சல்மெட்டெரோல் (Salmeterol)

Salmeterol [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead.

உங்கள் பிள்ளை சல்மெட்டரோல் என்றழைக்கப்படும் ஒரு மருந்தை உட்கொள்ளவேண்டும். சல்மெட்டரோல் என்ன செய்கிறது, இதை எப்படி உட்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள்

உங்கள் பிள்ளை சல்மெட்டரோல் என்றழைக்கப்படும் ஒரு மருந்தை உட்கொள்ளவேண்டும். சல்மெட்டரோல் என்ன செய்கிறது, இதை எப்படி உட்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விளக்குகிறது.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

சல்மெட்டரோல் என்பது, நுரையீரலிலுள்ள சிறிய காற்று செல்லும் பாதைகளைத் திறக்கும் ஒரு மருந்து. இது உங்கள் பிள்ளையின் சுவாசத்தை இலகுவாக்குகிறது.

சல்மெட்டரோல் மருந்து ஒரு நீண்ட செயற்பாடுள்ள மூச்சுக் குழாய்த் தளர்த்தி என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இது ஒரு விரைவான செயற்பாடுள்ள நிவாரணி மற்றும் தடுப்பு மருந்துடன் உபயோகிக்கபடுகிறது. இது தடுப்பு மருந்துக்கு அல்லது நிவாரணி மருந்துக்கு மாற்றீடாகாது.

உங்கள் பிள்ளைக்கு ஆஸ்துமாவுக்கான எச்சரிக்கை அறிகுறிகள் இருந்தால், விரைவான செயற்பாடுள்ள நிவாரணி மருந்து கொடுக்கப்படவேண்டும். சல்மெட்டரோல் மருந்து ஒரு தீடீர் ஆஸ்துமா தாக்குதலுக்கு நிவாரணமளிக்காது அல்லது அதை நிறுத்தாது.

சல்மெட்டரோல் மருந்து விரைவான சுவாசம் மற்றும் உடற்பயிற்சி செய்யும்போது மூச்சிரைப்பு என்பனவற்றையும் தடுக்க உதவும்.

சல்மெட்டரோல் மருந்து அதன் வர்த்தகச் சின்னப் பெயரான செரெவென்ட்® என்பதால் அழைக்கப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சல்மெட்டரோல் மருந்து ஒரு மூச்சிழுப்பு உலர் பொடியாகக் கிடைக்கும் (டிஸ்கஸ் அல்லது டிஸ்ஹேலர்). சில மருந்துகள், அட்வைர்® போன்ற ஒரு தனி கருவியில், சல்மெட்டரோலை, கோர்டிகொஸ்டேரொயிடுடன் கலந்து வழங்குகின்றன.

இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு...

உங்கள் பிள்ளைக்கு சல்மெட்டரோல் மருந்துக்கு அல்லது இந்த மூச்சு உள்ளிழுப்பின் வேறு ஏதாவது கலவைக்கு ஒவ்வாமை இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளில் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் இந்த மருந்துடன் முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்:

 • இதய அல்லது இரத்தக்குழாய் நோய்
 • தைரோயிடுக்கான அளவுக்கதிகமான சுறுசுறுப்பு ( ஹைப்பர்தைரோயிட்)
 • உயர் இரத்த அழுத்தம் ( ஹைப்பர்டென்ஷன்)
 • மிக விரைவான நாடித்துடிப்பு உட்பட ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அல்லது ஒழுங்கற்ற இதயச் சீர் துடிப்பு

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை நீங்கள் எப்படிக் கொடுக்கவேண்டும்?

 • உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை, உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிட்டபடி சரியாகக் கொடுக்கவும்.
 • நீங்கள் மருந்தின் அளவை மாற்றுவதற்கு அல்லது சல்மெட்டரோல் மருந்தை நிறுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளருக்குத் தெரிவிக்கவும்.
 • சல்மெட்டரோல் மருந்தை உங்கள் பிள்ளை வாயால் சுவாசிக்கச் செய்யவும்.
 • உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை எப்படிக் கொடுப்பது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் மருந்தாளர் அல்லது ஆஸ்துமா மருத்துவமனையிலிருக்கும் தாதியிடம் அதைக் காண்பிக்கும்படி கேட்கவும்.
 • உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் (குறைந்தது 12 மணி நேர இடைவெளியில்) கொடுக்கவும்.
 • சல்மெட்டரோல் மருந்தை ஒரு நாளைக்கு இரு முறைகளுக்கு மேல் உபயோகிக்கக்கூடாது. அளவுக்கதிகமாக உபயோகிப்பது, விரைவான இதயத் துடிப்பு போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
 • உங்கள் பிள்ளை சல்மெட்டரோல் மருந்தை, ஒரு தடுப்பு மருந்துடன் (உங்கள் பிள்ளை அட்வைர் உபயோகித்தாலேயன்றி) உபயோகிப்பவனா(ளா)க இருந்தால், சல்மெட்டரோல் மருந்தை முதலில் உபயயோகிக்கவும். சல்மெட்டரோல் மருந்து காற்றுக் குழாய்களைத் திறக்கும். அவை தடுப்பு மருந்தை நுரையீரலினுள் ஆழமாகவும் நன்றாகவும் உட்செல்ல அனுமதிக்கும்.
 • சல்மெட்டரோல் மருந்து மற்றும் தடுப்பு மருந்து கொடுப்பதற்கு இடையே 5 நிமிடங்கள் காத்திருக்கவும். 5 நிமிடங்கள் காத்திருப்பது காற்றுக் குழாய்களைப் போதியளவு திறக்கப்படச் செய்யும். அதன் மூலம் தடுப்பு மருந்து மேலும் நன்றாக உறிஞ்சப்படும்.
 • உங்கள் பிள்ளைக்கு உடற்பயிற்சியினால் தூண்டப்படும் ஆஸ்துமா நோயிருந்தால், விளையாட அல்லது உடற்பயிற்சி செய்யப்போவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பாக சல்மெட்டரோல் மருந்தைக் கொடுக்கவும்.

உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

 • உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்.
 • அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும். அடுத்த வேளைமருந்தை சரியான நேரத்தில் கொடுக்கவும்.
 • தவறவிட்ட வேளைமருந்தை ஈடு செய்வதற்காக இரு வேளைமருந்துகளை ஒரே சமயத்தில் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

இந்த மருந்து வேலை செய்யத் தொடங்க எவ்வளவு காலம் செல்லும்?

உங்கள் பிள்ளை சல்மெட்டரோல் மருந்தை உட்கொள்ளத் தொடங்கிய பின்னர் விரைவில் நிவாரணமடையத் தொடங்குவான். முழுமையான பலனைக் காண்பதற்குப் பல மணி நேரங்கள் செல்லலாம்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?

உங்கள் பிள்ளை சல்மெட்டரோல் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:

 • தலைவலி
 • பதற்றமாக உணருதல், பரபரப்பு மற்றும் /அல்லது நடுக்கம்
 • வாய் உலர்தல்
 • தொண்டை வலி மற்றும் இருமல்
 • விரைவான இதயத் துடிப்பு

பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

 • பின்வருவன உட்பட, உங்கள் பிள்ளை உயிரை அச்சுறுத்தும் எதிர்விளைவுகளைக் காண்பித்தால்: மூச்சிரைப்பு, மார்பு இறுக்கம், காய்ச்சல், அரிப்பு, மோசமான இருமல், தோல் நீல நிறமாக மாறுதல், முகத்தில், உதடுகளில், நாக்கில், அல்லது தொண்டையில் வீக்கம்; அல்லது வேறு வழக்கத்துக்கு மாறான செயல்களைக் காண்பித்தல்.
 • உங்கள் பிள்ளையால் சுவாசிப்பதில் ஏற்பட்ட தாக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாவிட்டால்.
 • கடுமையான மயக்க உணர்வைக் காண்பித்தல் அல்லது மயக்கமடைதல்.

உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்?

மருத்துவமனையில் அல்லது மருத்துவரின் அலுவலகத்தில் எல்லா மருத்துவமனைச் சந்திப்புத் திட்டங்களுக்கும் ஆஜராகவும். அதன் மூலம் மருத்துவர், உங்கள் பிள்ளையின் சல்மெட்டரோல் மருந்துக்கான பிரதிபலிப்புகளைப் பரிசோதிக்கமுடியும். உங்கள் பிள்ளை சரியான அளவு மருந்தைப் பெற்றுக்கொள்வதற்காக மருத்துவர் மருந்தின் வேளை அளவை மாற்றக்கூடும்.

பின்வரும் எச்சரிக்கை அடையாளங்கள், உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோய் மோசமாகிக்கொண்டே போகிறது மற்றும் உங்கள் பிள்ளை மருத்துவரைச் சந்திக்கவேண்டும் என்பதைக் காட்டுகிறது:

 • இருமல், மூச்சிரைப்புத் தாக்கம், மார்பு இறுகுதல், அல்லது கடுமையான மூச்சு விட இயலாமை போன்ற அறிகுறிகள் மோசமாகிக்கொண்டே போகிறது அல்லது மேலும் அடிக்கடி சம்பவிக்கிறது.
 • நிவாரண மருந்தை உட்கொண்ட பின்னர் நிவாரணம் 3 மணி நேரத்துக்கும் குறைவாக நீடிக்கிறது
 • உங்கள் பிள்ளை மார்பு இறுக்கம், மூச்சிரைப்பினால், அல்லது விரைவான சுவாசத்தினால் இரவில் விழித்தெழும்புகிறான்(ள்).
 • உங்கள் பிள்ளை ஆஸ்துமா நோயின் காரணத்தால் பாடசாலை மற்றும் வேறு நடவடிக்கைகளைத் தவறவிடுகிறாள்.

உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை அல்லது இயற்கை மருந்துப் பொருட்கள்) கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும்.

வேறு என்ன முக்கிய தகவலை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்?

உங்கள் பிள்ளை உட்கொள்ளும் எல்லா மருந்துகளின் பட்டியலையும் வைத்துக்கொள்ளவும் மற்றும் அதை மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் காண்பிக்கவும்.

உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்கள் வரை நீடிக்கக்கூடிய, போதியளவு சல்மெட்டரோல் மருந்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருங்கள். உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்.

சல்மெட்டரோல் மருந்துகளை அறை வெப்பநிலையில், குளிரான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் வைக்கவேண்டாம்.

காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான சல்மெட்டரோல் மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

 • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
 • நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
 • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது சல்மெட்டரோல் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. சல்மெட்டரோல் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: ஜனவரி 31 2010