பலிவிஸுமப் (Palivizumab)

Palivizumab [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பலிவிஸுமப் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும்.

உங்கள் பிள்ளை பலிவிஸுமப் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். பலிவிஸுமப் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

பலிவிஸுமப் என்பது உடலின் நோய் எதிர்ப்புத் தொகுதியானது, RSV வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராகப் போராட உதவும் ஒரு ஊசிமருந்து.

பலிவிஸுமப் மருந்து, சைனகிஸ்® என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதையும் நீங்கள் கேட்டிருக்கலாம். பலிவிஸுமப் மருந்து, ஊசி மருந்து வடிவத்தில் வருகிறது. அது தசையினுட் செலுத்தப்படுகிறது.

இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு

உங்கள் பிள்ளைக்கு பலிவிஸுமப் மருந்துக்கு ஒவ்வாமை இருந்தால் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்:

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளில் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்:

 • இரத்தம் உறைவதில் பிரச்சினைகள் அல்லது இரத்தச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கையில் குறைவு
 • இதய நோய்

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்து எப்படிக் கொடுக்கப்படவேண்டும்?

 • ஒரு மருத்துவர் அல்லது தாதி ஒரு ஊசியின் மூலமாக பலிவிஸுமப் மருந்தை உங்கள் பிள்ளையின் தசைக்குள், பெரும்பாலும் தொடைப் பகுதியில், உட்செலுத்துவார். உங்கள் பிள்ளை இந்த மருந்தை மருத்துவரின் அலுவலகம், மருத்துவமனை, அல்லது தாதி மருத்துவப் பிரிவில் பெற்றுக்கொள்வான்(ள்)
 • பலிவிஸுமப் மருந்து பெரும்பாலும் மாதத்துக்கு ஒரு முறை, நவம்பர் முதல் ஏப்ரல் வரை கொடுக்கப்படும்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?

உங்கள் பிள்ளை பலிவிஸுமப் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:

 • காய்ச்சல்
 • எரிச்சலடைதல், பதற்றம், அல்லது பரபரப்பு
 • மருந்தூசி ஏற்றப்பட்ட பகுதியில் சிவந்திருத்தல், நசுக்குக்காயம், அல்லது வலி
 • தோற்படை
 • தலைவலி

பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

 • சுவாசிப்பதில் கஷ்டம்
 • கைவிரல் நகங்கள், உதடுகள், தோல், உள்ளங்கைகள், அல்லது நகத்தடி நீல நிறமாதல்
 • விரைவான, மந்தமான, அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்?

பலிவிஸுமப் மருந்துடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாத சில மருந்துகள் இருக்கின்றன அல்லது சில நிலைமைகளில் பலிவிஸுமப் வேளைமருந்து அல்லது வேறு மருந்துகள் தேவையானபடி சரி செய்யப்படவேண்டியிருக்கலாம். உங்கள் பிள்ளை வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை அல்லது இயற்கை மருந்துப் பொருட்கள்) உட்கொள்வதாக இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளருக்குத் தெரிவிக்கவேண்டியது முக்கியம்.

உங்கள் பிள்ளையை RSV நோயைப் பெற்றுக்கொள்வதிலிருந்து முழுமையாகத் தடுப்பதற்கு மருந்து எதுவுமில்லை. RSV நோய் தொடுதல் மூலம் பரவலாம் என்பதை நினைவில் வைக்கவும். உங்கள் பிள்ளையைத் தொடுவதற்கு முன்பு, உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரினால் கழுவுவதன் மூலம் RSV நோய் பரவுவதை நிறுத்தலாம்.

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?

உங்கள் பிள்ளை உட்கொள்ளும் எல்லா மருந்துகளின் பட்டியலையும் வைத்துக்கொள்ளவும் மற்றும் அதை மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் காண்பிக்கவும்.

உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

உங்கள் பிள்ளை பலிவிஸுமப் மருந்தைப் பெற்றுக்கொண்டபின்னர் உங்கள் பிள்ளையின் தொற்றுநோய்த் தடுப்பை (தடுப்பூசி மருந்துகள்) கொடுப்பதற்குத் தாமதிக்கத் தேவையில்லை. அது உங்கள் பிள்ளையின் தடுப்பு மருந்துக்கான பிரதிபலிப்பில் குறுக்கிடாது.

உங்கள் பிள்ளை பலிவிஸுமப் மருந்தைப் பெற்றுக்கொண்ட திகதியை நீங்கள் எழுதி வைக்கவேண்டும். இந்தத் தகவலை உங்கள் பிள்ளையின் ஒழுங்கான தடுப்பூசிக்கான அட்டையுடன் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

திரவ பலிவிஸுமப் மருந்தை உங்கள் வீட்டில் வைத்திருப்பீர்களானால், அதைக் குளிர்ச்சாதனப் பெட்டியில் வைக்கவும். இந்த மருந்தை உறைநிலையில் வைக்கவேண்டாம்.

காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

பலிவிஸுமப் மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பூட்டப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான பலிவிஸுமப் மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

 • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
 • நீங்கள் ஒன்டாரியோவில் வெறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
 • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத் துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது பலிவிஸுமப் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. பலிவிஸுமப் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: மார்ச் 16 2010