சளிக்காய்ச்சல் (ஃப்ளூ)

Influenza (flu): An overview [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

சளிக்காய்ச்சல் என்பது பொதுவான ஒன்றாக இருந்த போதிலும் அது நோய்த்தடுப்பாற்றல் குறைவாக உள்ள மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தாகலாம்.

சளிக்காய்ச்சல் (இன்ஃப்ளுவென்சா) என்றால் என்ன?

சளிக்காய்ச்சல் (ஃப்ளூ) என்பது வைரஸால் உண்டாகும் ஒரு நுரையீரல் தோற்றுநோயாகும். மக்களுக்கு வருடத்தின் எந்தக் காலப்பகுதியிலும் சளிக்காய்ச்சல் வரலாம்; ஆனால் இலையுதிர் காலத்திலும் குளிர்காலத்திலும் பெரும்பாலும் வரும்.

சளிக்காய்ச்சலின் (ஃப்ளூ) பொதுவான அறிகுறிகள்

சளிக்காய்ச்சல் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் பின்வரும் அறிகுறிகளில் சில அல்லது எல்லாமே காணப்படும்:

  • காய்ச்சல்
  • தசை வலி
  • தலை வலி
  • தொண்டை வலி
  • இருமல்
  • பலவீனம்

இவற்றுள் பெரும்பாலான அறிகுறிகள் வழக்கமாக 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். இருமலும் பலவீனமும் 6 நாட்கள் வரை நீடிக்கலாம். இது உடற்பயிற்சி மற்றும் நாளாந்த நடவடிக்கைகளையும் கூடப் கஷ்டமாக்கும்.

சளிக்காய்ச்சல் (ஃப்ளூ) சிலருக்கு கடுமையானதாயிருக்கும்

சளிக்காய்ச்சல் பெரும்பாலானவர்களுக்குக் கடுமையானதாக இருப்பதில்லை. ஆனாலும் சிலருக்கு அது மிகவும் கடுமையானதாக இருக்கும். உதாரணமாக, பின்வரும் பிரிவிலுள்ளவர்கள்தான் ஆபத்தில் அதிகமாக உள்ளவர்கள்:

  • 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்
  • மருத்துவ இல்லம், முதியோர் இல்லம், அல்லது தீராத நோய்ப் பராமரிப்பு மருத்துவமனை போன்ற நீண்ட கால பராமரிப்பு வசதிகளில் வாழ்பவர்கள்
  • தீராத இருதய, நுரையீரல்,அல்லது சிறுநீரக நோயுள்ளவர்கள்
  • நீரிழிவு, புற்றுநோய், நோய் எதிர்ப்புத் தொகுதியில் பிரச்சினை, அல்லது அரிவாள்செல் இரத்த சோகை உள்ளவர்கள்
  • நீண்ட காலங்களுக்கு ASA (அசெட்டில்சாலிசிலிக் அசிட் அல்லது அஸ்பிரின்) மருந்தினால் சிகிச்சையளிக்கப்பட்ட 6 மாதங்கள் முதல் 18 வயது வரையிலான பிள்ளைகள் மற்றும் பருவ வயதினர்
  • 6 மாதங்கள் மற்றும் 24 மாதங்களுக்கிடைப்பட்ட சிறு குழந்தைகள்
  • பலவீனம் அல்லது மறைந்துள்ள வியாதி காரணமாக, மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து சளியை நீக்குவதில் கஷ்டமுள்ளவர்கள்

இந்தப் பிரிவிலுள்ள மக்களுடன் வசிப்பவர்கள் அல்லது வேலை செய்பவர்களுக்கு சளிக்காய்ச்சல் தடுப்பூசி மூலம் நோய்த்தடுப்பு செய்யப்படவேண்டும். இதன் மூலம், அதிக- ஆபத்துள்ள பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு சளிக்காய்ச்சல் நோய் தொற்றும் வாய்ப்பு குறைவாயிருக்கும். சளிக்காய்ச்சல் தடுப்பு மருந்து பற்றி இந்தப் பக்கத்தின் கீழே விபரிக்கப்பட்டுள்ளது.

சளிக்காய்ச்சலுக்கு (ஃப்ளூ) சிகிச்சையளித்தல்

வழக்கமாக, சிகிச்சை ஒருவர் உணரும் அறிகுறிகளில் ஒருமுகப்படுத்தப்படுகிறது. உதாரணமாக, உங்கள் பிள்ளைக்குக் காய்ச்சல் இருந்தால், அதைக் குறைப்பதற்காக அவனுக்கு அசட்டமினோஃபென் (டைலெனோல் ) கொடுக்கலாம்.

1 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சளிக்காய்ச்சல் நோயாளிக்கு உதவுவதற்காக ஒரு மருந்தும் கிடைக்கக்கூடியதாக உள்ளது. மேலுமான தகவல்களுக்காக உங்கள் பிள்ளையின் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.

சளிக்காய்ச்சல் (ஃப்ளூ) எப்படிப் பரவுகிறது

சளிக்காய்ச்சல் நோய், தொற்றுள்ள ஒருவரிடமிருந்து இருமுதல் அல்லது தும்முதல் மூலமாக மற்றவர்களுக்கு இலகுவாகப் பரவுகிறது. சளிக்காய்ச்சல் நோயுள்ள ஒருவர் தொட்ட பொருள்களைத் தொடுவதன் மூலமும் இந்நோய் பரவக்கூடும்.

மருத்துவமனையில் உங்கள் பிள்ளைக்கு சளிக்காய்ச்சல் (ஃப்ளூ) இருந்தால்

உங்கள் பிள்ளை ஒரு தனியறையில் வைக்கப்படுவான்; அவன் நிவாரணமடையும்வரை விளையாட்டறைக்குப் போக அனுமதிக்கப்படமாட்டான். பிள்ளை நல்வாழ்வு நிபுணரிடம் விளையாட்டுப் பொருட்களையும் மற்ற தேவையான பொருட்களையும் உங்கள் அறைக்கே கொண்டுவரும்படி கேட்கவும்.

மருத்துவமனைப் பணியாளர்கள் சந்திக்க வரும்போது, ஒரு முகமூடி, கண்பாதுகாப்பு, கையுறை, மற்றும் மேலங்கி என்பனவற்றை அணிவார்கள். 

அற்ககோல் சேர்ந்த கைத் தேய்ப்பான்கள் அல்லது சோப் மற்றும் தண்ணீர் கொண்டு, உங்கள் பிள்ளையைத் தொடுவதற்கு முன்பும் பின்பும், மற்றும் உங்கள் பிள்ளையின் அறையை விட்டு வெளியேறுவதற்கு முன்பும் அடிக்கடி உங்கள் கைகளை கழுவவும். மருத்துவமனைப் பணியாளர்களும் தங்கள் கைகளைக் கழுவ வேண்டும்.

நீங்கள் அல்லது வேறு எவராவது சந்திப்பு செய்தபின் சளிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளுடன் சுகவீனமுற்றால் உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது தாதிக்குத் தெரியப்படுத்தவும். 

சளிக்காய்ச்சலைத் (ஃப்ளூ) தடுத்தல்

சளிக்காய்ச்சல் நோய் வருவதைத் தடுப்பதற்கான வழிகள் பின்வருமாறு:

  • உங்கள் கைகளை நன்றாகக் கழுவுங்கள். இது சளிக்காய்ச்சல் உங்களைத் தொற்றிக் கொள்வதை அல்லது பரப்புவதைத் தடைசெய்ய உதவும். மருத்துவமனையில் இது மிகவும் முக்கியம், ஆனால் மற்ற இடங்களிலும்கூட இது முக்கியம்.
  • சளிக்காய்ச்சல் தடுப்பூசியை ஒவ்வொரு வருடமும் எடுத்துக்கொள்ளவும்.
  • ஒருவருக்கு வைரஸ் தொற்றிக்கொண்டபின்பு சளிக்காய்ச்சலைத் தடுப்பதற்காக சில குறிப்பிட்ட நிலைமைகளில் உபயோகிப்பதற்காக ஒரு மருந்து இருக்கிறது.

உங்களுக்குச் சளிக்காய்ச்சல் இருந்தால், அது பரவுவதைத் தடை செய்வதற்காக பின்வரும் காரியங்களை நீங்கள் செய்யவேண்டும்:

  • எப்போதும் நீங்கள் இருமும்போதும் தும்மும்போதும் உங்கள் வாய் அல்லது மூக்கை ஒரு டிஷுப்பேப்பரினால் மூடவும். டிஷுப்பேப்பரை எறிந்து விடவும். பின்பு உங்கள் கைகளைக் கழுவவும். இந்தப் படிகள், சளிக்காய்ச்சல் மற்றும் வேறு சுவாசத்துக்குரிய வைரசுகள் பரவுவதைத் தடுக்க உதவும்.
  • நீங்கள் சளிக்காய்ச்சல்நோய்க்குரிய அறிகுறிகளுடன் சுகவீனமுற்றிருந்தால் மருத்துவமனைக்குச் செல்லவேண்டாம். சுகவீனமுற்றிருக்கும் எவராவது, உறவினராக இருந்தாலும் கூட, மருத்துவமனையிலிருக்கும் நோயாளியைச் சந்திக்கக்கூடாது.

சளிக்காய்ச்சலுக்கான (ஃப்ளூ) ஊசி

சளிக்காய்ச்சல் தடுப்பு மருந்து, கொல்லப்பட்ட காய்ச்சல் வைரசுகளின் துண்டங்களால் செய்யப்பட்டிருக்கிறது. அது காய்ச்சல் வைரசுகளின் 3 வித்தியாசமான வகைகளைக் கொண்டிருக்கிறது. காய்ச்சல் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளும் ஒருவர், தடுப்பு மருந்தின் காய்ச்சல் வகைக்கான தடுப்பாற்றலைப் பெற்றுக்கொள்வார். "தடுப்பாற்றல்" என்பது, வைரசுக்கெதிராக உடல் கட்டியெழுப்பும் பாதுகாப்பைக் குறிக்கிறது.

வைரசுக்கொதிராக பாதுகாப்பைக்கட்டியெழுப்ப, உடலுக்கு ஏறக்குறைய 2 வாரங்கள் தேவைப்படுகின்றன. இந்தப் பாதுகாப்பு ஏறக்குறைய 6 மாதங்கள் வரை நீடிக்கும்.

காய்ச்சல் தடுப்புமருந்து மற்ற வைரசுக்களுக்கெதிரான பாதுகாப்பைக் கொடுக்காது.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு சளிகாய்ச்சல் (ஃப்ளூ) தடுப்பு ஊசி

மக்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய காய்ச்சல் தடுப்பு மருந்து தேவைப்படுகிறது. காய்ச்சல் வைரஸ் ஒவ்வொரு வருடமும் மாறிக்கொண்டேயிருக்கும். எனவே, ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான தடுப்புமருந்தும் உபயோகிக்கப்படவேண்டும். உலகைச் சுற்றிவரும் காய்ச்சல் வைரசுகளின் வகைகளை மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்பார்கள். பிறகு அந்த வருடத்தில் பரவக்கூடிய வைரஸ்வகைகளுக்கு எதிராக தடுப்பூசி செய்யப்படும்.

பெரும்பாலான மக்கள் ஒரு சளிக்காய்ச்சல் (ஃப்ளூ) தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்

ஒன்டாரியோவில் வாழும் மக்களுக்கு காய்ச்சல் தடுப்புமருந்து இலவசமாகக் கிடைக்கும். 6 மாதங்களுக்கு மேற்பட்ட வயதுடைய எவரேனும் நியாயமான காரணங்கள் இல்லாவிட்டால் காய்ச்சல் தடுப்புமருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளை, காய்ச்சல் தடுப்புமருந்து எடுத்துக்கொள்ள முடியுமா என்று உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் கேளுங்கள்.

கொள்ளைநோய் சளிகாய்ச்சல் (ஃப்ளூ) என்றால் என்ன?

கொள்ளைநோய் சளிக்காய்ச்சல் உலகம் முழுவதும் விரைவாகத் திடீரென பரவும் காய்ச்சல் வைரசாகும். ஒரு புதிய வகையான காய்ச்சல் உண்டாகும்போது கொள்ளைநோய் காய்ச்சல் உண்டாகும். இது ஒரு புதிய வகை காய்ச்சலாக இருப்பதால், மக்களுக்கு அதற்கு எதிரான தடுப்பாற்றல் சிறிதளவாக இருக்கும் அல்லது இல்லாமலே இருக்கலாம். அதாவது, எல்லா மக்களும் கடுமையான நோய்க்கு ஆளாகும் ஆபத்து இருக்கிறது என்பதை அர்த்தப்படுத்துகிறது.

பறவைக்காய்ச்சல் (ஏவியன் இன்ஃப்ளூவென்சா) என்பது சளிக்காய்ச்சலின் ஒரு புதிய வகை ஆகும். இது பறவைகளிடையே பரவும். இப்போது மனிதர்களையும் தொற்றுகிறது. இது வரை மனிதர்களிடையே சிறிதளவு பரவியுள்ளது. மனிதரிலிருந்து மனிதருக்குப் பரவுவது சாதாரணமாகும் போதும் பறவைக் காய்ச்சல் உலகம் முழுவதும் பரவுவதால் கொள்ளைநோய் காய்ச்சல் தொடங்கிவிட்டதாக பிரகடனம் செய்யப்படும்.

கொள்ளைநோய் சளிக்காய்ச்சலுக்கு (ஃப்ளூ) எதிராக உங்கள் குடும்பத்தைப் பாதுகாத்தல்

கொள்ளைநோய் காய்ச்சல் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தால், என்ன செய்யவேண்டும் மற்றும் யார் ஆபத்திலிருக்கிறார்கள் என்பது பற்றிய பொதுசன சுகாதார செய்திகளுக்கு செவிகொடுங்கள். இதற்கிடையில்:

  • ஒவ்வொரு வருடமும் காய்ச்சல் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அடிக்கடி உங்கள் கைகளை கழுவிக்கொள்ளுங்கள்
  • நீங்கள் இருமும்போதும் தும்மும்போதும் உங்கள் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் சுகவீனமுற்றிருந்தால், வேலைக்கோ அல்லது பாடசாலைக்கோ போகவேண்டாம்.

கொள்ளைநோய் சளிக்காய்ச்சலுக்கு (ஃப்ளூ) எதிராக உங்கள் குடும்பத்தை பாதுகாப்பது பற்றி மேலதிகத் தகவல்

கொள்ளைநோய் காய்ச்சலுக்கெதிராக உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பதற்காக நீங்கள் எடுக்கவேண்டிய மேலதிக படிகள் இருக்கின்றன.

காய்ச்சலைப் பற்றியும் கொள்ளைநோய் காய்ச்சலுக்கு எப்படித் தயாராகலாம் என்பது பற்றிய மேலதிக தகவல்களுக்கு (ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும்): www.canada.ca/en/public-health/services/diseases/flu-influenza.html.


Dernières mises à jour: novembre 17 2009