செங்காய்ச்சல்

Scarlet fever [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பிள்ளைகள் செங்காய்ச்சல் என்பது சொறிகரப்பானுடனான ஒரு ஸ்ட்ரெப் த்ரோட் தொற்று நோய். பிள்ளைகள் செங்காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைக்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

செங்காய்ச்சல் என்பது என்ன?

செங்காய்ச்சல் என்பது பிரிவு A பீற்றா-ஹீமொலிட்டிக் ஸ்றெப்ற்ரோகோகஸ்(GABS) ,அல்லது ஸ்றெப் (GABS) என்றழைக்கப்படும் பக்ரீரியா(கிருமி) வகையால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இந்தக் கிருமி டொக்ஸின் என்றழைக்கப்படும் ஒரு பொருளை உருவாக்குகின்றது. ஒரு சிலர் இதற்குப் பிரதிபலிக்கக்கூடியவர்களயிருக்கின்றனர்.

செங்காய்ச்சல் உடலில் செங்காய்ச்சல் சொறி
செங்காய்ச்சல் சொறி சிகப்பாக வெய்யிலால் ஏற்பட்ட தோலெரிவைப் போலிருக்கும். அது சிறிய இளஞ்சிவப்பு பொட்டுக்களாலானது.

இந்தத் தொற்றுநோயின் முக்கிய அறிகுறி என்னவென்றால் ஒரு நன்கு சிவந்த (சிவப்பு-ஓரெஞ்) சொறிகரப்பான் உங்கள் பிள்ளையின் தோலில் பரவும். 2 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு செங்காய்ச்சல் பரவுவது மிகவும் அரிது. 4 முதல் 8 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை மிகவும் அதிகமாகப் பாதிக்கும்

செங்காய்ச்சலுக்கான அடையாளங்களும் அறிகுறிகளும்

சொறிகரப்பான்

செங்காய்ச்சலுக்கு சொறிகரப்பான்தான் மிக முக்கியமான அடையாளம். இது முதலில் வெய்யிலில் அடிபட்டுக் கறுத்த அடையாளம்போன்று, உப்புத்தாளைப்போல சொரசொரப்பானதாகத் தோன்றும். இதில் அரிப்பு எடுக்கும். இது வழக்கமாக முதலில் கழுத்திலும் முகத்திலும் தோன்றும். பின்பு மார்பு மற்றும் முதுகில் பரவி, கடைசியாக உடலின் மற்றப் பாகங்களிலும் பரவும். இது உடலில் மடிப்புள்ள பகுதிகளில், விசேஷமாக அக்குள் மற்றும் முழங்கையைச் சுற்றி செந்நிற வரிகளை உண்டாக்கும். வழக்கமாக 4 முதல் 6 நாட்களில் சொறிகரப்பான் மறைந்து விடும். 7 முதல் 10 நாட்களில் பாதிக்கப்பட்ட தோல் உரியத் தொடங்கும். அது 6வாரங்களுக்கு தொடரும்.

காய்ச்சல்

முழங்கையில் செங்காய்ச்சல் கை மற்றும் முழங்கை மடிப்பில் செங்காய்ச்சல் சொறி
செங்காய்ச்சலானது முழங்கை மடிப்பையும் ஏனைய தோல் மடிப்புகளையும் கடும் சிகப்பாக மாற்றக்கூடும்.

காய்ச்சல் அதிகமாக இருக்கலாம். வழக்கமாக சொறிகரப்பான் தொடங்குவதற்கு 12 முதல் 48 மணி நேரத்துக்கு முன்பாகக் காய்ச்சல் தொடங்கும்.

தொண்டை வலி

உங்கள் பிள்ளையின் வாய்க்குள் பார்த்தால், உள்நாக்கு விரிவடைந்து சிவந்ததாகவும், சிலவேளைகளில் வெள்ளை-மஞ்சள் நிற மென்படலம் அல்லது மேற்பூச்சுடையதாகவும் காணப்படலாம். நாக்கு வெள்ளை-சிவப்பு நிறமாகவும் சிறிய சிவப்புப் புள்ளிகளுள்ளதாகவும் ஸ்ரோபெரிப்பழம் போன்ற தோற்றமுடையதாகவும் இருக்கும்.

வேறு அறிகுறிகள்

சில பிள்ளைகளுக்கு தலைவலி, குமட்டுதல், வாந்தி, வயிற்றுப்பகுதியில் வலி, மற்றும் தசை வலி போன்ற வேறு அறிகுறிகளும் இருக்கலாம்.

வேறு தொற்றிப் பரவக்கூடிய நோய்களும் (சின்னம்மை அல்லது ஸ்ரஃபிலோகோக்கல் தோல் தொற்று நோய் போன்றவை) அல்லது வீங்கும் தன்மையுள்ள நிலைமைகளும்(கவாசகி நோய் போன்ற) செங்காய்ச்சலுக்கு ஒத்த அறிகுறிகளைக் காண்பிக்கலாம்.

செங்காய்ச்சலுக்கு மருத்துவர்கள் என்ன செய்யலாம்?

தொண்டையொற்றி அல்லது இரத்தப் பரிசோதனை

உங்கள் பிள்ளையின் வலிக்கும் சொறிகரப்பானுக்குமான காரணத்தை அறிவதற்காக மருத்துவர் தொண்டையொற்றி பரிசோதனை செய்வார். தொண்டையொற்றி பரிசோதனை என்பது பஞ்சினால் சுற்றப்பட்ட ஒரு குச்சியினால் மருத்துவர் உங்கள் பிள்ளையின் தொண்டையின் உட்பகுதியிலும் ஓரங்களிலும் துடைப்பதாகும். பின்பு தொண்டையொற்றியானது ஸ்றெப் கிருமிகளுக்காக பரிசோதனை செய்யப்படும்.

சிலவேளைகளில் மற்ற அறிகுறிகளிலிருந்து செங்காய்ச்சலைப் பிரித்துப் பார்க்க, இரத்தப் பரிசோதனையும் தேவைப்படலாம்.

அன்டிபையோட்டிக்ஸ்

தொண்டையொற்றி பரிசோதனை ஸ்றெப் கிருமிகள் இருப்பதாகக் காண்பித்தால், மருத்துவர் உங்கள் பிள்ளைக்கு அன்டிபையோட்டிக் மருந்தை வாய் மூலமாகக் குடிப்பதற்கோ அல்லது ஊசி மருந்து மூலமாக ஏற்றிக் கொள்வதற்கோ எழுதிக் கொடுப்பார்.

உங்கள் பிள்ளை வாய் மூலமாகக் பென்சிலின் மருந்து எடுத்துக்கொள்ளமாட்டார் என்றால் அல்லது உங்களால் மருந்தை ஒழுங்காகக் கொடுத்துக் கொள்ள முடியாவிட்டால், நீண்டகால-செயல்பாடுள்ள பென்சிலின் ஊசி மருந்து கொடுக்கப்படலாம். ஒழுங்காகக் கொடுக்கப்பட்டால், வாய் மூலமாகக் கொடுக்கப்படும் அன்டிபையோட்டிக்கும் ஊசி மூலமாகக் கொடுக்கப்படும் அன்டிபையோட்டிக் போலவே விரைவாகச் செயல்படும்.

உங்கள் பிள்ளையை வீட்டில் வைத்துப் பராமரித்தல்

காய்ச்சலைக் கண்காணித்து அன்டிபையோட்டிக் மருந்து முழுவதையும் கொடுத்துத் தீர்க்கவும்

காய்ச்சலும் தொண்டைவலியும் வழக்கமாக அன்டிபையோட்டிக் சிகிச்சை தொடங்கிய 48 மணி நேரத்துக்குள்ளேயே குறைந்துவிடும். நோய் திரும்ப வராமலிருக்கவும், அன்டிபையோட்டிக் எதிர்ப்புசக்தியை இழக்காமலிருக்கவும், நோயின் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும் 10 நாட்கள் அன்டிபையோட்டிக் சிகிச்சையை முழுமையாக எடுத்துக்கொள்வது முக்கியம்.

காய்ச்சல் மற்றும் தொண்டை வலிக்கு, அசெட்டமினோஃபென் (டைலெனோல், டெம்ப்ரா, அல்லது வேறு பிராண்டுகள்) அல்லது ஐபியூப்ரோஃபேன்(மோட்ரின் அல்லது அட்வில், அல்லது வேறு பிராண்டுகள்) போன்றமருந்துகளைக் கொடுக்கலாம். உங்கள் பிள்ளைக்கு ASA (அசெடில்சாலிசிலிக் அசிட் அல்லதுஅஸ்பிரின்) கொடுக்க வேண்டாம்.

தொண்டை வலி

செங்காய்ச்சலுள்ள உங்கள் பிள்ளைக்கு உணவு சாப்பிடும்போதும் பானங்கள் குடிக்கும் போதும் வலி ஏற்படலாம். அவள் தேவையான அளவு திரவ உணவு எடுத்துக்கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைக்கு உன்பதையும் குடிப்பதையும், இலகுவாகவான விருப்பமான காரியமாக மாற்ற முயற்சியுங்கள். உதவக்கூடிய சில உணவு வகைகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

 • மிதமான சூடுள்ள (அதிக சூடில்லாத) கஃபெயின் இல்லாத இதமான தேனீர்
 • மிதமான சூடுள்ள (அதிக சூடில்லாத) ஊட்டச்சத்துமிக்க சூப் வகைகள்
 • ஐஸ் கட்டிகள், உறைய வைக்கப்பட்ட பழரசங்கள், அல்லது உறிஞ்சிக்குடிக்கக்கூடிய பொப்சிக்கல்கள்
 • குளிர் பானங்கள் ஸ்ட்ரோவுடன்; அந்தமுறையில் குடிப்பது இலகுவானது.
 • மசிக்கப்பட்ட பழம் அல்லது யோகேட் ஸ்மூத்தீஸ்
 • ஐஸ் கிரீம் அல்லது மில்க் ஷேக் போன்ற உறைய வைக்கப்பட்ட உணவுகள்

சொறிகரப்பானுக்கு மருந்து தடவுதல்

தோலை இதமாக்க வாசனையூட்டப்படாத களிம்புகளை உபயோகிக்கவும். குளிக்கும்போது, ஓட்மீல் அல்லது வர்த்தக ஓட்மீல் குளியல் பவுடரை உபயோகிக்கவும். இது சிவந்த நிறத்தையும் அசௌகரியத்தையும் குறைக்கும்.

தொற்றுநோய் பரவுவதை எப்படித் தடுப்பது

சொறிகரப்பான் தொற்றக்கூடிய நோயல்ல. ஆயினும், செங்காய்ச்சல் குடும்ப அங்கத்தினருக்கும் உங்கள் பிள்ளையின் சக மாணவர்களுக்கும் இலகுவாகப் பரவக் கூடும். உங்கள் வீட்டில் வசிக்கும் பிள்ளைகள் அல்லது பெரியவர்களில் இந்த அறிகுறிகள் காணப்பட்டால், அந்த வாரத்திலேயே தொண்டையொற்றி பரிசோதனை செய்யப்படவேண்டும்.

உங்கள் பிள்ளை அன்டிபையோட்டிக் சிகிச்சை எடுத்த 24 மணி நேரத்துக்குப்பின்பு நோயைப் பரப்புவதில்லை. அவள் மேலும் நிவாரணமடைவதாயிருந்தால் ஒரு நாளின் பின்பு பாடசாலைக்குத் திரும்பலாம். நோய் பரவுவதைத் தடுப்பதற்கான வேறு குறிப்புகள்:

 • மிதமான சூடுள்ள சோப் நீரில் கைகளைக் கழுவவும்.
 • உங்கள் குடிக்கும் கிளாஸ்கள் அல்லது உணவு உண்ணும் பாத்திரங்களை உங்கள் நண்பர்கள் அல்லது சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
 • உங்கள் பிள்ளையின் உணவு உண்ணும் பாத்திரங்கள் மற்றும் குடிக்கும் கிளாசுகளை சூடான சோப் நீரில் அல்லது டிஷ்வோஷரில் கழுவப்படுதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
 • உங்கள் முழங்கை மடிப்புக்குள் தும்முங்கள் அல்லது இருமும் போது உங்கள் வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ளுங்கள்.

மருத்துவ உதவியை எப்போது நாட வேண்டும்

பின்வரும் நிலைமைகளின் போது உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழையுங்கள்:

 • அன்டிபையோட்டிக் சிகிச்சை ஆரம்பித்த 48 மணி நேரத்தில் காய்ச்சல் குறையாவிட்டால்
 • சொறிகரப்பான் அதிகமாகி கொப்பளங்கள் அல்லது புண்கள் உண்டாகி அல்லது அதிக வலியெடுத்தால்
 • சாப்பிடவோ அல்லது குடிக்கவோமுடியவில்லை, உடல் நீர் வறட்சி ஏற்படுகிறது
 • அதிக அளவில் வந்தியெடுத்தல்
 • சுவாசிப்பதில் சிரமம்
 • அதிக சுகவீனமாகத் தோன்றுதல்

முக்கிய குறிப்புகள்

 • காய்ச்சல், கடினமான சிவந்த சொறிகரப்பான், மற்றும் தொண்டை எரிச்சல் என்பன செங்காய்ச்சலுக்கான முக்கிய அறிகுறிகள்.
 • உங்கள் பிள்ளைக்கு செங்காய்ச்சல் இருப்பதாக சந்தேகித்தால் அவளை உடனே உங்கள் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
 • நோய் திரும்ப வராதிருக்கவும், சிக்கல்ளைத் தடுப்பதற்கும் அன்டிபையோட்டிக் சிகிச்சை முழுவதையும் எடுத்துத் தீர்ப்பது இன்றியமையாதது.
 • மென்மையான உணவுகளையும் குளிர் பானங்களயும், வலியைக் குறைப்பதற்காக டைலெனோல், அட்வில், அல்லது வெறு பிரான்டுகளையும் உபயோகிக்கவும்.
 • மற்றக் குடும்ப அங்கத்தினர் அல்லது நெருங்கிய தொடர்புடயவர்களுக்கு இதே அறிகுறிகள் தோன்றினால் அவர்கள் தங்கள், முதன்மை உடல் நல பராமரிப்பளிப்பவரைப் போய் சந்திப்பதை உறுதிப்படுத்துங்கள்.
Last updated: September 07 2010