வீட்டில் கீமோத்தெரபி(வேதிச்சிகிச்சை) சிகிச்சை: பாதுகாப்பாகக் கையாளுதலும் மருந்துகள் கொடுத்தலும்

Safe handling of hazardous medicines at home: Set up and clean up [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

வீட்டில் உங்களுடைய பிள்ளையின் கீமோத்தெரபி சிகிச்சை மருந்துகளை எப்படிப் பாதுகாப்பாகக் கொடுக்கலாம், எப்படிப் பாதுகாப்பாகக் கையாளலாம் என்பனவற்றைப் பற்றி இலகுவாக

கீமோத்தெரபி என்றால் என்ன?

கீமோத்தெரபி என்பது புற்றுநோய்ச் சிகிச்சைக்காக அளிக்கப்படும் மருந்துகளின் ஒரு தொகுதி ஆகும். அவை புற்றுநோயை ஏற்படுத்தும் உயிரணுக்களை அழிக்கலாம் அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடை செய்யலாம்.

கீமோத்தெரபி சிகிச்சையானது உடலிலுள்ள இயல்பான உயிரணுக்களையும் கூட சேதப்படுத்தக்கூடும். தாதிமார் கீமோத்தெரபி சிகிச்சை அளிக்கும்போது, தற்செயலாக அவர்களும் கீமோத்தெரபி சிகிச்சையினால் பாதிக்கப்படாதவாறு ஒரு நீளமான மேலங்கி, கையுறைகள், முகமூடி, பாதுகாப்புக் கண்ணாடி போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்வார்கள்.

கீமோத்தெரபி சிகிச்சையை அளிக்கும்போது ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவானதாக இருந்தாலும் அதனுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

சில கீமோத்தெரபி சிகிச்சைகள் மருத்துவமனைகளில் கொடுக்கப்படுவதைப் போலவே மருந்தூசி மூலமாகக் கொடுக்கப்படுகிறது. மற்ற கீமோத்தெரபி சிகிச்சை மருந்துகள் வீட்டில், வாய்வழியாகக் கொடுக்கப்படலாம்.

வீட்டில் கீமோத்தெரபி மருந்துகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு மிகச் சிறந்த வழிகள் எவை?

 • கீமோத்தெரபி சிகிச்சை மருந்துகள் எல்லாவற்றையும் பிள்ளைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் எட்டாதவாறு ஒரு பூட்டப்பட்ட பெட்டியில் வைக்கவும்.
 • பூட்டப்பட்ட பெட்டியை குளிச்சியான, உலர்ந்த இடத்தில் சூரிய வெளிச்சம் படாதவாறு (சமையலறை அல்லது குளியலறையில் அல்ல) வைக்கவும்.
 • ஒவ்வொரு முறையும் உபயோகித்த பின்னர் மீதமுள்ள மருந்துகளைத் திரும்பவும் பூட்டப்பட்ட பெட்டியினுள் வைக்கவும். எந்த மருந்தையும் உங்களுடைய பெர்ஸிலோ அல்லது டயப்பர் பையிலோ விட்டுவைக்க வேண்டாம்.

வீட்டில் கீமோத்தெரபி சிகிச்சை கொடுக்கும்போது என்னையும் என்னுடைய குடும்பத்தினரையும் நான் எப்படிப் பாதுகாக்கலாம்?

கையுறைகள், மேலாடை மற்றும் மூக்கையும் வாயையும் மூடிய மறைப்புப் போட்ட ஒருவர்
கை உறைகள் மற்றும் முகமூடி அணிவதன் மூலம் கீமோதெரபி மருந்துடன் தொடர்பைத் தவிர்க்கவும் .ஒருமுறை பாவித்த பின் வீசக்கூடிய அங்கி, ஏப்ரன், பழைய பெரிய மேலாடை அணிவதன் மூலம் உங்களுடைய ஆடைகளை மூடவும்.
 • நீங்கள் கர்ப்​பிணியாக இருந்தால் அல்லது கர்ப்பிணியாகும் வாய்ப்பிருந்தால், அல்லது தாய்ப்பாலூட்டுபவராக இருந்தால் நேரடியாகத் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க முடிந்தால் தவிர்க்கவும்.
 • கீமோத்தெரபி சிகிச்சையைக் கையாளுவதற்கு முன்னரும் கையாண்ட பின்னரும் கைகளைக் கழுவவும்.
 • கீமோத்தெரபி சிகிச்சைக்கான குளிகைகள், கூட்டுக் குளிகைகள், அல்லது திரவ மருந்துகளைக் கையாளும்போது கையுறைகளை அணிந்து கொள்ளவும்.
 • கீமோத்தெரபி சிகிச்சைக்கான குளிகைகள் அல்லது கூட்டுக் குளிகைகளை உடைக்க அல்லது பிரிக்க வேண்டியிருந்தால் சுவாசித்தலை எளிதாக்கும், அங்கீகாரம் பெற்ற முகமூடியை அணிந்து கொள்ளவும்.
 • கீமோத்தெரபி சிகிச்சைக்கான திரவ மருந்துகளைத் தயாரிக்கும் போதும் கொடுக்கும் போதும் ஒரு முறை மாத்திரம் உபயோகப்படுத்தப்படக்கூடிய ஒரு நீளமான மேலங்கி அல்லது ஆடையை அணிந்து கொள்ளவும். மருந்துகள் தெறிக்கும் சமயங்களில் இது உங்களைப் பாதுகாக்கும்.
 • பொருத்தமான கையுறைகளையும் முகமூடிகளையும் நீங்கள் பெரும்பாலான மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.

கீமோத்தெரபி சிகிச்சைக்கான ஒரு வேளைமருந்தை நான் எப்படிப் பாதுகாப்பாகத் தயார் செய்யலாம்?

யன்னல்கள், மின்விசிறிகள், வெப்பமூட்டும் குழாய்கள், நீங்கள் உணவு தயாரிக்கும் இடம் என்பனவற்றிலிருந்து தூரமாக இருக்கும் ஒரு பொருட்கள் குவிந்தில்லாத மேசையை அல்லது கவுன்டரைத் தெரிவு செய்யவும்.

மேசையை சுத்தம் செய்து, ஒரு முறை மாத்திரம் உபயோகிக்கக்கூடிய, பிளாஸ்டிக் பின்னணைவைக் கொண்ட ஒரு உறிஞ்சும் விரிப்பை அதன் மேல் விரிக்கவும். மருந்துகள் கொடுக்கத் தேவையான உபகரணங்களைச் சேகரிக்கவும். பின்வரும் அட்டவணையிலுள்ள உபகரணங்களில் உங்களுக்குத் தேவையானவற்றைத் தெரிவு செய்து கொடுக்கும்படி உங்களுடைய மருந்தாளரிடம்அல்லது தாதியிடம் கேட்கவும்:

கையுறைகள்இடுக்கிகள்மருந்து
முகமூடிகள்பிளாஸ்டிக் கரண்டிகள்தண்ணீர்
நீளமான மேலாடைபிளாஸ்டிக் மருந்துக் கோப்பைகள்பழரசம்
ஒரு முறை மாத்திரம் உபயோகிக்கக்கூடிய விரிப்பு டிஸ்ஸோல்வன் டோஸ்®உணவு
குளிகை பிரிப்பான்ஷார்ப்ஸ் கொள்கலன்கள் பேப்பர் டவல் 
வாய்வழி மருந்தூசிகள்கழிவுகள் போடும் பைசோப்

என்னுடைய பிள்ளைக்குக் கீமோத்தெரபி சிகிச்சை கொடுத்த பின்னர் பாதுகாப்பாகச் சுத்தம் செய்வது எப்படி?

 • சவர்க்காரநுரையுள்ள ஸ்பொன்சால் மேசையைக் கழுவும் கையுறை போட்ட கை

  உங்களுடைய பிள்ளை கீமோத்தெரபி சிகிச்சையைப் பெற்றபின்னர், பிளாஸ்டிக் பின்னணைவைக் கொண்ட விரிப்பை மடித்து ஒரு மூடக்கூடிய பிளாஸ்டிக் பையில் வைத்து அப்புறப்படுத்திவிடவும். மேசையின் மேற்பரப்பை சோப் கலந்த வெந்நீரினால் சுத்தம் செய்யவும்.

 • ஒரு முறை மாத்திரம் உபயோகப்படுத்தப்படக்கூடிய கையுறைகளைக் கவனமாகக் கழற்றி, உட்புறப்பகுதியை வெளிப்புறமாகத் திருப்பியவாறு ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து மூடிவிடவும். நீங்கள் ரப்பர் கையுறைகளை உபயோகித்திருந்தால் அவற்றை அகற்றுவதற்கு முன்பாக அவற்றின் வெளிப்புறத்தைச் சோப் கலந்த தண்ணீரினால் கழுவவும்.
 • கைகழுவுதல்

  கையுறைகளைக் கழற்றிய பின்னர், உங்களுடைய கைகளைக் கழுவவும்.உங்களுடைய கைகள் கீமோத்தெரபி மருந்தைத் தொடாமலிருந்தாலும் கூட அவ்வாறு செய்யவும்.

 • திரும்பவும் உபயோகிக்கக்கூடிய உபகரணங்களை சூடான சோப் கலந்த தண்ணீரினால் கழுவி உலர விடவும். இவை, மருந்தூசிகள், டிஸ்ஸோல்வன் டோஸ்® கருவிகள், மருந்துக் கோப்பைகள் என்பனவற்றை உட்படுத்தும். இந்த உபகரணங்களைக் கழுவும்போது கையுறைகளை அணிந்துகொள்ளவும். இவற்றை வேறு ஏதாவது மருந்துகளுக்காக உபயோகிக்கவேண்டாம்.
 • வார்ப்பட்டைகளை உபயோகித்து, சுவாசிப்பு முகமூடிகளை அகற்றி அவற்றை ஒரு மூடக்கூடிய பிளாஸ்டிக் பையில் போட்டு அப்புறப்படுத்திவிடவும்.
 • நீங்கள் ஒரு நீளமான மேலங்கியை அணிந்திருந்தால், அதைக் கழற்றி ஒரு மூடக்கூடிய கழிவுகள் போடும் பையில் போட்டு அப்புறப்படுத்திவிடவும்.

கீமோத்தெரபி சிகிச்சையின் பின்னர் என்னுடைய பிள்ளையின் கழிவுப் பொருட்களின் (வாந்தி, சிறுநீர், மலம்) மீது விசேஷ முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டுமா?

உங்களுடைய பிள்ளை கீமோத்தெரபி சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது, சில மருந்துகள் சீர்குலைவடைந்து சிறுநீர் மற்றும் மலம் என்பனவற்றினூடாக உடலிலிருந்து வெளியேற்றப்படும். அவை வாந்தியிலும் கூடக் காணப்படலாம். உங்களுடைய பிள்ளையின் கழிவுப் பொருட்களிலிருந்து உங்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பது முக்கியம். பின்வரும் வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் அவ்வாறு செய்யலாம்:

 • எதிர்பாராமல் விரைவாகச் சுத்தம் செய்யும் தேவை ஏற்படும்போது அதைச் சமாளிப்பதற்குத் தேவையான பொருட்களைத் தயாராக வைத்திருக்கவும். பேப்பர் டவல், சோப், தண்ணீர், ஒரு முறை உபயோகிக்கும் கையுறைகள் மற்றும் ஐஸ்கிறீம் கொள்கலன் போன்ற வீசக்கூடிய பெரிய கொள்கலன் ஆகியவை உங்களுக்குத் தேவைப்படும்.
 • எதிர்பாராத நிகழ்ச்சிகளிலிருந்து படுக்கையைப் பாதுகாப்பதற்காக ஒரு பிளாஸ்டிக் படுக்கை விரிப்பை உபயோகிக்கவும்.
 • வாந்தி எடுக்கும் நிலைமையைச் சமாளிப்பதற்காக ஒரு பிளாஸ்டிக் கொள்கலனை அருகில் வைத்திருக்கவும். நீங்கள் அந்தக் கொள்கலனை உபயோகித்திருந்தால், அந்தக் கொள்கலனில் உள்ளவற்றை கழிப்பறைக்குள் கொட்டிக் காலியாக்கி சோப் கலந்த வெந்நீரினால் கழுவவும்.
 • உங்களுடைய பிள்ளை கழிப்பறையை உபயோகிக்கும் பழக்கமுள்ளவளாக இருந்தால், உங்கள் வீட்டில் அவளுக்காகவே ஒரு கழிப்பறையை ஒதுக்கி வைக்கவும். உங்களுடைய பிள்ளை கழிப்பறையை உபயோகித்த பின்னர், அதனை மூடிவிட்டு இரு முறைகள் தண்ணீரைப் பீச்சியடிக்கும்படி செய்யவும்.
 • அழுக்கடைந்த படுக்கை விரிப்புகளை மாற்றுதல் அல்லது வாந்தியைச் சுத்தப்படுத்துதல் போன்ற உடற்கழிவுகளை நீங்கள் சுத்தம் செய்யும்போது ஒரு முறை மாத்திரம் உபயோகிக்கக்கூடிய கையுறைகளை அணியவும்.
 • துணி துவைக்கும் இயந்திரத்தில் அழுக்கடைந்த துணிகளையும் படுக்கை விரிப்புகளையும் மற்றத் துணிகளிலிருந்து வேறு படுத்தி, முதலில் இவற்றைத் துவைக்கவும். பின்பு மீண்டும் துவைக்கவும். அவற்றை உடனே துவைக்க முடியாவிட்டால், மூடக்கூடிய ஒரு பிளாஸ்டிக் பையில் அவற்றைப் போட்டு ஒதுக்குப் புறமாக வைத்துவிடவும்.

உங்களுடைய பிள்ளை டயபர் அணிபவளாக இருந்தால் என்ன செய்வது

 • உங்களுடைய பிள்ளைக்கு நரம்பு வழியாகக் கொடுக்கப்பட்ட கடைசி கீமோத்தெரபி சிகிச்சைக்குப் பின்னர் 48 மணி நேரங்களுக்கும், வாய்வழியாகக் கடைசிக் கீமோத்தெரபி சிகிச்சை கொடுக்கப்பட்ட பின்னர் 5 தொடக்கம் 7 நாட்கள் வரையும் முன்னெச்சரிக்கைகள் எடுக்கவும்.
 • அவளுடைய டயபரை மாற்றுவதற்கும், அவற்றை அப்புறப்படுத்துவதற்கு முன்பாக ஒரு தனி மூடக்கூடியபிளாஸ்டிக் பையில் போடுவதற்கும் ஒரு முறை மாத்திரம் உபயோகப்படுத்தக்கூடிய கையுறைகளை அணியவும்.

தவறுதலாக நான் மருந்துகளை அல்லது உடற்கழிவுகளை சிந்திவிட்டால் அல்லது சிதறச் செய்தால் என்ன செய்யவேண்டும்?

 • சிந்தப்பட்ட இடத்தைத் தனிமைப்படுத்தி, பிள்ளைகளையும் செல்லப்பிராணிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்திவிடவும்.
 • சிந்தியவற்றை முடிந்தளவு விரைவாகச் சுத்தப்படுத்திவிடவும். கையுறைகளை அணிந்து கொள்ளவும். சிந்தியவற்றைச் சுத்தம் செய்வதை வெளிப்புறத்திலிருந்து தொடங்கி உட்புறம் நோக்கிச் செய்யவும். சிந்தியவற்றை உறிஞ்சும் பேப்பர் டவலினால் துடைத்த பின்னர் அந்தப் பகுதியை சோப் கலந்த தண்ணீரினால் இரு முறை கழுவவும். பின்னர் அந்த இடத்தை தண்ணீரினால் அலசவும்.
 • கழிவுகள் உங்களுடைய கண்களில் சிந்தப்பட்டிருந்தால், உங்களுடைய கண்களை ஒரு தண்ணீர்க் குழாயின் கீழ் வைத்துக் குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் வரை கண்களைக் கழுவவும். பின்னர் ஒரு மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.
 • கழிவுகள் உங்களுடைய தோலில் சிந்தப்பட்டிருந்தால், தாராளமான சுத்தமான தண்ணீரினால் அந்தப் பகுதியைக் கழுவவும். பின்னர் 10 நிமிடங்களுக்கு சோப்பும் தண்ணீரும் சேர்த்துக் கழுவவும். அந்தப் பகுதி சிவப்பு நிறமாக மாறினால் அல்லது அந்தப் பகுதியில் எரிச்சல் ஏற்பட்டால் ஒரு மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.
 • அசுத்தமாக்கப்பட்ட உடைகளைக் கழற்றி, ஒரு பிளாஸ்டிக் பைக்குள் வைத்து இறுக்கமாகக் கட்டி விடவும்.

கீமோத்தெரபி சிகிச்சை சம்பந்தப்பட்ட கழிவுகளை நான் எப்படி அப்புறப்படுத்த வேண்டும்?

 • கீமோத்தெரபி சிகிச்சையுடன் தொடர்புடைய எல்லாப் பொருட்களையும் ஒரு தனிப்பட்ட மூடக்கூடிய கழிவுப் பையில் வைத்து அகற்றவும். இது பிரிக்கப்பட்ட கூட்டுக் குளிகையின் பகுதிகள், மீந்துபோன குளிகைகள், கையுறைகள் என்பனவற்றை உள்ளடக்கும்.
 • இந்தப் பையை உங்களுடைய உள்ளூர் ஹவுஸ்ஹோல்ட் ஹசார்டஸ் வேஸ்ட் டிப்போவில் போட்டு விடவும். அது இருக்கும் இடத்தையும் வேலை நேரங்களையும் பற்றி அறிந்து கொள்வதற்காக உங்களுடைய மாநகர சபையைத் தொடர்பு கொள்ளவும். அத்தகைய சேவை உங்களுடைய பகுதியில் இல்லாவிட்டால், வேறு தெரிவுகளுக்காக உங்களுடைய பிள்ளையின் உடல்நலப் பரமரிப்புக் குழு அங்கத்தினர் ஒருவரிடம் கேட்கவும்.

முக்கிய குறிப்புகள்

 • கீமோத்தெரபி என்பது புற்றுநோய்ச் சிகிச்சைக்காக அளிக்கப்படும் மருந்துகளின் ஒரு தொகுதி ஆகும்.
 • கீமோத்தெரபி சிகிச்சையானது உடலிலுள்ள இயல்பான உயிரணுக்களைச​ சேதப்படுத்தக்கூடும்.
 • எல்லா மருந்துகளையும் ஒரு பூட்டப்பட்ட பெட்டியில் வைத்து, வீட்டில் குளிரான, உலர்ந்த இடத்தில் வைக்கவும்.
 • நீங்கள் கர்ப்பிணியாக அல்லது கர்ப்பிணியாகும்வாய்ப்பிருந்தால், அல்லது தாய்ப்பாலூட்டுபவராக இருந்தால் கீமோத்தெரபி சிகிச்சையுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க முடிந்தால் தவிர்க்கவும்.
 • கீமோத்தெரபி சிகிச்சைக்கான குளிகைகள், கூட்டுக் குளிகைகள், அல்லது திரவ மருந்துகளைக் கையாளும்போது கையுறைகளை அணிந்து கொள்ளவும்.
 • யன்னல்கள், மின்விசிறிகள், வெப்பமூட்டும் குழாய்கள், நீங்கள் உணவு தயாரிக்கும் இடம் என்பனவற்றிலிருந்து தூரமாக இருக்கும் ஒரு பொருட்கள் குவிந்தில்லாத, சுத்தமான மேசையில் கீமோத்தெரபிச் சிகிச்சைக்கான வேளைமருந்துகளைத் தயாரிக்கவும்.
​​​
Last updated: டிசம்பர் 23 2010