இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர்: உங்கள் பிள்ளையைப் பராமரித்தல்

After heart surgery: Caring for your child [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

இருதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, பிள்ளைகளுக்கு கூடுதல் பராமரிப்பும் கவனமும் தேவைப்படுகிறது.

இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உங்கள் பிள்ளை வீடு திரும்பக்கூடிய சமயம் வரும்போது, நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டியனவற்றின் சுருக்கமான குறிப்புகள் கொடுக்கப்படும். அந்தக் குறிப்புகள், உங்கள் பிள்ளைக்கு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் தொடர்ந்து செய்யவேண்டிய மருத்துவமனை சந்திப்புத் திட்டங்கள் பற்றியும் தெரிவிக்கும்.

உங்கள் பிள்ளையை வீட்டில் எப்படிப் பராமரிக்கவேண்டும் என்பது பற்றிப் பின்வரும் தகவல்கள் தெரிவிக்கும்.

நீங்கள் மருத்துவமனையை விட்டுச் செல்வதற்கு முன்பாக, தயவு செய்து உங்கள் பிள்ளையின் தாதியின் உதவியுடன் பின்வரும் தகவல்களைப் பூர்த்தி செய்யவும்:

என் பிள்ளையின் குழந்தை மருத்துவ வல்லுனர் அல்லது குடும்ப மருத்துவர்:

என் பிள்ளையின் இதய நோய் மருத்துவர்:

என் பிள்ளையின் இதய நோய் மருத்துவமனைத் தாதி:

என் பிள்ளையின் அறுவை சிகிச்சை மருத்துவர்:

இதய நோய் மருத்துவமனையின் தொலைபேசி எண்:

இதய நோய் மருத்துவமனையில், தொடர்ந்து செய்யவேண்டிய மருத்துவமனை சந்திப்புத் திட்டங்கள்

உங்கள் பிள்ளை மருத்துவமனையை விட்டுச் செல்லும்போது, உங்களுக்கு, உங்கள் பிள்ளையின் இதய நோய் மருத்துவரைச் சந்திப்பதற்கு அவகாசம் கொடுக்கப்படும். எதிர்காலங்களில், இதய நோய் மருத்துவருடன் தொடர்ந்து செய்யவேண்டிய மருத்துவமனை சந்திப்புத் திட்டங்கள் பற்றி நீங்கள் கால அட்டவணை தயார் செய்யலாம்.

உங்கள் பிள்ளை மருத்துவமனையை விட்டு வெளியேறிய ஒரு வாரத்தின் பின்னர், தொடர்ந்து செய்யவேண்டிய மருத்துவமனை சந்திப்புத் திட்டங்களை, நீங்கள், அறுவைக்குப்பிற்கால மருத்துவமனையில் செய்துகொள்ள நேரலாம். இந்தச் சந்திப்பின்போது, உங்கள் பிள்ளைக்கு:

 • உங்கள் பிள்ளையின் காயங்கள் தாதிப் பயிற்சியாளரினால் பரிசோதிக்கப்படலாம்.
 • மார்பு எக்ஸ்-ரே, மின் ஒலி இதய வரைவு, (இதய அள்ட்ரா சவுண்ட்), அல்லது இரத்தப் பரிசோதனை செய்யப்படலாம்.
 • நல உணவு வல்லுனர் அல்லது தொழில் சார்ந்த சிகிச்சையாளரை சந்திக்கலாம்.
 • கேள்விகள் கேளுங்கள். நீங்கள் மற்றும் உங்கள் பிள்ளை ஆகிய இருவரும் நோய் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசலாம்.

தயவுசெய்து மருத்துவமனை சந்திப்புத் திட்டத்திற்கு, சரியான நேரத்துக்கு மற்றும் தயாராக வாருங்கள். மருத்துவமனை சந்திப்புத் திட்ட நேரம் சில வேளைகளில் தாமதமாகலாம், அல்லது சில பரிசோதனைகள் செய்யப்படுவதற்காக நீங்கள் காத்திருக்கவேண்டி வரலாம். நீங்கள் காத்திருக்கும்போது உங்களை மற்றும் உங்கள் பிள்ளையை சௌகரியமாக வைக்கக்கூடிய, புத்தகங்கள், விளையாட்டுப்பொருட்கள், நொறுக்குத்தீனிகள், டயபெர்கள், மற்றும் வேறு பொருட்களையும் எடுத்து வாருங்கள். மருத்துவமனை சந்திப்புத் திட்டத்திற்கு வருவதற்கு முன்பாக, உங்களுக்கிருக்கும் கேள்விகளை எழுதி வைத்து, அவற்றையும் மருத்துவமனைக்கு எடுத்துவாருங்கள்.

மருத்துவமனை சந்திப்புத் திட்டத்திற்கு உங்களால் வரமுடியாவிட்டால், மாற்றம் செய்வதற்காக, இதய நோய் மருத்துவமனைக்கு கூடியளவு விரைவாக தொலைபேசியில் அழையுங்கள்.

உங்கள் பிள்ளையின் காயத்தைப் பராமரித்தல்

இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர், உங்கள் பிள்ளைக்கு இதயத்தின் நடுப்பகுதியில் அல்லது பக்கங்களில் ஒரு (உள்வெட்டு) காயம் இருக்கலாம், குழாய்கள் மற்றும் இழைகள் போடப்பட்ட இடங்களில் சிறிய காயங்களும் இருக்கலாம். இந்தக் காயங்களில் நோய்த் தொற்று ஏற்படலாம் என்பதால் பின்வரும் அடையாளங்கள் தோன்றுகின்றனவா என்று ஒவ்வொரு நாளும் கவனித்துப் பார்க்கவும்:

 • சிவந்த நிறம்
 • வீக்கம்
 • காயத்திலிருந்து நீர் வடிதல்
 • வலி

இவற்றுள் ஏதாவது அடையாளத்தை நீங்கள் கண்டால், உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அல்லது உங்களுக்கு நோய் சம்பந்தப்பட்ட வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், இதய நோய் மருத்துவமனைத் தாதியை வழக்கமான வேலை நேரத்தில் அழையுங்கள் அல்லது குழந்தை மருத்துவ வல்லுனரை சந்தியுங்கள்.

உங்கள் பிள்ளையின் காயத்தில் நீர்க்கசிவு இல்லாவிட்டால் கட்டுபோடவேண்டிய அவசியமில்லை.

உங்கள் பிள்ளையின் காயத்தில் தையல்கள் இருக்கலாம். இருந்தால், அவை நீக்கப்பட வேண்டுமா, எப்போது என்று உங்கள் பிள்ளையின் தாதியிடம் கேளுங்கள். தகவல்களை கீழே எழுதவும்:

என் பிள்ளையின் காயத்திலுள்ள தையல்கள் நீக்கப்பட வேண்டிய திகதி:

காயத்திலுள்ள தையல்களை எடுக்கும் நபர்:

விசேஷித்த அறிவுரைகள்:

உங்கள் பிள்ளையின் மார்பில் குழாய் பதிக்கப்பட்ட பிரதேசம்

உங்கள் பிள்ளையின் மார்பிலிருந்து குழாய்(கள்) வெளியே எடுக்கப்பட்ட இரண்டு நாட்களின் பின், அந்தப் பிரதேசத்திலுள்ள பன்டேஜும் அகற்றப்பட்வேண்டும்.

நான் பன்டேஜ் அகற்ற வேண்டிய திகதி:

காயத்தை சுத்தமாக வைத்திருத்தல்

காயத்திலுள்ள பொருக்கு முழுவதும் வீழ்ந்து அந்தப் பிரதேசம் முழுவதும் ஆறியது போல தோற்றமடையும் வரை உங்கள் பிள்ளையின் காயத்தை நனைக்கவேண்டாம். அதுவரை, மேலோட்டமான குளியல் அல்லது காயம் நீரில் ஊறாத ஷவர் குளியல் எடுக்கவேண்டும்.

ஒரு மெல்லிய துணி, சுத்தமான தண்ணீர், மற்றும் மிகவும் வீரியம் குறைந்த pH சமநிலைப்படுத்தப்பட்ட பேபி சோப்பினால் காயங்களை ஒவ்வொரு நாளும் கழுவவும். பின்னர் மெதுவாக ஒற்றி உலரவைக்கவும்.

காயங்களைக் கழுவுவதற்காக நாங்கள் வீட்டில் உபயோகிக்கும் சோப் வகைகள்:

காயத்தின் மேலுள்ள பொருக்குகள் வீழ்ந்து போக கொஞ்சக் காலம் எடுக்கலாம். விரைவாக வீழ்ந்து போவதற்காக அவற்றைப் பறித்து எடுக்கவேண்டாம். இது உறுத்தல் மற்றும் நோய்த் தொற்றை உண்டாக்கலாம்.

காயத்தின் மேலுள்ள எல்லாப் பொருக்குகளும் வீழ்ந்து  அந்தப் பிரதேசம் முழுவதும் ஆறியது போல தோற்றமடையும் வரை காயத்தின்மேல் எந்த கிறீமையும் தடவவேண்டாம். காயம் ஆறியபின், விட்டமின் E போன்ற வீரியம் குறைந்த கிறீமை தழும்பின் மேல் தேய்க்கலாம்.

தழும்புண்டாதல்

உங்கள் பிள்ளையின் மார்புக்காயம் விரைவாக ஆறவேண்டும். தழும்பு காலப்போக்கில்தான் மறையும். சில சமயங்களில் ஒரு தழும்பு மேடு போல் உயர்ந்தும் விரிவாக்கப்பட்டதாகவும் மாறும். உங்கள் பிள்ளையின் காயத்தழும்பு உங்களுக்கு கவலையை உண்டாகினால், தயவு செய்து, உங்கள் பிள்ளையின் குழந்தை மருத்துவ வல்லுனரை அல்லது குடும்ப மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.

காயம் முற்றாக நிவாரணமடைய ஏறக்குறைய ஒரு வருடமாகலாம்.

சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு

காயத் தழும்புகள் முழுமையாக வீழ்ந்தும் அந்தப் பிரதேசம் நிவாரணமடைந்ததைப் போல தோற்றமளிக்கும் வரை சூரிய ஒளி உட்புகாதவாறு காய(ங்கள்)த்தை துணியினால் மூடிவைக்கவும். உங்கள் பிள்ளையின் சூரிய ஒளி படக்கூடிய தோற்பகுதி முழுவதற்கும் சன்ஸ்க்றீன் போடவும். காயம்(ங்கள்) ஆறியபின் விசேஷமாக, புதிய தழும்புகளின் மேல் சன்ஸ்க்றீன் போடுவதில் கவனமாயிருங்கள்.

உங்கள் பிள்ளையின் வலியை சமாளித்தல்

உங்கள் பிள்ளைக்கு அறுவைச்சிகிசைக்குப்பின் பல வாரங்களுக்கு வலி இருக்கலாம். நாட்கள் செல்ல வலியின் கடுமை குறையலாம். உங்கள் பிள்ளை மருத்துவமனையை விட்டுச்செல்லும்போது, வழக்கமாக வலி நிவாரண மருந்துகள் மருந்துக் குறிப்பில் எழுதிக்கொடுக்கப்படும். காலப்போக்கில் உங்கள் பிள்ளை இந்த மருந்தின் அளவைக் குறைத்துக்கொண்டே போகவேண்டும்.

உங்கள் பிள்ளையின் வலி அதிகரித்துக்கொண்டே போனால், உங்கள் பிள்ளையின் குழந்தை மருத்துவ வல்லுனரை அல்லது குடும்ப மருத்துவரை சந்திக்கவும். உங்கள் பிள்ளையின் வலியை எப்படி மதிப்பிடுவது என்று உங்கள் பிள்ளையின் தாதியிடம் கேளுங்கள்.

உங்கள் பிள்ளை பல வாரங்களுக்கு சரீர சம்பந்தமான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ஓர் ஆரோக்கியமான வாழ்க்கைப்பாணியின் பாகமாக, பிள்ளைகளுக்கு ஒழுங்கான தேகாப்பியாசம் தேவைப்படுகிறது. ஆயினும், உங்கள் பிள்ளை, அறுவைச் சிகிச்சையின்பின் பல வாரங்களுக்கு கவனமாக இருக்கவேண்டும். மேலுமான தகவல்களுக்கு தயவுசெய்து அட்டவணையைப் பார்க்கவும்.

குழந்தைகளுக்கான அறிவுரைகள்

கால அளவு​​பரிந்துரைசெய்யப்படும் செயல்பாடுகள்

அறுவை சிகிச்சையின் பின் 2 வாரங்கள் வரை, அல்லது மார்பில் காயம் முழுமையாக ஆறும் வரை

காயத்தை பாதிப்படையச் செய்யக்கூடிய செயல்பாடுகளைத் தவிர்க்கவும்.

வயிறை அழுத்திப் படுப்பதைத் தவிர்க்கவும். இந்தக் காலப்பகுதிக்குப் பின், சாதாரண வளர்ச்சிக்கு, வயிறை அழுத்திப் படுப்பது உற்சாகப்படுத்தப்படுகிறது.

அறுவை சிகிச்சையின் பின் 6 வாரங்கள் வரை

எல்லாச் செயல்பாடுகளின்போதும் மார்புத்தசை மற்றும் மார்பு எலும்புகளைப் பாதுகாத்துக்கொள்ளவும்.

வயிறை அழுத்திப் படுப்பதை உற்சாகப்படுத்தவும். இது சாதாரண வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

தலை/கழுத்து மற்றும் அடிப்பாகத்தை தூக்கவும்.

கமக்கட்டுகளின் கீழ் கைவைத்துத் தூக்குவதைத் தவிர்க்கவும்.

இருக்கை நிலைக்கு அசையும்போது அல்லது உடை அணியும்போது கைகளை இழுப்பதைத் தவிர்க்கவும்.

நடக்கக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள், பிள்ளைகள், மற்றும் பருவ வயதினருக்கான அறிவுரைகள்

கால அளவுபரிந்துரைசெய்யப்படும் செயல்பாடுகள்

அறுவை சிகிச்சையின் பின் 2 வாரங்கள் வரை, அல்லது மார்பில் காயம் முழுமையாக ஆறும் வரை

காயத்தை பாதிப்படையச் செய்யக்கூடிய செயல்பாடுகளைத் தவிர்க்கவும்.

வயிறை அழுத்திப் படுப்பதைத் தவிர்க்கவும்.

அறுவை சிகிச்சையின் பின் 6 வாரங்கள் வரை

எல்லாச் செயல்பாடுகளின்போதும் மார்புத்தசை மற்றும் மார்பு எலும்புகளைப் பாதுகாத்துக்கொள்ளவும்.

நடக்கக் கற்றுக்கொள்ளும் குழந்தைகளின் தலை/கழுத்து மற்றும் அடிப்பாகத்தின் கீழ் தூக்கவும்.

கமக்கட்டுகளின் கீழ் கைவைத்துத் தூக்குவதைத் தவிர்க்கவும்.​

பாரமான பொருட்களைத் தள்ளுதல் அல்லது இழுத்தலைத் தவிர்க்கவும்.

புஷ்-அப்ஸ், சிற்-அப்ஸ் அல்லது தளபாடங்களி தொங்கி எழுதலைத் தவிர்க்கவும்.

நீந்துதல் போன்ற கையைப் பின்புறமாக வட்டமாக அசைத்தலைத் தவிர்க்கவும்.

அறுவை சிகிச்சையின்பின் 12 வாரங்கள் வரை

எல்லாச் செயல்பாடுகளின்போதும் மார்புத்தசை மற்றும் மார்பு எலும்புகளைப் பாதுகாத்துக்கொள்ளவும்.

மார்பைப் பாதிக்கக்கூடியவற்றைத் தவிர்த்து மற்ற எல்லா சாதாரண செயல்பாடுகள் எல்லாவற்றிலும் ஈடுபடவும். இவை முரட்டுத் தனமான விளையாட்டுக்கள், பந்தெறிதல், காற்பந்து, ஹாக்கி, கராத்தே, பீன் பை ஃபைட், ரெட்ரோவர் என்பவற்றை உள்ளடக்கும்.

உங்கள் பிள்ளை பங்கேற்கும் ஏதாவது செயல்பாடு பற்றி, ஒரு உடல்நல பராமரிப்பு குழு அங்கத்தினரிடம் கேட்க விரும்புகிறீர்களா? அப்படியானால், அவற்றைக் கீழே எழுதவும்:

உங்கள் பிள்ளையின் நடவடிக்கைகள்

அறுவைச் சிகிச்சைக்குப் பின் உங்கள் பிள்ளையின் நடவடிக்கையில் ஒரு மாற்றத்தை நீங்கள் அவதானிக்கலாம். மருத்துவ மனையில் தங்கியிருந்தபின் பின்வரும் மாற்றங்கள் சாதாரணமானவை:

 • உறங்கும் வழக்கத்தில் குழப்பம்
 • படுக்கையில் சிறுநீர் கழித்தல்
 • எளிதில் திருப்திப்படாத நிலை அல்லது சதா பற்றிக்கொள்ளும் குணம்

பெரும்பாலும் இந்தப் பிரச்சினைகள் 1 அல்லது 2 வாரங்களில் சரியாகிவிடும். இந்த மன உளைச்சல் சமயத்தில், நீங்கள் உங்கள் பிள்ளையை ஆதரிக்கவேண்டும். ஆனால், தகுந்த எல்லைகளையும் வைக்கவேண்டும்.

பாடசாலைக்கோ அல்லது பகல் நேர பராமரிப்பு நிலையத்துக்கோ திரும்பிச் செல்லுதல்

அறுவைச்சிகிச்சை நடைபெற்ற 2 வாரங்களில், அல்லது உங்கள் பிள்ளை நல்ல ஆரோக்கியமாக உணரும்போது பாடசாலைக்குச் செல்லலாம்.

குழந்தைகள் மற்றும் நடை குழந்தைகள் 2 வாரங்களின்பின் பகல்நேர பராமரிப்பு நிலையத்துக்குச் செல்லலாம்.

பாடசாலையிலோ அல்லது பகல் நேர பராமரிப்பு நிலையத்திலோ தொற்று நோய் இருந்தால் உங்கள் பிள்ளை அறுவைச்சிகிச்சை நடைபெற்ற பின் 4 வாரங்கள் வரை அங்கு போகக்கூடாது. நல்லமுறையில் கைகளைக் கழுவுவது மற்றும் நோயுள்ளவர்களுடனான தொடர்பைத் தவிர்ப்பதன் மூலம் நோய் தொற்றிக்கொள்வதைத் தவிர்க்கலாம்.

வழக்கமான உடல்நல பராமரிப்பு

உங்கள் பிள்ளை மருத்துவ மனையிலிருந்து வெளியேறியபின் 1 அல்லது 2 வாரங்களில் தன் குழந்தை மருத்துவ வல்லுனரை அல்லது குடும்ப மருத்துவரைச் சந்திக்கவேண்டும். இந்த மருத்துவர் உங்கள் பிள்ளைக்கு தொடர்ந்து தேவைப்படும் பொதுவான உடல்நலத் தேவைகளைக் கவனித்துக்கொள்வார். உங்கள் பிள்ளையின் உடல்நலம் பற்றி ஏதாவது கேள்விகள் இருந்தால் இந்த மருத்துவரிடம் கேளுங்கள்.

உங்கள் பிள்ளையின் முதல் மருத்துவமனை சந்திப்புத் திட்டத்தின் திகதி மற்றும் நேரத்தை இங்கே எழுதவும்:

நோய்த்தடுப்பாற்றல்

உங்கள் பிள்ளையின் நோய்த்தடுப்பாற்றல் பற்றி கேள்விகள் இருந்தால், தயவு செய்து, உங்கள் பிள்ளையின் குழந்தை மருத்துவ வல்லுனரை அல்லது குடும்ப மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும். மேலுமான தகவல்களுக்கு, கனேடியன் நோய்த்தடுப்பாற்றல் வழிகாட்டியுடன் கலந்தாலோசிக்கவும்.

இது இங்கே கிடைக்கப்பெறும் (ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும்): http://www.phac-aspc.gc.ca/publicat/cig-gci/index-eng.php.

இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட சில பிள்ளைகளுக்கு விசேஷ சலுகைகள் உண்டு. இவை தடுப்பாற்றலின் காலம் மற்றும் வகைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இவை பின் வருவனவற்றை உட்படுத்தும்:

 • இதய அறுவைச் சிகிச்சைக்கு உங்கள் பிள்ளை இரத்தப் பொருட்கள் பெற்றிருந்தால்.  பிள்ளை வீடு செல்லும் முன்பு தாதியிடம் இந்தத் தகவலைக் கேட்கவும். 

என்பிள்ளை இந்தப்இரத்தப் பொருளை பெற்றுக்கொண்டது:

இந்தத் திகதியில்:

 • டிஜோர்ஜ் சின்ட்றம் என்றும் அறியப்படும், 22q 11 கூட்டு அறிகுறிகளின் நீக்கம் போன்ற காரணங்களினால் உங்கள் பிள்ளைக்கு ஒரு பலவீனமான நோய் எதிர்ப்புத் தொகுதி இருக்குமானால்.

முனைத்தோல் வெட்டு (சுன்னத்து)

உங்கள் பிள்ளைக்கு முனைத்தோல் வெட்டு சிகிச்சை செய்ய நீங்கள் விரும்பினால், அறுவை சிகிச்சைக்குப்பின் குறைந்தது 8 வாரங்களாவது காத்திருக்கவேண்டும். உங்கள் பிள்ளை இரத்த மெலிவூட்டிகள் (இரத்தம் உறைதலுக்கு எதிரான சிகிச்சை) உட்கொள்கிறவனாக இருந்தால், தயவு செய்து உங்கள் பிள்ளையின் இதய நோய் மருத்துவர் மற்றும் இரத்தம் உறைதல் சம்பந்தப்பட்ட குழு அங்கத்தினருடன் இது பற்றி முன்கூட்டியே கலந்து பேசவும்.

பற்களைப் பராமரித்தல், அறுவைச் சிகிச்சை, மற்றும் வேறு செயல்முறைகள்

உங்கள் பிள்ளைக்கு, ஏதாவது பல் சிகிச்சை, அறுவை சிகிச்சை, அல்லது வேறு சிகிச்சைகள் செய்வதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் இதய நோய் மருத்துவரிடம் கலந்து பேசுங்கள். உங்கள் பிள்ளைக்கு, இந்த செயல்முறை சிகிச்சைகளுக்கு முன்பாக எதாவது விசேஷ முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் செய்யப்பட வேண்டுமா என்று உங்கள் பிள்ளையின் இதய நோய் மருத்துவரிடம் கேளுங்கள். உங்கள் பிள்ளைக்கு ஏதாவது செயல்பாடுகள் செய்யப்படுவதற்கு முன்பாக, உங்கள் பிள்ளைக்கு இதய அறுவை செய்யப்பட்டிருக்கிறது என்பதை, உங்கள் பிள்ளையின் உடல்நல பராமரிப்பு தொழில் நடத்துனரிடம் தெரிவித்துக் கொள்வதில் நிச்சயமாயிருங்கள்.

பிரயாணம் செய்தல்

நீங்களும் உங்கள் பிள்ளையும் நகரத்துக்கு வெளியே வசிப்பீர்களானால், அறுவைச்சைகிச்சைக்கு பிந்தின மருத்துவமனை சந்திப்புகளை செய்து முடிக்கும் வரை மருத்துவமனைக்கு அருகிலேயே தங்கியிருக்க வேண்டியிருக்கலாம். உங்கள் பிள்ளையின் இதய நோய் மருத்துவருக்கு உங்கள் பிள்ளையின் நிலைமை திருப்தியாயிருந்தால், நீங்கள் வீட்டுக்குப் போகலாம்.

உங்கள் பிள்ளைக்கு தொடர்ந்து உடல்நலப் பிரச்சினை இருந்தால், இது உங்கள் பிரயாணத்தை அல்லது விடுமுறையைக் கழிக்கும் திட்டத்தைக் கட்டுப்படுத்தும். உங்கள் பிள்ளை என்ன செய்யலாம் என்பதில் நீங்கள் நிச்சயமற்றவராக இருந்தால், உங்கள் பிள்ளையின் இதய நோய் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.

கார் சீற்

நீங்கள் காரில் பிரயாணம் செய்யும்போது, உங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக சீற்றில் உட்கார்ந்திருக்கிறார்களா அல்லது எல்லாச் சமயங்களிலும் சீற் பெல்ட் போடப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் சட்டம். நீங்கள் காரில் மருத்துவமனைக்கு வரும்போது அல்லது மருத்துவமனையை விட்டுப்போகும்போது தயவுசெய்து உங்கள் பிள்ளையின் கார் சீற்றை ஞாபகமாக எடுத்துவாருங்கள். உங்களிடம் கார் சீற் இல்லாவிட்டால் மருத்துவமனையால் ஒரு கார் சீற்றை இரவலாகத் தர முடியும்.

முதலுதவியைக் கற்றுக்கொள்ளுதல்

முதலுதவி மற்றும் CPR (இதய நுரையீரல் இயக்கத்தை மீளவுயிர்ப்பித்தல், உயிரை ஆதரிப்பதற்கான அடிப்படை அறிவு அல்லது BLSஎன்றும் அழைக்கப்படும்) பயிற்சிகளைக் கற்றுக்கொள்ளும்படி எல்லாப் பெற்றோர்களும் சிபாரிசு செய்யப்படுகிறார்கள். இந்த செயல் திறமைகளினால் உங்கள் பிள்ளையின் அல்லது வேறு ஒருவரின் பிள்ளையின் உயிரை நீங்கள் காப்பாற்ற முடியும். இந்தப் பயிற்சிகளை நீங்கள் எப்படிப் பெற முடியும் என்பது பற்றி உங்கள் பிள்ளையின் தாதியிடம் கேளுங்கள்.

உங்கள் பிள்ளைக்கு உணவு ஊட்டுதல்

நீங்கள் மருத்துவமனையை விட்டுச் செல்லும்போது, நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டியனவற்றின் சுருக்கமான குறிப்புகள் கொடுக்கப்படும். அந்தக் குறிப்புகள் பின்வருமாறு:

 • உங்கள் பிள்ளை உட்கொள்ளும் உணவு வகைகள்
 • உங்கள் பிள்ளை, வளருவதற்காகவும் உடல் நீர் வறட்சியைத் தடுப்பதற்காகவும், ஒரு நாளில் அவனுக்குத் தேவைப்படும் மிகக் குறைந்தளவு உணவு

எல்லாப் பிள்ளைகளும் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக, பழங்கள், மரக்கறிகள், மற்றும் புரதம் கொண்ட ஒரு சமநிலையான உணவை உட்கொள்ளவேண்டும்.

மார்பு அறுவைச் சிகிச்சை செய்தபின், உங்கள் பிள்ளைக்கு, எடை அதிகரிக்கக்கூடிய அளவுக்கு உணவு உண்பதில் பிரச்சினை இருக்கலாம். இருதயத்தில் பிரச்சினையுள்ள பிள்ளைகள் அதிகளவு சக்தியை உபயோகிப்பார்கள். அவர்களுக்கு அதிகளவு கலோரிகள் தேவைப்படும்.

குழந்தைகளுக்கு உணவூட்டுதல்

தாய்ப்பால் அல்லது ஃபோர்மூலாவுக்கு பெரும்பாலும் மேலதிக கலோரிகள் சேர்க்கப்படும். உங்கள் பிள்ளைக்கு மேலதிக கலோரிகள் தேவைப்பட்டால், நல உணவு வல்லுனர் ஒரு உணவு செயல்முறைக் குறிப்பைத் தருவார்.

உணவு உண்பதில் பிரச்சினை மற்றும் நிறை அதிகரிப்பதில் தாமதமுள்ள குழந்தைகள், மருத்துவமனை சந்திப்புத் திட்டத்தின் போது நல உணவு வல்லுனரால் அவதானமாகக் கண்காணிக்கப்படுவார்கள். உங்கள் பிள்ளைக்கும் நிறை அதிகரிப்பதில் தாமதமிருந்தால், நீங்கள் மருத்துவமனையை விட்டுச் செல்வதற்கு முன்பாக உங்களுக்கு உட்கொள்ளும் உணவின் அளவைக் குறித்து வைக்கும் படிவம் கொடுக்கப்படும். உங்கள் பிள்ளை எவ்வளவு உணவு உட்கொள்கிறான் என்பதை எழுதிவைக்க, நீங்கள் இந்தப் படிவத்தை உபயோகிக்கலாம். உங்கள் பிள்ளையின் நல உணவு வல்லுனர், உங்கள் பிள்ளை சிறுநீர், வாந்தி, அல்லது மலம் மூலமாக ,எவ்வளவு திரவத்தை வெளியேற்றுகிறான் என்பதைப்பற்றிய ஒரு பதிவை வைத்துக்கொள்ளும்படியும் உங்களைக் கேட்டுக்கொள்ளலாம். உங்கள் பிள்ளையின் மருத்துவமனை சந்திப்புத் திட்டத்திற்கு வரும்போது, தயவு செய்து இந்தப் படிவங்களையும் எடுத்து வாருங்கள் நல உணவு வல்லுனர் உங்கள் பிள்ளைக்கு உணவளிப்பதற்கான திட்டம் போடும்போது இவற்றை பயன்படுத்துவார்.

உங்கள் குழந்தைக்கு உணவூட்டும்போது, குழந்தை களைப்படையாதவாறு, உணவூட்டும் நேரத்தை 30 நிமிடங்களாகக் கட்டுப்படுத்தமுயற்சி செய்யுங்கள். சில குழந்தைகளுக்கு ஃபோர்மூலா உணவை விழுங்கும் பிரச்சினை இருக்கிறது. உங்கள் குழந்தைக்கு உணவு உண்பதில் கஷ்டமிருந்தால், தொழில் சார்ந்த சிகிச்சையாளர் அல்லது நல உணவு வல்லுனர் உங்கள் குழந்தையைப் பராமரிப்பதில் உட்படுவார்கள்.

சில குழந்தைகளுக்கு, அவர்கள் சாதாரணமாக உண்ணும் உணவுடன் சேர்த்து, டியூப் மூலமாகவும் உணவு கொடுக்கப்பட வேண்டியிருக்கலாம். உங்கள் குழந்தைக்கு உணவூட்டும் டியூப் தேவைப்பட்டால், மருத்துவ பணியாளர்கள் அந்த டியூப்பை எப்படி உபயோகிக்க வேண்டும் மற்றும் எப்படிப் பராமரிக்கவேண்டும் என்று காண்பிப்பார்கள்.

உங்கள் பிள்ளைக்கு உடல்நீர் வறட்சி ஏற்படவில்லை என்பதில் நிச்சயமாயிருங்கள்

உடல் நீர் வறட்சிக்கான அடையாளங்களையும் அறிகுறிகளையும் அவதானித்திருப்பது மிகவும் முக்கியம். உடல் சரிவர இயங்கத் தேவையான நீர் உடலில் இல்லாவிட்டால் உடல் நீர் வறட்சி ஏற்படும். உடல் நீர் வறட்சிக்கான அடையாளங்கள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

 • டயபெர்கள் ஈரமாவது குறைதல்
 • வாய் உலர்ந்து போதல்
 • உச்சிக்குழி, குழந்தையின் தலையில் மென்மையான பகுதி தாழ்ந்திருத்தல்

உடல் நீர் வறட்சியைத் தடுப்பதற்காக, மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட, நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டியனவற்றின் சுருக்கமான குறிப்பில் உள்ள மிகக் குறைந்தளவு நீராகாரத்தையாவது கொடுக்க முயற்சி செய்யுங்கள். நீராகாரம் என்பது, தாய்ப்பால், ஃபோர்மூலா, அல்லது வேறு திரவங்களாகும்.

உங்கள் பிள்ளை பானங்களைக் குடிக்க மறுத்தால், உங்கள் குழந்தை மருத்துவ வல்லுனரை சந்திக்கவும். வெப்பமான நாட்களில் அல்லது உங்கள் பிள்ளை உடற்பயிற்சி செய்தபின் வியர்க்கும்போது அவனுக்கு மேலதிகமான பானங்கள் கொடுக்க மறவாதீர்கள்.

மருந்துகள்

உங்கள் பிள்ளைக்கு வீட்டில் வைத்து மருந்து கொடுக்கவேண்டிய தேவை இருந்தால், நீங்கள் மருத்துவமனையை விட்டுச் செல்லும்போது, ஒரு மருந்துக்குறிப்பு எழுதிக்கொடுக்கப்படும். நீங்கள் வீட்டுக்குப் போவதற்கு முன்பாக மருந்துக்குறிப்பை மருத்துவ மனை ஃபார்மசியில் பூர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள். உங்கள் உள்ளூர் மருந்துக்கடையில் உங்கள் பிள்ளைக்குத் தேவையான சில விசேஷ மருந்துகள் கிடைக்காது. தாதி அல்லது மருந்தாளுனர், மருந்து எதற்காக மற்றும் எப்படிக் கொடுக்கவேண்டும் என்பதைத் தெரிவிப்பார்கள்.

மருந்துகளை எப்போது மற்றும் எப்படி கொடுக்கவேண்டும்

 • ஒவ்வொரு நாளும் அதே சமயத்தில் மருந்தைக் கொடுக்கவும். உங்கள் பிள்ளை பல வகையான மருந்துகள் எடுப்பவளாக இருந்தால், மருந்தை எப்போது கொடுக்கவேண்டும் என்பது பற்றி ஞாபகத்தில் வைப்பதற்கு உதவியாக ஒரு அட்டவணை தரும்படி உங்கள் தாதி அல்லது மருந்தாளுனரிடம் கேட்கலாம்.
 • எப்போதும் உங்கள் பிள்ளை சாப்பிடுவதற்கு முன்பாக மருந்தைக் கொடுக்க முயற்சி செய்யவும். குழந்தைகள் பெரும்பாலும் பசியாக இருக்கும்போது மருந்தை உட்கொள்ள விரும்புவார்கள். அவர்களின் வயிறு நிரம்புவதற்கு முன்பாக மருந்து கொடுத்தால் பெரும்பாலும் அதை வாந்தியெடுக்க மாட்டார்கள்.
 • மருந்தை உணவுடனோ அல்லது பானத்துடனோ கலந்து கொடுக்க முயற்சிக்க வேண்டாம். மருந்தை உணவுடனோ அல்லது பானத்துடனோ கலந்தால் வேளை மருந்தளவு முழுமையாகக் கொடுக்கப்பட்டதா என்பதை அறிந்து கொள்வது கடினம். மருந்தை உணவுடனோ அல்லது பானத்துடனோ கலந்து கொடுக்கவேண்டிய கட்டாயம் இருந்தால், மருந்தை ஒரு சிறிய அளவு உணவுடனோ அல்லது பானத்துடனோ கலந்து கொடுத்தால் பிள்ளை அதை முழுவதுமாக உட்கொண்டுவிடும்.
 • வாய்மூலம் கொடுக்கப்படும் மருந்தூசிகள், கரண்டிகள், அல்லது மருந்துக் கோப்பைகளை, ஒவ்வொருமுறை உபயோகித்த பின்னரும், சூடான சோப் தண்ணீரினால் சுத்தம் செய்யவும்.
 • வெவ்வேறு மருந்துகளை வெவ்வேறு மருந்தூசிகளில் கலக்க வேண்டாம். ஒவ்வொரு மருந்துக்கும் தனிப்பட்ட மருந்தூசிகளை உபயோகிக்கவும்.

உங்கள் பிள்ளையின் மருந்தைப் பற்றிய தகவல்கள் முழுவதையும் வாசிக்கவும்:

 • நீங்கள் மருத்துவமனையை விட்டுச் செல்வதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருந்துகள் பற்றி எழுதப்பட்ட தகவல்கள் முழுவதையும் வாசியுங்கள். மருந்தாளர், தாதி, அல்லது மருத்துவர் உங்களுக்கு இருக்கக்கூடிய கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதிலளிப்பார்.
 • மருந்துக்கடையில் நீங்கள் வாங்கும் மருந்துகளின் விபரச் சீட்டுகளை எப்போதும் வாசியுங்கள்.அதை எப்போது கொடுக்கவேண்டும் மற்றும் எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதில் நிச்சயமாயிருங்கள்.
 • உங்கள் பிள்ளை எடுத்துக்கொள்ளவேண்டிய சில மருந்துகள் குளிரேற்றப்படவேண்டியிருக்கலாம். விபரச் சீட்டுகளைச் சரி பார்த்து அவற்றைத் தகுந்த முறையில் பாதுகாத்துவைக்கவும்.

நீங்கள் மருந்தின் அளவைத் தவறவிட்டால் அல்லது உங்கள் பிள்ளை அதை வாந்தியெடுத்துவிட்டால்:

 • உங்கள் பிள்ளை மருந்து முழுவதையும் உடனே வாந்தியெடுத்துவிட்டால் அல்லது துப்பிவிட்டால், இன்னொரு வேளையளவு மருந்தைக் கொடுக்கவும்.
 • நீங்கள் மருந்து கொடுத்து 15 முதல் 20 நிமிடங்களின் பின் உங்கள் பிள்ளை அதை வாந்தி எடுத்தால், இன்னொரு வேளையளவு மருந்தைக் கொடுக்கவேண்டாம். என்ன செய்வது என்று நீங்கள் நிச்சயமற்றவராக இருந்தால்உங்கள் மருத்துவரை அல்லது மருந்தாளரை அழைக்கவும்.
 • ஒரு வேளையளவு மருந்தைத் தவறவிட்டால், அடுத்தவேளை இரண்டு மடங்கு மருந்து கொடுக்கவேண்டாம். ஒரு மணி நேரத்துக்கு பிந்தியிருந்தால், அந்த வேளை மருந்தைக் கொடுக்கவும். ஒரு மணி நேரத்துக்குமேல் தாமதித்திருந்தால் கால அட்டவணைப்படி, அடுத்தவேளை மருந்தை வழக்கம்போல கொடுக்கவும். என்ன செய்வது என்று நீங்கள்நிச்சயமற்றவராக இருந்தால்உங்கள் மருத்துவரை அல்லது மருந்தாளரை அழைக்கவும்.

நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய வேறு விஷயங்கள்:

 • மருந்துக் குறிப்பில்லாத ஏதாவது மருந்து கொடுப்பதற்குமுன், உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரைக் கேட்கவும்.
 • மருத்துவமனைக்கு ஒவ்வொரு முறையும் வரும்போது உங்கள் பிள்ளையின் மருந்துகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வாருங்கள்.

எல்லா மருந்துகளையும் பிள்ளைகளின் கைகளுக்கு எட்டாதவாறு எப்போதும்பூட்டி வையுங்கள்.

ஒரு மருத்துவர் அல்லது தாதியின் உதவியை எப்போது நாடவேண்டும்

அவசர நிலைமைகள்

உங்கள் பிள்ளையைப் பற்றி ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால், 911 அவசர சேவையை அழைக்கவும். அவசர நிலைக்கு சில உதாரணங்கள்:

 • கஷ்டப்பட்டு சுவாசித்தல்
 • வலிப்பு
 • மயக்கம்
 • நித்திரையிலிருந்து விழித்தெழாதிருத்தல்

சாதாரண உடல்நல அக்கறைகள்

உங்கள் பிள்ளையின் உடல் நலம் பற்றி ஏதாவது கேள்விகள் அல்லது அக்கறைகள் இருந்தால், அவை உங்கள் பிள்ளையின் இருதய பிரச்சினையுடன் சம்பந்தப்படவில்லை என்று நீங்கள் கருதினால், தயவு செய்து உங்கள் குழந்தை மருத்துவ வல்லுனரை அல்லது குடும்ப மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும். இதில் உட்படும் சில உதாரணங்கள்:

 • தடிமலின் அறிகுறிகள், மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் போன்றவை
 • தோல் அரிப்பு
 • நோய்த்தடுப்பாற்றல் பற்றிய கேள்விகள்
 • சாதாரண செயல்பாட்டின்போது ஏற்படும் காயங்கள்

உங்கள் பிள்ளையின் இருதயப் பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட அக்கறைகள்

உங்கள் பிள்ளை மருத்துவமனையை விட்டு வெளியேறியபின்னர் 6 வாரங்களுக்குள் உங்களுக்கு ஏதாவது கேள்விகள் அல்லது அக்கறைகள் இருந்தால், மற்றும் அவை உங்கள் பிள்ளையின் இருதய பிரச்சினை சம்பந்தப்பட்டதென நீங்கள் நினைத்தால்:

 • உங்கள் இருதய நோய் மருத்துவமனை தாதியை வழக்கமான வேலை நேரத்தில் தொடர்பு கொள்ளவும்.
 • வழக்கமான வேலை நேரத்திற்குப் பின், இருதய நோய் மருத்துவமனை உள்நோயாளர் பிரிவு தாதிகள் அல்லது அழைக்கும் போது வரும் (ஒன் கால்) இருதய நோய் மருத்துவரை அழைக்கவும்.

இந்த அக்கறைகளின் சில உதாரணங்கள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

 • நீராகாரம் உட்கொள்வதில் குறைவு படுதல் போன்ற, உணவு உண்பதில் மாற்றங்கள்; பசியின்மை; நிறை குறைதல்; களைப்பு மற்றும் உணவு உண்ணும்போது உறங்குதல்; உணவு உண்பதற்காக நித்திரையிலிருந்து விழித்தெழாதிருத்தல்; உணவு உண்ணும்போது சுவாசிக்க கஷ்டப்படுதல்; வாந்தி அல்லது வயிற்றோட்டம்; உணவு உண்ணும் போது வியர்ப்பது அதிகரித்தல்.
 • மிக விரைவாக சுவாசித்தல், விசேஷமாக உறங்கும்போது, போன்ற சுவாசிப்பதில் மாற்றங்கள்; சத்தமாக சுவாசித்தல் அல்லது உறுமல் போன்ற சத்ததுடன் சுவாசித்தல்; வியர்ப்பது அதிகரித்தல்; இடைவிடாத இருமல்.
 • மிக அதிகமான உறக்கம் அல்லது சிடுசிடுப்பு போன்ற நடத்தையில் மாற்றங்கள்.
 • வெளிறுதல்; தோலில் புள்ளிகள் உண்டாதல் (தோல் மார்பிள் போன்று தோன்றுதல்); உதடுகள், நாக்கு அல்லது நகங்கள் நீலநிறமாக மாறுதல் (நீலம்பாய்தல்) போன்ற நிற மாற்றங்கள்; கைகள், பாதங்கள் அல்லது உடலில் அரிப்பு
 • காய்ச்சல், சிவந்திருத்தல், வீக்கம், மிருதுத்தன்மை அதிகரித்தல், அல்லது காயத்திலிருந்து நீர் வடிதல் போன்ற காயங்களில் நோய்த்தொற்று அறிகுறிகள்
 • கண்ணிமைகள், முகம், கைகள், அல்லது பாதங்களில் வீக்கம் அல்லது அதைப்பு போன்ற நீர்த் தேக்க அடையாளங்கள்; ஆண்பிள்ளைகளில் பிறப்புறுப்பில் வீக்கம்; வளர்ந்த பிள்ளைகளுக்கு கால்கள் அல்லது கணுக்காலில் வீக்கம்; சிறுநீர் குறைவாகக் கழித்தல் அல்லது குறைவான ஈர டயபெர்கள்.

பிறப்பு சம்பந்தப்பட்ட இருதய நோய் பற்றிய தகவல்கள் (ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும்)

www.aboutkidshealth.ca/heart

www.heartandstroke.ca

www.americanheart.org

www.pediatricheartnetwork.org

Last updated: December 18 2008