வாந்தியெடுத்தல்

Vomiting [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

வாந்தியெடுத்தல் என்பது வழக்கமாக ஒரு வைரஸின் காரணமாக, இரைப்பையில் இருப்பவைகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுதலாகும். வாந்தியெடுத்தலுக்குள்ள ஒரே சிகிச்சையான உணவுச் சிகிச்சையப் பற்றி வாசியுங்கள்.

வாந்தியெடுத்தல் என்றால் என்ன?

மேலதிக-பலமான இரைப்பைச் சுருங்கல்கள் ஏற்படும்போது, இரைப்பையிலிருப்பவை மீண்டும் உணவுக் குழாய் வழியாகவும், பின் வாய் அல்லது மூக்கின் வழியாக வலுக்கட்டாயமாக வெளியேற்றபடும்போது வாந்தி ஏற்படுகிறது. இது வழக்கமாக ஒரு தீவிரமற்ற சுகவீனத்தால் ஏற்படுத்தப்படுகின்றது.

வாந்தியெடுப்பதும் எதிர்க்களிப்பதும் வெவ்வேறானதாகும். எதிர்க்களிப்பு என்பது சிறிய அளவில் உணவு அல்லது பானத்தை பெருமுயற்சியெதுவுமின்றி வெளித் துப்புவதாகும். உணவை விழுங்கும் குழாயினூடாக உணவு மீண்டும் வாய்க்குள் வரும். குழந்தைகளில் எதிர்க்களிப்பு மிகவும் சாதாரணமாக காணப்படும். இது ஆபத்தானதல்ல.

உங்கள் பிள்ளை அதிக அளவில் நீர்மத்தை இழக்கிறது என்றால் வாந்தியெடுப்பது தீவிரநிலையை அடையலாம். உடலில் நீர் மிகச் சிறிய அளவிலிருந்தால் நீர்வறட்சியைஏற்படுத்தும்.

வாந்தியெடுத்தலுக்கான காரணங்கள்

இரப்பைக் குடலழற்சி (இரைப்பை வைரஸ்) எனப்படும் வைரஸினால் ஏற்படும் நோய்த்தொற்றினால், அநேகமான சந்தர்ப்பங்களில் வாந்தி ஏற்படுகின்றது. இந்த நோய்த்தொற்று இரப்பையிலும் சமிபாட்டுத் தொகுதியிலும் உறுத்தலை ஏற்படுத்துகிறது. இரப்பைக் குடல் அழற்சியினால் வாந்தியெடுக்கும் பிள்ளைகளுக்கு வயிற்றோட்டமும் ஏற்படலாம்.

தலைவலி அல்லது தலையில் காயம், இரைப்பை உறுத்தல் சிறுநீர்க் கால்வாய் தொற்றுநோய்கள், குடல் வழியில் அடைப்பு, இருமல் நிகழ்வுகள், உணவுக்கு ஒவ்வாமை, உணவால் நஞ்சூட்டம், மற்றும் ஏனைய பல காரணங்களாலும் வந்தியெடுத்தல் ஏற்படலாம். மருந்துகள், வேறு ட்றக்ஸ் (drugs), மதுபானம் போன்ற பதார்த்தங்கள் இரைப்பையை உறுத்துவதாலும் வாந்தியெடுத்தல் நிகழலாம்.

உங்கள் பிள்ளைக்கு கடுமையான வாந்தி அல்லது தொடர்ச்சியான வாந்தி இருந்தால், உடல்நல பராமரிப்பாளர் ஒருவரை சந்திக்கவும்.

வாந்தியெடுத்தல் எவ்வளவு நேரம் நீடிக்கும்?

இரைப்பைக் குடலழற்சியானது பொதுவாக வாந்தியுடனும் சிலசமயங்களில் காய்ச்சலுடனும் ஆரம்பிக்கும். வாந்தி பொதுவாக 1 அல்லது 2 நாட்கள் மட்டுமே நீடிக்கும், ஆனால் அதைவிட அதிகமாகவும் நீடிக்கலாம்.

ஒரு பிள்ளை அநேகமாக வாந்தியெடுக்கும்போது அல்லது வாந்தியெடுத்தபின் வயிற்றோட்டத்தைக் கொண்டிருக்கும். இந்த மொத்த சுகவீனமும் வழக்கமாக 1 கிழமைக்கு மேல் நீடிக்காது.

உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

உங்கள் பிள்ளைக்கு தெளிவான திரவம் கொடுக்கவும். வாந்தி எடுப்பதினால் இழக்கப்படும் நீரையும் உப்பையும் அவன் ஈடுகட்டவேண்டும்.

உங்கள் குழந்தை தாய்ப்பால் ஊட்டப்படுவதானால், தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுங்கள் அல்லது கறக்கப்பட்ட தாய்ப்பலை ஒரு புட்டி மூலம் கொடுங்கள்.

தாய்ப்பால் ஊட்டப்படாத குழந்தைகளுக்கும் பிள்ளைகளுக்கும், கடைசியாக வாந்தியெடுத்ததிலிருந்து ஒரு மணிநேரம் கடக்கும்வரை தெளிவான திரவம் கொடுக்கவும். பிள்ளைக்கு நீங்கள் வாய்வழி உடல்நீர்வறட்சி கரைசலையும் கொடுக்கலாம். இது, அவனுக்கு வேண்டிய நீர், சீனி மற்றும் உப்பை வழங்கும்

உங்கள் பிள்ளைக்கு உடல்நீர் வறட்சி ஏற்படவில்லை என்றால் மற்றும் பிள்ளை கடைசியாக வாந்தியெடுத்ததிலிருந்து குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் கடந்திருந்தால், அவன் தான் விரும்பிய பானங்களை அருந்தலாம். இது பாலையும் உட்படுத்தும். மெதுவாக மேலதிக திட உணவுகளை வழங்கவும்.

உங்கள் பிள்ளை உடல் நீர்வறட்சியடைந்திருந்தால், தொடர்ந்து வாய்வழி நீரேற்றக் கரைசலைக் கொடுங்கள்.

தாய்ப்பால் கொடுக்கப்படும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால்

தாய்ப்பால் ஊட்டப்படும் இரைப்பைக் குடலழற்சி உள்ள குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டப்படவேண்டும். அவர்கள் மார்பிலிருந்து பாலை அருந்தலாம் அல்லது வெளியேற்றப்பட்ட பாலை அருந்தலாம். பாலருந்திய பின் உங்கள் பிள்ளை வாந்தியெடுத்தால் அல்லது அடிக்கடி வாந்தியெடுத்தால், தொடர்ந்து தாய்ப்பாலூட்டவும். சிறிய அளவில் அடிக்கடி குழந்தைக்குப் பாலூட்டவும்.

முலைப்பாலை குழந்தை வழக்கமான அளவில் பருகவில்லையென்றால், முலைப்பால் உற்பத்தியை தங்க வைத்துக்கொள்வதற்காக உங்கள் பாலை நீங்கள் பம்ப் செய்ய வேண்டி வரலாம்.

தாய்ப்பால் அருந்திய பின்னும் குழந்தை தாகமாக இருந்தால், அல்லது தொடர்ந்தும் வாந்தியெடுத்துக்கொண்டிருந்தால், நீங்கள் வாய்வழி உடல்நீர்வறட்சிக் கரைசலை வழங்கலாம். வாய்வழி உடல்நீர் வறட்சிக் கரைசலை கீழே விவரிக்கப்பட்டுள்ள வண்ணம் கொடுக்கவும். தொடர்ந்தும் தாய்ப்பாலூட்டவும் அல்லது முலைப்பாலைப் பம்ப்பு செய்யவும்.

உங்கள் பிள்ளை குறைந்த அளவில் சிறுநீர் கழித்தால் மற்றும் நீங்கள் போதிய அளவு முலைப்பாலை உண்டுபண்ணுகிறீர்களா என்பதில் நிச்சயம் அற்றிருந்தால், முலைப் பாலுட்டல்களுக்கிடையில் வாய்வழி நீரேற்றக் கரைசலைக் கொடுக்கவும். உடல் நீர் வறட்சி ஏற்பட்டிருக்கக்கூடிய உங்கள் இளம் குழந்தைக்கு தேனீர் அல்லது வெறும் தண்ணீர் கொடுக்கவேண்டாம்.

உங்கள் பிள்ளை உடல் நீர்வறட்சி அடைந்துவருகிறதாக நீங்கள் நினைத்தால் உங்கள் மருத்துவரைப் பாருங்கள்.

வாய்வழி உடல் நீரேற்றல்க் கரைசல்கள்

உங்கள் பிள்ளை உடல்நீர்வறட்சியடைந்து காணப்பட்டால் (வறண்ட வாய், சுருசுருப்பின்மை, குறைந்த தடவைகள் சிறுநீர் கழித்தல்) வாய்வழி உடல்நீரேற்றக் கரைசலை உங்கள் பிள்ளைக்குக் கொடுங்கள். உங்கள் பிள்ளைக்குத் தேவையான நீர், சர்க்கரை மற்றும் உப்பை இந்த கரைசல் வழங்கும்.

பீடியாலைட், என்ஃபலைட் அல்லது பீடியாட்ரிக் எலெக்ட்ரோலைட் போன்றவை வாய்வழி உடல் நீரேற்றக் கரைசல்களுக்கு உதாரணங்களாகும். நீங்கள் வாய்வழி உடல் நீரேற்றக் கரைசலை பெரும்பான்மையான மருந்துக் கடைகள் அல்லது பலசரக்குக் கடைகளில் வாங்கலாம். வீட்டில் தயாரிக்கப்படும் கரைசல்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை, ஏனென்றால் அதிகமான உப்பு அல்லது குறைவான உப்பு கடுமையான பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

ஒரு தேக்கரண்டி, ஸிரிஞ்ச், அல்லது மருந்து துளிகருவி போன்றவற்றை உபயோகிக்கவும். நீங்கள் ஒரு போத்தல் அல்லது ஒரு கப்பை உபயோகிக்கலாம்.

ஒவ்வொரு 2 தொடங்கி 3 நிமிடங்களுக்கு உங்கள் பிள்ளைக்கு சிறிய அளவு கரைசலைக் கொடுக்கவும் (தொடக்கத்தில் 5 மி.லீ அல்லது 1 தேக்கரண்டி). உங்கள் பிள்ளை கரைசலை ஏற்றுக்கொண்டு அதைப் பருகினால் மெதுவாக அதன் அளவை அதிகரிக்கவும். ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு அதிக பட்சம் 1 அவுன்ஸ் (30 மி.லீ) ஆக அளவை அதிகரிக்கவும். ஒரு சமயத்தில் ஒரு அவுன்ஸுக்கு அதிகமாக கொடுக்கவேண்டாம். மெதுவாகப் பருகும்படி பிள்ளையை ஊக்குவிக்கவும். வேகமாகப் பருகுவது வாந்தியை ஏற்படுத்தலாம். 

உங்கள் பிள்ளை இன்னமும் வாந்தியெடுத்தால், ஒரு சமயத்தில் 1 தேக்கரண்டி (5 மி.லீ.) என தொடர்ந்து வாய்வழி உடல்நீர் வறட்சிக் கரைசலை கொடுக்கவும். பிள்ளை தொடர்ந்து வாந்தியெடுத்தால் வாய்வழி உடல்நீர்வறட்சிக் கரைசல் வேலை செய்யவில்லையென அர்த்தமாகாது. கரைசலில் உள்ள சீனி, உப்பு மற்றும் திரவம் ஆகியவை உறிஞ்சப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

வழக்கமான வாய்வழி உட்ல நீரேற்றக் கரைசலுக்கு மாற்றீடுகள்

சில பிள்ளைகள் வாய்வழி உடல்நீர்வறட்சிக் கரைசலின் உப்புத்தன்மையை விரும்பமாட்டார்கள்.

வாய்வழி உடல்நீர்வறட்சிக் கரைசலை உங்கள் பிள்ளை விரும்பாவிட்டால், அந்தக் கரைசலை குளிர்ந்த நிலையில் கொடுக்க முயற்சிக்கவும். உறைந்த வாய்வழி உடல்நீர்வறட்சிக் கரைசலும் (ஃப்ரீசி) பொப்சிக்கல்களும் கிடைக்கப்பெறும். உடல்நீர்வறட்சிக் கரைசலின் பிராண்டை அல்லது ஃப்ளேவரை அதாவது ருசியை மாற்ற நீங்கள் முயற்சிக்கலாம். உங்கள் பிள்ளை இன்னமும் மறுப்புத் தெரிவித்தால் கீழே கூறப்பட்டுள்ளதை முயற்சி செய்து பார்க்கவும்:

 • வாய்வழி நீரேற்றக் கரைசலுடன் ஜூஸைக் கலக்க முயற்சி செய்யுங்கள்: 1பகுதி ஜூஸோடு 2 பகுதி வாய்வழி நீரேற்றக் கரைசலைக் கலக்க முயற்சிசெய்யுங்கள்.
 • உங்கள் பிள்ளைக்கு பலசரக்குக் கடையில் வாங்கக்கூடிய, கேட்டரேட் அல்லது பவரேட் போன்ற மின்பகுளி விளையாட்டுப் பானம் (எலெக்ட்ரோலைட் ஸ்போர்ட்ஸ் ட்றின்க்) கொடுக்க முயற்சி செய்யுங்கள். இந்தப் பானங்கள் வாய்வழி உடல்நீரேற்றக் கரைசல்கள் போன்றவையல்ல, ஆனால் வெறும் ஜூஸ் அல்லது சோடா பொப் போன்றவற்றைவிட இவை அதிக எலக்ட்ரோலைட்களைக் கொண்டிருக்கின்றன.

இனிப்புப் பானங்களைத் தவிருங்கள்

பல பானங்களில் அதிக சீனி இருப்பதால், அவை வயிற்றோட்டத்தை மோசமாக்கலாம். உங்கள் பிள்ளைக்கு அதிக வயிற்றோட்டமிருக்குமானால் ஜூஸ் அல்லது சீனியுள்ள வேறு பானங்களைக் கொடுக்கவேண்டாம்.

உணவு கொடுங்கள்

உங்கள் பிள்ளைக்கு குடல் அழற்சி இருந்தாலும்கூட சாதாரண உணவை உட்கொள்ள முயற்சிக்க வேண்டும். அவள் நலமடைய நல்ல ஊட்டச்சத்து முக்கியமாகும். வாந்தியெடுத்தல் அடிக்கடி நிகழ்ந்தாலேயன்றி பிள்ளைக்கு பழக்கமான உணவை கொடுங்கள். அநேகமான பிள்ளைகள் வாந்தியெடுக்கும்போது எளிய உணவுகளை விரும்புவார்கள், ஆனால் விட்டுக்கொடுக்க மனமுள்ளவராயிருந்து அவள் சாப்பிட விரும்பும் ஒரு வகை உணவைக் கொடுப்பது முக்கியம். பொதுவாக, கிராக்கர், சீரியல், பான், சோறு, சூப், பழங்கள், மரக்கறிகள், மற்றும் இறைச்சி போன்றவை பொருத்தமானவையே. பிள்ளைக்கு வயிற்றோட்டமிருந்தால் இனிப்புப் பண்டங்களைத் தவிர்க்கவும்.

பால் நல்ல ஊட்டச்சத்தை வழங்குகிறது. வாந்தியெடுக்கும் அநேகமான பிள்ளைகள் இன்னமும் பால் அருந்தக்கூடியவர்களாக இருப்பார்கள். பால் அருந்தும்போது உங்கள் பிள்ளைக்கு அதிக அளவு வாந்தி அல்லது வயிற்றோட்டம் இருப்பதாக நீங்கள் நினைத்தால், லக்டோஸ் அகற்றப்பட்ட பாலைக் கொடுக்க முயற்சிக்கலாம். உங்கள் பிள்ளைக்கு நீங்கள் பால் கொடுக்காவிட்டால், அவனுக்கு ஆரோக்கியமான மற்றத் தெரிவுகள் இருப்பதை நிச்சயப்படுத்தவும்.

மருந்துகள்

உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் இருந்து அசெளகரியமாக உணருகிறதென்றால், அசெட்டமினாஃபென் (டைலெனோல், டெம்ப்ரா அல்லது வேறு பிரான்டுகள்) அல்லது ஐபியூப்ரொஃபேன் ( அட்வில், மோட்ரின் அல்லது வேறு பிரான்டுகள்) கொடுக்கலாம்.

உங்கள் பிள்ளை மருந்துக் குறிப்பு மருந்துகளை எடுப்பவனாக இருந்து, சுகவீனத்தின் போது அதை எடுப்பதில் சிரமம் உள்ளவனாக இருந்தால் உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளுங்கள்.

மருந்துக் குறிப்பில்லாமல் பெறக்கூடிய மருந்துகள் (கிராவொல் அல்லது வேறு பிரன்டுகள் போன்றவை) எப்போதும் நன்மையளிக்காது, மற்றும் சிலவேளைகளில் தூக்கக்கலக்கத்தை ஏற்படுத்தி, வாய்வழி உடல் நீரேற்றத்திற்கு இடையூறு விழைவிக்கும். தொடர்ச்சியாக வாந்தியெடுக்கும் சில சந்தர்ப்பங்களில், ஒன்டஸ்டரோன் போன்ற வாந்தியெடுப்பு எதிர்ப்பு மருந்துகளை மருத்துவர் எழுதித் தரக்கூடும். இது பொதுவாக ஒற்றை டோசாக வழங்கப்படும்.

ஏனைய குடும்ப அங்கத்தவரை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்

உங்கள் கைகளையும் பிள்ளையின் கைகளையும் நன்கு கழுவுவதில் நிச்சயமாயிருங்கள். கழிவறையை உபயோகித்த பின்பு அல்லது பிள்ளைக்கு டையப்பர் மாற்றிய பின்பு இதைச் செய்வது மிக முக்கியம். இது குடும்பத்தில் நோய் பரவுவதைத் தடுக்க உதவும்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

பின்வரும் நிலைமைகளின் போது உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உங்கள் பிள்ளையை எடுத்துச் செல்லுங்கள் அல்லது அவசியமெனில் 911 ஐ அழையுங்கள்:

 • உங்கள் பிள்ளைக்கு தலைக் காயம் இருக்கின்றது அல்லது நஞ்சூட்டம் ஏற்பட்டுள்ளது
 • பிள்ளை மிகவும் நீர்வறட்சி அடைந்து காணப்படுகிறது (8 மணி நேரங்களுக்கு சிறுநீர் கழிக்கவில்லை, மிகவும் உலர்ந்த வாய், கண்ணீர் இல்லை, குறைந்த செயற்பாடு)
 • உங்கள் பிள்ளையின் வாந்தி பச்சை, இரத்தமாக அல்லது கடும் பிரவுன் நிறமாக (கோப்பி நிறம்) இருக்கின்றது.
 • உங்கள் பிள்ளைக்கு கடுமையான அல்லது மோசமடைகின்ற வயிற்றுவலி இருக்கின்றது
 • உங்கள் பிள்ளை சுவாசிக்க சிரமப்படுகின்றது
 • உங்கள் பிள்ளைக்கு மிக மோசமான தலைவலி அல்லது கழுத்து வலி இருக்கின்றது
 • உங்கள் பிள்ளையின் தோல் குளிராக இருக்கின்றது அல்லது அதன் வழக்கமான நிறமின்றி இருக்கின்றது
 • உங்கள் பிள்ளை மிகவும் சோம்பலாக அல்லது விழித்தெழச் செய்யவது கடினமாக இருக்கின்றது
 • உங்கள் பிள்ளை மிகவும் சுகவீனமாகத் தோன்றுகிறது

பின்வரும் நிலைமைகளின் போது உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரை அழையுங்கள்:

 • உங்கள் பிள்ளை உடலில் நீர்வறட்சி அடைய ஆரம்பிப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்
 • உங்கள் பிள்ளை 2 வயதுக்கும் குறைவானது என்றால் 24 மணிநேரங்களுக்கும் அதிகமாக வாந்தியெடுத்தால் 
 • உங்கள் பிள்ளை 2 வயதுக்கும் மேற்பட்டதென்றால் 48 மணிநேரங்களுக்கும் அதிகமாக வாந்தியெடுத்தால்
 • உங்கள் பிள்ளையின் காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் நீடிக்கின்றது
 • வாந்தியெடுத்தல் ஒரு மாதத்திற்கு ஒரு தடவைக்கு மேல் நிகழ்கின்றது அல்லது அதிகமாக இரவில் அல்லது அதி காலையில் ஏற்படுகின்றது.
 • உங்களுக்கு வேறு கவலைகள் அல்லது கேள்விகள் இருக்கின்றது

முக்கிய குறிப்புகள்

 • இரைப்பைக் குடலழற்சி (இரைப்பை வைரஸ்) எனப்படும் வைரஸ் நோய்த் தொற்றினால் இரைப்பையும் சமிபாட்டுத் தொகுதியும் உறுத்தப்படும்போது வாந்தி ஏற்படுகின்றது.
 • வாந்தி பொதுவாக 1 அல்லது 2 நாட்கள் மட்டுமே நீடிக்கும், ஆனால் அதிக காலமும் நீடிக்கலாம்.
 • தாய்ப்பால் ஊட்டப்படும் இரைப்பைக் குடலழற்சியுள்ள குழந்தைகளுக்கு தொடர்ந்தும் தாய்ப்பால் வழங்கப்படவேண்டும்.
 • உங்கள் பிள்ளைக்கு வாய்வழி உடல்நீர்வறட்சிக் கரைசலையும் வேறு தெளிவான நீராகாரங்களையும் வழங்கவும். பிள்ளைக்கு சீனியைக் கொண்டிருக்கும் பானங்களை வழங்கவேண்டாம்.
 • உங்களுடைய மற்றும் பிள்ளையின் கைகளை நன்கு கழுவவும்.
 • அதிக உடல்நீர்வறட்சி அடைந்ததுபோல் பிள்ளை தோன்றினால் உங்கள் மருத்துவருடன் பேசவும்.
Last updated: நவம்பர் 17 2009