உங்கள் பிள்ளையின் உணவூட்டல் குழாய் அடைபட்டால் என்ன செய்ய வேண்டும்

G/GJ tubes: What to do if your child’s feeding tube is blocked [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் குழந்தையின் உணவூட்டல் குழாய் அடைபட்டால் என்ன செய்யவேண்டும் என்பதனை அறிந்து கொள்ளவும்.

முக்கிய குறிப்புகள்

 • உங்கள் பிள்ளையின் உணவூட்டல் குழாய் அடைபட்டால், உடனடியாகவே குழாயின் அடைப்பை நீக்க முயற்சிப்பது அவசியம்.
 • உங்கள் பிள்ளையின் குழாயில் அடாப்டர் இருந்தால், அடைப்புக்கான காரணம் அதுவாக இருக்குமா என்பதை அறிய முதலில் அதனை அகற்றவும்.
 • உங்கள் குழந்தையின் உணவூட்டல் குழாயின் அடைப்பை நீக்க முயற்சிப்பதற்கு, இளஞ்சூடான நீரை ஓடவிட்டுத் தள்ளல்-மற்றும்-இழுத்தல் அசைவினைப் பிரயோகிக்கவும். இது வேலை செய்யாவிடின், உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும்.
 • கணைய நொதியங்கள் மற்றும் சோடியம் பைகார்பனேட்டுக்கான மருந்துக் குறிப்பு உங்களிடம் இருந்தால், இளஞ்சூடான நீர் வேலை செய்யாவிட்டால் இந்த முறையை முயற்சிக்கவும்.
 • உங்கள் பிள்ளைக்கு குறுகிய-முனை உள்ள G குழாய் இருந்தால், முதலில் குழாயின் உணவூட்டும் வாயில் வழியாக அதனை அலசிக் கழுவ முயற்சிக்கவும். இது வேலை செய்யாவிடின், குழாயை அகற்றிக் கைப் பிரயோகத்தால் அதன் அடைப்பை நீக்க முயற்சிக்கவும். நீங்கள் குறுகிய-முனை உள்ள குழாயை மாற்றலாம் அல்லது ஃபோலே வகை வடிகுழாயை உட்செலுத்தலாம்.
 • ஒரு குழாய் மூலம் உணவு அல்லது மருந்தைக் கொடுப்பதற்கு முன்னரும் பின்னரும், அத்துடன் தொடர்ச்சியான உணவூட்டல்களின் போது ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒரு தடவையும், 5 முதல் 10 மிலி நீரினால் நீங்கள்அதனை அலசிக் கழுவுவதன் மூலம் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவும்.

உங்கள் பிள்ளைக்கு G அல்லது GJ குழாய் இருந்தால், அது திரவ உணவு அல்லது மருந்துகளால் அடைபட்டால், இயலுமானளவு விரைவிலேயே குழாயின் அடைப்பை நீக்க முயற்சிப்பது அவசியம். எவ்வளவு நேரமாகக் குழாய் அடைபட்டிருக்கின்றதோ, அவ்வளவு அதிகமாக அடைப்பை நீக்குவது கடினமாக இருக்கலாம். உங்கள் பிள்ளையின் குழாயிலுள்ள அடைப்பை நீக்குவதைத் தாமதப்படுத்தினால், அது உங்கள் பிள்ளை உணவூட்டல்கள், திரவங்கள் அல்லது மருந்துகளைப் பெறுவதைத் தடுக்கலாம்.

உணவுக் குழாய் தடைசெய்யப்பட்டிருக்கிறதா என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?

உங்கள் பிள்ளை தொடர்ச்சியாக உணவூட்டல் பம்ப் வழியாக ஆகாரத்தைப் பெற்று வந்தால், ஒரு தடங்கல் அல்லது ஓட்டத்தில் பிழை இருப்பதாகக் கூறும் ஒரு பீப் ஓசையை இந்த உணவூட்டல் பம்ப் எழுப்பலாம். இது பம்ப், உணவூட்டல் பை அல்லது குழாயில் ஏற்படும் ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.

உங்கள் பிள்ளை ஒரு உணவூட்டல் பையைப் பயன்படுத்தி ஒரு ஈர்ப்பு உணவூட்டலைப் பெற்றால், உணவூட்டல் பை அமைப்பின் சொட்டும் கலனில் உணவு சொட்டுவது நின்றுவிடும்.

உங்கள் குழந்தையின் குழாயை நீங்கள் அலசிக் கழுவும்போது, அதனைத் தள்ளுவது கடினமாக இருக்கும். ஒரு சிறிதளவு திரவம் மட்டுமே குழாய்க்குள் சென்றால், அது "பகுதி அடைப்பு" என்று அழைக்கப்படுகின்றது.

நீங்கள் எந்தத் திரவத்தையும் குழாயினுள் செலுத்த முடியாவிட்டால், இதன் பொருள் குழாய் முற்றாக அடைபட்டிருக்கக் கூடும் என்பதாகும்.

உங்கள் பிள்ளையின் G அல்லது GJ குழாய் தனது முனையில் ஒரு அடாப்டரைக் கொண்டிருந்தால், அதனை அகற்றி, அதில் ஏதாவது அடைப்பிருந்தால் அதனை எடுப்பதற்கு நீரால் அலசிக் கழுவவும். நீங்கள் அடாப்டரை அகற்றும்போது வயிற்று உள்ளடக்கங்கள் உங்கள் குழந்தையின் G அல்லது GJ குழாயிலிருந்து வெளியே வந்தால், உங்கள் குழந்தையின் குழாய் அடைபடவில்லை. மாறாக, அடாப்டர் அடைபட்டிருந்தால் அதனைக் கழுவலாம் அல்லது மாற்றி விடலாம். அடாப்டரை அகற்றிய பின் G குழாய் அல்லது GJ குழாயிலிருந்து வயிற்று உள்ளடக்கங்கள் வெளியேறாவிட்டால், இதன் பொருள் குழாய் அடைபட்டுள்ளது என்பதாகும்.

உணவூட்டல் குழாயின் அடைப்பை நீக்குவது எப்படி

வீட்டில் வைத்து ஒரு உணவூட்டல் குழாயின் அடைப்பை நீக்குவதற்கு இரு வேறுபட்ட வழிகள் உள்ளன. முதலில் இளஞ்சூடான நீரைப் பயன்படுத்த முயற்சிக்கவும். அது வேலை செய்யாவிட்டால், செயலூக்கப்படுத்திய கணைய நொதியங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

இளஞ்சூடான நீரைப் பயன்படுத்துதல்

உங்கள் குழந்தையின் G குழாய் அல்லது GJ குழாயின் அடைப்பை நீக்குவதற்கு, உங்களுக்கு 1 மிலி மற்றும் 5 மிலி

 1. 1 மிலி மற்றும் 5 மிலி ஸ்லிப்-டிப் ஊசிக்குழல்களை இளஞ்சூடான நீரினால் நிரப்பவும்.
 2. உங்கள் குழந்தையின் குழாயின் முடிவில் ஒரு அடாப்டர் இணைக்கப்பட்டிருந்தால், அதனை அகற்றவும்.
 3. 1 மிலி ஊசிக்குழலை நேரடியாக உணவூட்டல் குழாயுடன் இணைக்கவும்.
 4. நீரைக் குலுக்கி ஓடவிட்டுத் தள்ளல்-மற்றும்-இழுத்தல் அசைவினைப் பிரயோகித்து, முடியுமானளவு நீரைக் குழாயினுள் செலுத்தவும். இந்தக் குலுக்கும் அசைவு குழாயினுள் தேங்கியிருக்கும் எந்தத் திரவ உணவுகளையும் மருந்துகளையும் அகற்ற உதவும். குழாயிலிருந்து அடைப்பை நீக்குவதற்கு நீங்கள் இதனைப் பல முறைகள் முயற்சிக்க வேண்டியிருக்கும்.
 5. குழாயில் அடைப்பு நீங்கியதன் பின், குறைந்தது 5 மிலி இளஞ்சூடான நீரால் அலசிக் கழுவவும்.
 6. 1 மிலி ஊசிக்குழலை நேரடியாகக் குழாயுடன் இணைப்பதற்காக அடாப்டரை நீங்கள் நீக்கியிருந்தால், உணவூட்டங்கள், திரவங்கள் மற்றும் மருந்துகளைத் தொடர்ந்து கொடுப்பதற்கு அதனை மீண்டும் குழாயுடன் இணைக்கவும்.

செயலூக்கப்படுத்திய கணைய நொதியங்களைப் பயன்படுத்துதல்

உணவூட்டல் குழாயை இளஞ்சூடான நீர் கொண்டு அடைப்பை எடுக்க முடியாவிட்டால், நீங்கள் கணையச் சேர்வை (கணைய நொதியங்களின் ஒரு கலவை) மற்றும் சோடியம் பைகார்பனேட் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். திரவ உணவுகளால் குழாயில் அடைப்பு ஏற்படும்போது இந்தக் கலவை மிக நன்றாக வேலை செய்கின்றது. ஒரு மருந்தகத்தில் இருந்து கணைய நொதியங்களைப் பெறுவதற்கு உங்கள் மருத்துவர் அல்லது தாதிப் பயிற்சியாளரிடமிருந்து உங்களுக்கு ஒரு மருந்துச் சீட்டு தேவைப்படும். உங்கள் G குழாய் நிபுணரும் உங்களுக்கு ஒரு மருந்துச் சீட்டு வழங்கலாம்.

 1. கணையச் சேர்வையானது பன்றி இறைச்சிப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. கலாச்சார, தனிப்பட்ட மற்றும் உணவுக் கருதுகோள்கள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.
 2. உங்கள் பிள்ளைக்குப் பன்றி இறைச்சிப் பொருட்களுக்கான ஒவ்வாமை இருந்தால், கணைய நொதியங்களைப் பயன்படுத்த வேண்டாம்.
 3. கணைய நொதியங்கள் அரிப்பு ஏற்படுத்துவதுடன் சருமத்தில் சிவப்பு நிறத்தையும் தோற்றுவிக்கும். கணைய நொதியக் கூட்டுக்குளிசையைக் (காப்சூல்) கையாளும் போது கையுறைகளைப் பயன்படுத்தவும். நொதியங்கள் (என்சைம்கள்) உங்கள் தோலுடன் தொடர்பு கொண்டால், உடனடியாகவே சோப்பு மற்றும் நீரினால் அப்பகுதியைக் கழுவி விடவும்.

கணைய நொதியங்களைப் பயன்படுத்துவதற்கு, உங்களுக்கு ஒரு கணைய நொதியக் கூட்டுக்குளிசை, 325 மிகி சோடியம் பைகார்பனேட் மாத்திரை ஒன்று, தொற்று நீக்கிய அல்லது காய்ச்சி வடிகட்டிய நீர், மற்றும் 5 மிலி ஊசிக்குழல்கள் இரண்டு (மருந்துகளைக் கலக்க ஒன்று அலசிக் கழுவ மற்றொன்று) ஆகியன தேவைப்படும்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

 1. உங்கள் கைகளைக் கழுவவும், பின்னர் ஒரு ஜோடி கையுறைகளை அணியவும்.
 2. கணைய நொதியக் கூட்டுக்குளிசையைத் திறக்கவும். தூள் உள்ளடக்கங்களை ஒரு மருந்துக் கோப்பையில் இடவும். கூட்டுக்குளிசையின் வெளிப்புறக் கோதுகளை எறிந்து விடவும்.
 3. சோடியம் பைகார்பனேட் மாத்திரையைத் தூளாகும் வரை நொறுக்கவும். மருந்துக் கோப்பையில் கணையநொதியத் தூளுடன் அதனைச் சேர்க்கவும்.
 4. 5-10 மிலி இளஞ்சூடான தொற்று நீக்கிய அல்லது காய்ச்சி வடிகட்டிய நீரைச் சேர்த்து, மருந்துக் கோப்பையில் கரைசலைக் கலக்கவும்.
 5. இக்கரைசலை 5 மிலி ஊசிக்குழலினுள் உறிஞ்சி இழுத்தெடுக்கவும். இயலுமானவரை குழாயினுள் முடியுமானளவு கரைசலை உட்செலுத்தவும். அது உங்கள் கண்களிலோ அல்லது உங்கள் பிள்ளையின் கண்களிலோ படாதபடி கவனமாக இருக்கவும்.
 6. இக்கரைசல் 30 நிமிடங்களுக்குக் குழாயில் இருக்கட்டும்.
 7. குறைந்தது 5 மிலி தொற்று நீக்கிய அல்லது காய்ச்சி வடிகட்டிய நீரைக் கொண்டு குழாயை அலசிக்கழுவ முயற்சிக்கவும்.
  • உங்கள் பிள்ளை 1 வயதுக்குக் குறைவானவராக இருந்தால், இந்த நடைமுறையை ஒரு முறை மட்டுமே முயற்சிக்கவும்.
  • உங்கள் பிள்ளை 1 வயதிலும் கூடியவராக இருந்தால், நீங்கள் இந்த செயன்முறையை இரு தடவைகள் செய்யலாம். குழாயின் அடைப்பை நீக்குவதில் நீங்கள் தோல்வியுற்றால், முதலாவது முயற்சிக்குப் பிறகு உடனடியாகவே இந்த நடைமுறையை மீண்டும் செய்ய வேண்டும். இரண்டாவது தடவை கரைசலை உங்கள் பிள்ளையின் குழாயினுள் செலுத்துவதற்கு முன்னர், கணைய நொதியக் கலவையின் முதலாவது கரைசலை அதிலிருந்து அகற்ற முயற்சிக்கவும். முதலாவது கரைசலை நீக்க முடியாவிட்டால், இரண்டாவது கரைசலுடன் தொடரவும்.
 8. குழாயின் அடைப்பு நீக்கப்பட்டிருந்தால், குறைந்தது 5 மிலி தொற்று நீக்கிய அல்லது காய்ச்சி வடிகட்டிய நீரைக் கொண்டு அலசிக் கழுவிவிட்டு, உங்கள் உணவூட்டங்கள் மற்றும் மருந்துகளைத் தொடரவும்.

இளஞ்சூடான நீர் அல்லது செயலூக்கப்படுத்திய கணைய நொதியங்கள் உணவூட்டல் குழாயின் அடைப்பை அகற்றாவிட்டால், உங்கள் பிள்ளையின் குழாய் மருத்துவமனையில் மாற்றப்படுவதற்கு உங்கள் குழந்தையின் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் பிள்ளையிடம் அடைப்பு ஏற்பட்ட குறுகிய முனையுள்ள குழாய் அல்லது ஏதாவது பலூன் வகைக் குழாய் உள்ளது எனில், கீழே காண்க.

உங்கள் குழந்தையின் குறுகிய-முனையுள்ள குழாய் அடைபட்டால்

Mic-Key™ பட்டன் அல்லது AMT™ MiniONE போன்ற குறுகிய-முனையுள்ள பலூன் வகை G குழாய்கள் அரிதாகவே அடைபடுகின்றன, ஏனெனில் அவை மற்ற வகை G குழாய்களைக் காட்டிலும் மிகக் குறுகியவை. 5 முதல் 10 மிலி தொற்று நீக்கிய நீரைக் கொண்டு அலசிக் கழுவுவதன் மூலம் இணைப்புக் குழாய் அடைபடவில்லை என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இணைப்புக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால், அதற்குப் பதிலாகப் புதிய இணைப்புக் குழாயை மாற்றவும். உங்கள் குழந்தையின் குறுகிய-முனையுள்ள பலூன் வகை G குழாயை மாற்றுவதற்குப் பயிற்சி பெற்றிருந்தால், பழையதற்குப் பதிலாகப் புதிய உணவூட்டல் குழாயை மாற்றலாம்.

உங்கள் குழந்தையின் குறுகிய-முனையுள்ள G குழாயின் அடைப்பை நீக்குவதற்கு, பின்வருவனவற்றைச் செய்யவும்.

 1. சோப்பு மற்றும் நீரினால் கைகளை கழுவவும்.
 2. குழாயின் பலூனிலுள்ள நீரைக் குறைக்க ஸ்லிப் டிப் ஊசிக்குழல் ஒன்றினைப் பயன்படுத்தவும். இந்த நீரை வெளியில் எறிந்து விடவும்.
 3. ஸ்டோமாவிலிருந்து குழாயை அகற்றவும்.
 4. குழாயில் ஏற்பட்டிருக்கும் இயல்பான அடைப்பை நீங்கள் காணலாம். அடைப்பு ஏற்பட்ட இடத்தில் குழாயை நசிப்பதற்கு உங்கள் ஆள்காட்டி விரல் மற்றும் கட்டைவிரலைப் பயன்படுத்தவும். அடைப்பை அகற்ற முயற்சிப்பதற்குக் குறைந்தது 5 மிலி நீரால் குழாயை அலசிக் கழுவவும்.
 5. குறுகிய-முனையுள்ள G குழாயின் அடைப்பை நீங்கள் வெற்றிகரமாக அகற்றினால், அத்துடன் குழாயும் உடையாவிட்டால், குறுகிய-முனையுள்ள G குழாயை சோப்பு மற்றும் நீரினால் கழுவவும், அதை அலசவும், குறுகிய-முனையுள்ள G குழாயின் நுனியை வழுவழுப்பானதாக்கவும். அதனை ஸ்டோமாவில் மீளச் செருகவும். செருகப்பட்டதும், நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் அளவில் தொற்று நீக்கிய அல்லது காய்ச்சி வடிகட்டிய நீரைக் கொண்டு பலூனை நிரப்பவும்.
 6. இரைப்பை உள்ளடக்கங்களின் pH ஐச் சரிபார்த்து குழாய் இரைப்பையில் இருக்கின்றதா என்று சோதித்தறியவும். pH அளவீடு 6.00 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் குழாய் வயிற்றில் சரியாக உள்ளது என்பது பொருளாகும். PH -ஐ எவ்வாறு பரிசோதிக்க வேண்டும் என்பதை அறிய, பலூன் G குழாய்கள் எனும் கட்டுரையைப் பார்க்கவும்.
 7. குறுகிய-முனையுள்ள குழாயின் அடைப்பை எடுப்பதில் நீங்கள் தோல்வியுற்றால், அல்லது குழாய் உடைந்தால், புதிய குறுகிய-முனையுள்ள G குழாய் அல்லது ஃபோலே வடிகுழாயைச் செருகவும். நீங்கள் ஃபோலே வடிகுழாயைச் செருகியிருந்தால், குறுகிய-முனையுள்ள குழாயை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்ய உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் குழந்தையின் குறுகிய-முனையுள்ள GJ அல்லது சேர்க்கைக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால்

உங்கள் பிள்ளைக்கு குறுகிய-முனையுள்ள GJ அல்லது சேர்க்கைக் குழாய் இருந்தால், அதனுடைய அடைப்பை நீங்கள் நீக்க முடியாது, அதை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்ய உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும். இது அலுவலகப் பணிநேரங்களுக்குப் பின்னர் அல்லது வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் ஏற்பட்டால், நீங்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல வேண்டியிருக்கலாம்.

அடைப்பு ஏற்படுவதைத் தவிர்த்தல்

உணவூட்டல் குழாயினதும், உணவூட்டல் பை அமைப்பினதும் உட்புறத்தை முடிந்தவரை சுத்தமாக வைத்திருப்பதே, திரவ உணவு அல்லது மருந்து மூலம் ஒரு உணவூட்டல் குழாய் அடைபடுவதைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழியாகும்.

 • ஒவ்வொரு உணவூட்டலின் முன்னரும் பின்னரும் 5 முதல் 10 மிலி நீர் கொண்டு G குழாய் அல்லது GJ குழாயை அலசிக் கழுவவும்.
 • மருந்துகளின் ஒவ்வொரு டோஸுக்கு முன்னரும் பின்னரும் G குழாய் அல்லது GJ குழாயை அலசிக் கழுவவும்.
 • தொடர்ச்சியான உணவூட்டங்களின் போது ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை G குழாய் அல்லது GJ குழாயை அலசிக் கழுவவும்.
 • ஒவ்வொரு உணவுக் கவளம் ஊட்டப்படுவதற்கும் பிற்பாடும், உணவூட்டல் பை மற்றும் அனைத்து இணைப்புக் குழாய்களையும் சுத்தம் செய்யவும். குழாய்களை சுத்தம் செய்ய நீங்கள் சுடு நீர் மற்றும் சோப்பு அல்லது தண்ணீர் மற்றும் வினிகர் கலவையைப் பயன்படுத்தலாம்.
 • G குழாய் அல்லது GJ குழாய் மூலம் செலுத்துவதற்கு முன்பு அனைத்து மருந்துகளையும் முழுமையாகக் கரைக்கவும்.

G குழாய் அல்லது GJ குழாய் மூலம் பயன்படுத்த சிறந்த மருந்துகளைத் தேர்வு செய்ய மருந்துக் குழுவுடன் இணைந்து பணியாற்றவும்.

Last updated: September 17 2019