பேரழிவினால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்புகள்

Psychological effects of disaster on children [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

இயற்கையான அல்லது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பேரழிவை அனுபவித்த பிள்ளைகளுக்கான காரணங்கள், அறிகுறிகள், மற்றும் சிகிச்சைகள் பற்றி இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு கண்னோட்டம்

பேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு என்றால் என்ன?

உங்கள் பிள்ளை ஒரு பேரழிவினூடாக வாழும்போது, அவளின் உடல்ரீதியான, மனரீதியான, மற்றும் உணர்ச்சிரீதியான ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பேரழிவுக்கான வழக்கமான எதிர்விளைவுகள் இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட சில எதிர்விளைவுகள், வழக்கமாக எதிபார்த்ததைவிட அதிக காலம் நீடிக்கும்போது மருத்துவ உதவி அவசியமானதாக இருக்கலாம். ஒரு பேரழிவைச் சமாளிப்பதற்கு உங்கள் பிள்ளை மற்றும் குடும்பத்தினருக்கு உதவி செய்யும்படி உங்கள் குடும்ப மருத்துவரிடம் கேட்கவும். பேரழிவுக்குப் பின்னர் நிவாரணமடைந்து, நன்கு முன்னேற்றமடைவதுதான் இலக்கு.

பேரழிவு விபரிக்கப்படுகிறது

பேரழிவுகள் என்பது வழக்கமான மனித அனுபவத்தின் பாகமல்லாத, எதிர்பாராத நிகழ்வுகள் ஆகும். பேரழிவுகள், பிள்ளைகள் மற்றும் இளம் பருவத்தினர் உட்பட எல்லாரிலும் மன உளைச்சலை உண்டாக்குகிறது. ஒரு பேரழிவு இயற்கையாக ஏற்படலாம் அல்லது மனிதனால் ஏற்படலாம்.

இயற்கைப் பேரழிவுகளுக்கான உதாரணங்கள் பின்வருமாறு:

 • பூமியதிர்ச்சிகள்
 • சூறாவளிக் காற்று
 • வெள்ளப்பெருக்கு

மனிதனால் ஏற்படுத்தப்படும் பேரழிவுகளுக்கான உதாரணங்கள் பின்வருமாறு:

 • விமான விபத்துக்கள்
 • மிகப்பெரிய வேதிப்பொருள் கசிவு
 • அணுவுலை விபத்துக்கள்
 • பயங்கரவாதிகளின் தாக்குதல்

பேரழிவுகள் ஒரு பிள்ளையின் வாழ்க்கையைப் பல வழிகளில் தகர்க்கலாம். அவளின் வீடு அல்லது பாடசாலைக் கட்டிடங்கள் சேதப்படுத்தப்படலாம் அல்லது அழிக்கப்படலாம். அவளுக்கு மின்சாரம் அல்லது சுத்தமான தண்ணீர் கிடைக்காமலிருக்கலாம். அவள் தன் நண்பர்கள் அல்லது குடும்ப அங்கத்தினரை இழக்கலாம். அல்லது அவளைச் சுற்றி அல்லது தொலைக்காட்சியில் மனதைக் குழப்பும் உருவங்களைப் பார்க்கலாம். அவளின் மார்க்கம்(ரூடீன்) தகர்க்கப்படலாம். இந்த மாற்றங்கள் அவளது மன ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். உங்கள் பிள்ளையின் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதில் உங்கள் குடும்ப மருத்துவர் உங்களுக்கு உதவி செய்வார். மற்றும் உங்கள் பிள்ளை பேரழிவு அனுபவத்திலிருந்து நிவாரணமடைவாள் என்பதை உறுதி செய்வார்.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

ஒரு பேரழிவுக்கு பிள்ளைகள் மற்றும் பருவ வயதினரின் பொதுவான பிரதிபலிப்புகள்

ஒரு பேரழிவுக்குக்குப் பின்னர் முதற்கட்டப் பிரதிபலிப்பு பயம், அதிர்ச்சி, மனக்கவலை, துக்கம், அல்லது மற்றக் குடும்ப அங்கத்தினர் தப்பிப் பிழைத்து விட்டார்கள் என்ற நிம்மதி போன்ற உணர்ச்சிகளால் குறிக்கப்படுகிறது. ஒரு இளம் பிள்ளை அல்லது பருவ வயதினரும் கூட மற்றவர்களுக்கு உதவிசெய்யவேண்டும் அல்லது சேவை செய்யவேண்டும் என்ற விருப்பத்தைக் காண்பிக்கலாம்.

ஒரு பேரழிவுக்குக்குப் பின்னர் இரண்டாம் கட்டப் பிரதிபலிப்பு, பேரழிவுக்கு பல வாரங்களுக்குப் பின்னர் சம்பவிக்கலாம். உங்கள் பிள்ளை அதிகமாக ஒட்டிக்கொண்டிருத்தல், எரிச்சலடைதல், அல்லது தேவையுள்ளவள் போல நடந்துகொள்ளலாம். சில பிள்ளைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல் அல்லது இருட்டுக்குப் பயப்படுதல் போன்ற சிறுபிள்ளைத்தனமான நிலைகளுக்குத் திரும்பிச் செல்லலாம். வேறு பிள்ளைகள் பசியில் மாற்றம், மலச்சிக்கல், தலைவலிகள், அல்லது நித்திரைக் குறைவு போன்ற உடல்ரீதியான அறிகுறிகளை அனுபவிக்கலாம். விளையாடும்போது மற்றப் பிள்ளைகளின் மீது கோபம், விரோதம், மற்றும் வன்முறையைக் காண்பிக்கலாம். சில பிள்ளைகள் சில காலத்துக்கு பேரழிவின் விபரங்களை விளையாட்டாகத் திரும்ப நடித்துக் காட்டுவார்கள். இது ஒரு சமாளிக்கும் வழிமுறை. பேரழிவின் முடிவான விளைவை மாற்றுவதன் மூலம் “மந்திர மன ஒட்டத்தை”யும் வெளிக்காட்டுவார்கள். சில பிள்ளைகள் பேரழிவுக்கு தாங்கள் தான் காரணம் என நினைப்பார்கள். அதைத் தொடர்ந்து குற்ற உணர்வு வரலாம்.

உங்கள் பிள்ளை அல்லது பருவ வயதினர், தங்கள் வாழ்க்கையைத் திரும்பக் கட்டியெழுப்புவதில் தாமதம் ஏற்படும்போது, திருப்தியின்மை அல்லது கசப்பு போன்ற வலிமையான உணர்வைக் கொண்டிருப்பார்கள். மற்றப் பிள்ளைகள் சமுதாய சூழ்நிலைகளிலிருந்து பின்வாங்குவார்கள், அல்லது ஒருகாலத்தில் மகிழ்ந்தனுபவித்த நடவடிக்கைகளில் அக்கறை இழப்பார்கள். பேரழிவுக்குப் பின்னர் ஒரு சில வாரங்களுக்கு இவை வழக்கமான பிரதிபலிப்புகள் என சில மருத்துவர்கள் கூறுவார்கள்.

மூன்றாம் கட்டப் பிரதிபலிப்பு என்பது திரும்பக்கட்டும் நிலை. பிள்ளைகள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தினர் தங்கள் வாழ்க்கையைத் திரும்பக் கட்ட நாடுவார்கள். இந்த நிலைக்கு வரப் பல மாதங்கள் அல்லது வருடங்கள் செல்லலாம்.

பாலின வித்தியாசங்கள்

பேரழிவுகளுக்குப் பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகள் வித்தியாசமான வழிகளில் பிரதிபலிக்கிறார்கள் என மனோதத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆண் பிள்ளைகளை விடப் பெண் பிள்ளைகள் இலகுவாகத் தங்கள் மனக்கவலைகளை வாய் மூலம் வெளிப்படுத்துவார்கள். அவர்கள் அதிகமான கேள்விகளைக் கேட்கலாம். அவர்களுக்குப் பேரழிவைப் பற்றி திரும்பத் திரும்ப வரும் யோசனைகள் அதிகமாக இருக்கும். ஆண் பிள்ளைகள் கோபம் மற்றும் வன்முறையான நடவடிக்கைகளை மேலும் அதிகமாக வெளிக்காட்டுவார்கள். ஆண்பிள்ளைகள் நிவாரணமடைவதற்கும் அதிக காலம் செல்லலாம்.

துக்கம்

உங்கள் பிள்ளை ஒரு அன்பானவரின் இழப்பை அனுபவித்திருந்தால், அல்லது அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், துக்கம் தான் ஒரு பொதுவான பிரதிபலிப்பு. பெரும்பாலும் பேரழிவு நடைபெற்றவுடனே துக்கம் மிக அதிக தீவிரமுடையாதாக இருக்கும். பின்னர் அடுத்த சில வாரங்களில் அது தணிந்துவிடும். ஒரு அன்பானவருக்கான துக்கம் மற்றும் புலம்பல் பெரும்பாலும் 6 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும். இது ஒரு வழக்கமான எதிர்விளைவு. உங்கள் பிள்ளை துக்கம் அல்லது இழப்பின் உணர்வை வெளிக்காட்டாவிட்டால், மருத்துவ உதவியை நாடவும். அத்துடன், உங்கள் பிள்ளையின் துக்கம் எதிர்பார்த்ததைவிட அதிக காலம் நீடித்தாலும் ஒரு மருத்துவருடன் பேசவும்.

பேரதிர்ச்சிக்குப் பிந்திய மன உளைச்சலின் குழப்பம் (PTSD)

அநேக பிள்ளைகள் பேரழிவு நடைபெற்றவுடனேயே அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளைக் காண்பிப்பார்கள். ஒரு சில பிள்ளைகள் முழுமையான குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். PTSD க்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

 • பேரதிர்ச்சியின் நிகழ்வுகளை நாடகம், பேய்க்கனவு, அல்லது மீள் காட்சிகள் மூலமாக திரும்பவும் அனுபவித்தல்
 • எரிச்சல் அதிகரித்தல், கவனக் குறைவு, அல்லது (வயதில் பெரிய பிள்ளையில் படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்ற) சிறுபிள்ளைத் தனத்துக்குத் திரும்புதல்
 • ஒரு வலிமையான திடுக்கிடும் எதிர்விளைவு
 • முன்பு மகிழ்ந்தனுபவித்த நடவடிக்கைகளில் அக்கறையின்மை
 • நம்பிக்கையற்ற எதிர்கால உணர்வு

பேரழிவுக்குப் பின் உளவியல்ரீதியாகப் பேரதிர்ச்சியடைந்த உங்கள் பிள்ளைக்கு ஒரு மருத்துவர் செய்யக்கூடியவை

உங்கள் பிள்ளையின் முன்னேற்றம் மற்றும் நிவாரணம் பற்றி மதிப்பீடு செய்ய உங்கள் பிள்ளையின் மருத்துவர் உங்களுக்கு உதவி செய்வார். பிள்ளையின் சமாளிக்கும் உபாயங்களை அவதானித்து, பிள்ளை உணர்ச்சி ரீதியாக நிலைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்வார். உங்கள் பிள்ளை நிலைமையை நன்கு சமாளிக்காவிட்டால், சிகிச்சை தேவையா என்பதை மருத்துவர் தீர்மானிப்பார்.

உங்கள் பிள்ளைக்கு உதவி செய்ய நீங்கள் செய்யக்கூடியவை

உங்களில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்

பெற்றோர்கள் பேரழிவை அனுசரித்துப் போவது, பிள்ளைகள் அதை அனுசரித்துப் போவதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. பேரழிவுக்கான பெற்றோரின் பிரதிபலிப்பு பிள்ளைகளின் பிரதிபலிப்புடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. உங்கள் சொந்த உளவியல் பேரதிர்ச்சியை நன்கு கையாளுகிறீர்கள் என்பதில் நிச்சயமாயிருக்கவும். தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடவும்.

ஆதரவு அளிக்கவும்

பேரதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கு, பிள்ளையும் குடும்பத்தினரும் ஒருமித்து உதவி செய்யலாம். வெளிப்படையான பேச்சுத் தொடர்பு மற்றும் ஆதரவை உற்சாகப்படுத்தவும்.

உங்கள் பிள்ளை சொல்வதை உற்றுக் கேட்கவும்

உங்கள் பிள்ளைக்கு ஆதரவின் ஒரு ஊற்றுமூலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதுதான் இலக்கு. பிள்ளைகள் தங்கள் பயங்கள் மற்றும் கவலைகளைத் தெரிவிக்கும்போது உற்றுக் கேட்கவும். உங்கள் பிள்ளையின் தைரியம் மற்றும் உற்சாகத்தை வலியுறுத்த முயற்சிக்கவும்.

வழக்கமாகச் செய்யும் வேலைகளைச் செய்யத் தொடங்கவும்

பேரழிவுக்குப் பின்னர், முடிந்தளவு விரைவாக தினசரி செய்யும் வேலைகளை செய்யத் தொடங்கவும். கால அட்டவணைப்படி பிள்ளைகள் நன்றாகச் செய்வார்கள். தினசரி செய்யும் வேலைகள் ஆறுதல் அளிக்கும். ஏனென்றால், அவைகள் அவர்களின் நாளுக்கான யதார்த்தமான எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருக்க அனுமதிக்கும். வழக்கமான நேரங்களில் உணவுகளை உண்ணவும். வழக்கமாகப் படுக்கைக்குப் போகும் நேரத்தை அமல் படுத்தவும். பாடசாலைக்குப் போகும் வயதுடைய பிள்ளைகள் மற்றும் பருவ வயதினருக்கு வேலைகள் மற்றும் கடமைகளைப் பங்கிட்டுக் கொடுக்கவும். சில பிள்ளைகள் ஒரு நோக்கத்தைக் கண்டுபிடிக்கும் ஒரு முயற்சியாக, மற்றவர்களுக்குத் தன்னார்வத் தொண்டு செய்வதில் ஒரு அக்கறையை வெளிக்காட்டக்கூடும். உங்கள் பிள்ளை அல்லது பருவ வயதினர், தொலைக்காட்சி அல்லது இணைய தளத்தில் அமைதியைக் கெடுக்கும் அல்லது வன்முறையான படங்களைப் பார்ப்பதை மட்டுப்படுத்தவும்.

எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்

பின்வரும் நிலைமைகளில் உங்கள் வழக்கமான மருத்துவரைப் பார்க்கவும்:

 • சிறுபிள்ளைத்தனமான அல்லது அழிவுக்கான நடத்தைகள் ஒரு மாதத்துக்கு மேலாக நீடிக்கிறது
 • உங்கள் பிள்ளைக்கு நீண்ட காலம் நித்திரையில் குழப்பம் இருக்கிறது, இயல்பு ஊக்கத்தில் குறைவைக் காண்பிக்கிறான், அதிகமாகப் பின்வாங்குகிறான் அல்லது அதிகளவில் சார்ந்து இருக்கிறான், அல்லது திரும்பத் திரும்பக் கவலைப்படுகிறான்.

முக்கிய குறிப்புகள்

 • உங்கள் பிள்ளை ஒரு பேரழிவினூடாக வாழும்போது, அவனது உடல்ரீதியான, மனரீதியான, மற்றும் உணர்ச்சிரீதியான ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
 • வழக்கமாக எதிர்பார்த்தைவிட அதிக காலத்துக்குக் குறிப்பிட்ட சில எதிர்விளைவுகள் நீடித்தால் மருத்துவ உதவி அவசியமானதாக இருக்கலாம்.
 • பேரழிவுக்குப் பின்னர் நிவாரணமடைவது மற்றும் நன்கு முன்னேற்றமடைவது தான் இலக்கு.
 • ஒரு பேரழிவு இயற்கையானதாக இருக்கலாம் அல்லது மனிதனால் ஏற்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.
 • ஆரோக்கியமாக இருப்பது, உங்கள் பிள்ளை சொல்வதை உற்றுக் கேட்பதன் மூலம் ஆதரவளிப்பது மற்றும் வழக்கமான தினசரி வேலைகளுக்குத் திரும்புவது போன்றவற்றின் மூலம் உங்கள் பிள்ளைக்கு நீங்கள் உதவி செய்யலாம்.
Last updated: மே 07 2010