சின்னமுத்து

Measles [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

சின்னம்மை என்பது காய்ச்சல், இருமல், கண்ஜங்டிவிற்றிஸ் மற்றும் தோல் வெடிப்பு ஆகியவை ஏற்பட காரணமாயிருக்கக்கூடிய ஒரு தொற்று நோய். பிள்ளைகளின் சின்னம்மை அறிகுறிகள் மற்றும் சின்னம்மை சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

சின்னமுத்து என்றால் என்ன?

சின்னமுத்து என்பது ஒரு வைரசினால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது பெரும்பாலும் குளிர் காலப் பிற்பகுதியில் அல்லது வசந்த காலத்தில் ஏற்படும். வைரஸ் நோயுள்ள ஒருவர் இருமும்போது அல்லது தும்மும்போது, மாசுபடுத்தப்பட்ட நீர்த் துளிகள், காற்று அல்லது தரையின் மூலமாக அருகிலுள்ள மேற்பரப்புகளுக்குப் பரவுகிறது. உங்கள் பிள்ளை, இந்த நீர்த்துளிகளை சுவாசிப்பதன் மூலம் அல்லது அவற்றைத் தொட்டபின்னர் தனது முகம், வாய், கண்கள், அல்லது காதுகளைத் தொடுவதன்மூலம் இந்த வைரஸால் பீடிக்கப்படலாம்.

சின்னமுத்துக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

சின்னம்மை சொறி சின்னம்மை சொறியுள்ள பிள்ளையின் முண்டப்பகுதி
சின்னம்மைச் சொறி முகத்தில் ஆரம்பித்த உடலில் கீழ்நோக்கி பாதம்வரை பரவும்.

சின்னமுத்துக்கான அறிகுறிகள் பெரும்பாலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் ஒரு காய்ச்சலுடன் தொடங்கும். காய்ச்சலைப் பின்தொடர்ந்து, ஒரு இருமல், மூக்கொழுகுதல், மற்றும் பெரும்பாலும் விழிவெண்படல அழற்சி என்பன ஏற்படும். விழிவெண்படல அழற்சி என்பது கண்ணில் ஏற்படும் ஒரு தொற்றுநோய். சிலவேளைகளில் இது “இளஞ்சிவப்புக் கண்” எனவும் அழைக்கப்படும். ஒரு தோற்படை முகம் மற்றும் மேல் கழுத்தில் தொடங்கி உடலின் கீழே பரவும். பின்பு தோற்படை, முன்னங்கைகள், கைகள், கால்கள், மற்றும் பாதங்களுக்குப் பரவும். ஏறக்குறைய ஐந்து நாட்களின் பின்னர், தோற்படை தோன்றிய அதே ஒழுங்கில் மறைந்துவிடும்.

சின்னமுத்து இலகுவாக மற்றப் பிள்ளைகளுக்குப் பரவும்

சின்னமுத்து மிகவும் விரைவாகத் தொற்றும் ஒரு நோய். அதாவது ஒருவரிலிருந்து மற்றவருக்கு மிகவும் இலகுவாகப் பரவும். பெரும்பாலும், தோற்படை தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்னர் தொடக்கம் தோற்படை மறைந்து 4 நாட்களுக்குப் பின்னர் வரை சின்னமுத்து நோயுள்ளவர்கள் தொற்றிக் கொள்ளும் தன்மையுடையவர்களாயிருப்பார்கள். நோய் எதிர்ப்புத் தொகுதியில் பிரச்சினையுள்ள பிள்ளைகள் அதை விட அதிகமான காலத்துக்கு நோய் தொற்றிக்கொள்ளும் தன்மையுடையவர்களாயிருப்பார்கள். சின்னமுத்து வைரஸ் கிருமி, தொற்றுநோயுள்ளவரின் மூக்கு மற்றும் தொண்டையிலுள்ளை சளியில் வாழும். அவர்கள் தும்மும்போது அல்லது இருமும்போது நீர்த்துளிகள் காற்றில் தெளிக்கப்படும். நீர்த்துளிகள் அருகிலுள்ள மேற்பரப்புகளில் தங்கியிருக்கும்.அங்கிருந்துகொண்டு, இரண்டு மணி நேரங்கள் வரை அவைகளால் வைரஸ் கிருமிகளைப் பரப்பமுடியும்.

ஆபத்துக்கான காரணிகள்

சின்னம்மை சொறியின் அண்மை நிலைக் காட்சி சின்னம்மை சொறியின் அண்மை நிலைக் காட்சி
சின்னம்மை சொறியின் குணாம்சம் சிகப்பு நிற அடையாளங்களாகும்.

பின்வரும் நிலைமைகளில் பிள்ளையால் சின்னமுத்து நோயை அதிகம் பரப்பமுடியும்:

 • உங்கள் பிள்ளைக்கு சின்னமுத்து தடுப்புமருந்து கொடுக்கப்படவில்லை
 • உங்கள் பிள்ளை நோய்த் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளாமல் வேறு நாடுகளுக்குப் பிரயாணம் செய்திருக்கிறான்
 • உங்கள் பிள்ளைக்கு விட்டமின் ஏ குறைபாடு இருக்கிறது.

சிக்கல்கள்

சிக்கல்கள் மிகவும் ஆபத்தானவை. சின்னமுத்து தொற்றுநோயுள்ள சில பிள்ளைகளுக்கு காதுத் தொற்றுநோய், வயிற்றுப்போக்கு, அல்லது மார்பு சளிக்காய்ச்சல் கூட ஏற்படலாம். மிகவும் அரிதாக, சில பிள்ளைகளுக்கு மூளையழற்சி என அழைக்கப்படும் மூளையில் வீக்கமும் ஏற்படும். கடுமையான நிலைமைகளில் மூளையழற்சி, மூளையில் சேதத்தை அல்லது மரணத்தை விளைவிக்கலாம். மரணம் மிக அரிதாகவே சம்பவிக்கும். சின்னமுத்து நோய் ஏற்படும் பெரும்பாலான பிள்ளைகள் நோய்த் தடுப்பு மருந்து கொடுக்கப்படாதவர்கள் அல்லது கனடா நாட்டுக்கு வெளியேயிருந்து வந்தவர்களாயிருப்பார்கள்.

சின்னமுத்து நோய்க்கு மருத்துவர்கள் செய்யக்கூடியவை

உங்கள் பிள்ளையை உடல் பரிசோதனை செய்வதன் மூலம் சின்னமுத்து நோயைக் கண்டறியலாம். மருத்துவர் ஒரு இரத்தப் பரிசோதனை அல்லது மூக்கு அல்லது தொண்டையிலிருந்து வைரஸ் பஞ்சொற்றிச் சோதனை செய்யும்படி கட்டளையிடலாம். உங்கள் பிள்ளைக்கு சின்னமுத்து இருப்பதாக நீங்கள் கருதினால், உங்கள் மருத்துவரைச் சென்று பார்ப்பதற்கு முன்னர் அவருடன் பேசுவது முக்கியம். அதன்மூலம் தொற்றுநோய் மற்றவர்களுக்குப் பரவுவதைத் தடுக்கலாம்.

உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

சின்னமுத்து நோய்க்குக் குறிப்பிடத்தக்க சிகிச்சை எதுவுமில்லை. உங்கள் பிள்ளையைச் சௌகரியமாக வைப்பதன்மூலம் அவனுக்கு ஆதரவளிக்கலாம்.

காய்ச்சலைக் கண்காணித்தல்

காய்ச்சலுக்குச் சிகிச்சையளிப்பதற்கு அசெட்டமினோஃபென் (டைலெனோல் அல்லது டெம்ப்ரா) அல்லது ஐபியூபுரோஃபென் (அட்வில் அல்லது மோட்ரின்) உபயோகப்படுத்தலாம். உங்கள் பிள்ளைக்கு ASA (அசெட்டில்சாலிசிலிக் அசிட் அல்லது ஆஸ்பிரின்) கொடுக்கவேண்டாம்

உங்கள் பிள்ளைக்குப் படுக்கை ஒய்வு மற்றும் உங்கள் பிள்ளையைத் தனிமைப் படுத்துதல்

தோற்படை தொடங்கிய பின்னர் 8 நாட்கள் வரை உங்கள் பிள்ளை பாடசாலைக்கோ அல்லது பகல்நேர பராமரிப்பு நிலையத்துக்கோ செல்லமுடியாது. உங்கள் பிள்ளையின் சின்னமுத்து நோய் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிப் பொது உடல்நலத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்படும். அவர்கள் உங்களுடன் சந்திப்புத் திட்டங்களைச் செய்வார்கள்.

நீராகரங்கள்

உங்கள் பிள்ளைக்கு தண்ணீர் மற்றும் வேறு நீராகாரங்களை அடிக்கடிக் கொடுக்கவும்.

எப்போது மருத்துவ உதவியை நாடவேண்டும்

பின்வரும் நிலைமைகளின் கீழ் உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரை அழைக்கவும்:

 • தோற்படை தொடங்கி 4 நாட்களுக்குப் பின்னரும் உங்கள் பிள்ளையின் காய்ச்சல் குறையவில்லை.
 • உங்கள் பிள்ளையின் இருமல் மோசமாகிக்கொண்டே போகிறது
 • உங்கள் பிள்ளைக்குக் காது வலி ஏற்பட்டிருக்கிறது

பின்வரும் நிலைமைகளின் கீழ் உங்கள் பிள்ளையை உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும் அல்லது தேவைப்பட்டால் 911ஐ அழைக்கவும்:

 • உங்கள் பிள்ளை விரைவாகச் சுவாசிக்கிறான் அல்லது சுவாசிக்கும்போது விடாப்பிடியாக சத்தம் ஏற்படுகிறது.
 • உங்கள் பிள்ளையின் நடத்தை அல்லது உடற் திறமைகளில் மாற்றம், நடமாடுவதில் பிரச்சினைகள், அல்லது வலிப்பு நோய் இருக்கிறது.
 • உங்கள் பிள்ளைக்குக் கடுமையான தலைவலி அல்லது விடாப்பிடியான வாந்தி இருக்கிறது.
 • உங்கள் பிள்ளை நோயாளி போல தோற்றமளிக்கிறான்.

சின்னமுத்து நோயைத் தடுத்தல்

அநேக நாடுகளில் சின்னமுத்து நோய்த் தடுப்புமருந்துகள் இலவசமாகக் கிடைக்கும். சின்னமுத்து நோய்க்குத் தடுப்பு மருந்தாக, பிள்ளைகளுக்கு இரண்டு ஊசி கொடுக்கப்படும். முதல் மருந்து பெரும்பாலும் உங்கள் பிள்ளையின் முதலாவது பிறந்த நாளின் பின்னர் கொடுக்கப்படும். இரண்டாவது மருந்து உங்கள் பிள்ளை பாடசாலைக்குச் செல்லத் தொடங்குவதற்கு முன்பாகக் கொடுக்கப்படும்.

சின்னமுத்து நோய், சின்னமுத்து, கூகைக்கட்டு, மற்றும் ரூபெல்லா (MMR) நோய்களுக்கான தடுப்பு மருந்துடன் உட்படுத்தப்படும். நீங்கள் அல்லது உங்கள் பிள்ளை நோய் எதிர்ப்பு மருந்தை எடுத்திருக்காவிட்டால், MMR நோய்த் தடுப்பு மருந்து பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்கவும்.

உங்கள் பிள்ளைக்குச் சின்னமுத்து-கூகைக்கட்டு-ரூபெல்லா (MMR) தடுப்பு மருந்து இரண்டு வேளை மருந்துகளாக நோயெதிர்ப்புத் திறன் அளிக்கப்பட்டிருக்கவேண்டும். 2 சாத்தியமான கால அட்டவணைகள் இருக்கின்றன. அவை பின்வருமாறு:

 • 12 மாதங்கள் மற்றும் 18 மாதங்கள், அல்லது
 • 15 மாதங்கள் மற்றும் 4 முதல் 6 வருடங்கள்

பெரும்பாலான நிலைமைகளில் நோயெதிர்ப்புத் திறன் உங்கள் பிள்ளையை சின்னமுத்து நோய்க்கெதிராகப் பாதுகாக்கிறது. இது சமுதாயத்தில் சின்னமுத்து நோயின் வெளிப்பாட்டைக் குறைக்கிறது. நோயெதிர்ப்புத் திறன், கடுமையான மார்பு சளிக்காய்ச்சல், நுரையீரல் தொற்றுநோய்கள், மற்றும் மூளை அழற்சி நோய் போன்ற சின்னமுத்து நோயின் சிக்கல்களையும் தடுக்கிறது.

தடுப்பு மருந்தினால் சில பிள்ளைகளுக்கு தோற்படை உண்டாகிறது

சின்னமுத்து நோய்த் தடுப்பு மருந்து கொடுக்கும்போது, சில பிள்ளைகளுக்கு நோயின் இலேசான தாக்கம் உண்டாகிறது. இது சாதாரணமானது. இது சம்பவித்தால், பெரும்பாலும் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட 7 முதல் 10 நாட்களில் ஒரு இளம் சிவப்பு நிறப் படை தோன்றும். இந்தப் படை மூன்று நாட்களுக்கு நீடிக்கும். இந்தக் காலப்பகுதியில் பிள்ளைக்கு இலேசான காய்ச்சல் மற்றும் சிறிய அளவில் மூட்டுவலியும் ஏற்படும். இது உங்களுக்குக் கவலையை உண்டாக்கினால், உங்கள் குடும்ப மருத்துவரை அழைக்கவும்.

நோய்த்தடுப்பு மருந்து முக்கியம்

முன்னேற்றமடைந்த நாடுகளில் நோய்த்தடுப்பு மருந்து, சின்னமுத்து நோயை மிகத் தாழ்ந்த மட்டத்துக்குக் குறைப்பதற்கு உதவி செய்திருக்கிறது. ஆயினும், உலகின் மற்றப் பாகங்களில் சின்னமுத்து நோய் இன்னமும் மிகச் சாதாரணமாகக் காணப்படுகிறது. முன்னேற்றமடைந்துவரும் உலக நாடுகளிலிருந்து வரும் விருந்தினர் மற்றும் வேறு நாடுகளிலிருந்து திரும்பும் மேற்கத்திய நாட்டுப் பிரயாணிகள் அறியாமலேயே, நாட்டுக்குள் இந்த நோயைக் கொண்டுவரக்கூடும்.

இந்தக் காரணத்தின் நிமித்தமாக, நீங்கள், உங்கள் பிள்ளை, மற்றும் குடும்பத்தின் மற்ற அங்கத்தினர் எல்லோரும் சின்னமுத்து நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். மக்கள் நோய்த் தடுப்பு மருந்தினால் பாதுகாக்கப்படாவிட்டால், அது விரைவாகப் பரவலாம்.

உங்கள் பிள்ளைக்கு மருத்துவமனையில் சின்னமுத்து நோய் வந்தால்

சின்னமுத்து நோய் மற்றவர்களுக்குப் பரவாது தடுப்பதற்காக உங்கள் பிள்ளை ஒரு தனி அறையில் வைக்கப்படலாம். உங்கள் பிள்ளையின் சின்னமுத்து நோய்க்கான தோற்படை மறையும்வரை, அவள் விளையாட்டறையைச் சந்திக்கமுடியாது. சின்னமுத்து நோய் தொடங்கிய பின்னர் குறைந்தது 4 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுதல் நீடிக்கலாம். உங்கள் பிள்ளைக்கு நோய் எதிர்ப்புத் தொகுதியில் பிரச்சினை இருந்தால், நோய்க்கான எல்லா அறிகுறிகளும் மறையும்வரை, அவள் தனது அறையில் இருக்கவேண்டி நேரிடலாம்.

விளையாட்டுப் பொருட்கள் மற்றும் விநியோகிக்கும் பொருட்களை, உங்கள் அறைக்குக் கொண்டுவரும்படி, குழந்தை நலவாழ்வு நிபுணரிடம் கேட்கவும். முன்பு சின்னமுத்து நோயால் பாதிக்கப்படாதவர்கள் அல்லது தங்கள் சின்னமுத்து நோய்க்கான தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளாதவர்கள் உங்கள் பிள்ளையின் அறையைச் சந்திக்க வரக்கூடாது. நீங்கள் அல்லது சந்திக்க வந்த எவரேனும் சின்னமுத்து நோய்க்கான அறிகுறிகளால் நோயுற்றால், உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது தாதிக்குத் தெரிவிக்கவும்.

முன்னேற்றமடைந்த நாடுகளில் சின்னமுத்து நோய் அரிதாக இருக்கிறது

உயர்ந்த விகித நோய்த்தடுப்பு மருந்து கிடைப்பதன் காரணமாக, கனடா போன்ற நாடுகளில் சின்னமுத்து நோய் மிகவும் சாதாரணமாகப் பரவாது. ஆயினும், உலகம் முழுவதிலும், ஒவ்வொரு வருடமும் 4.3 கோடி மக்கள் சின்னமுத்து நோய்த் தொற்றுக்குள்ளாகிறார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் சின்னமுத்து நோயினால் இறக்கிறார்கள்.

முக்கிய குறிப்புகள்

 • சின்னமுத்து நோய் என்பது ஒரு வைரஸினால் ஏற்படும் தொற்றுநோய். இதற்கு குறிப்பிட்ட மருந்து எதுவுமில்லை.
 • பெரும்பாலும், சின்னமுத்து நோய் காய்ச்சல், இருமல், மூளை அழற்சி, மற்றும் தோற்படை என்பனவற்றை ஏற்படுத்தும்.
 • மற்றவர்கள் சின்னமுத்து நோயால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படவேண்டும். சின்னமுத்து நோய் அதிகளவு தொற்றும் தன்மையுள்ளதால் உங்கள் பிள்ளை தனிமைப்படுத்தப்படவேண்டும்.
 • மிகவும் அரிதான நிலைமைகளில் மாத்திரம், சின்னமுத்து நோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கும்.
 • நோய்த் தடுப்பு ஆற்றலினால் சின்னமுத்து நோயைத் தடுக்கலாம்.
 • உங்கள் பிள்ளைக்கு ASA (அசெட்டில்சாலிசிலிக் அசிட் அல்லது ஆஸ்பிரின்) கொடுக்கவேண்டாம்.
Last updated: மே 07 2010