உங்கள் குழந்தையின் உணவூட்டல் குழாய் வெளியே இழுக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்

G/GJ tubes: What to do if your child’s feeding tube is pulled out [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் குழந்தையின் G குழாய் அல்லது GJ குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்பட்டால் என்ன செய்வது என்று அறியவும்.

முக்கிய குறிப்புகள்

 • உங்கள் குழந்தையின் G குழாய் அல்லது GJ குழாய் தற்செயலாக வெளியேற்றப்பட்டால், நீங்கள் விரைவில் ஒரு ஃபோலே வடிகுழாயை அந்தப் பாதையில் செருக வேண்டும்.
 • எல்லா நேரங்களிலும் உங்கள் குழந்தையுடன் அவசரகாலப் பொருட்களை வைத்திருக்க வேண்டும்.
 • ஃபோலே வடிகுழாய் உங்கள் குழந்தையின் G குழாய் அல்லது GJ குழாயை விட ஒரு அளவு சிறியதாக இருக்க வேண்டும்.
 • உங்கள் குழந்தையின் குழாய் முதன்முதலில் வைக்கப்பட்ட 8 வாரங்களுக்குள் தற்செயலாக வெளியேற்றப்பட்டால், ஃபோலே வடிகுழாயைச் செருகவும், ஆனால் உணவூட்டங்கள், மருந்துகள் அல்லது திரவங்களுக்கு வடிகுழாயைப் பயன்படுத்த வேண்டாம். ஃபோலே வடிகுழாயின் பலூனை நிரப்ப வேண்டாம்.
 • உங்கள் குழந்தையின் குழாய் முதன்முதலில் போடப்பட்ட 8 வாரங்களுக்குப் பின்னர் தற்செயலாக வெளியேற்றப்பட்டால், ஃபோலே வடிகுழாயைச் செருகவும். ஃபோலே வடிகுழாய் வயிற்றில் இருப்பதை நீங்கள் சரிபார்த்தவுடன், ஃபோலே வடிகுழாயின் பலூனை ஊதி, அதை உணவூட்டங்கள், மருந்துகள் அல்லது திரவத்திற்குப் பயன்படுத்தவும்.
 • உங்கள் பிள்ளைக்கு வயிற்றில் வாயு, கடுமையான வயிற்று வலி, வாந்தி, கசப்பு, அதிக காய்ச்சல், சுவாசிப்பதில் சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால் ஃபோலே வடிகுழாய் மூலம் உணவூட்டுவதை நிறுத்தவும்.
 • நீங்கள் ஃபோலே வடிகுழாயைச் செருக முடியாவிட்டால், உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது உங்கள் அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.

உணவூட்டல் குழாய்கள் என்றால் என்ன?

காஸ்ட்ரோஸ்டமி குழாய்கள் (G குழாய்கள்) மற்றும் காஸ்ட்ரோஜெஜுனோஸ்டமி குழாய்கள் (GJ குழாய்கள்) ஆகியவை உணவூட்டல் சாதனங்களாகும். ஒரு G குழாயானது திரவ ஊட்டச்சத்து, மருந்து மற்றும் பிற திரவங்களை நேரடியாக இரைப்பைக்குள் செலுத்துகின்றது. GJ குழாய் ஒன்று திரவ ஊட்டச்சத்து, மருந்து மற்றும் பிற திரவங்களை நேரடியாக சிறுகுடலுக்குள் (ஜெஜூனம்) செலுத்துகின்றது. G குழாய்கள் மற்றும் GJ குழாய்கள் இரண்டும் வயிற்றில் ஒரு சிறிய திறப்பு வழியாக வைக்கப்படுகின்றன. இந்தத் திறப்பு "ஸ்டோமா" என்று அழைக்கப்படுகிறது. உடலின் வெளிப்புறத்திலிருந்து இரைப்பை வரையுள்ள உணவுப் பாதை "பாதை" என்று அழைக்கப்படுகின்றது.

உங்கள் பிள்ளையின் உணவூட்டல் குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்

உங்கள் பிள்ளைக்கு பலூன் வகை G குழாய் இருந்தால், அது தற்செயலாக வெளியே இழுக்கப்பட்டிருந்தால், பலூன் உடைந்துவிட்டதா என்று பார்க்கவும். பலூன் உடைக்கப்படாவிட்டால், அதை எப்படி செருகுவது என்று நீங்கள் கற்றுக்கொண்டிருந்தால், பலூன் வகை G குழாயை நீங்கள் மீண்டும் செருகலாம்.

உங்கள் பிள்ளைக்கு பலூன்அற்ற G குழாய் அல்லது GJ குழாய் இருந்து அது தற்செயலாக வெளியே இழுக்கப்பட்டால், ஸ்டோமா மற்றும் உணவுப் பாதை மூடப்படுவதைத் தவிர்ப்பதற்கு ஒரு ஃபோலே வகைக் குழாயை இயலுமானளவு விரைவிலே அப்பாதையில் செருகுவது முக்கியம்.

ஃபோலே வகை வடிகுழாய் உங்கள் குழந்தையின் G அல்லது GJ குழாயை விட ஒரு அளவு சிறியதாக இருக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் பிள்ளைக்கு 16 FR குழாய் இருந்தால், ஃபோலே வடிகுழாய் 14 FR ஆக இருக்க வேண்டும்.

ஃபோலே வடிகுழாயை எவ்வளவு விரைவில் நீங்கள் செருகுகின்றீர்களோ, அவ்வளவுக்கு செருகுவது எளிதாக இருக்கும். குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்படக் கூடுமாகையால், எல்லா நேரங்களிலும் ஃபோலே வடிகுழாய் மற்றும் அவசரகாலப் பொருட்களை உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

உங்களுக்குப் பின்வரும் அவசரகாலப் பொருட்கள் தேவைப்படும்:

 • உங்கள் குழந்தையின் குழாயை விட ஒரு அளவு சிறிய ஃபோலே வடிகுழாய்
 • ஒரு கழுவும் துணி, சோப்பு மற்றும் நீர்
 • வளவளப்பாக்கும் நீர் சார்ந்த ஜெல்லி
 • ஒட்டுநாடா
 • தொற்று நீக்கிய அல்லது கொதிக்க வைத்து வடிகட்டிய நீர்
 • 5 மிலி ஸ்லிப்-டிப் ஊசிக்குழல்கள் 3, பலூனை நிரப்ப நீரினால் நிரப்பப்பட்ட 1, pH ஐ சரிபார்க்க வெறுமையாக உள்ள 1 , குழாயை அலசிக்கழுவ நீரினால் நிரப்பப்பட்ட 1
 • pH கீற்றுகள்
 • வண்ண pH குறிப்பு வழிகாட்டி
 • ஒரு அடாப்டர் அல்லது இணைப்புத் தொகுப்பு

G அல்லது GJ குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்பட்ட பிறகு ஃபோலே வடிகுழாயை எவ்வாறு செருகுவது என்பதை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.

G குழாய் ஒன்று தற்செயலாக வெளியே இழுக்கப்பட்ட பின்னர் ஃபோலே வடிகுழாயைச் செருகுதல்

உங்கள் குழந்தையின் G குழாய் புதியதா அல்லது சிறிது காலம் வைத்திருந்ததா என்பதனைப் பொறுத்து ஃபோலே வடிகுழாயைச் செருகுவதற்கான படிமுறைகள் வேறுபட்டவை.

G குழாயைப் பெற்ற எட்டு வாரங்களுக்குள்

உங்கள் குழந்தையின் G குழாய் முதன்முதலில் வைக்கப்பட்ட எட்டு வாரங்களுக்குள் தற்செயலாக வெளியிழுக்கப்பட்டால், பின்வருவனவற்றைச் செய்யவும்.

 1. உங்கள் ஃபோலே வடிகுழாய் மற்றும் உங்கள் அவசரகாலப் பொருட்கள் அனைத்தையும் சேகரிக்கவும்.
 2. சோப்பு மற்றும் நீரினால் உங்கள் குழந்தையின் உணவூட்டல் குழாயைச் சுற்றியுள்ள சருமத்தையும் உங்கள் கைகளையும் கழுவ வேண்டும்.
 3. ஃபோலே வடிகுழாயின் நுனியை மசகு ஜெல்லி கொண்டு வழுக்கக் கூடியதாக்கவும். உங்களிடம் மசகு ஜெல்லி இல்லையென்றால், ஃபோலே வடிகுழாயின் நுனியைத் தண்ணீரில் நனைத்து ஈரலிப்பாக்கலாம்.
 4. உங்கள் ஆள்காட்டி விரல் கொண்டு ஃபோலே வடிகுழாயை அளவிடவும். உங்கள் பிள்ளையின் எடை 3 கிலோவுக்குக் (6.6 இறா.) குறைவாக இருந்தால், 3 முதல் 4 செ.மீ நீளத்துக்கு அளவிடவும். இது உங்கள் ஆள்காட்டி விரலின் பாதி நீளமாகும். உங்கள் பிள்ளையின் எடை 3 கிலோவுக்கு மேல் இருந்தால், குழாயை 4 முதல் 6 செ.மீ வரை அளவிட வேண்டும். இது உங்கள் ஆள்காட்டி விரலின் முழு நீளமாகும்.
 5. நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தும் கையால், நீங்கள் அளவிட்ட நீளத்தில் ஃபோலேயை ஸ்டோமாவுக்குள் செருகவும். ஃபோலே வடிகுழாயின் நுனி வயிற்றை அடைய இந்த நீளம் போதுமானதாக இருக்க வேண்டும்.
 6. உங்கள் குழந்தையின் அடிவயிற்றில் ஃபோலே வடிகுழாயைக் கட்டவும்.

உங்கள் குழந்தையின் குழாய் முதன் முதலில் செருகப்பட்ட பிறகு குணமடைய எட்டு வாரங்கள் ஆகும். இந்தப் பாதை முழுவதுமாகக் குணமடையாததால், ஃபோலே வடிகுழாய் இரைப்பையில் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது.

எனவே, உங்கள் பிள்ளைக்கு உணவூட்டங்கள், திரவங்கள் அல்லது மருந்துகளைக் கொடுக்க ஃபோலே வடிகுழாயைப் பயன்படுத்த வேண்டாம்.

உங்கள் பிள்ளைக்கு வாயால் சாப்பிடவோ குடிக்கவோ முடியாவிட்டால், நீங்கள் ஒரு மூக்கு-இரைப்பைக் குழாயை, அதனைச் செய்ய உங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தால், நாசித்துவாரத்தின் வழியாகச் செலுத்தலாம்.

நீங்கள் ஃபோலே வடிகுழாயைச் செருகியவுடன் உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும்.

அவர்களைக் கிட்டவில்லை என்றால், விரைவில் அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.

குழாயைப் பெற்ற எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களுக்குப் பிறகு

உங்கள் குழந்தையின் G குழாய் முதலில் போடப்பட்ட எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களுக்குப் பிறகு வெளியே இழுக்கப்பட்டால், பின்வருவனவற்றைச் செய்யவும்.

 1. உங்கள் ஃபோலே வடிகுழாய் மற்றும் உங்கள் அவசரகாலப் பொருட்கள் அனைத்தையும் சேகரிக்கவும்.
 2. சோப்பு மற்றும் நீரினால் உங்கள் குழந்தையின் உணவூட்டல் குழாயைச் சுற்றியுள்ள சருமத்தையும் உங்கள் கைகளையும் கழுவ வேண்டும்.
 3. ஃபோலே வடிகுழாயின் நுனியை மசகு ஜெல்லி கொண்டு வழுக்கக் கூடியதாக்கவும். உங்களிடம் மசகு ஜெல்லி இல்லையென்றால், ஃபோலே வடிகுழாயின் நுனியைத் தண்ணீரில் நனைத்து ஈரலிப்பாக்கலாம்.
 4. உங்கள் ஆள்காட்டி விரல் கொண்டு ஃபோலே வடிகுழாயை அளவிடவும். உங்கள் பிள்ளையின் எடை 3 கிலோவுக்குக் (6.6 இறா.) குறைவாக இருந்தால், 3 முதல் 4 செ.மீ நீளத்துக்கு அளவிடவும். இது உங்கள் ஆள்காட்டி விரலின் பாதி நீளமாகும். உங்கள் பிள்ளையின் எடை 3 கிலோவுக்கு மேல் இருந்தால், குழாயை 4 முதல் 6 செ.மீ வரை அளவிட வேண்டும். இது உங்கள் ஆள்காட்டி விரலின் முழு நீளமாகும்.
 5. 5. நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தும் கையால், நீங்கள் அளவிட்ட நீளத்தில் ஃபோலேயை ஸ்டோமாவுக்குள் செருகவும். ஃபோலே வடிகுழாயின் நுனி வயிற்றை அடைய இந்த நீளம் போதுமானதாக இருக்க வேண்டும்.
 6. உங்கள் குழந்தையின் அடிவயிற்றில் ஃபோலே வடிகுழாயைக் கட்டவும்.
 7. ஃபோலே வடிகுழாயின் முடிவில் இருந்து வயிற்று உள்ளடக்கங்கள் வருவதை அனேகமாக நீங்கள் காண்பீர்கள். ஃபோலே வடிகுழாய் இரைப்பையில் இருப்பதற்கு இது ஒரு நல்ல அடையாளமாகும்.
 8. இரைப்பை உள்ளடக்கங்கள் ஃபோலேயில் இருந்து வெளியேறுவதை நீங்கள் காணவில்லையெனில், ஃபோலே இரைப்பையில் இருப்பதை சரிபார்க்க உங்களுக்கு வேறு வழி தேவைப்படும். இதைச் செய்ய, ஃபோலே வடிகுழாயின் முடிவில் ஒரு ஊசிக்குழலை இணைத்துப் பின்புறமாக உறிஞ்சி இழுக்கவும். ஃபோலே வடிகுழாயுடன் ஊசிக்குழலை இணைக்க நீங்கள் ஒரு அடாப்டர் அல்லது இணைப்பைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.
 9. ஊசிக்குழலில் உள்ள வயிற்று உள்ளடக்கங்களின் pH -ஐச் (அமிலத்தன்மை) சரிபார்த்து ஃபோலேக் குழாய் இரைப்பையில் இருப்பதை உறுதிப்படுத்தவும். பின்வருவன மூலம் ஃபோலே வடிகுழாய் இரைப்பையில் இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்தலாம்:
  • வயிற்று உள்ளடக்கங்களின் pH அளவீடு 6.0 அல்லது அதற்கும் குறைவாக உள்ளதா என சோதித்தல் (pH ஐ எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதைக் கீழே காண்க)
  • ஊசிக்குழலில் உள்ளவை வயிற்று உள்ளடக்கங்களைப் போல உள்ளனவா என அவதானித்தல்
 10. ஃபோலே நன்றாக வேலை செய்கிறது என்பதை உறுதிப்படுத்த 5 மிலி நீரினால் குழாயை அலசவும்.
 11. குழாயின் பலூன் வாயிலினூடாகப் பரிந்துரைக்கப்பட்ட அளவு நீர் கொண்டு ஃபோலே வடிகுழாயின் பலூனை நிரப்பவும். தொற்று நீக்கிய அல்லது காய்ச்சி வடிகட்டிய நீரை மட்டுமே பயன்படுத்தவும். நீங்கள் உங்கள் பிள்ளைக்கு உணவூட்டுவதற்கு ஃபோலேக் குழாயை உரிய இடத்தில் வைக்க இது உதவும்.
 12. ஃபோலே வடிகுழாயை, வடிகுழாயின் செருகி (plug), ஊசிக்குழலின் அழுத்தி அல்லது இணைப்புத் தொகுப்பு ஒன்றினைக் கொண்டு மூடவும்.

ஃபோலே வடிகுழாய் சரியான இடத்தில் இருப்பதை உறுதிப்படுத்தும் வரை திரவங்கள் அல்லது மருந்துகளை ஊட்டவோ அல்லது கொடுக்கவோ அதனைப் பயன்படுத்த வேண்டாம்.

பின்வரும் சந்தர்ப்பங்களில், உணவளிப்பதற்கு முன்னர் உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும்:

 • ஃபோலே வடிகுழாயிலிருந்து நீங்கள் இரைப்பை உள்ளடக்கங்களை திரும்பப் பெற முடியாதுவிடின்
 • இரைப்பை உள்ளடக்கங்களின் pH அளவீடு 6.0 ஐ விட அதிகமாக உள்ளது எனில்
 • ஃபோலேயில் இருந்து நீங்கள் உறிஞ்சி எடுப்பது இரைப்பை உள்ளடக்கங்களைப் போல இல்லை எனில்

இரைப்பை உள்ளடக்கங்களின் pH ஐ சரிபார்ப்பது எப்படி

புதிதாக மாற்றப்பட்ட குழாய்களை, உணவூட்டங்கள் மற்றும் மருந்துகளுக்குப் பயன்படுத்துவதற்கு முன்பு, குழாய் மூலம் உறிஞ்சி இழுக்கப்படும் உள்ளடக்கங்களின் pH ஐச் சோதித்து அது வயிற்றில் இருக்கிறதா என்பதனை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

PH ஐ எவ்வாறு சோதித்தறிவது

உங்களுக்குத் தேவைப்படுவன:

 • 5 மிலி வெறுமையான ஸ்லிப் டிப் ஊசிக்குழல் ஒன்று
 • pH கீற்றுகள்
 • வண்ண pH குறிப்பு வழிகாட்டி

என்ன செய்ய வேண்டும்:

 1. ஃபோலே வடிகுழாயுடன் 5 மிலி ஊசிக்குழலை இணைக்கவும். ஃபோலேயுடன் ஊசிக்குழலை இணைக்க நீங்கள் ஒரு அடாப்டர் அல்லது இணைப்பைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.
 2. வயிற்று உள்ளடக்கங்களைப் பெறப் பின்னோக்கி உறிஞ்சி இழுக்கவும். வயிற்று உள்ளடக்கங்களை உங்களால் பெற முடியாவிட்டால், உங்கள் குழந்தையைப் பக்கப்பாடாக நகர்த்தவும் அல்லது நிமிர்ந்து உட்கார வைக்கவும்.
 3. ஊசிக்குழலில் இருந்து வயிற்று உள்ளடக்கங்களை ஒரு pH கீற்றில் இடவும்.
 4. pH கீற்றில் உள்ள நிறங்களை குறிப்பு வழிகாட்டியில் உள்ள நிறங்களுடன் ஒப்பிடவும்.

pH அளவீடு 6.0 க்கும் குறைவாக இருந்தால், குழாய் இரைப்பையில் உள்ளது, நீங்கள் குழாயை அலசிக் கழுவி விட்டு, உணவு மற்றும் மருந்துகளுக்குப் பயன்படுத்தலாம்.

PH அளவீடு 6.0 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், குழாய் இரைப்பையில் இல்லாதிருக்கக் கூடும்.

மருந்துகள் மற்றும் சமீபத்திய உணவூட்டங்கள் pH ஐப் பாதிக்கலாம்.

ஒரு GJ குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்பட்ட பின்னர் ஃபோலே வடிகுழாயைச் செருகுதல்

உங்கள் குழந்தையின் GJ குழாய் தற்செயலாக வெளியேற்றப்பட்டால், பின்வருவனவற்றைச் செய்யவும்.

 1. உங்கள் ஃபோலே வடிகுழாய் மற்றும் உங்கள் அவசரகாலப் பொருட்கள் அனைத்தையும் சேகரிக்கவும்.
 2. சோப்பு மற்றும் நீரினால் உங்கள் குழந்தையின் உணவூட்டல் குழாயைச் சுற்றியுள்ள சருமத்தையும் உங்கள் கைகளையும் கழுவ வேண்டும்.
 3. ஃபோலே வடிகுழாயின் நுனியை மசகு ஜெல்லி கொண்டு வழுக்கக் கூடியதாக்கவும். உங்களிடம் மசகு ஜெல்லி இல்லையென்றால், ஃபோலே வடிகுழாயின் நுனியைத் தண்ணீரில் நனைத்து ஈரலிப்பாக்கலாம்.
 4. உங்கள் ஆள்காட்டி விரல் கொண்டு ஃபோலே வடிகுழாயை அளவிடவும். உங்கள் பிள்ளையின் எடை 3 கிலோவுக்குக் (6.6 இறா.) குறைவாக இருந்தால், 3 முதல் 4 செ.மீ நீளத்துக்கு அளவிடவும். இது உங்கள் ஆள்காட்டி விரலின் பாதி நீளமாகும். உங்கள் பிள்ளையின் எடை 3 கிலோவுக்கு மேல் இருந்தால், குழாயை 4 முதல் 6 செ.மீ வரை அளவிட வேண்டும். இது உங்கள் ஆள்காட்டி விரலின் முழு நீளமாகும்.
 5. நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தும் கையால், நீங்கள் அளவிட்ட நீளத்தில் ஃபோலேயை ஸ்டோமாவுக்குள் செருகவும். ஃபோலே வடிகுழாயின் நுனி வயிற்றை அடைய இந்த நீளம் போதுமானதாக இருக்க வேண்டும்.
 6. உங்கள் குழந்தையின் அடிவயிற்றில் ஃபோலே வடிகுழாயைக் கட்டவும்.

உங்கள் பிள்ளைக்கு உணவூட்டங்கள், திரவங்கள் அல்லது மருந்துகளைக் கொடுக்க ஃபோலே வடிகுழாயைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் G குழாய் நிபுணரை அழைக்கவும்.அவர்களைக் கிட்டவில்லை என்றால், விரைவில் அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.

ஃபோலே வடிகுழாயைச் செருக உங்களால் முடியாவிட்டால், உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.

ஃபோலே வடிகுழாய் உரிய இடத்தில அமைந்தவுடன், உங்கள் குழந்தையின் அசல் G அல்லது GJ குழாய் மாற்றப்படுவதற்கு நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

உங்கள் பிள்ளைக்கு G குழாய் அல்லது GJ குழாய் பொருத்தப்பட்ட காலம் 8 வாரங்களுக்கும் குறைவாக இருந்தால், அவற்றின் அசல் குழாயை இயலுமான அளவு விரைவில் மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும். அலுவலக நேரங்களின்போது, உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும். அலுவலக நேரங்களுக்குப் பின்னர், வார இறுதியில் அல்லது விடுமுறை நாட்களில், உங்கள் பிள்ளையின் குழாயைக் கவனிக்கும் மருத்துவமனையின் அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.

உங்கள் குழந்தையின் G குழாய் வைக்கப்பட்டு எட்டு வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், இது அவசர நிலைமை அல்ல; அடுத்த அலுவலக நாளில் உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும். ஃபோலே வடிகுழாயைப் பயன்படுத்தி ஒரு மாதம் வரை உணவூட்டங்கள், திரவம் மற்றும் மருந்துகளை நீங்கள் வழங்கலாம்.

மருத்துவ உதவியை எப்போது பெற்றுக்கொள்வது

பின்வரும் சந்தர்ப்பங்களில், உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்:

 • ஒரு குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்பட்ட பின்னர் உங்களால் ஃபோலே வடிகுழாயைச் செருக முடியாது இருப்பின்
 • ஃபோலே வடிகுழாய் இரைப்பையில் இருப்பதை உங்களால் நிச்சயப்படுத்த முடியாது இருப்பின்
 • ஃபோலே வடிகுழாயைச் செருகிய பின்னர் உங்கள் பிள்ளைக்கு அதிக வலி இருப்பின்

ஃபோலே வடிகுழாய் செருகப்பட்ட பிறகு உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் மற்றும் அறிகுறிகள் ஏதாவது இருந்தால் உணவூட்டுவதை நிறுத்திவிட்டு மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்ளவும்:

 • கடினமான, வீங்கிய வயிறு
 • வயிற்றில் கடுமையான வலி
 • வாந்தி, இருமல் அல்லது வாயடைப்பு
 • திடீரென ஏற்படும் அதிக காய்ச்சல்
 • வயிற்றுப்போக்கு
 • உணவூட்டங்கள் மற்றும் திரவங்கள் நுரையீரலுக்குள் செல்லும் பிரச்சனை (காற்றை உறிஞ்சியிழுத்தல்)
 • சுவாசப் பிரச்சினைகள்
Last updated: September 17 2019