மொன்ரெலூக்கஸ்ற் (Montelukast)

Montelukast [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

மொன்ரெலூக்கஸ்ற் என்ன செய்கிறது, இதை எப்படி உட்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும்.

உங்கள் பிள்ளை மொன்ரெலூக்கஸ்ற் என்ற மருந்தை உட்கொள்ளவேண்டும். மொன்ரெலூக்கஸ்ற் என்ன செய்கிறது, இதை எப்படி உட்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விளக்குகிறது.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

மொன்ரெலூக்கஸ்ற் என்ற மருந்து ஆஸ்துமா நோய் அறிகுறிகளை நிவாரணமடையச் செய்கிறது மற்றும் ஆஸ்துமாப் பாதிப்புகளைத் தடுக்க உதவி செய்கிறது. உடற்பயிற்சி செய்வதினால் உண்டாகும் சுவாசிப்பதில் ஏற்படும் கஷ்டங்களையும் தடை செய்யவும் உபயோகப்படுகிறது. பருவகால ஒவ்வாமைகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காகவும் உங்கள் பிள்ளை மொன்ரெலூக்கஸ்ற் மருந்தை உபயோகிக்கலாம். ஆனால், இது கடுமையான ஆஸ்துமாப் பாதிப்புக்கு உபயோகப்படுத்துவதற்கல்ல.

மொன்ரெலூக்கஸ்ற் மருந்து , ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைகளுக்கான அறிகுறிகளை ஏற்படுத்தும் பொருட்களின் செயற்பாட்டைத் தடைசெய்யும் வேலையைச் செய்கிறது.

மொன்ரெலூக்கஸ்ற் மருந்து அதன் வர்த்தகச் சின்னப் பெயரான, சிங்குலைர்®. என்ற பெயரால் அழைக்கப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மொன்ரெலூக்கஸ்ற் மருந்து ஒரு வில்லை, ஒரு மெல்லும் வில்லை, மற்றும் வாயினால் உட்கொள்ளக்கூடிய குருணை, ஆகிய வடிவங்களில் கிடைக்கிறது.

இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு…

உங்கள் பிள்ளைக்கு மொன்ரெலூக்கஸ்ற் மருந்துக்கு ஏதாவது வழக்கத்துக்கு மாறான அல்லது ஒவ்வாமை எதிர்விளைவுகள் இருந்தால் அவன்(ள்) மொன்ரெலூக்கஸ்ற் மருந்தை உட்கொள்ளக்கூடாது.

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளில் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் இந்த மருந்துடன் முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்:

 • ஃபெனைல்கெரொனூரியா (PKU): ஃபீனைலலனினைக் கொ ண்டிருக்கும் மெல்லும் மாத்திரைகள்
 • ஈரல் நோய்

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை நீங்கள் எப்படிக் கொடுக்கவேண்டும்?

உங்கள் பிள்ளைக்கு மொன்ரெலூக்கஸ்ற் மருந்து கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:

 • இந்த மருந்தை, உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிட்டபடியே சரியாக உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவும்.
 • ஒவ்வொரு நாள் மாலையிலும் அதே சமயத்தில் உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தைக் கொடுக்கவும். உங்கள் பிள்ளையின் மருத்துவர் சொல்லும் வரை அவ்வாறே செய்யவும்.
 • மொன்ரெலூக்கஸ்ற் மருந்தை உணவுடன் அல்லது உணவுடனில்லாமல் உட்கொள்ளலாம்.
 • உங்கள் பிள்ளைக்கு ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் மொன்ரெலூக்கஸ்ற் மருந்தைத் தொடர்ந்து கொடுக்கவும். உங்கள் பிள்ளையின் மருத்துவர் இந்த மருந்தை நிறுத்தும்படி சொல்லும்வரை உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்து கொடுப்பதை நிறுத்தவேண்டாம்.

உங்கள் பிள்ளை வழக்கமாக மொன்ரெலூக்கஸ்ற் மாத்திரைகளை உட்கொள்வதாயிருந்தால், அவை முழுமையாக விழுங்கப்படவேண்டும். அவற்றை உடைக்க வேண்டாம், நசுக்கவேண்டாம், மற்றும் மெல்ல வேண்டாம்.

உங்கள் பிள்ளை மெல்லும் மாத்திரைகள் உட்கொள்பவனா(ளா)க இருந்தால், அவன்(ள்) அவற்றை விழுங்குவதற்கு முன்பு மெல்லப்படவேண்டும்.

உங்கள் பிள்ளை வாய்மூலமாக குறுணை மருந்தை உட்கொள்பவனா(ளா)க இருந்தால், உபயோகிக்கத் தயாராகும்வரை பக்கெட்டைப் பிரிக்கவேண்டாம். உங்கள் பிள்ளைக்கு குறுணை மருந்தை உட்கொள்ளக்கொடுப்பதற்கு அநேக வழிகள் இருக்கின்றன. உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் பொருந்தக்கூடிய மிகச் சிறந்த வழியைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பின்வரும் வழிகளுள் ஒன்றைத் தெரிவு செய்யலாம்:

 • உங்கள் பிள்ளை விழுங்குவதற்காக பக்கெட்டிலுள்ள எல்லாக் குருணை மருந்தையும் அவன(ள)து வாய்க்குள் கொட்டிவிடவும், அல்லது
 • குருணை மருந்தை ஒரு கரண்டியில் நேரடியாகக் கொட்டிவிட்டு, பின் உங்கள் பிள்ளையின் வாய்க்குள் கொட்டிவிடவும், அல்லது
 • குளிர்ந்த அல்லது அறை வெப்ப நிலையிலுள்ள, குழந்தை ஃபோர்மூலா, அப்பிள் சோஸ், அல்லது ஐஸ் கிறீம் போன்ற மென்மையான உணவுகளில் ஒரு கரண்டி நிறைய எடுத்து அதனுள் பக்கெட்டிலுள்ள குருணைகள் முழுவதையும் கொட்டிக் கலக்கவும். வேறு எந்த உணவுகள் அல்லது பானங்களுடன் குருணையைக் கலக்கக்கூடாது. ஆனால் உங்கள் பிள்ளை குருணையை உட்கொண்டபின்னர் ஏதாவது பானங்களை அருந்தலாம். உங்கள் பிள்ளை கலக்கப்பட்ட குருணைகள் முழுவதையும் உடனேயே (கலந்து வைத்த 15 நிமிடங்களுக்குள்) உட்கொண்டுவிடுவதில் நிச்சயமாயிருங்கள்

குருணை/உணவுக்கலவையை பின்பு பாவிக்கலாமென ஒருபோதும் சேமிக்க வேண்டாம்

உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

 • உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்
 • அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும். அடுத்த வேளைமருந்தை வழக்கமான நேரத்தில் கொடுக்கவும்.
 • ஒரு தவறவிட்ட வேளைமருந்தை ஈடு செய்வதற்காக இரு வேளைமருந்துகளை ஒரே சமயத்தில் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

இந்த மருந்து வேலை செய்யத் தொடங்க எவ்வளவு காலம் செல்லும்?

பெரும்பாலும் இந்த மருந்து வேலை செய்வதற்கு ஒரு நாள் எடுக்கும்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?

உங்கள் பிள்ளை மொன்ரெலூக்கஸ்ற் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:

 • தலைவலி, மயக்கம் போன்ற உணர்வு
 • வயிற்றில் அசௌகரியம்: மலம் தண்ணீர் போல கழிதல், குமட்டல், அல்லது வயிறு வலி
 • களைப்பு, பலவீனம்
 • தொண்டை வலி, இருமல்
 • அசாதாரணமான கனவுகள், நித்திரை செய்வதில் சிக்கல்
 • மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கில் சளியடைத்தல்

பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம்.

பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

 • கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கான அடையாளங்கள்: மூச்சுவிடுவதில் அல்லது விழுங்குவதில் கஷ்டம்; முகத்தில், உதடுகளில், நாக்கில், அல்லது தொண்டையில் வீக்கம்; தோல் அரிப்பு, அல்லது தோல் தடித்தல்
 • ஈரல் பிரச்சினைகளுக்கான அடையாளங்கள்: கடுமையான குமட்டல் மற்றும் வாந்தி, அடிவயிற்றில் வலி, தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல்
 • பின்வரும் அறிகுறிகளின் இணைப்பு தொடர்ந்திருத்தல் அல்லது மோசமாகுதல்: காய்ச்சல் போன்ற அறிகுறிகள், ஊசியால் குத்துவது போன்ற உணர்ச்சி அல்லது முன்னங்கைகள் அல்லது கால்கள் மரத்துப்போதல், சைனஸ் வலி அல்லது வீக்கம், மூட்டு வலி

உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்?

திடீர்த் தாக்குதல் ஆஸ்துமா அறிகுறிகளுக்கு மொன்ரெலூக்கஸ்ற் மருந்தை உபயோகிக்கவேண்டாம். ஆஸ்துமா தாக்குதல்களின் அறிகுறிகளுக்கு எப்படிச் சிகிச்சையளிக்க வேண்டும் என்பது பற்றி உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் பேசவும். உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா அறிகுறிகள் மோசமாகிக்கொண்டே போனால் அல்லது உங்கள் பிள்ளைக்கு ஆஸ்துமா தாக்குதல்கள் மிகவும் அடிக்கடி ஏற்பட்டால், உங்கள் மருத்துவரை அழைப்பதற்கு நிச்சயமாயிருங்கள்.

உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள் கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும். மருத்துவரின் மருந்துக் குறிப்பில்லாது வாங்கக்கூடிய மருந்துகளாயிருப்பினும் கூட அவ்வாறு செய்யவும்.

மொன்ரெலூக்கஸ்ற் மருந்துடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாத சில மருந்துகள் இருக்கின்றன. அல்லது சில சமயங்களில் மொன்ரெலூக்கஸ்ற் மருந்து அல்லது வேறு மருந்துகளின் அளவு சரிசெய்யப்பட வேண்டியிருக்கலாம். உங்கள் பிள்ளை பின்வருவன உட்பட வேறு மருந்துகள் உட்கொள்வதாக இருந்தால் , அதை உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் தெரிவிப்பது முக்கியம்:

 • ஃபினொபர்பிற்றல்
 • ரிஃபம்பின்

உங்கள் பிள்ளைக்கு ஃபெனைல்கெரொனூரியா(PKU) இருந்தால், மொன்ரெலூக்கஸ்ற் மருந்தின் மெல்லும் மாத்திரை வடிவத்தை உபயோகிக்கவேண்டாம். வழக்கமான மாத்திரை உபயோகிக்கப்படலாம்.

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?

வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்கள் வரை நீடிக்கக்கூடிய, போதியளவு மொன்ரெலூக்கஸ்ற் மருந்தை எப்போது கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருங்கள். உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்.

மொன்ரெலூக்கஸ்ற் மருந்துகளை அறை வெப்பநிலையில், குளிரான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் வைக்கவேண்டாம்.

உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

உங்கள் பிள்ளை உட்கொள்ளும் எல்லா மருந்துகளின் பட்டியலையும் வைத்துக்கொள்ளவும் மற்றும் அதை மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் காண்பிக்கவும்.

மொன்ரெலூக்கஸ்ற் மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பாதுகாப்பான இடத்தில் பூட்டி வைக்கவும். உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான மொன்ரெலூக்கஸ்ற் மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

 • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
 • நீங்கள் ஒன்டாரியோவில் வேறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
 • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது மொன்ரெலூக்கஸ்ற் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. மொன்ரெலூக்கஸ்ற் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: ஜனவரி 31 2010