வாய்ப்புண் என்றால் என்ன?
வாய்ப்புண் என்பது வாயில் ஏற்படும் ஒரு தொற்றுநோய். பெரும்பாலும்,குழந்தைகளின் வாழ்க்கையின் முதல் வருடத்தில் இந்தத் தொற்றுநோய் ஏற்படும்.
வாய்ப்புண்ணுக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
வாய்ப்புண்ணுக்கான பிரதான அறிகுறிகள் பின்வருமாறு:
- கொட்டேஜ் சீஸ் போல தோற்றமளிக்கும், உருமாறிய வெள்ளைத் திசுக்கள் உங்கள் குழந்தையின் வாயில் காணப்படலாம். இந்த உருமாறிய வெள்ளைத் திசுக்கள் கன்னத்தின் உட்பகுதி மற்றும் முரசுகள், மற்றும் சிலவேளைகளில் வாயின் மேற் கூரைப் பகுதியில் காணப்படலாம்.
- அவ்வப்போது வலி, எழுதில் திருப்திப்படாத நிலை அல்லது எரிச்சலடைதல், மற்றும் தாய்ப்பாலூட்டுவதில் பிரச்சினை
தாய்ப்பாலூட்டும்போது குழந்தையின் வாயினால் தொற்றுநோய் ஏற்பட்ட பெண்களில் பின்வரும் அறிகுறிகள் காணப்படலாம்:
- சிவந்த, உணர்ச்சி மிகுந்த, அல்லது அரிப்புள்ள முலைக்காம்புகள்
- முலைக்காம்பைச் சுற்றியுள்ள பகுதியில் பொருக்கு அல்லது தோற் பளபளப்பு
- தாய்ப்பாலூட்டும்போது வேதனை
- ஆழமாக மார்புக்குள் கூர்மையான வலி
வாய்ப்புண்ணுக்கான காரணங்கள்
ஈஸ்டின் அளவுக்கதிகமான வளர்ச்சியினால் வாய்ப்புண் ஏற்படுகிறது. இந்த வகையான ஈஸ்ட் கன்டிடா அல்பிக்கன்ஸ் என்றழைக்கப்படுகிறது. இந்த ஈஸ்ட் இயற்கையாகவே வாயில் உண்டாகிறது. வழக்கத்தைவிட அதிகமான ஈஸ்ட் வாயில் இருக்கும்போது இந்தத் தொற்றுநோய் ஏற்படுகிறது.
வாய்ப்புண் குழந்தைகளில் சாதாரணமாக ஏற்படும். அன்டிபையோடிக்ஸ் அல்லது கோர்டிகொஸ்டீரொயிட்ஸ் போன்ற மருந்துகளினாலும் இது ஏற்படலாம்.
ஆபத்துக்கான காரணிகள்
வாய்ப்புண் பெரும்பாலும் பின்வரும் நிலைமைகளில் அதிகமாக விருத்தியடையும்:
- சாதாரணமான ஆரோக்கியமான குழந்தைகளில்
- பலவீனமான நோயெதிர்ப்புத் தொகுதியுள்ள குழந்தைகளில்
- அன்டிபையோடிக்ஸ் அல்லது கோர்டிகொஸ்டீரொயிட்ஸ் போன்ற மருந்துகளை உட்கொள்ளும் குழந்தைகளில்
சிக்கல்கள்
ஆரோக்கியமுள்ள பிள்ளைகளுக்கு வாய்ப்புண் மிகவும் அரிதாகவே ஒரு கடுமையான பிரச்சினையாக இருக்கும். பொதுவாக இது தாய்ப்பால் ஊட்டுதலின்போது வேதனைப்படுத்தாது அல்லது அதைப் பாதிக்காது. உங்கள் குழந்தைக்கு, பலவீனமான நோயெதிர்ப்புத் தொகுதி இருந்தால் வாய்ப்புண் மேலும் கடுமையானதாக இருக்கலாம். இந்த நிலைமைகளில், தொற்று நோய் சமிபாட்டுக் கால்வாய், இரத்தம், நுரையீரல், ஈரல், மற்றும் உடலின் வேறு உறுப்புகளுக்கும் பரவலாம்.
மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்
நாக்கு, முரசுகள், அல்லது வாயின் உட்பரப்பில் மங்கிய மஞ்சள் அல்லது வெள்ளை நிறப் புள்ளிகளை நீங்கள் அவதானித்தால், மருத்துவரை சந்திக்கவும். உங்கள் குழந்தை சுகவீனமடைந்தவன் போல தோன்றினால் அல்லது குறைவாகத் தாய்ப்பால் குடித்தால் இதைச் செய்வது மிகவும் முக்கியம்.
வாய்ப்புண்ணுக்குச் சிகிச்சையளித்தல்
உங்கள் பிள்ளையின் மருத்துவர் உங்கள் பிள்ளையை உடல்ரீதியாகப் பரிசோதிப்பார். வாய்ப்புண் கண்டுபிடிக்கப்பட்டால், மருத்துவர் அன்டி ஃபங்கள் சொட்டு மருந்தை எழுதிக்கொடுப்பார். தாய்ப்பாலுட்டும் தாயாயிருந்தால், உங்கள் குழந்தைக்குத் திரும்பவும் தொற்றுநோய் ஏற்படாதபடி, மருத்துவர் உங்கள் முலைக்காம்புகளில் பூசும்படி, அன்டி ஃபங்கள் லோஷனை எழுதிக் கொடுப்பார்.
வாய்ப்புண்ணைத் தடுத்தல்
இன்னொரு தொற்றுநோயைத் தடுப்பதற்காக, முலைக்காம்புகள், குழந்தையின் போத்தல்கள், மற்றும் சூப்பிகளை நன்றாகச் சுத்தம் செய்யவும். வாய்ப்புண்களைத் தடுப்பதற்கு வேறொரு வழி, சில குறிப்பிட்ட உணவுகளை உண்பதாகும். உங்கள் குழந்தை போதிய வயதுள்ளவளாக இருந்தால், தொற்றுநோயைக் குறைப்பதற்கு அல்லது தடுப்பதற்கு, இனிப்பூட்டப்படாத தயிர் அல்லது அசிடொஃபிலஸ் திரவத்தைக் கொடுக்கவும்.
முக்கிய குறிப்புகள்
- வாய்ப்புண், வாயில் ஏற்படும் ஒரு தொற்றுநோய்.
- பெரும்பாலும், குழந்தைகளின் வாழ்க்கையின் முதலாவது வருடத்தில் இந்தத் தொற்றுநோய் ஏற்படும்.
- கொட்டேஜ் சீஸ் போல தோற்றமளிக்கும் உருமாறிய வெள்ளைத் திசுக்கள் நாக்கில் அல்லது வாயின் மற்றப் பாகங்களில் தோன்றலாம்.
- தொற்றுநோய் ஏற்பட்ட பாலூட்டும் பெண்களுக்கு சிவந்த அல்லது உணர்ச்சி மிகுந்த முலைக்காம்புகள் இருக்கும்.
- தொற்று நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்காக , அன்டி ஃபங்கள் ஜெல் அல்லது சொட்டுமருந்துகள் உபயோகிக்கப்படும்.
- இன்னொரு தொற்றுநோய் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, குழந்தைகளின் பாலூட்டும் போத்தல்களில் கிருமியளிக்கவும் மற்றும் முலைக் காம்புகளை நன்கு சுத்தம் செய்யவும்.