அரிவாள் உரு சிகப்பணு சோகைக்கான ஹைட்ரொக்சியூரீயா மருந்து

Hydroxyurea for Sickle Cell Disease [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளை ஹைட்ரொக்சியூரியா என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். ஹைட்ரொக்சியூரியா மருந்து என்ன செய்கிறது.

உங்கள் பிள்ளை ஹைட்ரொக்சியூரியா என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். ஹைட்ரொக்சியூரியா மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

ஹைட்ரொக்சியூரியா என்பது, அரிவாள் உரு சிகப்பணு சோகை உட்பட அநேக நோய்களுக்கு உபயோகிக்கப்படும் ஒரு கீமோதெரபி மருந்து. ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொள்ளும் அரிவாள் உரு சிகப்பணு சோகையுள்ள நோயாளிகளைப் பற்றி ஆய்வு பின்வருமாறு காண்பிக்கிறது:

 • வலிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொள்ளாத நோயாளிகளைவிட, வலிக்காக ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொள்ளும் நோயாளிகள் பாதியளவே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
 • குறைந்தளவில் கடுமையான இதயவலி நெருக்கடியைக் கொண்டிருக்கிறார்கள்.
 • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்களானால் இரத்தமேற்றுதலின் தேவை மிகக் குறைவானதாக இருக்கும்.

ஹைட்ரொக்சியூரியா மருந்து, ஹைட்ரியா® என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஹைட்ரொக்சியூரியா மருந்து கப்சியூல் வடிவங்களில் கிடைக்கும்.

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் இந்த மருந்தைக் கொடுக்கலாம்:

 • கடந்த 12 மாதங்களில் குறிப்பிடத்தக்க வலி நெருக்கடிக்காக 3 அல்லது அதற்கு மேலான முறைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்(ள்).
 • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கடுமையான மார்பு வலிக்காக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் இரத்தமேற்றுதல் அவனு(ளு)க்குத் தேவைப்பட்டுள்ளது.
 • வலி நெருக்கடியை வீட்டில் சமாளிப்பதற்காக, பாடசாலை அல்லது வேலையிலிருந்து குறிப்பிடத்தக்க காலப்பகுதியை லீவாக எடுத்திருக்கிறான்(ள்).

இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு

உங்கள் பிள்ளைக்கு ஹைட்ரொக்சியூரியா மருந்துக்கு அல்லது வேறு ஏதாவது மருந்துகளுக்கு அசாதாரண அல்லது ஒவ்வாமை எதிர்விளைவு இருந்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்:

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளில் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்:

 • கர்ப்பமாக இருக்கலாம்
 • கல்லீரல் நோய் இருக்கிறது

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்து எப்படிக் கொடுக்கப்படுகிறது?

 • உங்கள் பிள்ளைக்கு ஹைட்ரொக்சியூரியா மருந்தை உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிட்டபடி துல்லியமாகக் கொடுக்கவும். ஏதாவது காரணத்தின் நிமித்தமாக, ஹைட்ரொக்சியூரியா மருந்தைக் கொடுப்பதை நிறுத்துவதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் பேசவும்.
 • உங்கள் பிள்ளைக்கு ஹைட்ரொக்சியூரியா மருந்தை ஒரு நாளுக்கு ஒரு முறை, ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் கொடுக்கவும். அநேக நோயாளிகள் அதை படுக்கைக்குப் போகும் நேரத்தில் உட்கொள்ள விரும்புகிறார்கள்
 • உங்கள் பிள்ளைக்கு ஹைட்ரொக்சியூரியா மருந்தை உணவுடன் அல்லது உணவுடனில்லாமல் கொடுக்கலாம். உணவுடன் சேர்த்து அதைக் கொடுப்பது வயிற்றில் அசௌகரியம் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.
 • உங்கள் பிள்ளை ஒவ்வொரு நாளும் அதிகளவு நீராகாரங்கள் (திரவங்கள்) குடிக்கவேண்டும்.
 • உங்கள் பிள்ளை ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொண்ட அரைமணி நேரத்துக்குள் வாந்தி எடுத்தால், இன்னொரு வேளைமருந்தைக் கொடுக்கவும். உங்கள் பிள்ளை ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொண்ட அரைமணி நேரத்துக்குப் பின்பாக வாந்தி எடுத்தால், இன்னொரு வேளைமருந்தைக் கொடுக்க வேண்டாம். அடுத்த வேளைமருந்தை அடுத்த நாள் வழக்கமான நேரத்தில் கொடுக்கவும்.
 • கனடாவில் ஹைட்ரொக்சியூரியா மருந்து ஒரு 500 மிகி கப்சியூல்களாக வழங்கப்படுகிறது. உங்கள் பிள்ளை கப்சியூலை முழுமையாக, ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லது வேறு திரவத்துடன் உட்கொள்ளவேண்டும்.
 • உங்கள் பிள்ளையால் கப்சியூல்களை விழுங்க முடியாவிட்டால் அல்லது ஒரு முழுமையான கப்சியூலுக்குக் குறைவாக உட்கொள்வதாக இருந்தால், ஹைட்ரொக்சியூரியா மருந்தைக் கொடுப்பதற்கு மிகச் சிறந்த வழியை மருந்தாளருடன் மறுபார்வை செய்யவும். மருந்துச் சீட்டில் எழுதிக் கொடுக்கப்பட்ட அளவுமருந்தைக் கொடுப்பதற்காக, கப்சியூல் பிரிக்கப்பட்டு ஒரு மருந்துப் பீச்சாங்குழாயில் (ஸ்ரிஞ்) கரைக்கப்படலாம். மீதி மருந்தை எறிந்துவிடவும்.
 • கப்சியூலிலுள்ள பொடி மருந்தைக் கலக்கும்போது கையுறைகளை உபயோகிப்பது உட்பட, ஹைட்ரொக்சியூரியா மருந்தை எப்படிப் பாதுகாப்பாகக் கையாளுவது என்பதைப் பற்றி மருந்தாளர் உங்களுக்குக் கற்பிப்பார். மருந்தை எப்படிப் பாதுகாப்பாக எறிந்து விடுவது என்பதையும் மருந்தாளர் உங்களுக்குக் கற்பிப்பார்.
 • ஹைட்ரொக்சியூரியா மருந்தைக் கையாளும் எவராவது போத்தலை அல்லது கப்சியூலைத் தொடுவதற்கு முன்பும் தொட்ட பின்பும் தங்கள் கைகளைக் கழுவ வேண்டும்.

உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

 • ஒரு தவறவிட்ட வேளைமருந்தை ஈடு செய்வதற்காக இரு வேளைமருந்துகளை ஒரே சமயத்தில் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய            பக்கவிளைவுகள் எவை மற்றும் அவை எப்படிக் கண்காணிக்கப்படுகிறன?

உங்கள் பிள்ளை ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் பக்கவிளைவுகளில் சிலவற்றைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:

 • குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல்; ஹைட்ரொக்சியூரியா மருந்தை வெறும் வயிற்றில் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
 • தோற் படை: இது ஒரு திட்டவட்டமற்ற தோற்படை . இது மருந்தைத் தொடர்ந்து உபயோகிக்கும்போதே மறைந்துவிடக்கூடும். தோற் படை அதிகரித்தால், உங்கள் பிள்ளைக்கு ஹைட்ரொக்சியூரியா மருந்தை மருந்துக் குறிப்பு எழுதிக் கொடுத்த மருத்துவரைச் சந்திக்கவும்.
 • முடி உதிர்தல்: முடியின் அடர்த்தி குறைந்து கொண்டே போகலாம். முடியுதிர்தல் பெரும்பாலும் வழுக்கைப் புள்ளிகளை விளைவிக்காது. இது சம்பவித்தால் ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொள்வதால் வரும் ஆபத்து மற்றும் நன்மை ( உடல்நிலை முன்னேற்றம் மற்றும் நெருக்கடி குறைதல்) பற்றியும் மருந்தைத் தொடர்ந்து உட்கொள்வது பற்றித் தீர்மானிக்கவும் உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் கலந்து பேசவேண்டும்.
 • சில இரத்த அளவுகள் குறைதல்: சிகிச்சையின் முதல் வருடத்தில், ஒவ்வொரு 2 வாரங்களுக்கு ஒரு முறை இரத்த அளவைச் சரிபார்ப்பதற்காக, உங்கள் பிள்ளைக்கு ஒரு இரத்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். இந்தப் பரிசோதனைகள் ஒரு உள்ளூர் பரிசோதனை கூடத்தில் செய்யப்பட்டு, முடிவுகள் உங்கள் பிள்ளையின் மருத்துவருக்கு தொலைப் பிரதி மூலம் அனுப்பிவைக்கப்படும். வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை, முன்தீர்மானிக்கப்பட்ட மற்றும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய அளவை விடக் குறைவாக இருந்தால், மருந்தை நிறுத்துவதற்காக நீங்கள் அழைக்கப்பட்டு, 4 முதல் 5 நாட்களுக்குள் திரும்பவும் இரத்தப் பரிசோதனை செய்யும்படி கேட்கப்படுவீர்கள். பெரும்பாலும் எண்ணிக்கை பழைய நிலைக்கு வரும். மருந்துக் குறிப்பில் எழுதிக்கொடுக்கப்பட்டது போலவே மருந்தைத் தொடரலாம். வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை திரும்பவும் குறைந்தால், மருந்தின் அளவு, எண்ணிக்கை குறைவதற்கு முன்பு உங்கள் பிள்ளை உட்கொண்ட மருந்தின் அளவை விடக் குறைவாக்கப்படும். உங்கள் பிள்ளை இந்தக் குறைவாக்கப்பட்ட அளவுமருந்தையே தொடர்ந்து உட்கொள்வான்(ள்)
 • தோல் மற்றும் நகம் கருமை நிறமாதல்: சில காலங்களுக்கு ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொண்டபின்னர், சில நோயாளிகளுக்கு நகங்கள் மற்றும் மொளிகள் போன்ற தோல் மடிப்புப் பகுதிகள் கருமை நிறமடையும். மருந்து உட்கொள்வதை நிறுத்தியவுடன் இந்தப் பாதிப்பு மறைந்துவிடும்.
 • ஈரல் செயலிழப்பு (பிரச்சினகள்): இது அசாதாரணமானது. ஆனால் இந்தச் சிக்கலை மதிப்பிடுவதற்காக ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.
 • நீண்ட காலப் பாதிப்புகள்: ஹைட்ரொக்சியூரியா ஒரு கீமோத்தெரப்பி மருந்து. இந்த வகையான சில மருந்துகள், அநேக வருடங்களினூடாக புற்றுநோயை விருத்தி செய்திருக்கும் நோயாளிகளுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. ஆனால் 20 வருடங்களுக்கு மேலாக, ஹைட்ரொக்சியூரியா மருந்து அரிவாள் உரு சிகப்பணு சோகையுள்ள நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து புற்றுநோயை ஏற்படுத்தியதாக எந்த நிலைமை அறிக்கைகளும் இல்லை.

உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்?

ஹைட்ரொக்சியூரியா மருந்து இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையைத் தற்காலிகமாகக் குறைக்கலாம். அது உங்கள் பிள்ளைக்குத் தொற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பை அதிகரிக்கும். உங்கள் பிள்ளை தொற்றுநோயைத் தடுப்பதற்காக, விசேஷமாக இரத்தத்தின் அளவு குறையும்போது, பின்வரும் முன்னெச்சரிக்கைகளை எடுக்கலாம்:

 • தடிமல் அல்லது ஃப்ளூ காய்ச்சல் போன்ற தொற்றுநோயுள்ளவர்களைத் தவிர்க்கவும்.
 • மக்கள் பெருமளவில் கூட்டமாக இருக்கும் நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும்.
 • உங்கள் பிள்ளையின் பற்களைத் துலக்கும்போதும் நூலினால் பல்லிடுக்கைச் சுத்தம் செய்யும்போதும் கவனமாக இருக்கவும். உங்கள் மருத்துவர், தாதி, அல்லது பல் மருத்துவர், உங்கள் பிள்ளையின் வாயையும் பற்களையும் சுத்தம் செய்வதற்கு பல்வேறு வழிகளைச் சிபாரிசு செய்வார்.
 • முதலில் உங்கள் கைகளைக் கழுவாது, நீங்கள் அல்லது உங்கள் பிள்ளை அவன(ள)து கண்களை அல்லது மூக்கின் உட்பகுதியைத் தொடக்கூடாது.

ஹைட்ரொக்சியூரியா மருந்து இரத்ததிலுள்ள பிளேட்லேட்டுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். அது உங்கள் பிள்ளையின் இரத்தப் போக்கின் ஆபத்தை அதிகரிக்கும். நீங்கள் பின்வரும் முன்னெச்சரிக்கைகளை எடுக்கலாம்:

 • விரல் நகம் வெட்டும் கத்திரிக்கோல் அல்லது கால் நகம் வெட்டும் நறுக்கிகளை உபயோகிக்கும்போது உங்கள் பிள்ளையின் உடற்பாகத்தை வெட்டி விடாதபடி கவனமாக இருக்கவும்.
 • சவரம் செய்யும்போது அல்லது வக்சிங் செய்யும்போது கவனமாக இருக்கவும்.
 • நசுக்குக் காயம் அல்லது வேறு காயங்கள் ஏற்படக்கூடிய போட்டி விளையாட்டுகளை உங்கள் பிள்ளை தவிர்க்கவேண்டும்
 • உங்கள் பிள்ளை ஏதாவது அறுவைச் சிகிச்சைக்கு உட்படுவதற்கு முன்பு, பல் அறுவைச் சிகிச்சை உட்பட, உங்கள் பிள்ளை ஹைட்ரொக்சியூரியா மருந்து உட்கொள்வதாக, உங்கள் மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
 • உங்கள் பிள்ளை நிரந்தரமான பச்சை குத்துதல் அல்லது வேறு ஏதாவது உடலில் துளைபோடுதலைத் தவிர்க்கவேண்டும்.

ஹைட்ரொக்சியூரியா மருந்தை கருத்தரிக்கும் சமயத்தில் அல்லது கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் உட்கொண்டால், அது பிறப்புக் குறைபாட்டை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. உங்கள் மகள் பாலியலில் ஈடுபட்டு வருபவராக இருந்தால், அவள் ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொள்ளும்போது ஏதாவது கருத்தடையை உபயோகிக்கவேண்டும். உங்கள் மகள் ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொள்ளும்போது கர்ப்பமானால் உடனே மருந்து உட்கொள்வதை நிறுத்திவிட்டு அவளின் மருத்துவருக்குத் தெரிவிக்க வேண்டும்.

உங்கள் மகள் கர்ப்பமடைய முயற்சிப்பதற்குக் குறைந்தது 3 மாதங்களுக்கு முன்னர் ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொள்வதை நிறுத்த வேண்டும். ஹைட்ரொக்சியூரியா மருந்து விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைக்கலாம்.

உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை அல்லது இயற்கை மருந்துப் பொருட்கள்) கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும்.

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?

 • ஒவ்வொரு நாளும் மருந்தை உட்கொள்ளவேண்டும். வலி நெருக்கடி தொடங்கும் போதல்ல. இந்த மருந்து, வலி நெருக்கடியின் போது வலியை நீக்காது. நெருக்கடியைத் தடுக்கும் இரத்த உயிரணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இது செயற்படும். இது அரிவாள் சிகப்பணுக்களைக் குறைக்கிறது, சிவப்பணுக்கள் சிதைவடைவதைக் குறைக்கிறது, மற்றும் பாதுகாக்கப்பட்ட கருவின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
 • முதல் மாதச் சந்திப்பின்போது, இரத்தச் சிவப்பணுக்கள் பெரிதாக இருக்கும். இது பரிசோதிக்கும்போதும் நுணுக்குக் கண்ணாடியின் கீழ் வைத்துப் பார்க்கும்போதும் காணப்படும். இந்தச் சிவப்பு அணுக்களால், சின்னஞ்சிறிய இரத்தக் குழாய்களினூடாக இலகுவாக அசைய முடியும். மற்றும் இலகுவாக உடையாது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் பசி அதிகரித்திருப்பதாக அடிக்கடி அறிக்கை செய்கிறார்கள்.
 • 3 மாதங்கள் மருந்து உட்கொண்டபின்னர் கருவின் ஹீமோகுளோபின் மற்றும் ஒட்டுமொத்த ஹீமோகுளோபின் அளவிலும் அதிகரிப்பு இருக்கிறது. கருவின் ஹீமோகுளோபின் அளவுகள் அதிகளவிலுள்ள நோயாளிகளுக்குக் குறைந்தளவு நெருக்கடி இருப்பது எங்களுக்குத் தெரியும்.
 • 6 மாதங்களளவில், உங்கள் பிள்ளைக்கு சிகிச்சை தொடங்குவதற்கு முன்பாக இருந்த வலி நெருக்கடியை விடக் குறைவான வலி நெருக்கடி இருக்கவேண்டும்.
 • எவ்வளவு காலத்துக்கு மருந்தை உட்கொள்ளவேண்டும் என்பது சிகிச்சையளிக்கும் மருத்துவருக்கும் உங்கள் பிள்ளைக்கும் இடைப்பட்ட ஒரு தீர்மானம்.

ஹைட்ரொக்சியூரியா மருந்துச் செலவுகள், எல்லா தனிப்பட்ட காப்புறுதித் திட்டங்கள் மற்றும் ஒன்டாரியோ டிரக் பெனிஃபிட் பிளானால் செய்யப்படும்.

வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்கள் வரை நீடிக்கக்கூடிய, போதியளவு ஹைட்ரொக்சியூரியா மருந்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருங்கள். உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு குறைந்தது 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்.

ஹைட்ரொக்சியூரியா மருந்தை அறை வெப்பநிலையில், குளிரான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் வைக்கவேண்டாம்.

காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

ஹைட்ரொக்சியூரியா மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பூட்டப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான ஹைட்ரொக்சியூரியா மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

 • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
 • நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
 • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது ஹைட்ரொக்சியூரியா மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. ஹைட்ரொக்சியூரியா மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்

Last updated: செப்டம்பர் 21 2009