மார்பு வலி

Chest pain in children [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பிள்ளைகளின் மார்பு வலி என்பது பிள்ளை சுவாசிக்க சிரமப்படும் விளைவை ஏற்படுத்தும் தசை இறுக்கத்தாலோ அல்லது இருமலினாலோ ஏற்படலாம். பிள்ளைகளின் மார்பு வலிக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

மார்பு வலி என்பது, பிள்ளை தனது உடலின் முண்டப்பகுதியில் அல்லது மார்புப்பகுதியில் உணரும் ஒரு அசௌகரியமாகும். இந்த வலியானது சங்கடமான உடல் ரீதியான அல்லது உணர்ச்சி ரீதியான ஒர் உணர்வு ஆக இருக்கலாம். ஒவ்வொரு பிள்ளைக்கும் இது வித்தியாசப்படலாம். பெரியவர்களைப் போலல்லாமல், பிள்ளைகளுக்கு ஏற்படும் மார்பு வலியானது மிக அரிதாகவே இதயப் பிரச்சினைக்கு ஒரு அறிகுறியாக இருக்க முடியும்.

மார்பு வலிக்கான காரணங்கள்

பிள்ளைகளில் மார்பு வலிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. பிள்ளைகளில் மார்பு வலியானது திசுக்களில் ஏற்படும் சேதத்துக்கு அறிகுறியாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். மார்பு வலியானது மார்புச் சுவற்றில் (தோல், தசை, அல்லது விலா) ஏற்படும் ஒரு வலியை அல்லது குத்துதல் போன்ற உணர்வை உள்ளடக்கக்கூடும் ஆயினும், மார்பு வலி, மூச்சுப் பெருங்குழாய் மற்றும் நுரையீரல், உணவுக்குழாய், மார்பு வயிற்றிடை மென்றகடு, நரம்புகள் மற்றும் தண்டுவடம், இதயம் ஆகியவற்றிலிருந்து வரலாம். மார்பின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் நரம்புகள் ஒன்றையொன்று கடந்து வெவ்வேறு மட்டங்களில் முதுகெலும்பிற்குள் நுழைகிறது. இதன் காரணமாக, இந்த வலி எங்கே ஏற்படுகின்றது என்பதைக் கூறவோ அல்லது காட்டவோ பிள்ளைக்கு சிரமமாக இருக்கலாம். வலிக்கான காரணம் மார்போடு எந்தவிதத் தொடர்பும் அற்றதாகக்கூட இருக்கலாம்.

மார்பு வலிக்கான சில மிகப் பொதுவான காரணங்கள்:

  • கொஸ்டோகொன்ட்ரைடிஸ், அதாவது விலாவுக்கும் மார்பு எலும்புக்கும் இடையில் வீக்கம்
  • தசை வலி அல்லது காயம்
  • இரப்பை உணவுக்குழாய் எதிர்த் தாக்கம்
  • செயலாற்றல் அல்லது பதட்டம் தொடர்பான வலி, இது பதின்ம வயதினரில் சகஜமானது. அறிகுறிகள் அதிவளியோட்டம், தலைச்சுற்று, உதடுகளில் மற்றும் கைகளில் மற்றும்/அல்லது பாதங்களில் உணர்வின்மை அல்லது சிலிர்ப்பு என்பனவற்றை உட்படுத்தும். காரணத்தை அடையாளம் காணமுடியாவிட்டாலும் வலி நிஜமானதே.
  • உடற் பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா, கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, இருமும்போது வலி

மார்பு வலியானது பிள்ளைகளில் மிக அரிதானதாகவே உள்ளது மற்றும் பெரும்பாலும் இது இருதய நோயால் ஏற்படுவதல்ல

குழந்தை மருத்துவ அவசர மருத்துவப் பிரிவுக்கு வரும் பிள்ளைகளில் 100 இல் 1 க்கும் குறைவானவர்களே மார்பு வலி காரணமாக வருகின்றார்கள். இருப்பினும் இது பெற்றோரிலும் நோயாளிகளிலும் மிகப் பெரிய அளவில் பதட்டத்தை உண்டு பண்ணுகின்றது.

அநேகமான சந்தர்ப்பங்களில், நுரையீரல் தொற்று நோய், தசை அல்லது எலும்புக் காயம், பதட்டம் அல்லது வீக்கம் ஆகியவற்றின் காரணமாகவே ஒரு பிள்ளைகக்கு மார்பு வலி ஏற்படுகிறது.

திடீரென விளங்கப்படுத்த முடியாதபடி ஏற்படும் மரணங்கள், இருதய நோய்கள், உடற்பயிற்சி செய்ய இயலாமை, முன்கூட்டியே ஏற்படும் இருதய நோய்கள், வீக்கம் அல்லது வாதம் தொடர்பான நோய்கள் பற்றிய குடும்ப வரலாற்றை உங்கள் மருத்துவரிடம் தெரிவிப்பதற்கு நிச்சயமாயிருக்கவும். மிக அரிதாகவே ஏற்படும் இந்த நிலைமைகளில், ஒரு நபர் இறப்பதற்கு முன்பு அறியப்படாமலிருந்த, ஒரு இருதய நிலைமையின் காரணமாகத் திடீர் மரணம் ஏற்படுகின்றது.

மார்பு வலிக்கு உங்கள் மருத்துவரால் என்ன செய்ய முடியும்

மருத்துவர் உங்கள் பிள்ளையைப் பரிசோதனை செய்வார். பெரும்பாலும், வலிபற்றிய விவரிப்பு மற்றும் உடல் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் மார்பு வலிக்கான காரணம் கண்டுபிடிக்கப்படுகின்றது. அநேகமான சந்தர்ப்பங்களில் எந்தப் பரிசோதனைகளும் தேவைப்படாது. மருத்துவர் வேறு பரிசோதனைகளுக்கு ஆணையிட்டால், அவை இருதய மின் வரைபடம் (ECG) ஒரு மார்பு x-ரே மற்றும்/ அல்லது இரத்தப் பரிசோதனைகள் ஆகியவற்றை உட்படுத்தும். இந்தத் தகவல்கள் எல்லாவற்றின் அடிப்படையிலும் உங்கள் மருத்துவர் நோயைக் கண்டுபிடிப்பார்.

மார்பு வலியுள்ள சில பிள்ளைகள் ஒரு இதய நோய் மருத்துவ நிபுணரைச் சந்திக்க வேண்டும். உங்கள் பிள்ளை நிபுணர் ஒருவரிடம் பரிந்துரை செய்யப்பட்டால், அந்த நிபுணரைச் சந்திக்கும்வரை உங்கள் மருத்துவரால் வழங்கப்பட்ட அறிவுரைகளைக் கடைப்பிடிக்கவும்.

கீழ்க்காணும் விசேஷித்த குழுக்களில் உள்ள பிள்ளைகளில் மார்பு வலியானது அதிக கவலைக்குரியதாகும்:

  • ஏற்கனவே இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பிள்ளைகள்
  • மோட்டார் வாகன விபத்து அல்லது மார்பில் பலமான அடி போன்ற பேரதிர்ச்சிக்குள்ளான பிள்ளைகள்
  • அதிக வியர்வைச் சுரப்பு (சிஸ்டிக் ∴பைப்ரோசிஸ்) உள்ள பிள்ளைகள்
  • அரிவாள் செல் சோகை (சிக்கிள் செல்) உள்ள பிள்ளைகள்

மார்பு வலியுள்ள உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

வலிக்கு சிகிச்சையளியுங்கள்

உங்கள் பிள்ளைக்கு வலியைக் குறைக்கும் மருந்துகளாகிய அசெட்டமினோஃபென் (டைலெனோல் அல்லது டெம்ப்ரா வேறு பிரான்டுகள்) அல்லது ஐபியூபுரோஃபென் (மோட்ரின் அல்லது அட்வில் அல்லது வேறு பிராண்டுகள்) கொடுங்கள். வலியுள்ள இடத்தில் குளிர்ப் பையை அல்லது இளம் சூட்டுப் பையை வைப்பது உதவக்கூடும்.

அதிக முயற்சி தேவைப்படும் வேலைகளைத் தவிர்த்திடுங்கள்

மார்பு வலி, தசைத் திரிபால் ( மஸ்சிள் ஸ்ட்ரெயின்) ஏற்பட்டால் உங்கள் பிள்ளை அதிக முயற்சி தேவைப்படும் நடவடிக்கைகளையும் பாரம் தூக்குவதையும் தவிர்க்கவேண்டும். வலியின் அளவைப்பொருத்து இந்த நடவடிக்கைகளுக்கு அவன் மெதுவாகத் திரும்பலாம். தசைத்திருபு முதுகில் சுமக்கும் பையொன்றை உபயோகிப்பதால் ஏற்பட்டதானால், தகுந்த உபகரணங்கள் மூலம் வலியைக் குறைக்கலாம். உங்கள் பிள்ளை பையை ஒரு தோளில் மட்டும் சுமக்காமல் இரண்டு தோள்களிலும் சுமக்க வேண்டும்.

மேலதிக சிகிச்சை, மார்பு வலியின் காரணத்தை பொறுத்தே அமையும். மருத்துவரின் அறிவுரையை பின்பற்றுங்கள்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

பின்வரும் நிலைமைகள் காணப்பட்டால் உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரை அழையுங்கள்:

  • வலி அகலாதிருக்கிறது மற்றும் / அல்லது அது உங்கள் பிள்ளையின் தினசரி நடவடிக்கைகளை பாதிக்கின்றது.
  • உங்கள் பிள்ளைக்கு மார்பு வலி மற்றும் காய்ச்சல் இருக்கிறது.

பின்வருவனவற்றின்போது உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு செல்லுங்கள் அல்லது 911 ஐ அழையுங்கள்:

  • அதிக முயற்சி தேவைப்படும் நடவடிக்கையின் போது வலி திடீரென ஏற்படுகின்றது மற்றும் / அல்லது மயக்கத்தோடு வருகின்றது.
  • உங்கள் பிள்ளை இருதயம் இடிப்பதாக அல்லது படபடப்பதாக உணருகிறான், அல்லது தலை சுற்றுதல் அல்லது வலியுடன்ய வியர்வை உண்டாகிறது.
  • பிள்ளை சுவாசிக்க சிரமபடுகிறது அல்லது நீல நிறமாக மாறுகின்றது.
  • பிள்ளைக்கு வழமைக்குவிட அதிகமான நித்திரை கலக்கம் தென்படுகிறது, பலவீனமாக அல்லது எரிச்சல் குணம் கொண்டதாக உள்ளது, மற்றும் கடுமையான காய்ச்சல் உள்ளது.

முக்கிய குறிப்புகள்

  • பிள்ளைகளில் மார்பு வலியானது மிக அரிதாகவே இருதயத்தோடு தொடர்புடையதாக இருக்கின்றது.
  • பெரும்பாலான பிள்ளைகள் ஒரு இதய நோய் மருத்துவ நிபுணரைச் சந்திக்கத் தேவையில்லை
  • அநேகமான மார்பு வலிகள், நுரையீரல் தொற்றுநோய்கள், தசைகள், தசைநாண் அல்லது எலும்புக் காயம், பதட்டம், அல்லது வீக்கம் ஆகியவற்றாலேயே எற்படுகிறது.
  • மார்பு வலியானது, கடும் காய்சல், பலவீனம், இருதய இடிப்பு, தலைச்சுற்று, வியர்வை அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றோடு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.
Last updated: மார்ச் 05 2010