தாய்ப்பாலூட்டுதலில் பிரச்சினைகள்: புண்ணாகிய முலைக்காம்புகள்

Breastfeeding problems: Sore nipples [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

தொற்றுநோய், தவறான அரவணைப்பு, மற்றும் முலைக்காம்புப் புண்களுக்கான காரணங்கள் பற்றித் தெரிந்துகொள்ளவும்.

முதல் சில நாட்களுக்குப் புண்வலி

தாய்ப்பாலூட்டும் முதற் சில நாட்களுக்கு முலைக்காம்புகள் மிருதுவாக இருக்கும். இது பெண்களுக்கு சாதாரணமானது.

தாய்ப்பாலூட்டும் முதற் சில நிமிடங்களுக்குக்கூட அதிக மிருதுத் தன்மையை நீங்கள் உணரலாம். தொடர்ந்து தாய்ப்பாலூட்டிக்கொண்டு வரும்போது இந்த மிருதுத் தன்மை குறைந்துகொண்டே வரவேண்டும். அநேக பெண்கள் முதல் வாரத்தில் இந்த மிருதுத் தன்மை குறைந்துகொண்டே வருவதைக் கண்டிருக்கிறார்கள்.

தாய்ப்பாலூட்டும் நேரம் முழுவதும் வலி நீடித்திருப்பது அல்லது கடுமையான வலி இருப்பது சாதாரணமல்ல. இந்த நிலைமை இருந்தால், தாய்ப்பாலூட்டுவதில் நிபுணத்துவம் பெற்றவரின் உதவியை உடனே நாடவேண்டும்.

தவறான நிலையில் குழந்தையை தூக்கி அணைத்துவைத்திருப்பதனால் ஏற்படும் முலைக்காம்புப் புண்கள்

அணைத்துவைத்திருப்பது என்பது குழந்தை எப்படி உங்கள் மார்புடன் அணைந்திருக்கிறது என்பதை அர்த்தப்படுத்துகிறது. உங்கள் குழந்தையை சரியான விதத்தில் தூக்கி, மார்புடன் அணைத்துவைத்திருப்பது முலைக்காம்புகளில் புண்வலி உண்டாவதைத் தடுக்கும். தவறான முறையில் குழந்தை மார்புடன் அணைக்கப்பட்டிருந்தால், பெரும்பாலும் புண்வலி தாய்ப்பாலூட்டும் காலம் முழுவதும் நீடிக்கும். இது உங்கள் முலைக்காம்புகளில் சிவந்த, ஊமைக்காயம், அல்லது வெடிப்புக் காயத்தை ஏற்படுத்தும். வெடிப்புக் காயம் என்பது தோல் வெடித்தலை அர்த்தப்படுத்தும்.

உங்கள் குழந்தையைச் சரியான விதத்தில் மார்பருகே தூக்கி வைத்திருத்தல்

தாய்ப்பாலூட்டுவதற்காக உங்கள் குழந்தையை, அவனின் மார்பு, வயிறு, மற்றும் தொடைகள் உங்கள் வயிற்றுக்கு எதிரே இருக்குமாறு தூக்கி,உங்களுக்கு நெருக்கமாகப் பிடித்துக் கொள்ளவும். குழந்தையின் முதுகு மற்றும் கழுத்தை உங்கள் கைகளால் தாங்கிப் பிடிக்கவும் அல்லது குழந்தையின் தலையை உங்கள் முன்னங்கைகளில் தாங்கிப் பிடிக்கவும். உங்கள் குழந்தையால் இலகுவாக உங்கள் மார்பை எட்ட முடியவேண்டும்.

உங்கள் குழந்தையை, உங்கள் முன்னங்கைகளுக்குக் கீழாக உங்கள் பக்கமாகக் கூட சேர்த்துவைத்துக் கொள்ளலாம். உங்கள் குழந்தையின் முதுகு மற்றும் கழுத்தை உங்கள் கைகளால் தாங்கிப் பிடிக்கவும். சில தலயணைகள் மூலமாகக் குழந்தையத் தாங்கிப் பிடிக்க நீங்கள் விரும்பலாம். இந்த நிலைமையில் உங்கள் குழந்தை மேலும் செங்குத்தான நிலைமையை இலகுவாக அடைய முடியும்.

தாய்ப்பாலூட்டுவதற்காக நீங்களும் கூட சாய்வாகப் படுத்துக்கொள்ளமுடியும். உங்கள் குழந்தை தன் தலையைச் சிறிது சாய்த்து ஒரு பக்கமாக, உங்களுக்கு மிக அருகில் படுத்திருப்பான். உங்களுக்குப் பின்புறமாக மற்றும் உங்கள் தலைக்குக் கீழாக வைக்கப்பட்ட தலையணைகள் உங்களுக்கு மேலு​ம் சௌகரியத்தைக் கொடுக்கும். குழந்தையின் பின்புறமாகவும்கூட நீங்கள் ஒரு தலையணையை வைக்கலாம்.

எல்லா நிலைமைகளிலும்

 • நீங்கள் உங்கள் குழந்தையை அணைக்கத் தொடங்கும்போது, குழந்தையின் மூக்கு உங்கள் முலைக்காம்புக்கு எதிரே இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
 • உங்கள் குழந்தை தன் தலையை சிறிது சாய்த்தபடி, மோப்பம் பிடிக்கும் நிலையில், உங்கள் மார்பருகே வருவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
 • உங்கள் குழந்தையின் தலை அவன் தோள்களுக்கு நேராக திருப்பப்பட்ட நிலையில் அல்லது முறுக்கப்பட்ட நிலையில் இருக்கக்கூடாது.

சில குழந்தைகள், மார்புக்கு சரியான ஆதாரம் இல்லையென்றாலும் நன்றாக அணைந்து கொள்வார்கள். உங்கள் குழந்தை அணைந்து கொள்ள உதவி செய்வதற்கு மார்புக்கு ஆதாரம் தேவை என நீங்கள் உணரலாம். உங்கள் பெருவிரலை மார்பின் ஒரு பக்கத்திலும் மற்ற விரல்களை மறு பக்கத்திலும் வைத்து மார்பைத் தாங்கிப் பிடிக்கவும். உங்கள் விரல்கள் அரியோலாவிலிருந்து விலகியிருக்க வேண்டும், அரியோலா என்பது முலைக்காம்பைச் சுற்றியுள்ள கருமையான பகுதியாகும். உங்கள் குழந்தை முலைக்காம்பை தன் வாய்க்குள் ஆழமாக உள்ளிளுத்துக்கொள்ள வேண்டும்.

சரியான அரவணைப்பு

சரியான முறையில் அரவணைக்க உங்கள் குழந்தை உங்களை வழி நடத்தட்டும். உங்கள் குழந்தையை உங்கள் தோலுடன் அவனது தோலும் சேர்ந்திருக்குமாறு உங்கள் மார்புகளுக்கிடையில் அவனைத் தூக்கிவைத்திருப்பதன் மூலம் பாலூட்டலைத் தொடங்கலாம். அவன் உங்கள் மார்பைத் தேடத் தொடங்கும்போது, அவனது கழுத்தையும் தோள்களையும் உங்கள் கையால் தாங்கிப் பிடித்துக்கொண்டு, மெதுவாக உங்கள் மார்புப் பக்கமாக அவனை அசைக்கவும். உங்கள் குழந்தை முலைக்காம்பைத் தேடி , அதை அடைந்து உங்கள் மார்பை அரவணைத்துக்கொள்ளட்டும்.

இடது மார்பகத்தை இடது கையாலும் குழந்தையின் தலையை மார்பகத்தை நோக்கி மற்றக்கையாலும் தாய் பிடித்திருத்தல்
உங்கள் குழந்தையின் தலையை சற்று பின்நோக்கி சரிந்தவாறு மார்பருகே கொண்டுவரவும்.

உங்கள் குழந்தை தன் வாயைத் திறக்காவிட்டால், அவனது உதடுகளை உங்கள் முலைக்காம்பால் மெதுவாக வருடி விடவும். ஒவ்வொரு வருடலின் முடிவிலும் உங்கள் குழந்தையின் வாய்க்கும் உங்கள் முலைக்காம்புக்குமுள்ள தொடர்பைத் துண்டிக்கவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

உங்கள் குழந்தை கொட்டாவி விடுவதைப்போல தன் வாயை விரிவாகத் திறக்கும்போது உங்கள் குழந்தையை அரவணக்க முயற்சி செய்யவும். பொறுமையாக இருங்கள். அகலத் திறந்த வாய்க்காகக் காத்திருங்கள்.

மார்பகத்தை ஒரு கையாலும் குழந்தையின் தலையை மார்பகத்தை நோக்கி மற்றக்கையாலும் தாய் பிடித்திருத்தலைக் கிட்டவாகக் காட்டும் படம்
முதலில் குழந்தையின் நாடியை மார்பருகே கொண்டுவந்து பின்பு உதடுகளை தாழ்த்தவும்.

உங்கள் குழந்தை வாயை அகலத் திறக்கும்போது, அவனை விரைவாக, ஆனால் மெதுவாக உங்கள் மார்பருகே கொண்டுவாருங்கள். உங்கள் மார்பை உங்கள் குழந்தையை நோக்கித் தள்ளாதீர்கள். உங்கள் குழந்தையின் நாடி முதலில் உங்கள் மார்பருகே வரட்டும், பின்பு முலைக்காம்பைச் சுற்றியுள்ள பகுதியை முடிந்தளவு அதிகமாக மூடக்கூடியவாறு அவனது கீழ் உதட்டைத் தாழ்த்தவும். கடைசியாக மேல் உதட்டை மார்பருகே கொண்டுவரவும். மூக்கின் நுனி மார்புக்கு மிக அருகே அல்லது மார்பைத் தொடுவது போல இருக்கட்டும். உங்கள் குழந்தை சரியாக அரவணைக்கப்பட்டால், மேலுதட்டைவிட கீழுதடு முலைக்காம்பைச் சுற்றியுள்ள பகுதியை அதிகமாக மூடிக்கொள்ளும்.

உங்கள் குழந்தை உங்கள் மார்புடன் அரவணைக்கப்படும்போது நீங்கல் இன்னும் வலியை உணர்ந்தால், உங்கள் விரலால் குழந்தையின் நாடியை அழுத்தவும்.

ஒரு கையால் குழந்தையின் தலைக்கு தாய் ஆதரவளிக்கும்போது குழந்தை தாய்ப்பால் குடித்தல்
உங்கள் குழந்தையின் கீழ் உதடு மேலுதட்டைவிட முலைக்காம்பின் பெரும்பகுதியை மூடுவதை நிச்சயப்படுத்தவும்.

தவறான உறிஞ்சிக் குடித்தலினால் ஏற்படும் புண்கள்

உங்கள் குழந்தை சரியான முறையில் தூக்கிவைக்கப்பட்டு அரவணைக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் உங்களுக்கு முலைக்காம்பில் புண்வலி உண்டாகியிருக்கலாம். உங்கள் குழந்தை சரியான முறையில் பாலை உறிஞ்சிக் குடித்திருக்கமாட்டான். பெரும்பாலும் முலைக்காம்பு வலி பாலுட்டும் நேரம் முழுவதுமாக நீடித்திருக்கும்.

உங்கள் குழந்தை எப்படிப் பாலை உறிஞ்சிக் குடிக்கிறான் என்பதை சோதித்துப் பார்க்கும்படி ஒரு பாலூட்டும் முறையில் நிபுணத்துவம் வாய்ந்தவரைக் கேட்கவும். சிலவேளைகளில் உறிஞ்சும் பயிற்சியும் விரலால் பாலூட்டுதலும் உங்கள் குழந்தைக்கு, சரியான முறையின் உறிஞ்சுவதற்குப் பயிற்சி கொடுக்க உபயோகிக்கப்படும்.

தொற்றுநோயால் ஏற்படும் புண்கள்

குழந்தையைத் தூக்கி வைத்தல் மற்றும் அரவணைத்தல் முறைகள் சரிசெய்யப்பட்ட பின்பும் புண், மூலைக்காம்பு வெடிப்புகள் நிவாரணமடையாவிட்டால், அவை பற்றீரியாவினால் ஏற்பட்ட தொற்றுநோயாக இருக்கலாம்.

முலைக்காம்புகளுக்கு ஈஸ்டினாலும் நோய்த்தொற்று ஏற்படலாம். ஈஸ்ற் நோய்த்தொற்று ஒரு தாய்க்கும் அவளது குழந்தைக்குமிடையே இலகுவாகக் கடத்தப்படலாம். எனவே, உங்கள் மருத்துவர் உங்கள் இருவருக்கும் சிகிச்சையளிக்கவேண்டியது முக்கியம். பெரும்பாலும் ஈஸ்ற் தொற்றுநோய், வலியில்லாமல் தாய்ப்பாலூட்டிய பின், சில நாட்கள் அல்லது வாரங்கள் கழித்தும் திடீரென வலியை உண்டாக்கும். தாய்மார்கள் பாலூட்டும் நேரம் முழுவதும் மற்றும் பாலூட்டும் நேரங்களுக்கிடையிலும் எரிவது போன்ற வலியை அனுபவிக்கிறார்கள். நீங்கள் பொருக்குள்ள, பளபளப்பான இளஞ்சிவப்பு நிறத் தோலை முலைக்காம்பில் அவதானிக்கலாம்.

தொற்றுநோய்க்கான மருந்துகள் உட்கொள்ளும் தாய்மார் அல்லது குழந்தைகளை மேலும் இலகுவாக ஈஸ்ற் தொற்றுநோய் தொற்றிக்கொள்ளும்.

உங்கள் மருத்துவர் தொற்றுநோய்க்காக உங்களைப் பரிசோதிப்பது முக்கியம். பற்றீரியாத் தொற்றுநோய்க்காக உங்கள் முலைக்காம்புகளில் பூசும்படி ஒரு அன்டிபையோடிக் பூசுமருந்தை உங்கள் மருத்துவர் எழுதித் தருவார். ஈஸ்ற் தொற்றுநோய்க்காக, தாய் மற்றும் குழந்தை இருவருக்குமே அன்ரிஃபங்கல் நோய்த் தடுப்பு மருந்து எழுதிக் கொடுக்கப்படலாம். சில வேளைகளில் வீக்கத்தைக் குறைப்பதற்காக கோர்டிசோன் என்ற மருந்து பூசுமருந்துடன் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

தாய்ப்பாலூட்டப்பட்டபின் முடிவில் புண்வலி உண்டாதல்

சில தாய்மார்களுக்குத் தாய்ப்பாலூட்டியபின்னர் எரிவது போன்ற, கடுக்கும் வலியும் இருக்கும். தாய்ப்பாலூட்டியபின்னர் முலைக்காம்பு வெள்ளையாக, பின்பு சிவப்பாக மற்றும் சிலவேளைகளில் திரும்பவும் இளஞ்சிவப்பாவதற்குமுன் நீல நிறமாக மாறும். குளிர் காற்றினதும் குழந்தையின் சூடான வாயினதும் வெப்பநிலை வித்தியாசத்தினால் சில தாய்மார்களில் இவ்வாறு சம்பவிக்கிறது. குழந்தை முலைக்காம்பை இறுகப்பற்றிப் பிடிப்பதினால், அல்லது முலைக்காம்பினுள் இரத்தம் பாய்வதைக் குறைத்துவிடுவது போன்ற தவறான அரவணைப்பினாலும் இவ்வாறு சம்பவிக்கலாம்.

தாய்ப்பாலூட்டிய பின்னர் உங்கள் மார்பில் வெப்பமான துவாய்களை வைத்துவிடவும். இது முலைக்காம்பை படிப்படியாக குளிரச் செய்யும். உங்கள் குழந்தை சரியான முறையில் தூக்கிவைக்கப்பட்டு அரவணைக்கப்பட்டிருப்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இந்த வலி மாறாவிட்டால் உங்கள் மருந்துவரிடம் மேலுமான உதவியைக் கேட்கவும்.

கடினமான மார்பில் பாலூட்டுவதனால் உண்டாகும் புண்கள்

கடினமான மார்பு என்பது உங்கள் மார்பு மிகவும் கடினமாக இருப்பதைக் குறிக்கிறது. முலைக்காம்பினைச் சுற்றியுள்ள் பகுதி முழுவதும் மிகவும் கடினமாக இருக்கும். முலைக்காம்பு இலகுவாக உங்கள் குழந்தையின் வாயினுள் இலகுவாக உட் செல்லாது. முலைக்காம்பு குழந்தையின் வாயினுள் உரசி புண்களை உண்டாக்கும்.

தாய்ப்பாலூட்டுவதற்கு முன்பு உங்கள் மார்பில் வெப்பமான அல்லது ஈரமான பன்டேஜ் கட்டுகளைப் போடவும். பின்பு கைகள் மூலமாக கொஞ்சம் பாலை உங்கள் மார்பிலிருந்து எடுத்துவிடவும். உங்கள் பிள்ளையை அரவணைப்பதற்கு முன்பாக, முலைக்காம்பைச் சுற்றியுள்ள பகுதி மென்மையானதாக இருக்கவேண்டும். தாய்ப்பாலூட்டிய பின்பும் தாய்ப்பாலூட்டுவதற்கிடையிலும் குளிர்ந்த பன்டேஜ் கட்டு போடுவது உதவி செய்யும். உங்கள் மார்பை மென்மையாக்க முடியவில்லை என்றால் தாய்ப்பாலூட்டுவதற்கு உதவி செய்யும் நிபுணரிடம் உதவி கேட்கவும்.

அடைபட்ட ஒரு முலைக்காம்புத் துளையினால் உண்டாகும் புண்கள்

சில தாய்மார்கள் ஒரு சிறிய வெள்ளைப்புள்ளி தங்கள் முலைக்காம்பில் உண்டாயிருப்பதை அவதானிப்பார்கள். அதனால் தாய்ப்பாலூட்டும் சமயம் முழுவதும் வலி இருப்பதையும் உணருவார்கள். பாற்சுரப்பிகளுள் ஒன்று முலைக்காம்பினுள் திறக்கும்போது அடைக்கப்பட்டுள்ளது. தாய்ப்பாலூட்டுவதற்கு முன்பு வெப்பமான பன்டேஜ் கட்டு போடுவதும் அடிக்கடி தாய்ப்பாலூட்டுவதும் இதற்கு உதவி செய்யும். சில நாட்களுக்குள் எந்த முன்னேற்றமும் இல்லாவிட்டால், உங்கள் மருத்துவர், ஒரு கிருமியழிக்கப்பட்ட ஊசி மூலமாக முலைக்காம்பின் துளையைத் திறந்துவிடுவார்.

உங்கள் குழந்தையின் நாக்கு கட்டப்பட்டிருக்கும்போது ஏற்படும் புண்கள்

சில குழந்தைகளின் நாக்கு, வாயின் அடித்தளப்பகுதியுடன் மிகவும் நெருக்கமாகப் பற்றிப் பிடிக்கப் பட்டிருப்பதால் அவர்களால் தங்கள் நாக்கை இலகுவாக அசைக்கமுடியாது. பல் முரசு வரிசைக்குமேல் குழந்தையின் நாக்கு அசைக்கப்படமுடியாவிட்டால், அது அரவணைப்பதிலும் பாலை உறிஞ்சிக் குடிப்பதிலும் பிரச்சினையை ஏற்படுத்தும். அதன்மூலமாக முலைக்காம்புப் புண்கள் உண்டாகும். உங்கள் மருத்துவரும் மற்றும் தாய்ப்பாலூட்டுவதற்கு உதவி செய்யும் நிபுணரும் உங்கள் குழந்தையைப் பரிசோதிக்க வேண்டும்.

முலைக்காம்புப் புண்களைத் தடுப்பதற்கு மற்றும் சிகிச்சைளிப்பதற்கு எடுக்கவேண்டிய வேறு நடவடிக்கைகள்

மார்பைப் பராமரித்தல்

 • ஒரு நாளில் ஒரு முறை மாத்திரம் சோப்பு உபயோகிக்காமல் உங்கள் முலைக்காம்புகளை வெந்நீரினால் கழுவவும். முலைக்காம்பை ஈரலிப்பாக வைத்திருக்க வேண்டிய இயற்கையான எண்ணெய்களை சோப்பு அகற்றிவிடும். ஒவ்வொரு பாலூட்டுதலின் பின்பும் கொஞ்சம் தாய்ப்பாலை உங்கள் முலைக்காம்புகளில் மெதுவாகத் தடவிவிடவும்.
 • உங்கள் முலைக்காம்புகளை காற்றில் உலரவிடவும் அல்லது மிகக்குறைத்தளவு வெப்பத்தில் வைக்கப்பட்ட ஒரு முடி ஈரமுலர்த்தியை உபயோகிக்கவும்.
 • வெளியே எறிந்துவிடக்கூடிய நேர்சிங் பாடுகளுக்குப் பதிலாக கழுவி உபயோகிக்கக்கூடிய நேர்சிங் பாடுகளை உபயோகிக்கவும். உட்புறமாக பிளாஸ்ரிக் பட்டை வைத்துத் தைக்கப்பட்ட நேர்சிங் பாடுகளை உபயோகிக்கவேண்டாம். அது தோலை அதிக ஈரலிப்பாக வைத்துக்கொள்ளும். நேர்சிங் பாடுகள் உங்கள் முலைக்காம்பில் ஒட்டினால் அதை ஈரமாக்கி வெளியே எடுத்து விடவும். இது முலைக்காம்பிலிருந்து தோல் உரிந்துவருவதைத் தடுக்கும்.
 • நீங்கள் பாலூட்டுவதற்காக அணிந்திருக்கும் மார்புக் கச்சையினுள்ளே, உங்கள் முலைக்காம்புப் பகுதியில், பிளாஸ்ரிக்காலான ஒடுகளை அணிந்து கொள்ளவும். அது நீங்கள் பாலூட்டுவதற்காக அணிந்திருக்கும் மார்புக் கச்சை உங்கள் முலைக்காம்புடன் உரசிக் கொள்வதைத் தடுக்கும். பிளாஸ்ரிக்காலான மார்பு ஓடுகள், சில மருந்துக்கடைகளில் அல்லது சிக் கிட்ஸிலுள்ள பிரதான மாடியில் அமைந்திருக்கும் ஸ்பெஷாலிட்டி ஃபூட் ஷொப்பில் கிடைக்கும்.

பாலூட்டத்தேவையானவைகள் நேரில், தொலைபேசியில், அல்லது இணைய தளம் மூலம் டொரொன்டோவில், சிக்கிட்ஸிலுள்ள ஸ்பெஷாலிட்டி ஃபூட் ஷொப்பில் கிடைக்கும். விபரங்களுக்கு www.specialtyfoodshop.ca (ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும்) போகவும் அல்லது 1-800-737-7976 ஐ அழைக்கவும். ஸ்பெஷாலிட்டி ஃபூட் ஷொப்பினால், இந்தப் பொருட்களை உங்கள் வீட்டுக்கே அனுப்பிவைக்க முடியலாம்.

எப்போது தாய்ப்பாலூட்டப்படவேண்டும்

 • தாய்ப்பாலூட்டிய பின்னர் உறிஞ்சுவதை நிறுத்தி, குழந்தையை மார்பிலிருந்து வெளியே எடுப்பதற்கு, குழந்தையின் உதடுகள் மற்றும் முரசுகளினூடாக வாயின் ஓரத்தில் உங்கள் விரலை வைக்கவேண்டும் என்பதை நினைவில் வைக்கவும்.
 • முதலில், மிகக்குறைந்த புண்வலியுள்ள மார்பில் பாலூட்டுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
 • குழந்தையைவித்தியாசமான நிலைகளில் வைத்துப் பாலூட்டுவது புண்களின் வலியைக் குறைக்கலாம்.
 • அடிக்கடிப் பாலூட்டுவது ஆனால் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமலிருப்பது, உங்களை மேலும் சௌகரியமாக உணரவைக்கக் கூடும்.
 • உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிக்கக் கற்றுக்கொள்ளும்போது, சூப்பிகள் அல்லது போத்தல் முலைக்காம்புகளை உபயோகிக்காதிருக்க முயற்சி செய்யவும். அநேக குழந்தைகள் சூப்பிகள் அல்லது போத்தல் முலைக்காம்புகளை குடித்தபின்னர் மார்பில் பாலை வித்தியாசமாகச் சூப்புவார்கள். இது உங்கள் குழந்தை தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிப்பதை கடினமாக்கும் மற்றும் முலைக்காம்புப் புண்களை உண்டாக்கும்.
 • உங்கள் மார்பில் அதிக புண்கள் உண்டாகியிருந்தால் ஒரு அல்லது இரு முலைக்காம்புப் புண்களும் நிவாரணமடையட்டும். உங்களில் தாய்ப்பால் சுரத்தலை பேணிப்பாதுகாக்கக்கூடியவாறு' உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும் அட்டவணைப்படியே, நீங்கள் உங்கள் தாய்ப்பாலை வெளியே எடுக்கவேண்டும்(எக்ஸ்பிரஸ்ட் மில்க்). அதை நீங்கள் கையினால் அல்லது மார்புப் பம்பினால் வெளியே எடுக்கலாம். உங்கள் முலைக்காம்பு நிவாரணமடைந்துகொண்டுவரும் நா(ள்)ட்களில் விரலினால் குழந்தைக்கு ஊட்டுவது மிகச் சிறந்தது.

முக்கிய குறிப்புகள்

 • தாய்ப்பாலூட்டும் முதல் வாரத்தில் முலைக்காம்பு மென்மையாயிருத்தல் சாதாரணமானது.
 • சரியான நிலை மற்றும் அரவணைத்தல் முலைக்காம்புகளில் புண்கள் உண்டாவதைத் தடுக்கும்.
 • தாய்மார்கள் தாய்ப்பாலூட்டுவதை நிறுத்துவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று முலைக்காம்புப் புண்கள் ஆகும்.
 • முலைக்காம்புப் புண்களுக்கான காரணத்தை விரைவாகக் கண்டுபிடிப்பது மற்றும் சிகிச்சை செய்வது மிகவும் முக்கியம்.
Last updated: November 06 2009