சந்தேகித்தால் உடனே மருத்துவ உதவியை நாடவும்.
  • மருந்துகள், உணவு, அல்லது வேறு ஒவ்வாமை ஊக்கிகளுக்கான ஒவ்வாமை எதிர்விளைவுகள் பெரும்பாலும் தோல் அரிப்பை ஏற்படுத்தும்.
  • பெரும்பாலும் வாய்மூலம் உட்கொள்ளும் ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்து தோல் அரிப்பைக் குறைக்கும்
  • உங்கள் பிள்ளைக்குத் தொடர்ந்து தோல் அரிப்பு நோய் ஏற்பட்டால் உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் ஒரு மருத்துவச் சந்திப்புத் திட்டத்தை ஏற்படுத்தவும்.
Last updated: மே 07 2010