ஸ்கோப்பிங் செயற்பாடுகள்: நுரையீரல் ஊடு சோதிப்பு, குரல் வளை ஊடு சோதிப்பு, உணவுக் குழாய் ஊடு சோதிப்பு மற்றும் லேசர் அறுவைச் சிகிச்சை

Scoping procedures: Bronchoscopy, laryngoscopy, esophagoscopy and laser surgery [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளைக்கு ஏன் ஊடு சோதிப்பு செய்யப்படவேண்டும், எப்படித் தயாராகலாம் மற்றும் எதை எதிர்பார்க்கவேண்டும் என்பதைப்பற்றிக் கற்றுக் கொள்ளவும்.

ஸ்கோப்பிங் செயற்பாடுகள் என்றால் என்ன?

உங்கள் பிள்ளைக்கு சுவாசிப்பதில் அல்லது விழுங்குவதில் பிரச்சினை இருக்கிறது. பிரச்சினைக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிவதற்கு, மருத்துவர் உங்கள் பிள்ளையின் காற்று மற்றும் உணவு செல்வழிப்பாதையின் உட்பகுதியை நோக்கவேண்டும். இதைச் செய்வதற்கு உங்கள் மருத்துவர், மின்குமிழ் மற்றும் ஒரு மிகச் சிறிய புகைப்படப் பெட்டி என்பன ஒரு முனையில் பொருத்தப்பட்ட ஒரு மெல்லிய குழாயை உபயோகிப்பார். இந்தக் கருவி ஸ்கோப் என அழைக்கப்படும்.

இந்த ஊடு சோதிப்பின் போது, உங்கள் பிள்ளைக்கு பொது மயக்க மருந்து என்றழைக்கப்படும் ஒரு விசேஷமான "நித்திரைக்கான மருந்து" கொடுக்கப்படும். அதாவது உங்கள் பிள்ளை செயற்பாட்டு நேரம் முழுவதும் நித்திரையாயிருப்பான் மற்றும் எந்த வலியையும் உணரமாட்டான்.

அசாதாரணமான திசுவினால் பிரச்சினை ஏற்பட்டிருந்தால், மருந்துவர் அதை லேசர் அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றிவிடலாம்.

ஊடு சோதிப்பு செயற்பாட்டைச் செய்யும் மருத்துவர் ஓட்டோலாரிங்க்கொலோஜிஸ்ற்/தலை மற்றும் கழுத்து அறுவை மருத்துவர் என அழைக்கப்படுவார். இவர் காது, மூக்கு, மற்றும் தொண்டை பிரச்சினைகளில் சிறப்புத் தேர்ச்சிபெற்ற வைத்தியராவார்.

உங்கள் பிள்ளையின் காற்று செல்வழிப்பாதையின் உட்பகுதியைப் பரிசோதிப்பதற்காக, நுரையீரல் ஊடு சோதிப்பு மற்றும் குரல் வளை ஊடு சோதிப்பு என்பனவற்றைச் செய்வோம்

உங்கள் பிள்ளையின் காற்று செல்வழிப்பாதை மூச்சுப் பெருங்குழாய் என அழைக்கப்படும் இதனுள்ளே பார்ப்பதற்காக மருத்துவர் நுரையீரல் ஊடு சோதிப்பு மற்றும் குரல் வளை ஊடு சோதிப்பு என்னும் செயற்பாடுகளை உபயோகிப்பார். இந்தச் செயற்பாடுகளின் போது மருத்துவர் ஒரு ஊடு சோதிப்புக் கருவியை உங்கள் பிள்ளையின் வாயிலும் கீழே மூச்சுப் பெருங்குழலிலும் வைப்பார். உங்கள் பிள்ளைக்கு சுவாசித்தலில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை மருத்துவரால் ஊடு சோதிப்புக் கருவியினூடாகப் பார்க்கமுடியும். இந்தச் செயற்பாடு ஏறக்குறைய 1 மணி நேரம் வரை நடைபெறும்.

உங்கள் பிள்ளையின் உணவு செல்வழிப்பாதையின் உட்பகுதியைப் பரிசோதிப்பதற்காக, நாங்கள் உணவுக்குழாய் ஊடுசோதிப்பைச் செய்வோம்

உங்கள் பிள்ளையின் உணவு செல்வழிப்பாதை உணவுக்குழாய் என அழைக்கப்படும். அதனுள்ளே பார்ப்பதற்காக, மருத்துவர் உணவுக்குழாய் ஊடு சோதிப்பு என்னும் செயற்பாட்டைச் செய்வார். இந்தச் செயற்பாட்டின்போது மருத்துவர் ஒரு ஊடு சோதிப்புக் கருவியை உங்கள் பிள்ளையின் வாய் மற்றும் கீழே உணவுக்குழாய் வரையாக வைப்பார். உங்கள் பிள்ளைக்கு உணவை விழுங்குவதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை மருத்துவரால் ஊடு சோதிப்புக் கருவியினூடாகப் பார்க்கமுடியும். இந்தச் செயற்பாடு ஏறக்குறைய 1 மணி நேரம் வரை நடைபெறும்

லேசர் அறுவைச் சிகிச்சை

லேசர் அறுவைச் சிகிச்சையானது, தேவையற்ற திசுக்கள் அல்லது அடைப்புகளை அகற்றுவதற்கு அறுவைக் கத்திகளுக்குப் பதிலாக அடர்த்தியான ஒளிக்கற்றைகளை உபயோகிக்கிறது. நுரையீரல் ஊடு சோதிப்பு, , குரல்வளை ஊடு சோதிப்பு மற்றும் உணவுக் குழாய் ஊடு சோதிப்பு ஆகிய செயற்பாடுகளின்போது லேசர் அறுவைச் சிகிச்சை செய்யப்படலாம்.

அறுவைச்சிகிச்சைக்கு முன்னர்

அறுவைச் சிகிச்சைக்குப் பல மணி நேரங்களுக்கு முன்னர், உங்கள் பிள்ளை உணவு உண்பதையும் பானங்கள் குடிப்பதையும் நிறுத்த வேண்டும். தாதி அல்லது மருத்துவர் உங்கள் பிள்ளை எப்போது உணவு உண்பதையும் பானங்கள் குடிப்பதையும் நிறுத்த வேண்டும் என்பதை சொல்லுவார். இந்தத் தகவல்களைக் கீழே எழுதவும்:

அறுவைச் சிகிச்சைக்கான திகதி மற்றும் நேரம்: _____________________

உங்கள் பிள்ளை உணவு உண்பதை நிறுத்த வேண்டிய நேரம்: __________________

உங்கள் பிள்ளை பானங்கள் குடிப்பதை நிறுத்த வேண்டிய நேரம்: ________________

நினைவில் வைக்கவேண்டிய வேறு காரியங்கள்: _________________

செயற்பாட்டின்போது உங்கள் பிள்ளை எந்த வலியையும் உணரமாட்டான்

செயற்பாடு தொடங்குவதற்கு முன்னர், உங்கள் பிள்ளைக்கு பொது மயக்க மருந்து என அழைக்கப்படும் ஒரு விசேஷ "நித்திரைக்கான மருந்து" கொடுக்கப்படும். இது உங்கள் பிள்ளை செயற்பாட்டு நேரம் முழுவதும் நித்திரையாயிருப்பான் மற்றும் எந்த வலியையும் உணரமாட்டான் என்பதை நிச்சயப்படுத்தும். செயற்பாட்டின் பின்னர் உங்கள் பிள்ளையின் தொண்டை புண்வலி உள்ளதாக மற்றும் வரண்டு இருக்கும். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் உங்கள் பிள்ளைக்கு வலி இருந்தால், தேவைக்கேற்றபடி அவளுக்கு வலி நிவாரண மருந்து கொடுக்கப்படும்.

செயற்பாட்டின் பின்னர்

செயற்பாட்டின் பின்னர், உங்கள் பிள்ளையை நிவாரணமடையும் அறைக்குக் கொண்டு செல்வோம். இது மயக்கமருந்துக்குப் பிந்திய பராமரிப்புத் தொகுதி என்று அழைக்கப்படும். இங்குதான் உங்கள் பிள்ளை விழித்து எழும்புவாள். உங்கள் பிள்ளையின் வயது மற்றும் அறிகுறிகளைப் பொறுத்து உங்கள் பிள்ளை நிவாரணமடையும் அறையில் 1 முதல் 2 மணி நேரம் வரையில் தங்கியிருப்பாள்.

உங்கள் பிள்ளை நிவாரணமடையும் அறையில் தங்கியிருந்த பின்னர், அவளை தலை-கழுத்துப் பிரிவிலிருக்கும் ஒரு விசேஷ அறைக்கு மாற்றிவிடுவோம். இந்த அறையில் ஒரு தாதி எப்போதுமே இருப்பார். இது நிரந்தரமான கண்காணிப்பு அறை என அழைக்கப்படும். பெரும்பாலும் உங்கள் பிள்ளை இரவு முழுவதும் இந்த அறையில் தங்கியிருக்கக்கூடும்.

உங்கள் பிள்ளை முற்றாக விழிந்தெழுந்ததும் நீங்கள் அவளைச் சந்திக்கமுடியும்

அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் அறையிலுள்ள ஒரு தொண்டர் உங்கள் பிள்ளையைப் பார்ப்பதற்காக உங்களை அழைத்துச் செல்வார்.

உங்கள் பிள்ளை விழித்தெழும்போது அவனுக்கு இலேசான இருமல் அல்லது கரகரப்பான குரல் இருக்கலாம். பெரும்பாலும் இது தானாகவே மாறி விடும்.

செயற்பாட்டின் பின்னர் உணவு உண்பது மற்றும் பானங்கள் குடிப்பது

செயற்பாட்டின் பின்னர் 2 முதல் 4 மணி நேரங்கள் வரை உங்கள் பிள்ளை உணவு உண்பதற்கு மற்றும் பானங்கள் குடிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டான். எப்போது உங்கள் பிள்ளை உணவு உண்ண மற்றும் பானங்கள் குடிக்கத் தொடங்கலாம் என்பதை அறிய உங்கள் பிள்ளையின் தாதியிடம் கேட்கவும். பின்பு உங்கள் பிள்ளை தண்ணீர் அல்லது அப்பிள் ஜூஸ் போன்ற தெளிவான நீராகாரங்களைப் பருகத் தொடங்கலாம். பின்பு ஜெல்-ஓ போன்ற மென்மையான உணவை உண்ணலாம். உங்கள் பிள்ளையால் நீராகாரங்களைப் பருக முடியும்பொது, தனது வழக்கமான உணவை உண்ணத் தொடங்கலாம்.

மருத்துவமனையில் ஒரு பகல் மற்றும் 1 இரவு

செயற்பாடு நடைபெறும் நாள் முழுவதும், ஒருவேளை இரவும்கூட, உங்கள் பிள்ளை மருத்துவமனையில் இருப்பான். இது உங்கள் பிள்ளை செயற்பாட்டின் பின்னர் எவ்வளவு விரைவாக நிவாரணமடைகிறான் என்பதில் தங்கியுள்ளது. நிரந்தரமான கண்காணிப்பு அறையில் உங்கள் பிள்ளையுடன் ஒரு பெற்றோர் தங்கியிருக்கலாம்.

வீட்டில் உங்கள் பிள்ளையைப் பராமரித்தல்

உங்கள் பிள்ளை அதிகளவு நீராகாரங்கள் பருகவேண்டும். உங்கள் பிள்ளை மென்மையான உணவை உண்ணத் தொடங்க வேண்டும். அதன் பின்னர், உங்கள் பிள்ளை மெதுவாகத் தனது வழக்கமான உணவை உண்ணத் தொடங்கலாம்.

உங்கள் பிள்ளை வழக்கம்போல குளிக்கலாம்.

முதற் சில நாட்களுக்கு, உங்கள் பிள்ளை அமைதியான நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடமுடியும். அவள் பாடசாலைக்கு அல்லது பகல்நேரப் பராமரிப்பு நிலையத்துக்குச் செல்லக்கூடாது. உங்கள் பிள்ளை நிவாரணமடைந்ததாக உணரும்போது அல்லது தலை-கழுத்து அறுவை மருத்துவர் அனுமதிக்கும்போது அவள் பாடசாலைக்கு அல்லது பகல்நேரப் பராமரிப்பு நிலையத்துக்குப் போகலாம்.

உங்கள் பிள்ளைக்குத் தொண்டையில் வறட்சி இருக்கலாம். உங்கள் பிள்ளையின் அறையிலுள்ள ஓரு ஈரப்பதமூட்டி அவளது மூக்கு மற்றும் தொண்டையை ஈரலிப்பாக வைக்க உதவி செய்யும்.

உங்கள் பிள்ளைக்கு இலேசான தொண்டைவலி இருந்தால், அசெட்டமினோஃபென் (டைலெனோல் அல்லது டெம்ப்ரா) கொடுக்கவும். மருந்து அட்டையிலுள்ள அறிவுரைகளைப் பின்பற்றவும். எவ்வளவு மருந்து கொடுக்கப்படவேண்டும் என்பதில் நிச்சயமற்றவராக இருந்தால், ஓரு தாதி அல்லது மருத்துவரிடம் கேட்கவும்.

செயற்பாட்டுக்குப் பின்னர் 2 வாரங்களுக்கு உங்கள் உங்கள் பிள்ளைக்கு ஐபியூரோஃபின் (மோட்ரின், அட்வில், அல்லது மிடொல் போன்ற) அல்லது ASA (அசெட்டில்சாலிசிலிக் அசிட் அல்லது ஆஸ்பிரின் என்றும் அழைக்கப்படும்) கொடுக்க வேண்டாம். இந்த மருந்துகள் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் உங்கள் பிள்ளையின் இரத்தம் கசியும் ஆபத்தை அதிகரிக்கும். உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்துகள் தேவைப்பட்டால், அவற்றை அவளுக்குக் கொடுக்க முடியுமா என உங்கள் தலை-கழுத்து அறுவைச் சிகிச்சை மருத்துவரைக் கேட்கவும்.

தலை-கழுத்து அறுவைச் சிகிச்சை மருத்துவரைத் திரும்பவும் சந்தித்தல்

உங்கள் பிள்ளையைத் திரும்பவும் சந்திக்கவேண்டுமா என உங்கள் தலை-கழுத்து அறுவைச் சிகிச்சை மருத்துவர் உங்களுக்குச் சொல்லுவார். அது தேவைப்பட்டால், தலை-கழுத்து அறுவைச் சிகிச்சை மருத்துவ மனையில் உங்களுக்கு ஒரு மருத்துவமனை சந்திப்புத் திட்டம் கொடுக்கப்படும்.

செயற்பாட்டின் பின்னர் சாத்தியமாகக்கூடிய பிரச்சினைகள்

உங்கள் பிள்ளை வீடு திரும்பியபின்னர் அவனுக்கு பின்வரும் அறிகுறிகளில் ஏதாவது ஒன்றிருந்தால் தயவு செய்து உடனே தலை-கழுத்து அறுவைச் சிகிச்சை மருத்துவர் அல்லது தலை-கழுத்து அறுவைச் சிகிச்சை மருத்துவமனையை அழைக்கவும்.

 • விழுங்குவதில் கஷ்டம்
 • சுவாசிப்பதில் கஷ்டம்
 • காய்ச்சல் 38.5 ℃ (101℉) அல்லது அதற்கும் அதிகம்
 • மார்பு வலி அல்லது தொண்டை வலி மோசமாகிக்கொண்டே போதல்
 • இருமல் மோசமாகிக்கொண்டே போதல்
 • நிறுத்தாமல் எச்சில் வடிந்துகொண்டேயிருத்தல்
 • நிறுத்தாமற் தொடர்ந்து வாந்தி எடுத்துக்கொண்டேயிருத்தல்
 • வாய் அல்லது மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்

அவசர நிலை ஏற்பட்டால் அல்லது நீங்கள் கவலையடைந்தால், தாமதிக்க வேண்டாம். உங்களுக்கு மிக அருகாமையிலிருக்கும் அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்கு உங்கள் பிள்ளையை அழைத்துச் செல்லவும்.

உங்கள் பிள்ளையின் தலை- கழுத்து அறுவை மருத்துவரின் பெயரைக் கீழே எழுதவும்:

மருத்துவரின் தொலைபேசி எண்ணைக் கீழே எழுதவும்:

தலை- கழுத்து அறுவை மருத்துவமனையின் தொலைபேசி எண்ணைக் கீழே எழுதவும்:

உங்கள் குடும்ப மருத்துவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணைக் கீழே எழுதவும்:

முக்கிய குறிப்புகள்

 • ஊடு சோதிப்பு உங்கள் பிள்ளையின் தொண்டையினுள் பரிசோதனை செய்ய மருத்துவரை அனுமதிக்கும். இது 1 மணி நேரம்வரை எடுக்கும்.
 • செயற்பாட்டின்போது உங்கள் பிள்ளைக்கு நித்திரைக்கான மருந்து கொடுக்கப்படும்.
 • உங்கள் பிள்ளை பெரும்பாலும் ஒரு பகல் மற்றும் ஒரு இரவு மருத்துவமனையில் தங்கியிருப்பான்.
Last updated: நவம்பர் 10 2009