விரை இறக்கும் அறுவை மருத்துவம்: கீழிறங்கா ஆண்விதைகளுக்கான அறுவைச் சிகிச்சை

Orchidopexy: Surgery for undescended testicles [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

ஆண் விதையை விதை பைக்குள் கீழிறக்கும் அறுவை சிகிச்சை என்பது கீழிறங்கா ஆண்விதைகளுக்கான ஒரு அறுவை மருத்துவம்.

கீழிறங்கா ஆண்விதைகள் என்றால் என்ன?

வழக்கமாக, ஆண் குழந்தை பிறப்பதற்குமுன், ஆண்விதைகள் விதைப்பைக்குள் (ஆண்விதைகளைக் கொண்டிருக்கும் பை) இறங்கும். இருந்தாலும், சிலவேளைகளில், ஆண்விதைகளில் ஒன்று அல்லது இரண்டும் விதைப்பைக்குள் இறங்காது, அதற்குப் பதிலாக, உடலிலுள்ள துவாரத்தினுள் தங்கிவிடும். இது கீழிறங்கா விதைகள் அல்லது கிறிப்டோகிடிசம் என்றழைக்கப்படும். அதாவது "மறைக்கப்பட்ட ஆண்விதைகள்" என்று அர்த்தப்படும்.

மேலுமாகத் தெரிந்து கொள்ள, தயவுசெய்து "கீழிறங்கா ஆண்விதைகள்" என்ற கட்டுரையை வாசித்துப் பார்க்கவும்.

விரை இறக்கும் அறுவை மருத்துவம் என்றால் என்ன?

ஒரு விரை இறக்கும் அறுவை மருத்துவம் என்பது ஆண்விதையை விதைப்பைக்குள் கீழிறக்கும் அறுவைச் சிகிச்சையாகும். உங்கள் மகனுக்கு ஒன்று அல்லது இரண்டு விதைகளிலும் இந்த அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.

அறுவைச் சிகிச்சையின்போது என்ன சம்பவிக்கும்

உங்கள் பிள்ளைக்கு ஒரு பொதுவான மயக்கமருந்து என்றழைக்கப்படும் ஒரு விசேஷ "நித்திரைக்கான மருந்து" கொடுக்கப்படும். இது அவன் அறுவைச் சிகிச்சை நேரம் முழுவதும் நித்திரையாயிருப்பான் என்பதை நிச்சயப்படுத்தும்.

உங்கள் பிள்ளையின் கவடு என்றழைக்கப்படும், காலின் தொடக்கப்பகுதியில் மருத்துவர்கள் ஒரு சிறிய கீறலை(வெட்டு) ஏற்படுத்துவார்கள். அவர்கள் மெதுவாக உங்கள் பையனின் ஆண்விதையை விதைப்பைக்குள் நகர்த்தி வைப்பார்கள். இரண்டு பக்க ஆண்விதைகளும் கீழிறிக்கவேண்டியிருந்தால் , கவட்டின் இரு பக்கங்களிலும், பக்கங்களுக்கு ஒன்றாக இரண்டு கீறல்கள் இருக்கும்.

பெரும்பாலும், ஒவ்வொரு பக்க ஆண்விதை அறுவைச் சிகிச்சைசெய்வதற்கு ஒரு மணி நேரம் எடுக்கலாம்.

வழக்கமாக, விரை இறக்கும் அறுவை மருத்துவம் ஒரு வெளி-நோயாளருக்கான அறுவைச் சிகிச்சையாகும். அதாவது, உங்கள் பிள்ளை மருத்துவமனைக்கு வரும் தினத்திலேயே அறுவைச் சிகிச்சை செய்யப்படும். உங்கள் மகன் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் விழித்தெழும்புவதற்காக சில மணிநேரங்கள் மருத்துவமனையில் செலவிட வேண்டியிருக்கும். உங்கள் மகன் பெரும்பாலும் அறுவைச் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பலாம். அவன் இரவில் மருத்துவமனையில் தங்கவேண்டியதில்லை.

அறுவைச் சிகிச்சைக்குப்பின் உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

வலி நிவாரணி

உங்கள் மகன் அறுவைச் சிகிச்சைக்குப்பின் சில நாட்களுக்கு கவட்டில் புண் வலியை உணரலாம். உங்கள் பிள்ளையின் மருத்துவர் வலிநிவாரணியாக கோடீன் மருந்தை எழுதிக் கொடுக்கலாம். உங்கள் பிள்ளைக்கு வலிநிவாரணியாக, அசெட்டமினோஃபென் (டைலெனோல்) அல்லது ஐபியூபுரோஃபென் என்பனவும் கொடுக்கப்படலாம். உங்கள் மருத்துவர் உங்களுக்குக்குச் சொன்னபடியே அவனுக்கு மருந்தைக் கொடுங்கள்.

உங்கள் பிள்ளை வலியில் இருப்பதற்கான அறிகுறிகள்

பெரும்பாலும், வளர்ந்த பிள்ளைகள் அவர்களுக்கு வலி இருப்பதை உங்களுக்குச் சொல்வார்கள். சிறு குழந்தைகளுக்கு வலி இருப்பதற்கான பின்வரும் அறிகுறிகள் இருக்கின்றனவா என்று அவதானித்துப் பாருங்கள்:

 • அதிக தொந்தரவு செய்தல்
 • வியர்த்தல் அதிகரிப்பு
 • தோல் நிறம் வெளிறுதல்
 • நடக்க மறுத்தல் அல்லது நடக்கக் கஷ்டப்படுதல்
 • வழக்கத்துக்கு மாறான அமைதி

தையல்களைப் பராமரித்தல்

உங்கள் மகனின் உடலில் கீறப்பட்ட பகுதி அல்லது பகுதிகளில் பன்டேஜ் இடப்பட்டிருக்கும். இந்த பன்டேஜுகள் தையல்களை மூடியிருக்கும். பன்டேஜில் சிறிதளவு இரத்தம் காணப்படும். இது சாதாரணமானது. இரத்தக் கசிவு படிப்படியாக நின்றுவிடும்.

சில நாட்களின் பின், குளியல் தொட்டியில் நனைத்து பன்டேஜுகளை நீங்கள் அகற்றலாம்.

பன்டேஜ் அகற்றியவுடன், கீறல் காயம் உள்ள பகுதியை ஒரு நாளில் இரண்டு முறை சுத்தம் செய்யுங்கள். இதை எப்படி செய்வது என்று தாதி உங்களுக்கு அறிவுரை வழங்குவார்.

 • ஒரு சுத்தமான ஈரத் துணியால், கீறல் காயம் உள்ள பகுதியை மெதுவாக ஒற்றித் துடைத்துச் சுத்தமாக்கவும்.
 • ஒரு வாரத்துக்கு, பொலிஸ்ப்போரின் போன்ற அன்டிபையோடிக் பூசுமருந்தை தையல்களின்மேல் மெதுவாகத் தடவவும். அன்டிபையோடிக் பூசு மருந்து என்பது கிருமிகளைக் கொல்லக்கூடிய ஒரு விசேஷ கிறீம் ஆகும். அன்டிபையோடிக் கிறீம்களை நீங்கள் மருந்துக்குறிப்பு இல்லாமலேயே மருந்துக் கடைகளில் வாங்கலாம்.
 • தையல்கள் தாமாகவே விழுந்துவிடும். ஆகவே அவற்றை அகற்றவேண்டிய அவசியமில்லை.

உங்கள் பிள்ளை இன்னும் டயபர் அணிபவனாயிருந்தால், அவை ஈரமாகும்போது நீங்கள் அவற்றை மாற்றவேண்டும். ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்களுக்கு டயபரைஅணிவிக்காது விட்டு விடுங்கள். உங்கள் பிள்ளை வளர்ந்தவனாக இருந்தால், அவன் தனது வழக்கமான உணவை உண்ணலாம். உங்கள் பிள்ளை ஒவ்வொரு நாளும் மலங்கழிக்க வேண்டும்.

உங்கள் பிள்ளைக்கு மருத்துவமனையில் மருத்துவ சோதனை செய்யப்படவேண்டும்

உங்கள் மகன் தேறி வருகிறான் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக மருத்துவமனை பணியாட்கள் அவனுக்கு ஒரு மருத்துவமனை சந்திப்புத் திட்டத்தை ஏற்படுத்தித் தருவார்கள். உங்களுக்கு ஒரு சந்திப்புத் திட்டம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்றால், கேட்டுப் பெற்றுக்கொள்ளவும்.

உங்கள் பிள்ளையின் நடவடிக்கைகள்

உங்கள் பிள்ளையின் மருத்துவமனை சந்திப்புத் திட்டத்திற்குப்பின்பு வரை அவன், கீறல் காயத்தைப் பாதிக்கக்கூடிய குறிப்பிட்ட சில நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவேண்டும். அவை பின்வருவனவற்றை உட்படுத்தும்:

 • தீவிரமான நடவடிக்கைகள்
 • கால் பந்து அல்லது ஹொக்கி போன்ற மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடிய போட்டி விளையாட்டுக்கள்
 • சைக்கிள் ஓட்டுதல்

சில வாரங்களுக்குப்பின், உங்கள் பிள்ளை தன் வழக்கமான பௌதீக நடவடிக்கைகளுக்குத் திரும்பலாம்.

பிரச்சினைகள் எதுவுமில்லை என்பதை உறுதி செய்தல்

பெரும்பாலான பிள்ளைகளுக்கு, அறுவைச் சிகிச்சையின் பின்னர் நிவாரணமடைவதில் எந்தப் பிரச்சினையுமிருக்காது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் உங்கள் பிள்ளையின் விதைப்பை வீங்கலாம் அல்லது நசுக்குக் காயமடைந்திருக்கலாம். இது சில நாட்களின் பின்னர் சரியாகிவிடும். சில பிள்ளைகளுக்கு விதைப்பையில் அல்லது மருத்துவர் அறுவைச் சிகிச்சைக்காகக் கீறிய இடத்தில் தொற்றுநோய் உண்டாகலாம். உங்கள் பிள்ளைக்கு பின்வரும் அறிகுறிகளுக்குள் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளிருந்தால் அவனுக்குத் தொற்றுநோய் இருக்கலாம்:

 • கீறப்பட்ட காயத்தில் வலி அதிகரிப்பு
 • கீறப்பட்ட காயம் சிவப்பாக இருத்தல்
 • கீறப்பட்ட காயத்தில் வீக்கம்
 • கீறப்பட்ட காயத்தில் திரவக் கசிவு
 • காய்ச்சல் 38.5℃ க்கு மேற்பட்டிருக்கிறது
 • வாந்தி
 • வயிற்றுவலி அல்லது வயிற்றுக்குத்து
 • பசியின்மை
 • களைப்பு அல்லது சக்தியின்மை

உங்கள் பிள்ளைக்கு இவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரைச் சந்திக்கவும்.

சிலவேளைகளில், அறுவைச் சிகிச்சைக்குப்பின்னர், ஒரு ஆண்விதை முறுக்கப்பட்டிருக்கலாம் அல்லது திரும்பவும் மேலெழுந்திருக்கலாம். பின்வரும் அறிகுறிகளுக்குள் ஏதாவது ஒன்றிருந்தால், உங்கள் பிள்ளை மருத்துவரை உடனே சந்திக்கவேண்டும்:

 • கடுமையான வலி அல்லது வீக்கம்
 • சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது சிறுநீர் கழிக்கமுடியவில்லை.

உங்கள் பிள்ளையின் ஆண்விதை முறுக்கப்பட்டிருக்கிறது அல்லது திரும்பவும் மேலெழுந்திருக்கிறது என்பது பற்றி நீங்கள் கவலையடைந்தால், மருத்துவமனையை அழைத்து, கடமையிலிருக்கும் அறுவைச் சிகிச்சை மருத்துவருடன் பேசவும்.

பிரச்சினை இருக்கிறது என்று நீங்கள் சந்தேகித்தால்

ஏதாவது பிரச்சினை இருக்கிறது என்று நீங்கள் சந்தேகித்தால் மருத்துவருடன் பேசவும். உங்கள் பிள்ளையின் அறுவைச் சிகிச்சையை செய்த அறுவைச் சிகிச்சை மருத்துவரை அழைக்கவும்.

முக்கிய குறிப்புகள்

 • விரை இறக்கும் அறுவை மருத்துவம் என்பது கீழிறங்கா ஆண்விதைகளுக்காகச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சையாகும்.
 • பெரும்பாலும் இந்த அறுவைச் சிகிச்சைக்குப்பின் மருத்துவமனையில் இரவு தங்கவேண்டிய தேவையில்லை.
 • அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் சில நாட்களுக்கு , ஆண்பிள்ளைகள் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
 • பெற்றோர்கள், கீறல்காயம் உள்ள பகுதியை சுத்தம் செய்து பன்டேஜ் மாற்றவேண்டும்.
Last updated: நவம்பர் 10 2009