தாய்ப்பாலூட்டுதல்

Breastfeeding [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

தாய்ப்பாலூட்டுதல் மற்றும் தாய்ப் பால் ஆகியவற்றுடன் தொடர்பான பல்வேறு பலன்களைப் பற்றியும் தாய்ப்பாலூட்டும் நிலைகள் மற்றும் எவ்வாறு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்

தாய்ப்பால் குழந்தைகளுக்குப் பூரணமான உணவு ஆகும். குழந்தையின் வாழ்க்கையின் முதல் ஆறு மாதங்களுத் தாய்ப்பாலூட்டுதல் பரிந்துரை செய்யப்படுகிறது. ஆறு மாதங்களுக்குப் பின்னர் துணை திட உணவுகளுடன் சேர்த்து, தாய்ப்பாலூட்டுதலும் பரிந்துரை செய்யப்படுகிறது. தாய்ப்பால் உங்கள் குழந்தைக்குத் தேவையான சரியான ஊட்டச்சத்தின் சமநிலையைக் கொண்டிருப்பது மாத்திரமல்ல, வளர்ச்சிக்கான காரணிகள், நோய் எதிர்ப்புப் பொருட்கள், மற்றும் உங்கள் குழந்தையின் வாழ்நாட்கள் முழுவதும் அவனைத் தொற்றுநோய் மற்றும் வேறு நோய்களிலிருந்து காப்பாற்றும் நுட்பத்தையும் கொண்டிருக்கிறது.

தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகளுக்கு நோய்கள், தொற்றுநோய்கள், ஒவ்வாமைகள், மற்றும் உடற்பருமனடைவதற்கான ஆபத்து என்பன, ஃபோர்மூலா உணவு ஊட்டப்பட்ட குழந்தைகளை விட குறைந்தளவில் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். தாய்ப்பாலூட்டுதல் சௌகரியமானது மற்றும் தடையில்லாதது. அத்துடன் தாய்மார்களையும் குழந்தைகளையும் அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களைப் பந்தப்படுத்துகிறது. ஒரு நம்பிக்கையுள்ள பலமான உறவைக் கட்டுகிறது.

எல்லாக் குழந்தைகளுக்கும் மனிதத் தாய்ப்பால் தான் மிகச் சிறந்த உணவு எனப் பரிந்துரைக்கப்படுகிறது. எல்லாக் குழந்தைகளுக்கும் தாய்ப்பாலூட்டப்படவேண்டும்.

ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மாத்திரம் ஊட்டுவதுதான் சிசுக்களுக்கு உணவூட்டுவதற்கு மிகவும் சாதகமான வழியாகும். அதன்பின், சிசுக்கள் இரண்டு வயது வரை அல்லது அதற்கு மேலாக, தொடர்ச்சியான தாய்ப்பாலுட்டுதலுடன் சேர்த்து உப உணவுகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

[உலக நல அமைப்பு, 2001. சிசு மற்றும் குழந்தைக்கு உணவூட்டுவதற்கான உலகளாவிய உபாயங்கள். மே 9, 2001 இல் நடைபெற்ற ஐம்பத்திநான்காவது உலக நல மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம்.]

எப்போது மற்றும் எவ்வளவு நேரத்துக்குத் தாய்ப்பாலூட்டவேண்டும்

புதிதாகப் பிறந்த குழந்தைகள், பிறந்து அரை மணி நேரங்களுக்குள், பெரும்பாலும் பிரசவ அறையில் இருக்கும்போதே, தாயின் மார்பை அணுகும்படி உற்சாகப்படுத்தப்படவேண்டும். பிறந்தவுடன், ஒரு சில நிமிடங்களில், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை, உங்கள் மார்புடன் தோலுடன் தோல் தொடும்படியான தொடர்பில் வைக்கப்பட்டால், அவனது கைகளும் கால்களும் தடையில்லாமல் அசைய முடியுமானால், முலையூட்டிகள் தாங்கள் உயிர் வாழ்வதற்காகத் தேடிச் செல்வதைப்போல, உங்கள் முலைக்காம்பை நோக்கி அவனாகவே நகர்ந்து வருவான். உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை உடனேயே முலைக்காம்பை உறிஞ்சுவதற்கு தீர்மானிக்கலாம். அல்லது பெரும்பாலும், முதலில் உங்கள் கண்களை உற்று நோக்குவதில் அக்கறை கொள்ளலாம். உங்கள் மார்பகத்தின் அளவைப் பொறுத்து அல்லது பிரசவம் நடைபெற்ற கால நேரத்தைப் பொறுத்து உங்கள் முலைக்காம்பை எட்டிப்பிடிப்பதற்கு உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு சற்று உதவி தேவைப்படலாம். சிறிதளவு விழிப்பு, சுறுசுறுப்பு, சோம்பல் போன்ற ஒரு சில வித்தியாசமான விழிப்புணர்வு நிலைமைகளைக் கடந்தபின்னர், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை ஆழ்ந்த நித்திரை செய்யலாம். ஒரு சில மணிநேரங்களின் பின்னர் தனது அடுத்த பாலூட்டுதலுக்காக விழித்துக்கொள்வான்.

முதற் சில நாட்களுக்கு உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை அடிக்கடி தாய்ப்பால் குடிப்பான். ஒவ்வொரு ஒன்றரை மணி நேரம் முதல் மூன்று மணிநேரங்களுக்கு ஒரு முறையாக அதிக கனவளவு தாய்ப்பால் சுரக்கும்படி உங்கள் மார்புகளைத் தூண்டுவதற்காக அவ்வாறு செய்வான். உங்கள் குழந்தை, வாயை அசைத்தல் அல்லது தன் கைகளை வாயில் வைத்தல் போன்ற, விழித்திருப்பதற்கான அல்லது பசிக்கான அடையாளங்களைக் காண்பிக்கும்போது, அவன் மார்பில் போடப்படவேண்டும். இது உரிமையுடன் கேட்கும்போது பாலூட்டுதல் அல்லது குறிப்பினால் பாலூட்டுதல் என அழைக்கப்படுகிறது. உங்கள் குழந்தை பலமாக அழத் தொடங்குவதற்கு முன்பாக அவனை உங்கள் மார்பில் போட்டுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் அவன் நிலைகுலைந்திருக்கும்போது அவனால் தாய்ப்பால் குடித்தலில் முழுமையாகக் கவனம் செலுத்தமுடியாது. நன்றாகக் கழுவப்பட்ட உங்கள் கைவிரலைச் சூப்ப வைப்பதன்மூலம் அவனை அமைதிப்படுத்தவும். பின்னர் திரும்பவும் மார்பு அருகே அவனை அரவணைக்கவும். நீங்கள் முதலில் பாலூட்டிய முலையை மறு முறை பாலூட்டும்போது மாற்றி விடவும். முதல் மார்பில் அவன் விரும்பும் காலப்பகுதிவரை பால் குடிக்க அனுமதிக்கவும். அதனால் அதிக கலோரி நிறைந்த கடைசிப் பாலை அவனால் பெற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை முதல் மார்பில் தாய்ப்பாலைக் குடிக்கும்போது அவனது உறிஞ்சும் வேகம் குறையும்போது அல்லது அவன் விழுங்கும் சத்தம் உங்களுக்குக் கேட்காதிருக்கும்போது, அந்த மார்பில் பாலைக் குடித்து முடித்துவிட்டான் என நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் எப்போதும் ஏப்பம் விட வேண்டியதில்லையென்றாலும், உங்கள் குழந்தைக்கு ஒரு சிறிய இடைவேளை கொடுத்து இரண்டாவது மார்பில் பாலூட்டவும். ஒவ்வொரு தாய்ப்பாலூட்டலின்போதும் இரண்டு மார்பையும் உங்கள் குழந்தை உறிஞ்ச அனுமதிப்பது உங்கள் தாய்ப்பால் சுரப்பதை மேம்படுத்தும். அதிகளவு தாய்ப்பால் சுரக்கும் தாய்மார்கள் மாத்திரம் ஒரு முறை தாய்ப்பாலூட்டலுக்கு ஒரு மார்பை மாத்திரமே உபயோகிக்க வேண்டியிருக்கலாம். சீக்கிரமாக வேலைக்குத் திரும்பவும் போக வேண்டிய சில தாய்மார்கள் மாத்திரம் வாரத் தொடக்கத்தில் ஒரு மார்பில் மாத்திரம் தாய்ப்பாலூட்டுவார்கள். குளிரூட்டியில் வைத்துவிடுவதற்காக மற்ற மார்பில் தாய்ப்பாலை பம்பு மூலம் வெளியேற்றுவார்கள். பராமரிப்பாளர் வேலைக்கு வந்ததும் போத்தல் மூலம் குழந்தைக்குத் தொடர்ந்து அந்தத் தாய்ப்பாலை ஊட்டுவார். இது இரட்டைப் பிள்ளைகளுக்கு நீங்கள் தாய்ப்பாலூட்டுகிறீர்கள் என உங்கள் உடலை நினைக்க வைக்கும்.

இயல்புத் தூண்டல் இழப்புமூளைக்கும் மார்பகத்துக்கும் இடையிலான தொடர்பாடலைக் காட்டும் அம்புக்குறிகளுடன் தாயும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தையும்
முலைக் காம்பின் நரம்புகள் தூண்டப்படும்போது ஒக்ஸிடோனின் ஹோர்மோனை விடுவிக்கும்படி ஒரு செய்தி மூளைக்கு அனுப்பப்படுகிறது.  ஒக்ஸிடோனின், பாலை சுரப்பியிலிருந்து கால்வாய்க்குள் வரச் செய்கின்றது. 

ஒரு நல்ல தாய்ப்பால் சுரக்கும் ஆற்றல் சில காரணங்களில் தங்கியுள்ளது. அதில் மிகவும் முக்கியமான காரணி, அடிக்கடி மற்றும் காலக்கிரமப்படி மார்பிலிருந்து தாய்ப்பாலை வெளியேற்றுதல் ஆகும். உங்கள் குழந்தையைப் பற்றி சிந்திக்கும்போது அல்லது அவன் அழும் சத்தத்தைக் கேட்கும்போது உங்கள் மார்புகள் உறுத்துவதை அல்லது தாய்ப்பால் கசிவதை நீங்கள் அவதானிக்கலாம். இது இயல்புத்திறன் அனிச்சைச் செயல் என அழைக்கப்படும். நீங்களும் உங்கள் குழந்தையும் தாய்ப்பாலூட்டுதலில் நன்கு நிலைவரப்படும்வரை போதியளவு நீராகாரங்கள் எடுத்தல் மற்றும் நித்திரை கொள்ளுதல் மூலமும் மன உளைச்சலைக் குறைத்து ஒரு ஒய்வு நிறைந்த சூழலை உருவாக்குவதன் மூலமும் உங்கள் இயல்புத்திறன் அனிச்சையான செயலை அதிகரிக்கலாம். முதற் சில வாரங்களில், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையுடன் நீங்கள் ஒரு தாய்ப்பாலூட்டும் உறவை வளர்க்கும்போது, வேறு வீட்டுவேலைகளான சமையல் செய்தல், சுத்தம் செய்தல், துணி துவைத்தல், மற்றும் கடைகளுக்குச் செல்லுதல் போன்ற வேலைகளில் உதவிசெய்யும்படி, உங்கள் துணைவர் அல்லது நண்பர்களிடம் கேட்கவும். நீங்கள் கஷ்டங்களை அனுபவித்தால், தாய்ப்பாலூட்டும் ஆலோசகர் அல்லது வேறு தாய்ப்பாலூட்டும் நிபுணர்கள், ஒரு தாய்ப்பாலூட்டும் மருத்துவமனை , மற்றும்/அல்லது ஒரு தாய்மார் ஆதரவுக் குழுவை ஆகியவற்றைக் கண்டடைய உங்களுக்கு பிரசவம் நடந்த மருத்துவமனையை அழைக்கவும்.

உங்கள் தாய்ப்பாலூட்டும் மாதிரியை நன்கு நிர்ணயிக்க மற்றும் உங்கள் குழந்தையுடன் ஏதோ ஒருவித நேர அட்டவணை வைத்திருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துகொள்ள மூன்று அல்லது நான்கு வாரங்கள் செல்லலாம். அந்தக் கால அட்டவணை ஒவ்வொரு இரண்டு முதல் நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை தாய்ப்பாலூட்டுவதாயிருக்கலாம். எல்லாக் குழந்தைகளும் வித்தியாசமானவர்கள். மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குப் பின்னர், ஒரே தாய்ப்பாலூட்டலில் உங்கள் குழந்தை மிகவும் பசியாக இருந்து ஒரே சீராகத் தாய்ப்பாலை அவசரமாகக் 10 நிமிடங்களில் குடித்து முடித்துவிடலாம். வேறு தாய்ப்பாலூட்டலின்போது, மெதுவாகவும் அதிக கட்டித் தழுவலுடனும் உங்கள் குழந்தை 30 முதல் 40 நிமிடங்கள் வரை போஷிக்கப்பட வேண்டும். இது தாய்ப்பால் உட்கொள்ளும் அளவை குழந்தை தானாகவே கட்டுப்படுத்தும் முறையாகும். இந்த முறையானது, மேலதிக எடையை அதிகரிக்கச் செய்யும் காரணியான, அளவு குறிக்கப்பட்ட பால் போத்தல் ஊட்டலின்போது அவதானிக்கப்படும் அளவுக்கதிகமான பால் அருந்துதலைத் தவிர்க்கின்றது.

தகுந்த முறையில் குழந்தையின் எடை அதிகரிப்பதற்கு, அவனுக்கு ஒரு நாளில் எட்டுப் பாலூட்டல்கள் தேவைப்படுகின்றன என பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தாய்ப்பாலூட்டுதல் தாமதித்தால் அல்லது ஒரு ஒழுங்கான தாய்ப்பாலூட்டும் சமயத்தில் மார்பு வெறுமையாக்கப்படாவிட்டால், மார்பு நிறைந்துவிடும் மற்றும் அசௌகரியமாக உணரவைக்கும். மார்பில் ஏற்படும் இந்த அழுத்தம் உங்களுக்கு இந்தத் தாய்ப்பால் வேண்டியதில்லை என்ற செய்தியை அனுப்பிவைக்கும் மற்றும் தாய்ப்பாலைச் சுரக்கும் சுரப்பிகள் தாய்ப்பால் சுரத்தலைக் குறைக்கும். எனவே தாய்ப்பால் சுரத்தலில் குறைவு ஏற்படும்.

அரவணைத்தல்

ஒரு வெற்றிகரமான தாய்ப்பாலூட்டுதலுக்கு, தாய் மற்றும் குழந்தை இருவருக்குமே ஒரு சௌகரியமான அரவணைப்பு மிகவும் முக்கியம். இது உங்கள் குழந்தை முடிந்தளவு அதிகமான தாய்ப்பாலைப் பெற்றுக்கொள்கிறான் மற்றும் உங்கள் முலைக்காம்புகள் புண்ணாகாமல் இருப்பதை உறுதிப்படுத்தும்.

உங்கள் நெஞ்சுக்குக் குறுக்காக, அல்லது உங்கள் இடுப்பில் நிமிர்ந்து இருக்குமாறு, அவனது முகம் உங்கள் மார்பை நோக்கியிருக்குமாறு ஒரு சௌகரியமான நிலையில் உங்கள் குழந்தையைத் தூக்கிவைக்கவும். அவனை அரவணைக்கும்போது உங்கள் மார்பை சுயாதீனமாக இருக்கும் உங்கள் கையினால் தாங்கிப் பிடிக்கவும். உங்கள் குழந்தை அரவணைப்பதற்காக தன் வாயை அகலத் திறப்பதற்கு முன்பு உங்கள் குழந்தை ருசி பார்ப்பதற்காக அல்லது நக்குவதற்காகக் கொஞ்சம் முலைப்பாலை வெளியேற்றிவிடவும் அல்லது முலைக்காம்பு வரை கொஞ்சம் பாலை மசாஜ் செய்து விடவும். அவன் வாயை அகலத் திறக்கும்போது அவனை உங்கள் மார்பை நோக்கி விரைவாக மற்றும் நிதானமாகக் கொண்டுவரவும். உங்கள் மார்பை உங்கள் குழந்தையை நோக்கித் தள்ளவேண்டாம். உங்கள் குழந்தையின் நாடி, அரியோலா என்றழைக்கப்படும் மார்பின் கபில நிறப் பகுதியை கீழ் உதட்டால் முடிந்தளவுக்கு மூடியபடி, முதலில் வரும். மேல் உதடு மார்பண்டைக்குக் கடைசியில் வரும்.

உங்கள் குழந்தை முலைக்காம்பை வெறுமனே சூப்பக்கூடாது. ஏனென்றால் இது அசௌகரியம் மற்றும் குறைவான பால் சுரத்தலையும் ஏற்படுத்தும்.

உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிக்கத் தொடங்கியவுடன், உங்கள் மார்பு உள்ளேயும் வெளியேயும் அசைவதை நீங்கள் உணருவீர்கள். உங்கள் குழந்தை தன் மூக்கை உங்கள் மார்பை வெறுமனே தொடும்படியாக வைத்துத் தலையை பின்புறமாக ஓய்வாக வைப்பான். அவனது உதடுகள் மேல் நோக்கியிருக்கும்; அவன் இலகுவாகச் சுவாசிப்பான்.

உங்கள் குழந்தை தகுந்த முறையில் அரவணைக்கப்படாவிட்டால் மற்றும் அசௌகரியம் ஏற்பட்டால், அவனது வாயின் ஓரமாக முரசினூடாக உங்கள் விரலைச் செலுத்தி தாய்ப்பால் உறிஞ்சுவதை நிறுத்தி உங்கள் மார்பிலிருந்து அவனை வெளியே எடுக்கவும். நீங்கள் சௌகரியமாக உணரும்வரை அரவணைக்கும் நிலையையும் அரவணைப்பையும் சரி செய்யவும். தொடக்கத்தில் சில கணங்களுக்கு விரைவான உறிஞ்சுதல் இருக்கும். அதன் பின்பு உங்கள் குழந்தை தாய்ப்பாலை விழுங்கும் சத்தம் உங்களுக்குக் கேட்கும். அதன்பின்னர் அவன் தொடந்து தாய்ப்பால் குடிக்கும்போது உறிஞ்சும் வேகம் குறையத்தொடங்கும்.

தாய்ப்பாலூட்டும் நிலைகள்

தாய்ப்பாலூட்டும்போது நீங்கள் முயற்சி செய்ய விரும்பும் சில உபயோகமான நிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன: தொட்டில் போலத் தூக்கிவைத்திருத்தல், குறுக்குத் தொட்டில் போலத் தூக்கிவைத்திருத்தல், ஃபுட் போள் (நீள் வடிவப் பந்து) போல தூக்கிவைத்திருத்தல், படுத்திருத்தல்.

இடது மார்பகத்தைத் தனது இட து கையால் பிடித்தபடி, குழந்தையைத் தனது உடலுக்குக் குறுக்கே தனது வலது புயத்தால் தாய் பிடித்திருத்தல்

குறுக்குத்-தொட்டில் நிலை

இந்த நிலையில், மார்பானது அதே பக்கக்கையில் பிடிக்கப்பட்டிருக்கின்றது (இடது மார்பு இடது கையால் பிடிக்கப்பட்டிருக்கின்றது). முதன் முதலில் தாய்ப்பாலூட்டப் பழகும்போது அல்லது குழந்தை சின்னதாக இருந்தால் இந்த நிலை நன்கு வேலைசெய்கின்றது. இது குழந்தையின் தலையை நன்கு அசைக்கக்கூடியதாகவும் அத்துடன் குழந்தை தாயை அரவணைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

தன்னுடைய புயத்தின் கீழ் அதே பக்க மார்பகத்துக்கு அருகே குழந்தையை வைத்திருந்தபடி, மற்றக் கையால் அவருடைய மார்பகத்தை தாய் பிடித்தல்

ஃபூட்போள் நிலை

முதன் முதலில் தாய்ப்பாலூட்டப் பழகும்போது அல்லது குழந்தை சின்னதாக இருந்தால் இந்த நிலையும் நன்கு வேலைசெய்கின்றது. உங்களுக்கு பெரிய மார்பகங்கள் இருந்தால், முலைக் காம்புகள் தட்டையானதாக அல்லது புண்பட்டிருந்தாலும் இந்த நிலை பயனளிப்பதாக இருக்கும், அல்லது நீங்கள் கருப்பை மேற்புறத் திறப்பு மூலம் பிரசவித்து, குழந்தையை வயிற்றின் மீது வைக்க முடியாதிருந்தாலும் இந்த நிலை நன்மையளிக்கும்.

குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பக்கத்தில் உள்ள புயத்தினால் குழந்தைக்கு ஆதரவளித்தபடி, மற்றக் கையால் தனது மார்பகத்தைப் பிடித்திருத்தல்

தொட்டில் நிலை

நீங்கள் முலைப் பாலூட்டுவதை செளகரியமாகக் கண்டால் இந்த நிலை நன்மையானதாகும். உங்கள் குழந்தை மடியில் படித்திருந்து அதன் தலையை கைவளைவில் வைத்திருக்க வேண்டும். முலையை எட்டுவதற்கு தலையைத் திருப்ப அவசியமில்லாதவாறு குழந்தையின் மார்பு உங்கள் மார்போடு சேர்ந்திருக்கவேண்டும்.

தாய்ப்பாலூட்டுவதற்காக குழந்தையைப் பார்த்தபடி அவரின் தலைக்குக் கீழாக மேல்பக்கமாக ஒரு கையும் குழந்தையின் மேல் மற்றக் கையும் இருக்கும்படி தாய் பக்கவாட்டில் படுத்திருத்தல்

படுத்திருத்தல

பக்கவாட்டில் படுத்திருந்து, குழந்தை உங்களைப் பார்க்கும் வண்ணம் அவளையும் பக்கவாட்டில் படுக்கவைக்கவும். அவளின் தலை உங்கள் மார்புக்கருகிலிருக்க வேண்டும். இந்த நிலைமை இரவு நேரங்களில் மிகவும் பொருத்தமானது, ஏனென்றால் நீங்களும் உங்கள் குழந்தையும் ஓய்வெடுக்க இது உதவுகிறது. உட்கார்ந்திருப்பதை நீங்கள் சிரமமாகக் கண்டால், பெரிய மார்பகங்கள் இருந்தால், அல்லது கருப்பை மேற்புறத் திறப்பு மூலம் குழந்தையைப் பிரசவித்திருந்தால் இந்த நிலை நன்மையளிக்கும்.

விசேஷ நிலைமைகளின் கீழ் தாய்ப்பாலூட்டுதல்

மார்பு அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தாய்ப்பாலூட்டுதல்

மார்பு விரிவாக்கப்பட்ட பெரும்பாலான நிலைமைகளில், உங்கள் குழந்தைக்கு போதியளவு தாய்ப்பால் சுரக்க மற்றும் கொடுக்கக்கூடிய உங்கள் திறமையில் தாக்கம் ஏதுமில்லை. உங்கள் மார்பு சுருக்கப்பட்டிருந்தால், உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் போதியளவு தாய்ப்பாலை உங்களால் சுரக்க முடியாது. இந்த நிலைமைகளில், மார்பில் மேலதிக பாலுட்டும் கருவியைப் பொருத்தக்கூடிய வழிகளை உங்களுக்குக் காண்பிக்கக்கூடிய தாய்ப்பாலூட்டும் ஆலோசகர் அல்லது தாய்ப்பாலூட்டும் நிபுணரின் உதவியை நாடவும்.

சிசேரியன் அறுவைச்சிகிச்சைக்குப் பின்னர் தாய்ப்பாலூட்டுதல்

சிசேரியன் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர், தாய்ப்பாலூட்டுவதற்காக ஒரு சௌகரியமான நிலையைக் கண்டுபிடிப்பது எப்போதும் இலகுவானதாக இருக்கமுடியாது. சில தாய்மார்கள், ஒரு தலையணையைத் தங்கள் முதுகுக்குப் பின்பாகவும் மற்றொரு தலையணையை மார்பின் உயர மட்டத்துக்குக் குழந்தையை உயர்த்தக்கூடியவாறு தங்கள் பக்கமாகவும் வைத்து படுத்திருந்தபடியே தாய்ப்பாலூட்ட விரும்புவார்கள். மற்றத் தாய்மார்களுக்கு, குழந்தையைத் தாங்குவதற்காகத் தங்கள் அடிவயிற்றின் குறுக்காக ஒரு தலையணையை வைத்து உட்கார்ந்திருக்கும் நிலை கூடுதல் சௌகரியமுள்ளதாக இருக்கிறது. நீங்கள் நேராக இருந்து ஃபுட்போள் பிடிப்பதுபோன்ற நிலையையும் உபயோகிக்கலாம். இந்த நிலையில் உங்கள் குழந்தை உங்களுக்கு அருகில் தலையணையில் அமர்ந்திருப்பான், மற்றும் அவன் உங்கள் மார்பைப் பார்த்தவாறு அதே பக்கக்கையால் அரவனைக்கப்பட்டிருப்பான்.

குறைப் பிரவசக் குழந்தைக்குத் தாய்பாலூட்டுதல்

உங்கள் குறைப்பிரசவக் குழந்தைக்கு மார்பை முதன்முதல் அறிமுகம் செய்வதற்காக, அவனது தலையை நன்கு தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும்வரையில், உங்கள் குழந்தையின் மார்புக்குக் குறுக்காகவும் உங்கள் மார்பை நோக்கும்படியாகப் பிடிக்கலாம் அல்லது உங்கள் மார்பை நேரடியாக நோக்கியவாறு செங்குத்தாகக் ஃபுட்போள் போல தூக்கிப் பிடிக்கலாம். குறைப்பிரசவக் குழந்தைகள், நிறைமாதக் குழந்தைகளைப்போல மார்புக்காம்பின் முனையிலிருந்து தாய்ப்பாலை நக்கிக் குடிக்க முயற்சிப்பார்கள். உங்கள் முலைக்காம்பின் அளவைப் பொறுத்து, உங்கள் குழந்தை வளரும்வரை பல வாரங்களுக்கு அவனால் உங்கள் மார்பை அரவணைக்கமுடியாது. ஆனால் அவனது தாயின் வெப்பம், இதயத் துடிப்பு, மற்றும் முலைப்பாலின் சுவை என்பன அவன் உங்கள் மார்பை அரவணைக்கும் செயற்பாட்டை இலகுவாக்கும்.

இரட்டைக் குழந்தைகளுக்குத் தாய்பாலூட்டுதல்

இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் பால் கொடுப்பதற்கு, இரு குழந்தைகளையும் ஃபுட்போள் போல தூக்கிவைத்திருப்பதுதான் இலகுவான வழியாகும். ஒவ்வொரு குழந்தையையும் தாங்கிப்பிடிப்பதற்குச் சில தலையணைகளை ஆதாரமாக வைக்கவும். அது சமயத்துக்கு ஒரு குழந்தையாகத் தாங்கிப்பிடிப்பதற்கு ஓரு கையைத் தளர்வாக்க உங்களுக்கு உதவும். ஒரு குழந்தை மற்றக் குழந்தையைவிட விரைவாகப் பாலை உறிஞ்சினால், அவர்கள் எந்த மார்பைத் தெரிவுசெய்யவிரும்புகிறார்கள் எனத் தீர்மானிக்கும்வரை இரண்டு மார்புகளிலும் நல்ல பால்சுரத்தலைக் கொண்டிருப்பதற்காக, இரண்டு மார்புகளிலும் மாறி மாறிப் பாலூட்டவும்.

உங்கள் குழந்தைக்குப் போதியளவு தாய்ப்பால் எப்போது கிடைக்கிறது எனத் தெரிந்துகொள்ளுதல்

அநேக பாலூட்டும் தாய்மார்கள், விசேஷமாக முதல் வாரத்தில் அல்லது அதன் பின்னர், புதிதாகப் பிறந்த தங்கள் குழந்தை, தான் பிறந்தபோதிருந்த எடையின் இழப்பை எதிர்ப்படும்போது, போதியளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என அறிய ஆவலாயிருப்பார்கள். குழந்தைகள், சில தாய்ப்பாலூட்டும் சமயங்களில், மற்ற தாய்ப்பாலூட்டும் சமயங்களைவிட, அதிகளவு தாய்ப்பாலை உட்கொள்ளலாம். முதல் இரண்டு வாரங்களில், நீங்கள் தாய்ப்பாலூட்டிய பின்னர் உங்கள் குழந்தை, குறைந்தது இரண்டு தடவைகளாவது திடமான மஞ்சள் நிற மலம் கழித்தால் மற்றும் ஒரு நாளில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட டயபர்களை நனைத்தால், அவனுக்குப் போதியளவு தாய்ப்பால் கிடைக்கிறது என நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு பாலூட்டலுக்குப் பின்னரும் அவனுக்கு ஏப்பம் விடச் சந்தர்ப்பம் கொடுத்து, ஒரு குட்டித்தூக்கத்திற்குப் பின்னர் “டெஸெட்”டுக்காகத் திரும்பவும் மார்பருகே கொண்டுவந்தால் அவன் திருப்தியடைந்தவனாகக் காணப்படுவான். அநேக பிள்ளைகள் மார்பில் தூங்குவதால், அவர்களைத் தூங்கவைத்தபின் 15 முதல் 30 நிமிடங்களுக்குள் விழித்து விடுவான். வயது வந்தவர்களைப்போல குழந்தைகளும் உணவு செரிமானமடைவதற்காக சில நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டால், ஒரு நல்ல தூக்கத்துக்காக இளைப்பாறுவதற்கு முன்னர் ஒரு சிறிய டெஸெட்டுடன் தங்கள் தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திவிட விரும்புவார்கள். இந்த சமயத்தின்போதுதான் நல்லெண்ணமுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஒரு றப்பர் சூப்பியை சிபாரிசு செய்வார்கள் அல்லது தாய்க்குப் போதியளவு தாய்ப்பால் சுரக்கவில்லை என்று சொல்வார்கள். வெறுமனே திரும்பவும் தாய்ப்பாலைக் கொடுக்கவும்!

முதல் இரண்டு வாரங்களின் முடிவில், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை, தான் பிறக்கும்போதிருந்த எடையைத் திரும்பவும் எட்டவேண்டும். உங்கள் குழந்தைக்கு எடை அதிகரிப்பும் திருப்தியுமிருந்தால், தாய்ப்பாலூட்டும் உறவை நிலைநாட்டும் வழியில் நீங்கள் இருக்கிறீர்கள் எனலாம்.

வளர்ச்சி வேகமாக அதிகரித்தல்

ஏறக்குறைய மூன்று வாரங்கள், ஆறு வாரங்கள், மற்றும் 10 முதல் 12 வாரங்களில் உங்கள் குழந்தை தொடர்ந்து உணவு உட்கொள்ள விரும்பும் நாட்களை அனுபவத்தில் அறியலாம். இது வளர்ச்சி வேக அதிகரிப்பு என அழைக்கப்படும். தொடர்ச்சியான பாலூட்டல் என்பது உங்கள் குழந்தை வளர்ந்து வருகிறான் மற்றும் அவனுக்கு அதிக கனவளவு பால் தேவைப்படுகிறது என்பதை அறிவிக்கும் அவனது அடையாளமாகும். ஏறக்குறைய 48 மணி நேரங்களுக்கு, உங்கள் மார்பில் அதிக கனவளவு பால் சுரக்கும்வரை உங்கள் குழந்தை அடிக்கடி தாய்ப்பால் குடிப்பான். அதன்பின்னர் உங்கள் பாலூட்டும் அட்டவணை பெரும்பாலும் வழமைக்குத் திரும்பும். இது உங்கள் குழந்தைக்கு மேலதிக ஃபோர்மூலா போத்தல் உணவு கொடுக்கும் நேரமல்ல. ஏனென்றால் இது உங்கள் தாய்ப்பால் சுரக்கும் அளவை அதிகரிப்பதற்குப் பதிலாக அதைக் குறைத்துவிடும். ஒவ்வொரு பாலூட்டும் சமயங்களில் உங்கள் பாலைப் பம்பு செய்யாவிட்டால் இவ்வாறு சம்பவிக்கும்.

குழந்தைக்கு மேலதிக விற்றமின்கள்

குழந்தை பிறந்தபின் முதற் சில வாரங்கள், உங்கள் தாய்ப்பால் சுரத்தலை நிர்மாணிக்கவேண்டிய முக்கியமான காலப்பகுதியாகும். ஆகவே, இந்தக் காலப்பகுதியில் உங்கள் குழந்தைக்கு எந்தத் துணை உணவுகளையும் கொடுக்க முயற்சிக்கவேண்டாம். உங்கள் குழந்தையின் எடை தகுந்த முறையில் அதிகரிக்காவிட்டால், மேலதிக உதவிக்காக உங்கள் மருத்துவரை அல்லது பாலூட்டும் ஆலோசகரை கேட்கவும். உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டுதல் நன்கு நிர்மாணிக்கப்பட்ட சில காலங்களுக்குப் பின்னர், சில சந்தர்ப்பங்களில் அல்லது நீங்கள் வேலைக்குத் திரும்ப வேண்டிய சமயத்தில் புட்டிப்பால் கொடுக்கவிரும்பினால், அவன் வித்தியாசமான பால் பொழிவிற்கும் அதை உறிஞ்சும் முறையையும் பழக்கப்படுத்திக் கொள்வதற்காக அவனுக்கு, வெளியேற்றப்பட்ட தாய்ப்பாலில் சிறிதளவைக் கொடுக்கவும். வெளியேற்றப்பட்ட தாய்ப்பால், வாரத்தில் சில முறைகள் பராமரிப்பாளரால் உங்கள் குழந்தைக்கு ஊட்டப்படலாம். நீங்கள் அவனை விட்டுப் பிரிந்து வேலைக்குச் செல்லும்போது அது அவனுக்கு அறிமுகமற்ற செயலாகத் தென்பட்டாமலிருக்கும்.

தாய்ப்பாலூட்டும் போது மருந்துகள் உட்கொள்ளுதல்

பெரும்பாலான மருந்துகள் தாய்ப்பாலினூடாகக் குழந்தைக்குக் கடத்தப்படும். ஆயினும், பெரும்பாலான மருந்துக் கலவைகள் தாய்ப்பாலினூடாக மிகவும் சொற்ப அளவே கடத்தப்படும். அதாவது குழந்தை மிகச் சிறிய அளவு மருந்தையே பெற்றுக்கொள்ளும். தாய்ப்பாலூட்டும்போது நீங்கள் எதாவது மருந்துக்கலவையை உட்கொள்ள நேர்ந்தால், அந்த மருந்துக்கலவை தாய்ப்பாலூட்டுவதனுடன் இணக்கமுள்ளதா என்பதை உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். நீங்கள் www.motherisk.org (ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும்). என்ற ‘தெ மதர்ரிஸ்க் இணையதள பக்கத்திலும் சரிபார்த்துக் கொள்ளலாம்.

மார்பு பம்பு இறைத்தல்

அநேக காரணங்களுக்காக நீங்கள் உங்கள் தாய்ப்பாலை வெளியேற்ற வேண்டியிருக்கலாம்: மார்பை மென்மையாக்குவதன்மூலம் அரவணைப்பை இலகுவாக்குவதற்கு, மார்பு வீக்கத்திற்கு நிவாரணமலிப்பதற்கு, மேலதிகமாகத் தாய்ப்பால் சுரத்தலைத் தூண்டுவதற்காக, வேலைக்குத் திரும்புதல் அல்லது இரவில் வெளியே போவதற்காக மேலதிக தாய்ப்பாலை குளிர்பதமூட்டியில் வைப்பதற்கு, அல்லது ஒரு குறைப்பிரசவக் குழந்தைக்கு அல்லது நோயுற்ற குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டுவதற்காக அவ்வாறு செய்யலாம். தாய்ப்பால் கையினால் மெதுவாக வெளியேற்றப்படலாம் மற்றும் ஒரே சீராக மார்பிலிருந்து பிதுக்கி எடுக்கலாம். ஆனால்பெரும்பாலான தாய்மார்கள் மார்புக் கைப்பம்பு அல்லது மின் மார்புப் பம்பை உபயோகிக்க விரும்புவார்கள். எப்போதாவது உபயோகிப்பதற்கு அல்லது மின்சாரத்துக்கு அருகே இருக்காவிட்டால், பெரும்பாலும் ஒரு கைப் பம்பு போதுமானதாயிருக்கும். ஆயினும், சிறந்த முறையில் அதனைக் கையாளுவதற்கு சில முறைகள் பயிற்சி செய்யப்படவேண்டும்.

மருத்துவமனையில் அதிகளவு நேரம் செலவு செய்யவேண்டிய ஒரு குறைப்பிரசவக் குழந்தை அல்லது நோயுற்ற குழந்தை உங்களுக்கு இருந்தால், அல்லது வேலைக்குத் திரும்புவதற்காக அதிகளவு தாய்ப்பாலை பம்பு செய்யத் திட்டமிட்டிருந்தால், ஒரு மருத்துவமனையால் பரிந்துரைக்கப்பட்ட , இரட்டை மின் மார்புப் பம்பு தேவைப்படும். பல மாதங்களுக்கு நல்ல பால் சுரத்தலை நிர்மாணிப்பதகும் அதைப் பேணிக்காப்பத்ற்கும் இந்தப் பம்புகள் மிகவும் பலன் தரக்கூடியனவாகும். உங்கள் குழந்தைக்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்தை வினியோகிக்ககூடிய ஒரு நல்ல மார்புப் பம்பின் விலையானது, அவனது வாழக்கையின் முதலாவது வருடத்தில் புட்டிப்பாலுக்காச் செலவிடும் பணத்தின் மிகச் சொற்பத் தொகையேயாகும்.

மேலதிக தகவல்களுக்கு, தாய்ப்பாலூட்டுதல்: “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உங்கள் குழந்தைக்காகத் தாய்ப்பாலை வெளியேற்றுதல்” ஐப் பார்க்கவும்

யார் தாய்ப்பாலூட்டக்கூடாது?

வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள எச்ஐவி-பொசிட்டிவ் அல்லது எயிட்ஸ் நோயுள்ள பெண்கள், நேரடியாகத் தாய்ப்பாலூட்டும்போது தங்கள் குழந்தைகளுக்கு வைரஸ் நோயைக் கடத்தக்கூடிய ஆபத்து இருக்கிறது. வெளியேற்றப்பட்ட தாய்ப்பால் கிருமிகள் அழிக்கப்பட்டதானால், தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பளிப்பதற்காக அதனைக் குழந்தைகளுக்கு ஊட்டலாம். ஆனால் நோய் கடத்தப்படும் சாத்தியத்தை நீக்கிவிடும்.

செயற்திறனுள்ள, சிகிச்சை செய்யப்படாத காச நோயுள்ள பெண்கள், சிகிச்சை தொடங்கிய முதல் இரண்டு கிழமைகளுக்கு தங்கள் குழந்தையிலிருந்து தனியே பிரித்துவைக்கப்படவேண்டும். இந்த சமயத்தில் அவர்கள் தங்கள் குழந்தைக்காக தாய்ப்பாலை வெளியேற்றலாம்.

குழந்தை பிறப்பதற்குக் குறுகிய காலத்திற்கு முன்னர் அல்லது பின்னர் கொப்பளிப்பான் நோய் ஏற்பட்ட பெண்கள், குழந்தைக்கு நோய்த்தடுப்பு மருந்து கொடுக்கப்படும்வரை, குழந்தையிலிருந்து தனியே பிரித்துவைக்கப்படவேண்டும். ஆனால் குழந்தைக்கு வெளியேற்றப்பட்ட பால் கொடுக்கப்படலாம்.

தங்கள் மார்பில், செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஹேர்பீஸ்புண் உடைய பெண்கள் ஹேர்பீஸ் வைரசை தங்கள் குழந்தைக்குக் கடத்தலாம்.

கலக்டோஸெமியா உள்ள குழந்தைகளுக்கு லட்டோஸ் இல்லாத ஆகாரம் கொடுக்கப்பட வேண்டும். எனவே, அவர்கள் தாய்ப்பாலை உட்கொள்ளமுடியாது.

புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளும் பெண்கள் தாய்ப்பாலூட்டக்கூடாது. புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மருந்துகள் குழந்தைக்கு தீங்கானது. ஒரு தாய்க்கு புற்றுநோய் மருந்து கொடுக்கப்படுகின்றதென்றால் அவளின் குழந்தை தாய்ப்பாலை உட்கொள்ளக்கூடாது.

அமியொடரோன், குளோரம்ஃபினிக்கொல், லிதியம், கதிரியக்கமுள்ள பொருட்கள், அல்லது டெட்ராசைக்ளின் போன்ற மருந்துகள் தேவைப்படும் பெண்கள், மருத்துவரின் மேற்பார்வையின்கீழ் மாத்திரமே அவற்றை உட்கொள்ளவேண்டும்.

தாய்ப்பாலூட்டுதலில் மருந்துகள் சம்பந்தப்பட்ட மேலதிக தகவல்களுக்கு, உங்கள் தாய்ப்பாலூட்டும் நிபுணர்களிடம் அல்லது மருத்துவரிடம் கேட்கவும்.

தகப்பன்மார்களுக்கு ஒரு சில வார்த்தைகள்

உங்கள் குழந்தைக்கு மிகச்சிறந்த ஆரம்பத்தைக் கொடுப்பதற்கு மிகச்சிறந்த இயற்கையின் பாதை தாய்ப்பாலூட்டுதலாகும். தாய்ப்பாலூட்டுதல், உங்கள் துணைவரின் நீண்ட கால உடல்நலத்துக்கும் பாதுகாப்பளிக்கிறது. ஆதரவு மற்றும் புரிந்துகொள்ளுதல் இல்லாமல் தாய்ப்பாலூட்டுதல் எப்போதும் இலகுவானதாக இருக்கமாட்டாது. இது ஒரு தாய்க்கும் புதிதாகப் பிறந்த குழந்தைக்குமிடையே ஒரு கற்றுக்கொள்ளும் அனுபவமாகும். உங்கள் குழந்தையின் வாழ்க்கையின் முதற் சில வாரங்களுக்கு, உங்கள் துணைவர் உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும்போது அவளைப் போஷித்து அக்கறை காண்பிப்பதுதான் நீங்கள் கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த உதவியாகும். தகப்பன்மார்கள், டயபர்களை மாற்றலாம், தங்கள் குழந்தையைக் குளிப்பாட்டலாம், தாய்மார்கள் ஒரு குட்டித் தூக்கம் போடும்போது அல்லது குளிக்கும்போது குழந்தையைக் கட்டித் தழுவலாம் அல்லது தொட்டிலில் போட்டுத் தாலாட்டலாம். துணி துவைத்தல், சுத்தம் செய்தல், மற்றும் கடைகளுக்குச் செல்தல் போன்ற மற்ற வீட்டுவேலைகளையும் தயவுசெய்து மறந்து போகவேண்டாம். உங்கள் துணைவர் உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையுடன் அதிக நேரம் செலவிட்டால், அது அவள் தாய்ப்பருவமடைவதற்கு மிகவும் இலகுவாயிருக்கும்; தாய்ப்பாலூட்டுதல் நிர்ணயிக்கப்படும்; உங்கள் குழந்தையைப் பராமரித்தலில் தன்நம்பிக்கை அதிகரிக்கும்.

Last updated: அக்டோபர் 18 2009